யாத்திராகமம் 4 : 25-26 03 பிப்ரவரி, 2020-திங்கள்
“நீர் எனக்கு இரத்த புருஷன் என்றாள். பின்பு அவர் அவனை விட்டு விலகினார்.” – யாத்திராகமம் 4 : 25, 26
இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்க கடவுள் மோசேயைத் தெரிந்தெடுத்தார். நாற்பது வருடம் எகிப்து அரண்மனையில் வாழ்ந்து வந்த அவர் அடுத்த நாற்பது வருடங்கள் தன் மாமன் எத்திரா வீட்டில் எத்திராவின் மகள் சிப்போராளைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு ஆண்மக்கள் பிறந்தனர். வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேக்கு கடவுள் எரிகிற அக்கினி சுவாலையில் காட்சி தந்தார். எகிப்து சென்று இஸ்ரவேலரின் விடுதலைக்காக பணியாற்றக் கூறினார். மோசே தன் குடும்பத்தோடு எகிப்து பயணமானார்.
வழியில் மோசேக்கு மாபெரும் ஆபத்து நேரிட்டது. கடவுள் அவரைக் கொல்லத் துணிந்தார். அப்போது மிகவும் சமயோசிதமாக சிப்போராள் செயல்பட்டு தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்தாள். அதனால் ஏற்பட்ட இரத்தத்தை மோசே காலில் தொட்டு கூறியதே நமது தியானப்பகுதி. ‘நீர் என் இரத்த புருஷன்’ அதைக் கண்ட கடவுள் மோசேயை கொல்லவில்லை.
இந்தக் காட்சி நமக்கு ஒரு புதிராகத் தோன்றும். கடவுள் தாம் அழைத்த மோசேயைக் கொல்லத் துணிந்தது ஏன் என்ற கேள்வி நம்மில் எழும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்று பார்ப்போம். இஸ்ரவேலில் ஒரு சட்டம் இருந்தது. அதன்படி யாராக இருந்தாலும் அவர்கள் விருத்த சேதன உடன்படிக்கைக்கு உட்பட வேண்டும். அப்படி இல்லையெனில் அவர்கள் கடவுளின் பிள்ளைகளாக இருக்க முடியாது என்பதே. இதற்கு மோசே விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே தான் சமயக் கடமையைத் தன் பிள்ளைக்கு நிறைவேற்றாத மோசேயை நீதியுள்ள கடவுள் தண்டிக்கப் பார்த்தார். சமயோசிதமாக செயல்பட்ட சிப்போராள் இங்கு உயர்ந்து நிற்கிறாள். தன் கணவனின் உயிரைப் பற்றி கவலைப்பட்டு தன் பதி பக்தியை நிலைநாட்டினாள்.
கணவனின் வாழ்வுக்காக கவலைப்படும் மனைவியாக வாழ்வோருக்கு சிப்போராள் நல்ல எடுத்துக்காட்டு. உயிருக்காக கவலைப்படாவிட்டாலும் உயிரை எடுக்காதவர்களாக மனைவிகள் இருத்தல் வேண்டும். பெற்றோர்களாயிருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய சமயக் கடமைகளை நிறைவேற்றத் தாமதிக்க வேண்டாம். ஏற்ற காலத்தில் ஞானஸ்நானம், திடப்படுத்தல் போன்ற காரியங்களுக்கு முக்கியத்துவம் தருவோம். கடவுளின் இரட்சிப்பின் பணி தொடர உழைப்போம்.
நீதியுள்ள கடவுளே! எல்லோரும் உமக்கு முன் சமமே! நாங்கள் எங்கள் பிள்ளைகட்குச் செய்ய வேண்டிய சமயக் கடமைகளை நிறைவேற்றும் உணர்வைத் தாரும். மனைவிகள் தங்கள் கணவரின் வாழ்வைக் குறித்து கவலைகொள்ள துணை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.
