vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 615 blog entries.

கடவுளை நினைக்காத வாழ்க்கை

ஏசாயா 43 : 22-26                                  10 ஜூன் 2026, புதன்

“உன் பாவங்களினால் நீயே என்னைத் தொந்தரவுசெய்து, …என்னை வருத்தப் படுத்தினாய்.” – ஏசாயா 43 : 24

ஒரு கிராமத்தில் ஒரு தந்தை மகன் வசித்து வந்தார்கள். அவருடைய மகன் எப்போதும் தந்தையிடமிருந்து பெறுவதற்கே விரும்பினான்-உணவு, ஆடை, பாதுகாப்பு. ஆனால் ஒருநாளும் தந்தைக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்கூட கொண்டு வரவில்லை. ஒருநாள் தந்தை அமைதியாக சொன்னார்: “நான் உனக்கு எல்லாம் கொடுத்தேன். ஆனால் நீ என்னை நினைத்ததே இல்லை.” அந்த வார்த்தை மகனின் இதயத்தை உடைத்தது. அவன் உணர்ந்தான். அன்பைப் பெற்றிருந்தாலும், அன்பை திருப்பிக் கொடுக்கவில்லை, இந்த நவீன வாழ்வில்.
ஏசாயா 43ஆம் அதிகாரம், கடவுள் தமது ஜனங்களிடம் பேசும் அன்பான அழைப்பாகும். இஸ்ரவேல் மக்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர் அவர்களை மீட்டார், பாதுகாத்தார், ஆசீர்வதித்தார். ஆனால் 24வது வசனத்தில், கடவுள் ஒரு வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்: மக்கள் அவருக்குச் சிறந்த பலிகளை கொடுக்கவில்லை, அவரை மகிழ்விக்க முயற்சிக்கவில்லை, மாறாக, தங்கள் பாவங்களால் அவரை சோர்வடையச் செய்தனர்.

கடவுள் நம்மிடம் பெரிய விஷயங்களை கேட்கவில்லை. அவர் விரும்புவது ஒரு உண்மையான இதயம். நாம் தினமும் அவரிடமிருந்து பெறுகிறோம் உயிர், சுவாசம், ஆசீர்வாதங்கள், பாதுகாப்பு. ஆனால் நாம் அவருக்கு என்ன கொடுக்கிறோம்? பல நேரங்களில் இல்லாத நாட்கள், நன்றி இல்லாத மனம், அவரை நினைக்காத வாழ்க்கை. இதுவே கடவுளை “சோர்வடையச் செய்கிறது” என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால் அதிசயம்? அவர் இன்னும் நம்மை விட்டுவிடவில்லை! அடுத்த வசனங்களில், அவர் சொல்கிறார் “நான் உன் அக்கிரமங்களை மன்னிக்கிறேன்.” இதுதான் கிருபை, ஒரு தந்தையின் முழு அன்பு. நாம் கொடுக்காத போதும், அவர் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இன்று நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி : நான் கடவுளை என் வாழ்வால் மகிழ்விக்கிறேனா? என் வாழ்க்கை அவருக்கான நன்றி பலியாக இருகின்றதா? அவருக்கு வேண்டியது: பெரிய காணிக்கை அல்ல, சுத்தமான இதயம். ஆகாவே நாம் கடவுளை சோர்வடையச் செய்யும் மக்கள் அல்ல, அவரை மகிழ்விக்கும் ஜனமாக இருப்போம். இன்று முதல் சிறிய ஜெபம், உண்மையான நன்றி, அன்பான கீழ்ப்படிதல்… இதுவே அவருக்கு இனிய வாசனை. அவர் நமக்காக எல்லாம் செய்தார். நாம் அவருக்காக வாழ்வோம்.

அன்பான ஆண்டவரே! வெளிப்புற ஆராதனையில் மட்டும் அல்லாமல், உண்மையான இருதயத்துடன் உம்மை ஆராதிக்க உதவிடும். என் பாவங்கள் உம்மை சுமையாக்காதபடி, என்னை சுத்திகரிக்கவும் மாற்றவும். உம்மோடு சரியான உறவில் வாழ கிருபை தாரும். என் வாழ்க்கை உம்மை மகிழ்விப்பதாக இருக்கட்டும். இயேசுவின் பெயரால், ஆமேன்.

கடவுளை நினைக்காத வாழ்க்கை2026-06-08T09:06:41+00:00

ஊழிய பொறுப்பு

2 கொரிந்தியர் 11 : 7-9                                     09 ஜூன் 2026, செவ்வாய்

“…எனக்குக் குறைச்சல் நேரிட்டபோதும், நான் ஒருவருக்கும் பாரமாயிருக்கவில்லை;” – 2 கொரிந்தியர் 11 : 9

வாழ்க்கையில் சவால்கள் எப்போதும் வரும். சில நேரங்களில் நம் தேவைகள் மிகுந்தபோதிலும், பிறர் உதவியின்றி நம் முயற்சியையே நம்ப வேண்டிய நிலை ஏற்படும். எறும்பு தனது உடலைவிட 20 மடங்கு பெரிய எடையுடைய தானியங்களை எடுக்கும் மற்றும் கூட்டு முயற்சியோடு ஒருமித்து வாழும். பெரிய எடைகளை சுமந்தாலும் அது சுமையை விட்டுவிடாது, தொடர்ந்து முன்னேறுகிறது. நமது வாழ்க்கையிலும், பிறரின் உதவி இல்லாத நேரங்களில் நம்மால் செய்யக்கூடியதை நம்பிக்கையுடன் செய்யும் முயற்சியே நம்மை முன்னேற்றும்.

இன்றைய தியானப்பகுதில் மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் எனக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்தார்கள். எல்லாவற்றிலும் உங்களுக்குப் பாரமாக இருக்காதபடி என்னைக் காத்துக்கொண்டேன், இனியும் அப்படியே இருப்பேன்.” இந்த வசனத்தில் பவுல் தனியாக அல்ல, “சகோதரர்கள் தேவையைப் பூர்த்தி செய்தார்கள்” என்று சொல்கிறார். இது சபையின் உதாரத்துவத்தையும் வெளிப்படுகிறது. தேவையான நேரங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவுவது கிறிஸ்தவ வாழ்க்கையின் அழகு. இது ஒற்றுமையையும் அன்பையும் கட்டியெழுப்புகிறது. அவர் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது, தனது தேவைகளுக்காக பிறர்மீது சுமையாக இருக்க விரும்பவில்லை. அவருடைய சேவை சுயநலமில்லாதது, அது முழுவதும் அர்ப்பணிப்பும் அன்பும் கொண்டது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும்போதுகூட, மற்றவர்களுக்கு சுமையாக இருக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும். அதே நேரத்தில், பவுல் தனது வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தைக் காத்துக்கொண்டார் – பிறருக்கு சுமையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உறுதி. இது நமக்கும் ஒரு பாடம். நாம் உதவி பெறலாம், ஆனால் அதையே நம்பி சோம்பேறியாக இருக்கக்கூடாது.

பவுல் அப்போஸ்தலன் உதவி இல்லாத நேரங்களில் தன்னால் தேவையை நிறைவேற்றியதைப் பார்க்கும்போது, நாம் கடின உழைப்பையும் பொறுமையையும் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மால் செய்யக்கூடியதை செய்வதே நம்பிக்கையின் உண்மையான சோதனை. சிறிய முயற்சிகளும் தொடர்ந்து செய்யப்படும் போது பெரிய விளைவுகளை உண்டாக்கும். பிறரின் உதவி இல்லாத நேரங்களிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், இறைவன் நம்மை ஆதரித்து நம் தேவைகளை நிறைவேற்றுவார். இதனால் நமது மனதில் பொறுமை, நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு வளர்ந்து, வாழ்க்கை சவால்களை வெற்றி பெறும் வாய்ப்பாக மாற்றும்.

இந்த வசனம் நமக்கு இரண்டு முக்கியமான உண்மைகளை கற்றுக்கொடுக்கிறது:

1. நாமே பொறுப்புடன் வாழ வேண்டும்.

2. மற்றவர்களுக்கு அன்புடன் உதவ வேண்டும்.

                                                        இந்த இரண்டும் சமநிலையாக இருக்கும் போது, கிறிஸ்துவின் சபை ஆரோக்கியமாக வளர்கிறது.

அன்பான ஆண்டவரே! தாழ்மையுடனும் பொறுப்புடனும் வாழ உதவிடும். மற்றவர்களுக்கு சுமையாக இல்லாமல், ஆசீர்வாதமாக இருக்கச் செய்யும். தேவையான நேரங்களில் உதவி செய்யும் மனதையும், உதவி பெறும் போது நன்றியுடன் இருப்பதற்கும் கிருபை தாரும். என் வாழ்க்கை உம்முடைய அன்பை பிரதிபலிக்கட்டும். இயேசுவின் பெயரால், ஆமேன்.

ஊழிய பொறுப்பு2026-06-08T09:00:19+00:00

உழைப்பு

எபிரேயர் 13 : 15-17                          08 ஜூன் 2026, திங்கள்

“உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடி, …இரவும் பகலும் வேலை செய்து சாப்பிட்டு வந்தோம்.” – 2 தெசலோனிக்கேயர் 3 : 8

ஒரு செயலை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பது சோம்பேறித்தனம், ஓய்வு என்பது கடினமாக உழைப்பிற்கு பிறகு வரும் அசதி, ஆனால் இன்றைய வாழ்கை சூழலில் எது சோம்பேறிதனம், எது ஓய்வு என்ற புரிதல் இல்லாமல் வாழ்கின்றனர், உழைப்பு இல்லை என்றால் அங்கு வளர்சி இல்லாமல் போகிறது.

தியானப்பகுதியில் அப்போஸ்தலர் பவுல், தெசலோனிக்கேய திருச்சபையில் சோம்பல் மற்றும் ஒழுங்கின்மை இருப்பதை பார்கிறார். சில உறுப்பினர்கள் வேலை செய்யவில்லை, ஏனென்றால் கடவுளின் வருகை சமீபம் என்று வேலை எதுவும் செய்யாமல் தங்களை தாங்களே கள்ள போதகத்தால் ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். இது பவுலுக்கு கவலையை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, கடின உழைப்பு மற்றும் தன்னிறைவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர் தனது இரண்டாவது கடிதத்தை எழுதினார்.

பவுல் தனது ஊழியத்தில் நற்செய்தியை அறிவிப்பது மட்டும் அல்லாது கூடாரம் போட்டு தன்னிறைவாக இருந்தார். தெசலோனிக்கேயர்களுக்கு பொறுப்பான நடத்தையை மாதிரியாகக் காட்டி, உழைக்காமல் இருப்பது தவறு. கிறிஸ்தவர்களாக, நாம் நமது செயல்களில் பொறுப்புடனும் மரியாதையுடனும் வாழ அழைக்கப்படுகிறோம் என்று வலியுறுத்தினார். அப்போஸ்தலர் பவுல் சுவிசேஷத்தை அறிவித்தவர் மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையாலும் அதை வாழ்ந்து காட்டியவர். பிறருக்கு பாரமாக இல்லாமல், உழைப்பின் மதிப்பை அவர் வாழ்ந்து காட்டினார். “இலவசமாகச் சாப்பிடவில்லை” என்று கூறும்போது, அது அவரது பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. கடவுள் நமக்கு வாழ்க்கையையும் திறமைகளையும் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி உழைப்பது நமது கடமை. சோம்பேறித்தனம் விசுவாச வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.

“இரவும் பகலும் உழைத்து” – இது அர்ப்பணிப்பின் அடையாளம். பவுல் போதனை செய்வது மட்டும் அல்ல, அவர் தியாகத்துடன் உழைத்தார். அவர் செய்த உழைப்பு மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக இருந்தது. நமது வாழ்க்கையும் அப்படியே இருக்க வேண்டும். வார்த்தைகளால் மட்டும் அல்ல, செயல்களாலும் சாட்சி சொல்ல வேண்டும். “யாருக்கும் பாரமாக இருக்காதபடி” இது அன்பின் வெளிப்பாடு. நாம் பிறருக்கு உதவ வேண்டும், ஆனால் தேவையில்லாமல் பிறர் மீது சுமையாக இருக்கக் கூடாது. நமது உழைப்பால் நாமே நின்று, பிறருக்கு உதவும் வாழ்க்கையை வாழ வேண்டும்.

இந்த வசனம் நமக்கு ஒரு சமநிலையை கற்றுக்கொடுக்கிறது. உழைப்பு, பொறுப்பு, அன்பு. கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளை வீணாக்காமல், அதை உபயோகித்து உழைத்து, மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும்.

அன்பான ஆண்டவரே! உழைப்பின் மதிப்பை எங்களுக்கு உணர்த்தும். சோம்பேறித் தனத்திலிருந்து எங்களை விலக்கி, பொறுப்புடன் வாழ உதவி செய்யும். என் வாழ்க்கை மற்றவர்களுக்கு பாரமாக அல்ல, ஆசீர்வாதமாக இருக்கட்டும். நான் செய்வதெல்லாம் உம்முடைய மகிமைக்காக இருக்க கிருபை தாரும். இயேசுவின் பெயரால், ஆமேன்.

உழைப்பு2026-06-05T07:59:22+00:00

கடவுளின் உன்னத தெரிந்தெடுப்பு

1 பேதுரு 1 : 20                                 05 ஜூன் 2026, வெள்ளி

“இவன் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்.” – லூக்கா 23 : 35

“அறிவர் மார்ட்டின் லுத்தர் கூறுகிறார், “சிலுவை கடவுளின் பள்ளி, அங்கு அவர் தனது ஆழ்ந்த ஞானத்தை கற்பிக்கிறார்.” ஒரு ஆசிரியர் மாணவனிடம் வகுப்பில் ஒழுக்கம் ஒருவரின் வாழ்கையை மாற்றும் என்று கற்பித்தார். அதனை மறக்காமல் வாழ்கையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். அவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். அவர் ஆசிரியர் திரு. ஐயாத்துரை சாலமன் அவர்கள். எனவே சிலுவை நமது பள்ளி என்றால் அவை கற்றுக் கொடுப்பது தியாகம் மற்றும் கடவுளின் அன்பு ஆகும்.

இன்றைய தியானப்பகுதியில் சிலுவையின் அருகில் நின்ற மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு நிகழ்வைக் கண்டார்கள்; ஆனால் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் இதே நிலை இருக்கலாம். நாம் கிறிஸ்துவைப் பற்றி கேட்கிறோம், சிலுவையைப் பார்க்கிறோம்; ஆனால் அதன் ஆழமான அன்பை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

அதிகாரிகள் இயேசுவை கேலி செய்தார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகள் இகழ்ச்சியாக இருந்தாலும், அதில் ஒரு உண்மை மறைந்திருந்தது – “அவன் பிறரை இரட்சித்தான்.” ஆம், இயேசு இரட்சகர்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது வல்லமையைக் காட்டும் ஒரு இரட்சகர். கடவுள் கொடுத்தது தியாகத்தின் மூலம் இரட்சிப்பை அளிக்கும் கிறிஸ்து.

“தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்“ என்ற சவால், மனித சிந்தனையின் வெளிப்பாடு. உலகம் சக்தி, அதிகாரம், அதிசயம் ஆகியவற்றை எதிர்பார்க்கிறது. ஆனால் கடவுள் அன்பையும் தியாகத்தையும் தேர்ந்தெடுக்கிறார். இயேசு சிலுவையிலிருந்து இறங்கவில்லை. ஏனெனில் அவர் தம்மை காப்பாற்றுவதற்காக அல்ல, மனிதகுலத்தை இரட்சிக்கத்தான் வந்தார். இது தோல்வி போல தோன்றிய தருணம். ஆனால் அதுதான் கடவுளின் வெற்றி. சிலுவை மனித கண்களுக்கு பலவீனம். ஆனால் கடவுளுடைய கண்களுக்கு அது வல்லமை. இயேசு அமைதியாக துன்பத்தைத் தாங்கியதில், அவர் அன்பின் ஆழம் வெளிப்பட்டது.

இன்று நாம் எந்த அணியில் நிற்கிறோம்? வெறும் பார்த்துக் கொண்டிருப்பவர்களா? நையாண்டி செய்பவர்களா? அல்லது அந்த சிலுவையின் அர்த்தத்தை உணர்ந்து, சிலுவை கூறும் உண்மைகளை பின்பற்றி இந்த உன்னத தெரிந்தெடுப்பில் நன்றி கூறி வாழ்பவர்களாக இருகின்றோமா? நமது பதில் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்.

சிலுவையை நோக்கிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், அது நமக்கு நினைவூட்ட வேண்டிய காரியம் – “இது எனக்காக என் பாவத்திற்காக நடந்தது.” அந்த உணர்வு நம்மை மாற்றும், தாழ்மையாக்கும், அன்பில் வளரச் செய்யும் இவ்வாறு வாழும்போது நாம் கடவுளின் உன்னத தெரிந்தெடுப்பாக இருப்போம்.

அன்பான இயேசுவே! சிலுவையின் அர்த்தத்தை ஆழமாக உணர உதவிடும். நான் வெறும் பார்வையாளராக இல்லாமல், உம்முடைய அன்பை அனுபவித்து உமது உண்மை சீடராக வாழ தூய ஆவியரால் வழிநடத்தும். அப்பா பிதாவே, நாங்கள் உமது உன்னத தெரிந்தெடுப்பின் பிள்ளைகளாக வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.

கடவுளின் உன்னத தெரிந்தெடுப்பு2026-06-05T07:54:57+00:00

இயேசுவே என் சொந்தம்

லூக்கா 10 : 41-42                              03 ஜூன் 2026, புதன்

“தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததி… அவருக்குச் சொந்தமான ஜனம்.” – 1 பேதுரு 2 : 9

இன்றைய உலகத்தில் மனிதர்களின் அடையாளம், சொந்தம் அவர்களின் பதவி, செல்வம், அல்லது பின்னணி மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் கடவுளுடைய வார்த்தை விசுவாசிகளுக்கு ஒர் உயர்ந்த, மாற்றமற்ற அடையாளத்தை அளிக்கிறது. துன்பத்திலும் துரத்தப்படுதலிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதும் பேதுரு, அவர்களின் பலவீனங்களை நினைவூட்டவில்லை. மாறாக, அவர்கள் கிறிஸ்துவில் பெற்றிருக்கும் தெய்வீக அடையாளத்தை, அவர்கள் கடவுளின் சொந்தங்கள் என்பதை நினைவூட்டுகிறார்.

“ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்ததி, அரச குருத்துவம், பரிசுத்த ஜாதி, கடவுளுக்குச் சொந்தமான மக்கள். இருளிலிருந்து தமது அதிசயமான ஒளிக்குள் உங்களை அழைத்தவரின் மகிமைகளை அறிவிக்கும்படியாக.”

இவ்வசனம் விசுவாசியின் உண்மையான அடையாளத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறது. உலகம் நம்மை எவ்வாறு பார்க்கிறதோ அதுவே நம்முடைய மதிப்பு அல்ல, கடவுள் நம்மை எப்படி காண்கிறார் என்பதே நம்முடைய உண்மையான அடையாளம். பல சமயங்களில் நாம் நம்மை பலவீனமாகவும் தகுதியற்றவர்களாகவும் எண்ணிக் கொள்கிறோம். ஆனால் கடவுள் நம்மை “தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்” என்று அழைக்கிறார். இது நம்முடைய முயற்சியால் கிடைத்ததல்ல, அவருடைய கிருபையால் கிடைத்தது.
நாம் “ராஜரீக ஆசாரியக் கூட்டம்” என்று அழைக்கப்படுகிறோம் என்பதில் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. அதாவது நம்முடைய வாழ்க்கை கடவுளுக்கான ஆராதனையாக இருக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகள், செய்கிற செயல்கள், மற்றவர்களுடன் நடக்கும் விதம், இவை அனைத்திலும் கடவுளுடைய சித்தம் வெளிப்பட வேண்டும். மேலும் நாம் “பரிசுத்த ஜாதி” என்று சொல்லப்படுவது, உலகத்தின் வழிகளுக்கு ஒத்துபோகாமல், கடவுளுடைய சித்தத்துக்கு ஏற்ப வாழ அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவூட்டுகிறது.

இன்றைய தியனப்பகுதி, நாம் ஒருகாலத்தில் இருளில் இருந்தோம். பாவம், அறியாமை, நம்பிக்கையின்மை ஆகியவை நம்மை கட்டிப்பிடித்திருந்தது. ஆனால் கடவுள் தனது கிருபையால் நம்மை அந்த இருளிலிருந்து அழைத்து தனது அதிசயமான ஒளிக்குள் கொண்டுவந்தார். அந்த ஒளி நமக்கு புதிய வாழ்க்கையையும் புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது. இதனால் நமது வாழ்க்கையின் நோக்கம் தெளிவாகிறது. நாம் நமக்காக மட்டும் வாழ்வதற்காக அல்ல, கடவுளுடைய மகிமைகளை அறிவிக்கும்படி வாழ அழைக்கப்பட்டவர்கள்.

நமது வாழ்க்கை, மற்றவர்களுக்கு கடவுளுடைய அன்பையும் கிருபையையும் காட்டும் சாட்சியாக இருக்க வேண்டும். இன்று நம்முடைய வாழ்க்கையை ஆராய்ந்து, “நான் கடவுளுடைய ஒளியை வெளிப்படுத்துகிறேனா?” நான் கடவுளின் சொந்த மக்களாய் இருகின்றேனா? என்று நம்மை நாமே ஆராய்ந்துபார்போம்.

அன்பின் பரிசுத்த பிதாவே! எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணாதிசயங்களை அறிவிக்க ராஜரீக ஆசாரியக் கூட்டமாய் வாழ கிருபை தாரும். ஆமேன்.

இயேசுவே என் சொந்தம்2026-06-02T08:02:07+00:00

தெரிந்தெடுப்பின் நோக்கம்

2 தெசலோனிக்கேயர் 2 : 13-14                      02 ஜூன் 2026, செவ்வாய்

“நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு… இவருக்குள் நம்மைத் தெரிந்தெடுத்து, …” – எபேசியர் 1 : 4

நாம் தேர்வு செய்வதில் வல்லவர்கள். ஏனென்றால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்க பலமுறை சிந்திக்கிறோம், பலரின் அனுபவத்தை கேட்கிறோம். …ஏன் நாட்டை ஆளுகை செய்கிறவர்களை தெரிந்தெடுப்பதில்கூட அநேக முறை சிந்திக்கிறோம்.

ஆனால் கடவுளின் தெரிந்தெடுப்பு என்பது பணத்தையோ, தகுதி உள்ளவர்கள் என்றோ தெரிந்துகொள்ளவில்லை. நம் மீது இரக்கம் உள்ள கடவுள் தமது ஒரேபேரான குமாரன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியே இரட்சிப்பை பெற தகுதி இல்லாத நம்மை கடவுள் தமது அன்பினால் தகுதிப்படுத்தி அழைத்திருக்கிறார்.

தியானப்பகுதியில் குறிப்பிட்டபடி இந்த தெரிந்தெடுப்பு நாம் பிறப்பதற்கு முன் கடவுள் நம்மை தமது பரிசுத்த ஜனமாகத் தெரிந்துகொண்டார். மேலும் நம்மை வார்த்தையோடுகூடிய ஞானஸ்தானத்தினால் கழுவி தமக்கு சொந்தமாகத் தெரிந்துகொண்டார்.

வாழ்கையின் சில நேரங்களில் நாம் இந்த உலகத்தில் ஏன் இருக்கிறோம்? நம்முடைய வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? சில நேரங்களில் நாம் தேவையற்றவர்களாகவும், மதிப்பில்லாதவர்களாகவும் உணரலாம். ஆனால் இந்த இறை வார்த்தை ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது, நாம் சாதாரணமானவர்கள் அல்ல, கடவுளால் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உலகம் உண்டாகுமுன்பே, கடவுள் நம்மை நினைத்து, நேசித்து, தேர்ந்தெடுத்தார். பவுல் அப்போஸ்தலர் எபேசுவில் சிறையில் இருந்தபோது விசுவாசிகளுக்கு நம்பிக்கை அளிக்க இந்த உண்மையை பகிர்ந்தார். நம் இரட்சிப்பு ஒரு தற்செயல் அல்ல, அது கடவுளுடை நித்திய திட்டம். இது கடவுளுடைய அன்பின் ஆழத்தையும், நம்மீது வைத்திருக்கும் அவருடைய திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. நாம் கடவுளைத் தேடுவதற்கு முன்பே, அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார். இது நம்முடைய திறமையால் அல்ல, கடவுளுடைய கிருபையால். அவர் நம்மை பரிசுத்தமும் குற்றமற்ற வாழ்க்கைக்கும் அழைக்கிறார்.

சில நேரங்களில் நாம் நம்மைத் தகுதியற்றவர்களாக நினைக்கலாம். நம் பாவங்களும் குறைகளும் நம்மை அப்படி நினைக்கத் தூண்டும். ஆனால் கடவுள் நம்மை நம்முடைய நிலையைக் கொண்டு அல்ல, அவருடைய அன்பைக் கொண்டு தேர்ந்தெடுத்தார். கிறிஸ்துவுக்குள் நாம் புதியவர்களாக மாற்றப்படுகிறோம். இந்த உண்மை நமக்கு பொறுப்பையும் தருகிறது. அந்த பொறுப்பு “நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்தார்.” எனவே நாம் உலகத்தின் வழிகளில் அல்ல, கடவுளுடைய சித்தத்தில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கை அவருடைய மகிமையை வெளிப்படுத்த வேண்டும். இன்று நாம் நம்மை கடவுளிடம் ஒப்படைப்போம். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தவர். நம் வாழ்க்கை அவருடைய கையில் அர்த்தமுள்ளதாய் மாறுகிறது.

அன்பின் கடவுளே! தகுதியற்ற எங்களை பரிசுத்தமும், மாசற்றவர்களாய் வாழ உம்முடைய சொந்த குமாரன் எங்கள் ஆண்டவர் இயேசுவில் எங்களை தெரிந்து கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். எப்பொழுதும் அவ்வாறு வாழ உமது ஆவியானவரை எங்கள் உள்ளத்தில் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.

தெரிந்தெடுப்பின் நோக்கம்2026-06-01T10:50:58+00:00

சிலுவை ஞானம்

1 கொரிந்தியர் 1 : 26-28                                          01 ஜூன் 2026, திங்கள்

“பைத்தியமானவைகளைக் கடவுள் தெரிந்தெடுத்தார்… பலவீனமானவைகளைக் கடவுள் தெரிந்தெடுத்தார்.”  – 1 கொரிந்தியர் 1 : 27

மனிதர்கள் ஞானத்தை அடைய பல வழிகளை தேடிச் செல்கிறார்கள். ஞானம் என்பதும் அறிவு என்பதும் ஒன்றல்ல, அறிவு என்பது தகவல்களையும் உண்மைகளையும் படித்து, அறிந்துகொள்வது. ஞானம் என்பது கடவுளிடமிருந்து பெறுவது மற்றும் பெற்ற அறிவைப் பயன்படுத்தி சரியான தீர்ப்புகளையும் முடிவுகளையும் எடுப்பதாகும்.

இன்றைய நாளின் தியானத்தில், பவுல் தனது இரண்டாம் பயணத்தின்போது உருவாக்கிய கொரிந்து திருச்சபையில் உலக ஞானிகளுக்கு சிலுவை ஒரு அவமானத்தின் குறி, தோல்வியின் குறி, வேதனை மற்றும் கொலை செய்யப் பயன்படும் கருவி. இது மனித ஞானம். கடவுளின் ஞானம் சிலுவையின் வழி வாழ்வின் உண்மையான வெற்றி, தாழ்மை மற்றும் தியாகத்தில் உள்ளது என்பதை தெளிவாக விளக்கி கூறுகிறார்.

இந்த வசனம் கடவுளுடைய செயல் திட்டத்தின் ஆழ்ந்த இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. உலகம் மதிக்கும் அளவுகோல்கள் கடவுளுடைய அளவுகோல்களல்ல. மனிதர்கள் அறிவையும், அதிகாரத்தையும், பெருமையையும் உயர்வாகக் கருதுகிறார்கள். ஆனால் கடவுள் எளிமையானவற்றையும், பலவீனமானவற்றையும், உலகம் கணக்கில் கொள்ளாதவற்றையும் தேர்ந்தெடுக்கிறார். இதன் மூலம், மனித ஞானம் போதாது என்பதையும், கடவுளின் கிருபை மட்டுமே போதும் என்பதையும் அவர் காட்டுகிறார்.

சிலுவை இந்த உண்மையின் மிகப் பெரிய வெளிப்பாடு. மனித பார்வையில் சிலுவை அவமானத்தின் குறி. ஆனால் கடவுளுடைய திட்டத்தில் அது இரட்சிப்பின் கதவு. இயேசு கிறிஸ்து சிலுவையில் பலவீனமாக தோன்றினாலும், அதே சிலுவையில் அவர் பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தார். இதுவே தேவ ஞானத்தின் மகத்துவம், பலவீனத்தில் பலம், தோல்வியில் ஜெயம், மரணத்தில் ஜீவன்.

இன்றைய தியானம் நமக்கு தாழ்மையை கற்றுக்கொடுக்கிறது. நாம் நம்முடைய திறமைகளில் பெருமை கொள்ள வேண்டியதில்லை. கடவுள் நம்மை எவ்வளவு பெரியவர்களாக இருக்கிறோம் என்பதற்காக அல்ல, அவருக்குள் ஒப்படைக்கப்பட்டவர்களாக இருப்பதற்காகவே பயன்படுத்துகிறார். நம்முடைய குறைகள்கூட அவருடைய கையில் ஆசீர்வாதமாக மாறலாம்.

நாம் வாழ்க்கையில் தாழ்த்தப்பட்டவர்களாக உணரும்போது, இந்த வசனம் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. கடவுள் நம் வாழ்வில் செயல்படுகிறார். அவர் நம்மை மறக்கவில்லை. அவர் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஆகையால் இன்று நாம் நம்முடைய பலவீனங்களையும் கவலைகளையும் கடவுளிடம் ஒப்படைப்போம். அவர் அவற்றின் மூலம் தனது மகிமையை வெளிப்படுத்துவார். கடவுளில் நம்பிக்கை வைத்து வாழ்கையை வாழுவோம், இதுவே உண்மையான ஞானம்.

அன்பின் உருவாய் புவியில் வந்து பாவிகளை மீட்க, சிலுவையில் மரித்து, உயர்த்தெழுந்த அன்பின் கர்த்தரே! உமது மீட்பை பெற தகுதி இல்லாத எங்களை அழைத்து, தகுதிப்படுத்தி உமது மீட்பை பறைசாற்ற கிருபை தந்த ஆண்டவரே, மனுக்கள் யாவரும் அழியாதபடி உமது மீட்பை யாவரும் பெற சிலுவையின் ஞானத்தை யாவருக்கும் தாரும். இயேசுவின் பெயரால், ஆமேன்.

சிலுவை ஞானம்2026-06-01T06:42:49+00:00

பாவிகளின் மீட்பர்

1 தீமோத்தேயு 1 : 13-16                            21 மே 2026, வியாழன்

“பிரதான பாவி நான்.” – 1 தீமோத்தேயு 1 : 15

அப்போஸ்தலராகிய பவுல் தன்னை “பிரதான பாவி” என்று சொன்னது அவருடைய வாழ்க்கையின் மிகத் தாழ்மையான சாட்சியமாகும். முன்பு அவர் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி, சபையை அழிக்க நினைத்தவர், சாட்சிகளை கொலை செய்ய ஒப்புதல் அளித்தவர். ஆனால் கிறிஸ்து இயேசு அவரைத் தேடி வந்தார். பவுலின் கடந்த பாவக் குற்றங்களையும், கடந்த காலத்தையும் மறந்து, அவரைத் தன் ஊழியக்காரனாகத் தேர்ந்தெடுத்தார்.

எப்பேர்ப்பட்ட தவறு செய்தவராயினும் கடவுளுடைய கிருபை கிடைக்குமானால் இயேசுவின் இரத்தம் அவரைச் சுத்திகரிக்க வல்லது. பவுல் தன்னை “பிரதான பாவி” என்று சொன்னது கடந்த கால பாவத்தின் குற்ற மனசாட்சியாக அல்ல. மாறாக, தனக்கு கிடைத்த கிருபையின் மகிமையை வெளிப்படுத்துவதற்காக.

நாமும் கடவுளின் முன் நம்முடைய நிலையை உணர வேண்டும். நம்முடைய நீதி எதுவும் இல்லை; நமக்கு நீதிமானாகத் தோன்றும் காரியங்களும் கடவுளுடைய முன்னிலையில் அழுக்கான ஆடைகளே. ஆனால் கிறிஸ்துவின் கிருபை நம்மை மூடுகிறது, சுத்திகரிக்கிறது, புதியவர்களாக்குகிறது.

எனவே, “பிரதான பாவி நான்” என்று குறிப்பிடும்போது அதில் கடிவுளின் “பெரிய கிருபை என்னைச் சுற்றியுள்ளது” என்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. இதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும் ஆகும்.

கர்த்தாவே! நான் பிரதான பாவி. ஆனால் உமது கிருபை மிகுந்தது. என் கடந்த காலத்தையும் பாவங்களையும் மன்னித்து, உமது கிருபையால் என்னை புதிதாய் மாற்றினதற்காய் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.

பாவிகளின் மீட்பர்2026-05-19T09:32:24+00:00

பரிசுத்தமான உறவின் அழைப்பு

எபேசியர் 5 : 22-32                       20 மே 2026, புதன்

“விபசாரம் செய்யவேண்டாம்.” – யாத்திராகமம் 20 : 14

இஸ்ரவேல் மக்கள் விக்கிரக ஆராதனை செய்யும் நாட்டுக்குள்ளே நுழைய இருந்தார்கள். எனவே அவர்கள் பாலின பாவத்துக்குள் விழுந்துவிடும் சோதனைக்குள்ளாவார்கள் என்பதை கடவுள் அறிந்திருந்தார். எனவேதான், “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்ற கட்டளையை கொடுத்தார். இது கடவுள் மனுகுலத்துக்கு தந்தருளிய பத்து கட்டளைகளில் ஏழாவது கட்டளை. ஆண்டவர் திருமணத்தை ஒரு பரிசுத்த உடன்படிக்கையாக நிறுவி கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சம் என்று கட்டளை கொடுத்திருக்கிறார். அந்த உடன்படிக்கையை மீறும் பாவமே விபசாரம். உலகம் இவ்வித ஆசைகளை சாதாரணமாகக் கருதினாலும், கடவுள் அதை மிகப் பெரிய பாவமாகக் கருதுகிறார்.

இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தில் இதை மேலும் ஆழமாக எடுத்துக்கூறினார்: “ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்தவனாகிறான். அதாவது, விபசாரம் என்பது வெறும் உடல் பாவமல்ல. அது மனதில் பிறக்கும் ஆசையிலிருந்தே தொடங்கு

கிறது.” புதிய ஏற்பாட்டிலும் எபிரேய புத்தகத்தின் ஆசிரியர், “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் கடவுள் நியாயந்தீர்ப்பார்” என்று கூறுகிறார்.
இன்றைய உலகில் குறிப்பாக ஊடகங்களும், சமூகச் சூழலும், இந்தப் பாவத்தை மிகவும் சாதாரணமாகக் காட்டுகின்றன. ஆனால் கர்த்தருடைய வேதம் தெளிவாகச் சொல்கிறது: விபசாரம் இறை சித்தத்திற்கு விரோதமானது; அது குடும்பத்தையும், சமூகத்தையும் சிதைத்து; ஆன்மாவை அழிக்கிறது. இக்கொடிய பாவத்திலிருந்து விலகி வாழ்வதற்கேதுவாக, யோபு தன் கண்களுடன் உடன்படிக்கை செய்ததாக வாசிக்கிறோம்.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், கிறிஸ்துவில் மன்னிப்பும் புதிய வாழ்க்கையும் இருக்கிறது. யோவான் 8-இல் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணிடம் இயேசு, “நானும் உன்னைத் தண்டிக்கவில்லை; போ, இனிமேல் பாவம் செய்யாதே” என்றார். அது தண்டனையல்ல, கடவுளின் கிருபையுள்ள மன்னிப்பையும், புதுப்பிப்பையும், தூய்மையையும் வெளிப்படுத்துகிறது.

எனவே, “விபசாரம் செய்யாதிருப்பாயாக” என்கிற கடவுளுடைய கட்டளை நம் வாழ்வில் பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும், குடும்ப ஒற்றுமையையும் காக்கும் எச்சரிக்கையாகவும், நம் இதயத்தை பரிசுத்தமாக வாழ்விக்கிற அழைப்பாகவும் உள்ளது. பாலுணர்வு தொடர்பான சோதனைகள் நம்மைத் தொந்தரவு செய்தால் கர்த்தரின் துணையை நாடி சோதனையை முளையிலே கிள்ளியெறிந்துவிட வேண்டும். நமது கண்களும் இதயமுமே சோதனை ஆரம்பமாகும் இடமாதலால் அதனை வேத வசனங்களால் நிரப்பி (சங்.119 : 11) சோதனையை ஜெயிப்பதையே கருத்திற்கொள்ள வேண்டும்.

கர்த்தாவே! திருமணத்தைப் பரிசுத்த உடன்படிக்கையாக தந்தமைக்கு உமக்கு நன்றி. என் கண்களையும் என் இதயத்தையும் பரிசுத்தமாகக் காக்கும் கிருபை தாரும். என் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் உம்முடைய பரிசுத்தத்தையும் விசுவாசத்தையும் நிலைநிறுத்துவீராக. இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பரிசுத்தமான உறவின் அழைப்பு2026-05-19T09:30:10+00:00

முதன்மை இடத்தை விரும்பாதே

1 பேதுரு 3 : 8,9                                  20 மார்ச் 2026, வெள்ளி

“சகோதரரைத் தானே… ஏற்றுக்கொள்ள மனமுடையவர்களையும் தடை செய்து சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.”

– 3 யோவான் 1 : 10

நமது சமூகத்தில், நாம் பெரும்பாலும் தலைமைத்துவம், லட்சியம் மற்றும் காரியங்களைச் செய்து முடிக்கும் மக்களைக் கொண்டாடுகிறோம். பொறுப்பேற்பவர்களை நாம் போற்றுகிறோம். ஆனால் இந்தப் பண்புகள் தனிப்பட்ட ஆதாயம், அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும்போது என்ன நடக்கும்? திருமறையில் உள்ள மிகக் குறுகிய புத்தகங்களில் ஒன்றான யோவானின் மூன்றாவது நிருபம், தியோத்திரேப்பு என்ற மனிதனின் வடிவத்தில் இந்தப் பிரச்சனைக்கு அழியாத உதாரணத்தை நமக்குத் தருகிறது. திருச்சபைக்குள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது பற்றிய ஆழமான எச்சரிக்கையாகும்.
தியோத்திரேப்புவின் குணாதிசயம் அவர் ‘சபையில் முதன்மையான இடத்தை விரும்புகிறார்.’ முதன்மையானவராக இருப்பதற்கான அவரது ஆசை கிறிஸ்துவையோ அல்லது மற்றவர்களையோ சேவிப்பது பற்றியது அல்ல. அது அவரது பெருமையை பற்றியது. இதுவே அவரது அனைத்து பிரச்சினைகளுக்கும் வேர். ‘உங்களில் பெரியவர் அனைவருக்கும் ஊழியராக இருக்க வேண்டும்’ என்று சொன்ன இயேசுவின் போதனைக்கு இது நேரடி முரண்பாடாகும்.

தியோத்திரேப்பு அமைதியாக இருக்கவில்லை. அவர் யோவானையும் அவரது தோழர்களையும் தீவிரமாக விமர்சித்தார். அவர்களுக்கு கருணை காட்டத் துணிந்தவரையும், தன்னுடன் உடன்படாதவர்களை அமைதியாகவும் சபையில் இருந்து வெளியேற்றவும் செய்தார். ஒரு தலைவர் திருச்சபையை கடவுளின் மகிமைக்காக அல்ல, தனிப்பட்ட அதிகாரத்திற்காக அல்லது புகழுக்காகப் பயன்படுத்துகிறார். தியோத்திரேப்பு கடவுளின் மக்களை நேசித்ததைவிட தன்னை அதிகமாக நேசித்தார். கிறிஸ்துவின் அதிகாரத்தைவிட தனது சொந்த அதிகாரத்தை அவர் அதிகமாக மதிப்பிட்டார்.

நாம் பெருமைமிக்கவர்களாக அல்ல. தாழ்மையான ஊழியர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சொந்த இருதயங்களை ஆராய்வோம். நாம் எங்கு முதலில் இருக்க விரும்புகிறோம்? நம் குடும்பத்திலா? நம் நட்புகளிலா? நம் பணியிடத்திலா? நம் திருச்சபையிலா? அந்த விருப்பத்தை விட்டுவிட்டு. அதற்கு பதிலாக உலகம் நம்மில் கிறிஸ்துவின் உண்மையான இருதயத்தைக் காணும்படி சேவை செய்ய நேசிக்கும் ஒரு விசுவாசியாக நாம் இருப்போம்.

கிருபை நிறைந்த கடவுளே! நாங்கள் எங்களுடைய பதவிகளைக் குறித்து பெருமை பாராமல் உமக்கு உண்மையுள்ள ஊழியம் செய்ய வழிநடத்தும். இயேசுவின் வழியில் பிதாவே, ஆமேன்.

முதன்மை இடத்தை விரும்பாதே2026-03-16T06:12:58+00:00
Go to Top