1 தீமோத்தேயு 1 : 13-16 21 மே 2026, வியாழன்
“பிரதான பாவி நான்.” – 1 தீமோத்தேயு 1 : 15
அப்போஸ்தலராகிய பவுல் தன்னை “பிரதான பாவி” என்று சொன்னது அவருடைய வாழ்க்கையின் மிகத் தாழ்மையான சாட்சியமாகும். முன்பு அவர் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி, சபையை அழிக்க நினைத்தவர், சாட்சிகளை கொலை செய்ய ஒப்புதல் அளித்தவர். ஆனால் கிறிஸ்து இயேசு அவரைத் தேடி வந்தார். பவுலின் கடந்த பாவக் குற்றங்களையும், கடந்த காலத்தையும் மறந்து, அவரைத் தன் ஊழியக்காரனாகத் தேர்ந்தெடுத்தார்.
எப்பேர்ப்பட்ட தவறு செய்தவராயினும் கடவுளுடைய கிருபை கிடைக்குமானால் இயேசுவின் இரத்தம் அவரைச் சுத்திகரிக்க வல்லது. பவுல் தன்னை “பிரதான பாவி” என்று சொன்னது கடந்த கால பாவத்தின் குற்ற மனசாட்சியாக அல்ல. மாறாக, தனக்கு கிடைத்த கிருபையின் மகிமையை வெளிப்படுத்துவதற்காக.
நாமும் கடவுளின் முன் நம்முடைய நிலையை உணர வேண்டும். நம்முடைய நீதி எதுவும் இல்லை; நமக்கு நீதிமானாகத் தோன்றும் காரியங்களும் கடவுளுடைய முன்னிலையில் அழுக்கான ஆடைகளே. ஆனால் கிறிஸ்துவின் கிருபை நம்மை மூடுகிறது, சுத்திகரிக்கிறது, புதியவர்களாக்குகிறது.
எனவே, “பிரதான பாவி நான்” என்று குறிப்பிடும்போது அதில் கடிவுளின் “பெரிய கிருபை என்னைச் சுற்றியுள்ளது” என்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. இதுவே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும் ஆகும்.
கர்த்தாவே! நான் பிரதான பாவி. ஆனால் உமது கிருபை மிகுந்தது. என் கடந்த காலத்தையும் பாவங்களையும் மன்னித்து, உமது கிருபையால் என்னை புதிதாய் மாற்றினதற்காய் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.
