vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

ராகாப் – தப்பிக்கும் வழி கண்டவள்

ரோமர் 6 : 20-23                                    13 பிப்ரவரி, 2020-வியாழன்

“…அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலில் கட்டி வைத்தாள்.” – யோசுவா 2 : 21

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் யாரும் பயணத்தைத் தொடர விரும்ப மாட்டார்கள். எப்படியாவது அதிலிருந்து தப்பும் வழியை மட்டுமே யோசிப்பார்கள், அல்லது மிதப்பான் போன்றவை கிடைத்தால் அதன் மூலம் தப்பி விடலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து பயணமாகிய கானான் நாட்டை நோக்கிச் சென்றனர். இதுதான் கடவுள் உங்களுக்கு வாக்களித்த நாடு. இதைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என்று மோசே கூறி விட்டு இறந்து போனார். பின்னர் யோசுவா தலைமையில் இஸ்ரவேலர் கானான் நாட்டிலுள்ள நகரங்களைப் பிடித்தனர். முதலாவது அவர்கள் எரிகோ நகரைப் பிடிக்கத் திட்டமிட்டனர். அதற்காக இரண்டு பேரை வேவு பார்க்க அந்நகருக்கு அனுப்பினர். அவர்கள் வேவு பார்த்து விட்டு அங்குள்ள ராகாப் என்ற பெண் வீட்டில் தங்கினர். அவள் அவர்களை உபசரித்து அனுப்பினாள். அப்போது தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்ற கேட்டுக் கொண்டாள். அதற்கு அடையாளமாக தன் வீட்டு ஜன்னலில் சிவப்பு நூலைக் கட்டி வைத்தாள்.

இஸ்ரவேலர் எரிகோவைப் போரிட்டுக் கைப்பற்றிய போது சிவப்புக் கயிறு கட்டியிருந்த அந்த வீட்டை விட்டு விட்டு ராகாப்பையும் அவன் வீட்டாரையும் காப்பாற்றினர். ராகாப் தன் ஊராருக்கு வர இருந்த அழிவிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாள். பாவத்தின் சம்பளம் மரணமாயினும் அதிலிருந்து தப்பும் வழியைப் பாராதவனே சாவான். இயேசு நமக்காக பாடுபட்டு சிலுவையில் இறந்து, இரட்சிப்பை சம்பாதித்திருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவன் பிழைப்பான், விசுவாசியாதவன் அழிவான். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். அழிவு பல நிலைகளில் நம்மை அணுகலாம். கர்த்தரின் கிருபையோ அதற்குத் தப்பும் வழியைக் காட்டுகிறது. நாம் அழிவது ஆண்டவரின் விருப்பமல்ல. வாழ்வதே அவர் விருப்பம். அதன்படி வாழும் வழியை நோக்குவோம்.

இரக்கம் நிறைந்தவரே! வருகிற அழிவிற்கு தப்பத் துடிக்கும் நாங்கள் பாவத்தினால் வரும் மரணத்தை தவிர்க்க இயேசுவை நோக்கிப் பார்க்க உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ராகாப் – தப்பிக்கும் வழி கண்டவள்2020-02-07T08:16:15+00:00

சிலொப்பியா குமாரத்திகள்-உரிமைக்காக

யோசுவா 17 : 3-5                                12 பிப்ரவரி, 2020-புதன்

“இப்படியாக மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்…” – யோசுவா 17 : 5

தற்காலத்தில் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவதை காண்கிறோம். ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளில் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். தங்களுக்கு உரிய கௌரவத்தைப் பெற இன்னும் பாடுபட்டு வருகின்றனர். மோசே மற்றும் யோசுவா காலத்திலேயே தங்கள் உரிமைக்காகப் பாடுபட்ட பெண்கள் குறித்து தியானப்பகுதி குறிப்பிடுகிறது. தங்கள் உரிமைக்காக போராடியவர்கள் மனாசே கோத்திரத்தைச் சார்ந்த சிலொப்பியா குமாரத்திகள் ஆவர்.

அக்காலத்தில் நிலங்களின் மேலுள்ள உரிமையை ஆண்கள் மாத்திரமே வைத்திருந்தனர். ஆண்கள் இல்லாத குடும்பத்தின் சொத்துக்கள், பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கே போய்ச் சேர்ந்தது. இதனால் அப்பெண்களின் பெற்றோரின் பெயர் இல்லாமலாகும் நிலை ஏற்பட்டது. இதை யோசுவா கேட்டு அப்பெண்களின் சொத்துக்கள் மேலுள்ள உரிமையை அவர்களுக்கே கொடுத்தார். அவர்கள் எந்த ஆணைத் திருமணம் செய்தாலும் சொத்துக்கள் இவர்கள் பெயரிலேயே இருந்தது. ஆணையும் பெண்ணையும் சமமாக சம உரிமையுடன் கடவுள் படைத்தார். உலகை ஆளும் உரிமையை இருவருக்குமே கொடுத்தார். ஏனோ காலப் போக்கில் ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்தி தாங்களே ஏக போக உரிமையுள்ளவர்களாக்கி கொண்டனர்.

இறைவனின் படைப்பில் ஆண் பெண் இருவருமே சமம். கிறிஸ்துவுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்கிறார் பவுல். உடன் பிறந்த சகோதரிகளுக்கு சொத்தில் உரிமை இல்லை என்று எத்தனையோ சகோதரர்கள் கூறி பரம்பரைச் சொத்துக்களை அபகரிக்கும் நிலை மாற வேண்டும். நம்முடைய உரிமையை நாம் விட்டுக் கொடுப்பதில்லை. தற்காலத்தில் அரசும் நீதிமன்றங்களும் பெண்களுக்கான சொத்துரிமையை நிலை நாட்டியிருக்கின்றன. பெண்ணுரிமைகளுக்கும் முக்கியத்துவம் தருவோம். அவர்கள் உரிமையைக் காப்போம்.

கிருபை நிறைந்த கடவுளே! ஆண் என்றாலோ பெண் என்றாலோ அவரவர் உரிமைகளை பெற்றுக் கொள்ள ஏற்புடைய காரியங்களைச் செய்ய உதவும். பிறர் உரிமைகளைத் தட்டிப் பறிக்கின்ற செயலை செய்யாதபடி எங்களை காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

சிலொப்பியா குமாரத்திகள்-உரிமைக்காக2020-02-07T08:14:40+00:00

கோராகு – கடவுளின் ஏற்பாட்டை எதிர்த்தவன்

ரோமர் 9 : 20-22                                       11 பிப்ரவரி, 2020-செவ்வாய்

“பூமி தன் வாயைத் திறந்து.. கோராகுக்குரிய எல்லா மனிதரையும் அவர்களுக்குரிய சகல பொருட்களையும் விழுங்கி விட்டது.” – எண்ணாகமம் 16 : 32

பூகம்பமோ, பூமி அதிர்ச்சியோ ஏற்பட்டால் அந்த இடத்திலுள்ள அனைவரையும் கொல்லும். ஆனால் ஒரு சிலரை மாத்திரம் அது கொல்லுகிறதென்றால் அது ஆச்சரியமாக தோன்றுமே. மோசே காலத்தில் பூமி தன் வாயைத் திறந்து கோராகு என்பவரையும் அவன் கூட்டத்தாரையும் விழுங்கியது. இது ஏன் என்பது குறித்து இத்தியானத்தில் காண்போம்.

பொதுவாக ஊரில் எந்த ஒரு நல்ல காரியம் நடைபெற்றாலும் அதை ஒன்றிரண்டு பேர் எதிர்த்துக் கொண்டே இருப்பர். தங்களை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்ற சுயநலமே இதற்குக் காரணம். வேறு எந்த காரணமும் இதற்கு இராது. மோசேயும் அவர் சகோதரர் ஆரோனும் இஸ்ரவேலரை வழிநடத்தி வந்ததைக் கண்டு கோராகு என்பவரும் அவரைச் சார்ந்த ஒரு சிலரும் பொறாமை கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட மோசே கடவுளுக்கு முன் முகங்குப்புற விழுந்தார். பின்னர் அவர்களை விசாரிக்க கடவுளின் பிரசன்னத்திற்கு முன் வருமாறு அழைத்தார். ஆனால் வர முடியாது என்று கூறி விட்டனர். இதைக் கண்ட கடவுள் மிகவும் கோபமுற்றார். மோசே கடவுளிடம் மன்றாட அவருடைய பிரசன்னம் காணப்பட்டது. கர்த்தர் இவர்களை விட்டு விலகுங்கள். நிமிட நேரத்தில் அழிப்பேன் என்றார். மக்கள் அனைவரும் விலக பூமி பிளந்து அவர்களை தன்னகத்தே இழுத்துக் கொண்டது. அவர்கள் குடும்பத்தோடு அழிந்தனர்.

நம்முடைய செயல்களை ஒருவருக்கொருவர் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம். இறைவனின் ஏற்பாட்டை யாருமே எதிர்க்கக் கூடாது. மோசேயும் ஆரோனும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள். எந்த ஒரு காரணமும் இன்றி எதிர்த்த கோராகு கூட்டம் மடிந்தது. இறை ஊழியத்தையும் ஊழியர்களையும் மதிப்போம். குறை சொல்லாதிருப்போம். குற்றம் காணாதிருப்போம். பொறாமை கொள்ளாதிருப்போம். கடவுளின் கோபம் நம்மேல் வரும் என்ற பயத்தோடு வாழுவோம்.

சர்வவல்ல கடவுளே! உமது திருப்பணியைச் செய்ய நீர் பலரை அழைத்திருக்கிறீர். அப்படி அழைக்கப் பட்டவர்களை எதிர்த்துச் செயல்படாதபடி எங்களை தடுத்தாட்கொள்ளும். ஊழியங்களை ஊழியர்களை ஆதரிக்கும் நற்பண்பினைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

கோராகு – கடவுளின் ஏற்பாட்டை எதிர்த்தவன்2020-02-07T08:12:45+00:00

பிலெயாம் – கடவுளுக்கு கட்டுப்பட்டவர்

எண்ணாகமம் 24 : 12-14                                    10 பிப்ரவரி, 2020-திங்கள்

“இஸ்ரவேலை ஆசிர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலெயாம் கண்ட போது,…” – எண்ணாகமம் 24 : 1

ஒரு ஊரிலுள்ள அரசு வார்ப்புத் தொழிற்கூடத்திற்கு நிர்வாக அதிகாரியாக ஒரு பெரியவர் வந்தார். அந்தத் தொழிற் கூடத்திற்குப் பணியாட்களைத் தெரிந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தது. அவர் கண்டிப்புக்குப் பேர் போனவர். இருப்பினும் பலர் அரசியல் தலைவர்களின் சிபாரிசுகளுடன் அவரை வேலைக்காக அணுகினர். சிலர் பணத்தோடு அவரிடம் வந்தனர். ஆனால் அவரோ ஒரே வார்த்தையில் தகுதியுள்ளவர்களுக்கே வேலை. மற்றவர்கள் எந்த சிபாரிசுடனும், வெகுமதிகளுடனும் வந்தாலும் பயனில்லை என்றார். உண்மையில் அவர் சிறந்த அதிகாரியே.

பிலெயாம் என்பவர் ஒரு காலத்தில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். மோவாப் நாட்டின் அரசன் பாலாக்கு என்பவர் பணத்தோடும் வெகுமதிகளோடும் அவரை அணுகி, எப்படியாவது இஸ்ரவேலரை சபிக்க வேண்டும் என்றான். அக்காலத்தில் தீர்க்கதரிசிகள் ஒருவரை சபித்தால் அது நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. பிலெயாம் மனதில் சில சலனங்கள் இருந்தாலும் கர்த்தரின் சித்தமில்லாமல் தான் யாரையும் சபிப்பதில்லை என்றான். பலமுறை பாலாக்கு பிலெயாமுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறினாலும் பிலெயாமால் இஸ்ரவேலரை சபிக்க முடியவில்லை. காரணம் அவன் தரிசனத்தில், இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே கடவுளுக்குப் பிரியம் என கண்டு கொண்டார்.

கடவுள் தம் மக்களை ஆசீர்வதிக்கிறார். எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேலரை விடுவித்து கானான் நாட்டுக்கு அழைத்து வரும் வழியில் இச்சம்பவம் நடைபெற்றது. ஒரு நோக்கத்தோடு வழிநடத்தி கொண்டு வரும் கடவுள் இஸ்ரவேலரை எவராகிலும் சபிக்க அனுமதிப்பாரா? மாட்டவே மாட்டார்.

நம்முடைய வாழ்வில் சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், கடவுள் நம்மை விட்டு விலகினார் என்று எண்ணாதிருப்போம். ஒரு திட்டத்தோடு நம்மை வழி நடத்தி வரும் அவர் நம்மை நிர்கதியாக விட மாட்டார். நம்மை அவர் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார். நம்மைச் சபிக்க எண்ணும் பிறர் எண்ணங்களைத் தகர்ப்பார். கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற்ற நாம் பிறரை ஆசீர்வதிப்போம்.

ஆசீர்வதிக்கிற கடவுளே! உமது பிள்ளைகளை நீர் சபிப்பதில்லை. எவரையும் சபிக்கவும் விடுவதில்லை. நாங்களும் யார் மேலும் சாபச் சொல்லைக் கூறாதபடி தடுத்தாட் கொள்ளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பிலெயாம் – கடவுளுக்கு கட்டுப்பட்டவர்2020-02-07T08:10:58+00:00

பார்வோன் – கர்த்தரின் வல்லமையை அறியாதவர்

எபேசியர் 6 : 5-9                       09 பிப்ரவரி, 2020-ஞாயிறு

“…நானே கர்த்தர் என்பதை இதனால் அறிந்து கொள்வாய்.” – யாத்திராகமம் 7 : 18

ஒருவர் தன் தினசரி வேலையை முடித்துக் கொண்டு மாலை வீடு திரும்பினார். வீட்டில் ஒரே அமைதி. பிள்ளைகள் அழுது கொண்டிருந்தனர். மனைவி சோகமாக இருந்தாள். என்ன காரியம் என்று அவர் கேட்க, பக்கத்து வீட்டுக்காரர் வந்து சண்டை போட்டு விட்டு சென்றதாக கூறினாள். விபரத்தைக் கேட்ட அவர் இரு நான் யார் என்று அவனுக்குக் காட்டுகிறேன் என்று கோபமாகப் பேசி விட்டு வெளியே சென்றார்.

சாதாரணமாக பிரச்சனைகள் ஏற்படும்போது நமது வலிமையைக் காட்ட துடிக்கிறோம். எல்லாம் வல்ல கடவுள் அவருக்கு எதிராக வருவோருக்கு தன்னை யார் என்று காட்ட மாட்டாரோ? நிச்சயம் காட்டுவார். கர்த்தர் தன் வலிமையைப் பார்த்து பார்வோன் தன்னை அறிந்து கொள்வார் என்று கூறினார். இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். எகிப்தின் அரசனாகிய பார்வோன் அவர்களை அடக்கி ஒடுக்கி துன்புறுத்தி வந்தார். அவர் கையினின்று இஸ்ரவேலரை விடுவிக்க கடவுள் தீர்மானித்தார். அந்தப் பணியைச் செய்ய மோசே என்பவரை கடவுள் அழைத்தார். என் மக்களை விடுதலை செய் என்று மோசே வழியாக கர்த்தர் பல முறை கூறினார். ஆனால் பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி மக்களைப் போக விடேன் என்றார். அப்போது கர்த்தர் மோசே வழியாகக் கூறியது தான் நமது தியானப் பகுதி.

கடவுள் தம் பிள்ளைகள் துன்புறுவதை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. நாம் அவருடைய பிள்ளைகள். நாம் நமது பாவங்களால் சில வேளை துன்பம் அனுபவிக்கிறோம். நாம் சில படிப்பினையைப் பெறுவதற்காக கடவுள் சில வேளைகளில் இதற்கு அனுமதிக்கிறார். அதே சமயம் பார்வோன் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் தங்களுக்கு மேலான அதிகாரம் படைத்தவர் கடவுள் என்ற உணர்வோடு வாழ வேண்டும். கர்த்தர் தான் யார் தனது வல்லமை என்ன என்பதை பார்வோனுக்குக் காட்டினார். பத்து வாதைகளினால் அவரையும் அவர் மக்களையும் கலங்கடித்தார். அவர் கர்த்தரை அறிந்து கொண்டார். நாமும் பிறரை ஒடுக்காதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். நமக்கு மேலாக கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழுவோம்.

அனைத்துலகுக்கும் மேலான இறைவா! உமது வல்லமையை நாங்கள் புரிந்து கொள்ளாததினாலே பல தவறுகளைச் செய்கிறோம். பிறரை அடிமைப் படுத்துகிறோம். துன்புறுகிறவர்களோடு நீரும் இருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்டோம். பிறரை துன்புறுத்தாதபடி வாழ எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

பார்வோன் – கர்த்தரின் வல்லமையை அறியாதவர்2020-02-07T08:09:05+00:00

கூர் – பாரங்களை பகிர்ந்தவர்

கலாத்தியர் 6 : 2-5                           08 பிப்ரவரி, 2020-சனி

“…ஆரோனும் கூரும், ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் அவன் (மோசேயின்) கைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள்.” – யாத்திராகமம் 17 : 12

வில்லுக்குறிக்கருகே ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடும்பம். அக்குடும்பத்தின் தலைவர் திடீரென இறந்து போனார். மூத்த மகளின் திருமணம் பேசி முடிக்கப்பட்ட அந்த சூழலில் மரணம் குடும்பத்தாருக்கு பேரிழப்பாக இருந்தது. தாய் தன் மகளுடைய நிலையை எண்ணி கலங்கினாள். அக்குடும்பச் சூழலை அறிந்த அவ்வூரார், பணத்தாலும் பொருட்களாலும் உதவி செய்து அந்த மகளின் திருமணத்தை நடத்தி வைத்தனர். அக்குடும்பத்தின் பாரத்தை தங்கள் மேல் ஏற்றுக் கொண்ட அவ்வூராரின் செயல் பாராட்டப்பட்டது.

தியான வசனத்தில் ஆரோன் என்பவரும் கூர் என்பவரும் விடுதலை நாயகன் மோசேயின் கைகளைத் தாங்கிக் கொண்டிருந்ததாக வாசிக்கிறோம். எந்தச் சூழலில் அப்படித் தாங்கினார்கள் என்று பார்ப்போம். இஸ்ரவேலர் எகிப்தினின்று விடுதலைபெற்று செங்கடலைக் கடந்து வனாந்திரத்தில் பயணமாகிக் கொண்டிருந்தனர். அப்போது அமலேக்கியர் அவர்களோடு யுத்தம் செய்யப் புறப்பட்டு வந்தனர். அப்போது, மோசே யோசுவா என்பவருடைய தலைமையில் அவர்களை எதிர்த்துப் போரிடச் செய்தார். போரிட்டுக் கொண்டிருந்த சமயம் மோசே தன் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார். அப்போது இஸ்ரவேலர் எதிராளிகளை மேற்கொண்டனர். மோசேயின் கைகள் தளர்ந்து தாழ விழுகையில் அமலேக்கியர் மேற்கொண்டனர். இதைக் கண்ட ஆரோனும் கூரும் மோசேயின் கைகள் தாழ வராமல் உயர்த்தியே இருக்க தாங்கிக் கொண்டனர். இஸ்ரவேலர் முடிவில் வெற்றி பெற்றனர்.

ஒருவர் கடினப்பட்டு ஒரு பணியைச் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு உதவியாக யாராவது வருவது நல்லது. இது அவர் பாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்குச் சமம். வீட்டு கஷ்டங்களில் பெற்றோரைத் தாங்கும் பிள்ளைகள் வேண்டும். சகோதரரைத் தாங்கும் சகோதரர்கள் வேண்டும். நிறுவனத்தைத் தாங்கும் ஊழியர்கள் வேண்டும். திருச்சபையைத் தாங்கும் விசுவாசிகள் வேண்டும். நம் பாவங்களை சிலுவையில் தாங்கிய இயேசு நம்மை பிறர் பாரங்களில் பங்கெடுக்க அழைக்கிறார். தாங்குவோம். தோள் கொடுப்போம். துணை நிற்போம்.

நல்ல கடவுளே! பிறர் துன்பங்களில் பங்கெடுக்கும் நல்ல பண்புகளை எங்களில் உருவாக்கும். ஒருவர் பாரங்களை ஒருவர் சுமந்து அதை நிறைவேற்ற உதவும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

கூர் – பாரங்களை பகிர்ந்தவர்2020-02-07T08:06:50+00:00

அழைக்கப்பட்ட ஆசாரியன்

எபிரேயர் 5 : 1-4                            04 பிப்ரவரி, 2020-செவ்வாய்

“ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியஞ் செய்யும்படி அவனை அபிஷேகஞ்செய்து பரிசுத்தபடுத்து.” – யாத்திராகமம் 40 : 13

எல்லா நாடுகளிலும் எல்லா சமூகத்திலும் எல்லா நாட்களிலும் இறைப்பணி செய்வதற்குரிய மக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் குருக்கள் என்று அழைக்கப்பட்டனர். அரசர்கள் காலத்தில் அரச குருவாக செயல்பட்டவர்களைக் குறித்து நாம் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்திருப்போம். இஸ்ரவேலரின் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக லேவி கோத்திரத்தாரையே கடவுள் தெரிந்தெடுத்தார். அதில் ஆலயத்தின் உள்ளே நடத்த வேண்டிய காரியங்களை செய்ய ஒருவர் தன் குடும்பத்தோடு ஏற்படுத்தப்பட்டார். அவர் தான் ஆரோன்.

இஸ்ரவேலர் எகிப்தினின்று விடுதலையான போது ஒரு சமூகமாக ஏற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடல் சார்ந்த தேவைகளை மோசே பார்த்துக் கொண்டார். அவர்களின் ஆன்மீகக் காரியங்களைப் பார்க்க கடவுளின் ஆலோசனையுடன் ஆரோனைத் தெரிந்தெடுத்தார்.

ஆசாரியர் அல்லது குருக்கள் மக்களுக்கு கடவுளின் செய்தியைச் சொல்லுவார்கள். இறைவனிடம் மன்றாடுவார்கள். அவர்களுக்காக பலி செலுத்துவார்கள். காணிக்கைகளை அவர் சமூகத்துக்குக் கொண்டு வருவார்கள். இவை போன்ற சமயக் கடமைகளை ஆரோன் நிறைவேற்றி வந்தார். மேலும் மக்களின் பாவங்களுக்கான பரிகார பலிகள் போன்றவற்றையும் நிறைவேற்றி வந்தார். இந்த பணியை புதிய ஏற்பாட்டில் கனமான பணி என வாசிக்கிறோம். கடவுளின் அழைப்பும் அங்கீகாரமும் இன்றி யாரும் இப்பணியில் சேரவும் முடியாது. பணியாற்றவும் முடியாது.

இன்றைக்கு ஆலயங்களில் போதகர்கள் ஆசாரியப் பணியைச் செய்து வருகின்றனர். அவர்கள் செய்கிற கனமான இப்பணியை நாம் மதிக்கிறோமா? அவர்களை கனப்படுத்துகிறோமா? கிறிஸ்து ஒரு பிரதான ஆசாரியனாக இருந்து தன்னையே பலி செலுத்தினாரே. அவரை குறித்த எண்ணம் நமக்கு இருக்கிறதா? கடவுளின் பிரதிநிதிகளாக இவர்களைப் பார்ப்போம். ஆசாரியப் பணியை மதிப்போம். இறைச் சமூகம் தழைக்க பாடுபடுவோம்.

ஆண்டவரே! இறைப்பணி ஆற்ற தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே செய்ய அவர்களுக்கு உதவும். அவர்களை மதித்து ஆதரவளிக்க எங்களுக்கு நல்லுணர்வைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அழைக்கப்பட்ட ஆசாரியன்2020-01-31T08:09:45+00:00

சிப்போராள் – சமயோசித பெண்

யாத்திராகமம் 4 : 25-26                                        03 பிப்ரவரி, 2020-திங்கள்

“நீர் எனக்கு இரத்த புருஷன் என்றாள். பின்பு அவர் அவனை விட்டு விலகினார்.” – யாத்திராகமம் 4 : 25, 26

இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்க கடவுள் மோசேயைத் தெரிந்தெடுத்தார். நாற்பது வருடம் எகிப்து அரண்மனையில் வாழ்ந்து வந்த அவர் அடுத்த நாற்பது வருடங்கள் தன் மாமன் எத்திரா வீட்டில் எத்திராவின் மகள் சிப்போராளைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள் பிறந்தனர். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேக்கு கடவுள் எரிகிற அக்கினி சுவாலையில் காட்சி தந்தார். எகிப்து சென்று இஸ்ரவேலரின் விடுதலைக்காக பணியாற்றக் கூறினார். மோசே தன் குடும்பத்தோடு எகிப்து பயணமானார்.

வழியில் மோசேக்கு மாபெரும் ஆபத்து நேரிட்டது. கடவுள் அவரைக் கொல்லத் துணிந்தார். அப்போது மிகவும் சமயோசிதமாக சிப்போராள் செயல்பட்டு தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்தாள். அதனால் ஏற்பட்ட இரத்தத்தை மோசே காலில் தொட்டு கூறியதே நமது தியானப்பகுதி. ‘நீர் என் இரத்த புருஷன்’ அதைக் கண்ட கடவுள் மோசேயை கொல்லவில்லை.

இந்தக் காட்சி நமக்கு ஒரு புதிராகத் தோன்றும். கடவுள் தாம் அழைத்த மோசேயைக் கொல்லத் துணிந்தது ஏன் என்ற கேள்வி நம்மில் எழும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்று பார்ப்போம். இஸ்ரவேலில் ஒரு சட்டம் இருந்தது. அதன்படி யாராக இருந்தாலும் அவர்கள் விருத்த சேதன உடன்படிக்கைக்கு உட்பட வேண்டும். அப்படி இல்லையெனில் அவர்கள் கடவுளின் பிள்ளைகளாக இருக்க முடியாது என்பதே. இதற்கு மோசே விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே தான் சமயக் கடமையைத் தன் பிள்ளைக்கு நிறைவேற்றாத மோசேயை நீதியுள்ள கடவுள் தண்டிக்கப் பார்த்தார். சமயோசிதமாக செயல்பட்ட சிப்போராள் இங்கு உயர்ந்து நிற்கிறாள். தன் கணவனின் உயிரைப் பற்றி கவலைப்பட்டு தன் பதி பக்தியை நிலைநாட்டினாள்.

கணவனின் வாழ்வுக்காக கவலைப்படும் மனைவியாக வாழ்வோருக்கு சிப்போராள் நல்ல எடுத்துக்காட்டு. உயிருக்காக கவலைப்படாவிட்டாலும் உயிரை எடுக்காதவர்களாக மனைவிகள் இருத்தல் வேண்டும். பெற்றோர்களாயிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சமயக் கடமைகளை நிறைவேற்றத் தாமதிக்க வேண்டாம். ஏற்ற காலத்தில் ஞானஸ்நானம், திடப்படுத்தல் போன்ற காரியங்களுக்கு முக்கியத்துவம் தருவோம். கடவுளின் இரட்சிப்பின் பணி தொடர உழைப்போம்.

நீதியுள்ள கடவுளே! எல்லோரும் உமக்கு முன் சமமே! நாங்கள் எங்கள் பிள்ளைகட்குச் செய்ய வேண்டிய சமயக் கடமைகளை நிறைவேற்றும் உணர்வைத் தாரும். மனைவிகள் தங்கள் கணவரின் வாழ்வைக் குறித்து கவலைகொள்ள துணை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

சிப்போராள் – சமயோசித பெண்2020-01-31T08:07:53+00:00

எத்திரோ-நன்றி மறவாதவர்

எபிரேயர் 13 : 1-3                            02 பிப்ரவரி, 2020-ஞாயிறு

“…அந்த மனிதனை நீங்கள் விடடுவிட்டு வந்ததென்ன? போஜனம்பண்ணும்படி அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள்.” – யாத்திராகமம் 2 : 20

உதவி செய்தோருக்கு கைமாறாக எதையாவது செய்ய வேண்டும் என்பது நம்மில் பலருடைய மனப்பான்மை ஆகும். செய்த நன்றியை மறப்பது நல்லதல்லவே.

தியான வசனத்தில் இந்த நல்ல பண்பை வெளிப்படுத்திய ஒருவரைப் பார்க்கிறோம். அவர் எத்திரோ; மீதியான் தேசத்து ஆசாரியன். அவருக்கு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். இந்தக் குடும்பத்தைச் சந்திக்கும் வாய்ப்பு மோசேக்கு எப்படிக் கிடைத்தது என்று காண்போம். எகிப்தின் அரண்மனையில் வாழ்ந்து வந்த மோசே அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனாந்திரத்திற்கு ஓடிப் போனார். எங்கு போவது என்று தெரியாமல் இருந்த அவர் அங்கிருந்த ஒரு கிணற்றுக்கருகே உட்கார்ந்தார்.

அந்த கிணற்றுக்கு எத்திரோவின் ஏழு பெண் பிள்ளைகளும் தங்கள் ஆடுகளை ஓட்டி வந்தனர். அவைகளுக்கு தண்ணீர் இறைத்து ஊற்றிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த இதர மேய்ப்பர்கள் இப்பெண்களைத் துரத்தி தங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் தர முற்பட்டனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மோசே அம்மேய்ப்பர்களைத் துரத்தி அப்பெண்களின் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுக்கச் செய்தார். பின்னர் அப்பெண்கள் தங்கள் வீட்டுக்குச் சென்றனர். தன் பிள்ளைகள் சீக்கிரம் வந்ததை கண்ட எத்திரோ என்னவென்று வினவ அவர்கள் நடந்ததைக் கூறினர். அப்போது எத்திரோ, உங்களுக்கு உதவிய அவரை உடனே அழைத்து வாருங்கள். அவரை விட்டு விட்டு வந்ததென்ன என்றார். இதுவே நமது தியானப்பகுதி. உடனே இப்பெண்கள் சென்று மோசேயை அழைத்து வந்தனர். அவருக்கு உணவளித்து தங்கள் நன்றியைக் கூறினர். எங்கே போவதென்று தெரியாமல் வந்த மோசே அங்கேயே தங்கலானார்.

நன்மை செய்த மோசேக்கு கைமாறாக எத்திரோ செய்தவை நல்ல பண்புக்கு அடையாளம். நாம் நமக்கு நன்மை செய்வோருக்கு நன்றி சொல்கிறோமா? முக்கியமாக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோமா? இயேசு நம் பாவங்களை மன்னித்து, நம் நோய்களை குணமாக்கி, நமக்கு நன்மை செய்து வருகிறார். நன்றியோடு அவருக்குப் பணிவிடை செய்வோம். பிறருக்கு நம்மால் இயன்ற உதவியும் செய்வோம்.

நல்ல ஆண்டவரே! நீர் செய்யும் நன்மைகளுக்கும் பிறர் எங்களுக்குச் செய்யும் நல்லவைகட்கும் நன்றியுள்ளவர்களாக வாழும் நல் இருதயத்தைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

எத்திரோ-நன்றி மறவாதவர்2020-01-31T08:05:56+00:00

மோசே – விடுதலை வீரர்

யாத்திராகமம் 3 : 9-10                                  01 பிப்ரவரி, 2020-சனி

“இஸ்ரவேலராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்திற்கு அனுப்புவேன் வா என்றார்.” – யாத்திராகமம் 3 : 10

எஜமான் ஒருவரிடம் ஒரு மனிதர் வேலைக்குச் சேர்ந்து வீட்டு வேலை தோட்ட வேலை என்று அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். எஜமான் கொடுப்பதை மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டார். அவருக்கு திருமணமாகி குடும்பமான பிறகும் அவரிடமே வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே பெற்று வந்த சம்பளமே அவருக்கு கிடைத்தது. தன் பிரச்சனையை அவர் தன் சக நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டார். அவர் ‘நீ இதை உன் முதலாளியிடம் சொன்னாயா?” என்றார். இல்லை என்றார் இவர். முதலில் பேசு. பின்னர் இரண்டொரு நாள் வேலைக்குச் செல்லாதே என்று அவர் ஆலோசனை கொடுத்தார். ஆரம்பத்தில் வேலைக்காரனின் பேச்சைக் கேட்க மறுத்த எஜமானன், அவர் இரண்டொரு நாட்கள் வேலைக்கு வராததைக் கண்டு மனம்மாறினார். வேலையாளுக்குப் போதுமான சம்பளத்தைக் கொடுத்தார். பிரச்சனை தீர பேசுவது முதல்படி. மிக முக்கியமான படியுங்கூட.

இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். போதிய சம்பளமின்றி உணவின்றி, உறக்கமின்றி மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்தனர். இவர்கள் ஆபிரகாமின் சந்ததியார். மீட்பின் திட்டத்திற்காக கடவுள் இவர்களைத் தெரிந்தெடுத்திருந்தார். அவர்கள் கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக எகிப்துக்குப் போனார்கள். காலப் போக்கில் எகிப்து மன்னன் பார்வோன் இவர்களை அடிமைப் படுத்தியிருந்தார். கடவுள் இதைக் கண்டு மனமிரங்கி அவர்களை விடுவிக்கத் திட்டமிட்டார். அதற்காக மோசே என்பவரை அழைத்து பார்வோனிடம் பேசச் சொன்னார். பேச்சில் ஆரம்பித்த விடுதலைப் பணி பல கட்டங்களை கடந்து விடுதலையாகும் வரை சென்றது.

பிரச்சனைகள் தீர நாம் முதலில் பேச வேண்டும். அமைதியாயிருப்பதால் பிரச்சனைகள் தீர்வதில்லை. குடும்பப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, சமூகப் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் பேசினால் தீரும் என்று எண்ணினால் ஏன் பேசக் கூடாது! பேசுவோம். பிரச்சனைக்குத் தீர்வு காண்போம். ஒடுக்கப்படுகிற, புறக்கணிக்கப்படுகிற அனைவருக்காகவும் பேசுவோம். அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தூண்டு கோலாயிருப்போம்.

விடுதலை நாயகரே! அடிமைத்தனத்திற்குட்பட்டு துன்புறும் மக்களுக்காக பேசவும் அவர்கள் விடுதலைக்காக முயற்சிக்கவும் எங்களை பயன்படுத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மோசே – விடுதலை வீரர்2020-01-31T08:03:14+00:00
Go to Top