எபேசியர் 6 : 5-9 09 பிப்ரவரி, 2020-ஞாயிறு
“…நானே கர்த்தர் என்பதை இதனால் அறிந்து கொள்வாய்.” – யாத்திராகமம் 7 : 18
ஒருவர் தன் தினசரி வேலையை முடித்துக் கொண்டு மாலை வீடு திரும்பினார். வீட்டில் ஒரே அமைதி. பிள்ளைகள் அழுது கொண்டிருந்தனர். மனைவி சோகமாக இருந்தாள். என்ன காரியம் என்று அவர் கேட்க, பக்கத்து வீட்டுக்காரர் வந்து சண்டை போட்டு விட்டு சென்றதாக கூறினாள். விபரத்தைக் கேட்ட அவர் இரு நான் யார் என்று அவனுக்குக் காட்டுகிறேன் என்று கோபமாகப் பேசி விட்டு வெளியே சென்றார்.
சாதாரணமாக பிரச்சனைகள் ஏற்படும்போது நமது வலிமையைக் காட்ட துடிக்கிறோம். எல்லாம் வல்ல கடவுள் அவருக்கு எதிராக வருவோருக்கு தன்னை யார் என்று காட்ட மாட்டாரோ? நிச்சயம் காட்டுவார். கர்த்தர் தன் வலிமையைப் பார்த்து பார்வோன் தன்னை அறிந்து கொள்வார் என்று கூறினார். இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். எகிப்தின் அரசனாகிய பார்வோன் அவர்களை அடக்கி ஒடுக்கி துன்புறுத்தி வந்தார். அவர் கையினின்று இஸ்ரவேலரை விடுவிக்க கடவுள் தீர்மானித்தார். அந்தப் பணியைச் செய்ய மோசே என்பவரை கடவுள் அழைத்தார். என் மக்களை விடுதலை செய் என்று மோசே வழியாக கர்த்தர் பல முறை கூறினார். ஆனால் பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி மக்களைப் போக விடேன் என்றார். அப்போது கர்த்தர் மோசே வழியாகக் கூறியது தான் நமது தியானப் பகுதி.
கடவுள் தம் பிள்ளைகள் துன்புறுவதை எப்போதும் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. நாம் அவருடைய பிள்ளைகள். நாம் நமது பாவங்களால் சில வேளை துன்பம் அனுபவிக்கிறோம். நாம் சில படிப்பினையைப் பெறுவதற்காக கடவுள் சில வேளைகளில் இதற்கு அனுமதிக்கிறார். அதே சமயம் பார்வோன் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் தங்களுக்கு மேலான அதிகாரம் படைத்தவர் கடவுள் என்ற உணர்வோடு வாழ வேண்டும். கர்த்தர் தான் யார் தனது வல்லமை என்ன என்பதை பார்வோனுக்குக் காட்டினார். பத்து வாதைகளினால் அவரையும் அவர் மக்களையும் கலங்கடித்தார். அவர் கர்த்தரை அறிந்து கொண்டார். நாமும் பிறரை ஒடுக்காதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். நமக்கு மேலாக கடவுள் இருக்கிறார் என்பதை உணர்ந்து வாழுவோம்.
அனைத்துலகுக்கும் மேலான இறைவா! உமது வல்லமையை நாங்கள் புரிந்து கொள்ளாததினாலே பல தவறுகளைச் செய்கிறோம். பிறரை அடிமைப் படுத்துகிறோம். துன்புறுகிறவர்களோடு நீரும் இருக்கிறீர் என்பதைப் புரிந்து கொண்டோம். பிறரை துன்புறுத்தாதபடி வாழ எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
