2 தெசலோனிக்கேயர் 2 : 13-14                      02 ஜூன் 2026, செவ்வாய்

“நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு… இவருக்குள் நம்மைத் தெரிந்தெடுத்து, …” – எபேசியர் 1 : 4

நாம் தேர்வு செய்வதில் வல்லவர்கள். ஏனென்றால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்க பலமுறை சிந்திக்கிறோம், பலரின் அனுபவத்தை கேட்கிறோம். …ஏன் நாட்டை ஆளுகை செய்கிறவர்களை தெரிந்தெடுப்பதில்கூட அநேக முறை சிந்திக்கிறோம்.

ஆனால் கடவுளின் தெரிந்தெடுப்பு என்பது பணத்தையோ, தகுதி உள்ளவர்கள் என்றோ தெரிந்துகொள்ளவில்லை. நம் மீது இரக்கம் உள்ள கடவுள் தமது ஒரேபேரான குமாரன் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியே இரட்சிப்பை பெற தகுதி இல்லாத நம்மை கடவுள் தமது அன்பினால் தகுதிப்படுத்தி அழைத்திருக்கிறார்.

தியானப்பகுதியில் குறிப்பிட்டபடி இந்த தெரிந்தெடுப்பு நாம் பிறப்பதற்கு முன் கடவுள் நம்மை தமது பரிசுத்த ஜனமாகத் தெரிந்துகொண்டார். மேலும் நம்மை வார்த்தையோடுகூடிய ஞானஸ்தானத்தினால் கழுவி தமக்கு சொந்தமாகத் தெரிந்துகொண்டார்.

வாழ்கையின் சில நேரங்களில் நாம் இந்த உலகத்தில் ஏன் இருக்கிறோம்? நம்முடைய வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன? சில நேரங்களில் நாம் தேவையற்றவர்களாகவும், மதிப்பில்லாதவர்களாகவும் உணரலாம். ஆனால் இந்த இறை வார்த்தை ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது, நாம் சாதாரணமானவர்கள் அல்ல, கடவுளால் முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். உலகம் உண்டாகுமுன்பே, கடவுள் நம்மை நினைத்து, நேசித்து, தேர்ந்தெடுத்தார். பவுல் அப்போஸ்தலர் எபேசுவில் சிறையில் இருந்தபோது விசுவாசிகளுக்கு நம்பிக்கை அளிக்க இந்த உண்மையை பகிர்ந்தார். நம் இரட்சிப்பு ஒரு தற்செயல் அல்ல, அது கடவுளுடை நித்திய திட்டம். இது கடவுளுடைய அன்பின் ஆழத்தையும், நம்மீது வைத்திருக்கும் அவருடைய திட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. நாம் கடவுளைத் தேடுவதற்கு முன்பே, அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார். இது நம்முடைய திறமையால் அல்ல, கடவுளுடைய கிருபையால். அவர் நம்மை பரிசுத்தமும் குற்றமற்ற வாழ்க்கைக்கும் அழைக்கிறார்.

சில நேரங்களில் நாம் நம்மைத் தகுதியற்றவர்களாக நினைக்கலாம். நம் பாவங்களும் குறைகளும் நம்மை அப்படி நினைக்கத் தூண்டும். ஆனால் கடவுள் நம்மை நம்முடைய நிலையைக் கொண்டு அல்ல, அவருடைய அன்பைக் கொண்டு தேர்ந்தெடுத்தார். கிறிஸ்துவுக்குள் நாம் புதியவர்களாக மாற்றப்படுகிறோம். இந்த உண்மை நமக்கு பொறுப்பையும் தருகிறது. அந்த பொறுப்பு “நாம் பரிசுத்தமுள்ளவர்களும், மாசற்றவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்தார்.” எனவே நாம் உலகத்தின் வழிகளில் அல்ல, கடவுளுடைய சித்தத்தில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். நம்முடைய வாழ்க்கை அவருடைய மகிமையை வெளிப்படுத்த வேண்டும். இன்று நாம் நம்மை கடவுளிடம் ஒப்படைப்போம். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தவர். நம் வாழ்க்கை அவருடைய கையில் அர்த்தமுள்ளதாய் மாறுகிறது.

அன்பின் கடவுளே! தகுதியற்ற எங்களை பரிசுத்தமும், மாசற்றவர்களாய் வாழ உம்முடைய சொந்த குமாரன் எங்கள் ஆண்டவர் இயேசுவில் எங்களை தெரிந்து கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். எப்பொழுதும் அவ்வாறு வாழ உமது ஆவியானவரை எங்கள் உள்ளத்தில் தாரும். இயேசுவின் வழியே, ஆமேன்.