Daily Devotional

Daily Devotional2019-03-25T10:30:46+00:00

Share This Story, Choose Your Platform!

சங்கீதம் 51 : 1-4                 05 அக்டோபர் 2026, திங்கள்

“அவர்கள் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போய், அந்த நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடையப் பாத்திரராய் எண்ணப்பட்டபடியால் மனமகிழ்ந்தார்கள்.” – அப்போஸ்தலர் 5 : 41

தென் ஆப்பிரிக்காவில் இருந்த இனவெறிக்கு எதிரியாக குரல் கொடுத்தவர் நெல்சன் மண்டேலா ஆவார். கருப்பு இன மக்களின் உரிமைக்காக போராடியதால் 27 ஆண்டுகள் சிறை வாசம் பெற்றார். சிறையில் முதல் சில ஆண்டுகள் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டார். அந்நிலையில் அவரிடம், ‘ஏன் நீங்கள் இவ்வளவு துன்பங்களை ஏற்றுக்கொள்ளுகிறீர்கள்’ என்று கேட்டகப்பட்டது. அதற்கு அவர், ‘என் இன மக்களுக்கு ஒரு நாள் நன்மை பிறக்கும். எனவே அவர்கள் நிமித்தம் இந்த துன்பங்களை ஏற்பது ஒன்றும் பெரிது இல்லை’ என்றாராம். தன் இனமக்களின் நலனுக்காக துன்பத்தில் மகிழ்ந்தார்.

தியான பாகத்தில், பேதுருவும், அப்போஸ்தலர்களும் ஆண்டவர் இயேசுவின் நாமத்தின் நிமித்தம் சிறை, அவமானத்தை மனமகிழ்ச்சியோடு எவ்விதம் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. பெந்தகொஸ்தே நாள் ஆவியானவரை பெற்றுக்கொண்ட பேதுருவும் அப்போஸ்தலர்களும் கடவுளின் வார்த்தையைப் பிரசங்கிக்க தொடங்கினர். கடவுள் வார்த்தைகளைக் கேட்ட அனேகர் மனம்மாறி ஆண்டவருக்குள் சேர்க்கப்பட்டனர். அப்போஸ்தலர் அற்புதங்களும் செய்தனர். நோயாளிகள் சுகம் பெற்றனர். இதனால் பிரதான ஆசாரியர், சதுசேயர்கள், வேதபாரகர்கள் ஆகியோர் அப்போஸ்தலர்கள் மேல் பொறாமை கொண்டு பேதுருவையும் அப்போஸ்தலரையும் சிறைவைத்தனர். மாலையில் ஆவியானவர் அவர்களை விடுவித்து வெளிப்படையாக பிரசங்கிக்கச் செய்தார். ஆனால் மீண்டும் அவர்களை அழைத்து இயேசுவை குறித்து பேசக்கூடாது என்று கண்டித்து அனுப்பினார்கள். பேதுருவும் அப்போஸ்தலரும் இயேசுவின் நிமித்தம் இந்த அவமானத்தை மனமகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டார்கள்.

நமது விசுவாசத்தின் நிமித்தம் இன்றும் பல அச்சுறுத்தல்களும் போராட்டங்களும் இருக்கிறது. இருப்பினும் கிறிஸ்துவுக்காய் துன்பங்களை சகிப்பதும் அவைகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வதும் அவசியம். நமக்காய் தம்மையே தந்த நமதாண்டவர் இயேசுவுக்காய் நமது விசுவாசத்தை விட்டுவிடாமல் உறுதியாய் மகிழ்ச்சியோடு விசுவாசத்தில் முன்னேறி செல்ல கடவுளிடம் நம்மை அர்பணிப்போம்.

அன்பின் கடவுளே! உம்முடைய அன்பை இயேசுவில் பெற்றுக் கொண்ட இரட்சண்ய சந்தோஷத்தில் நிலைத்து வாழ உதவி செய்தருளும். ஆமேன்.

Share This Story, Choose Your Platform!

Go to Top