vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

யூதாஸ்

மத்தேயு 27 : 1-8                                                              07 மார்ச், 2020-சனி

“அப்பொழுது அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, போய் நான்றுகொண்டான்.” – மத்தேயு 27 : 5

யூதாவின் தென்கோடியிலிருந்த ஸ்காரியோத் என்னும் நகரத்தைச் சேர்ந்தவன் யூதாஸ். இயேசுவின் சீடர்களின் குழுவில் பொருளாளராக இருந்தவன். முதலில் நம்பத் தகுந்தவராக இருந்து பின்னர் பண ஆசைக்குள் யூதாஸ் தள்ளப்பட்டிருக்கவும் இடம் உண்டு. இவனுடைய இருதயத்தில் சாத்தான் புகுந்தான் என்று திருமறை கூறுகிறது. யூதாஸ் படிப்படியாக இயேசுவோடும் அவரது சீடர்களோடும் உள்ள உறவை துண்டித்துவிட்டு, இயேசுவுக்கு எதிரான கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டான்.

யூதாஸின் முத்தமும் துரோகமும் இயேசுவை குற்றவாளியாக உலகத்திற்கு காட்டியது. துரோகம் செய்கிறவர்களை இந்த தவக் காலத்தில் கடவுள் எச்சரிக்கிறார். போலித்தனமான அன்பு காட்டாதிருப்போம். இயேசு கிறிஸ்துவை தேவ குமாரன் என்று நம்பாதவர்கள் இருக்கிறார்கள். அவர் பாவப் பரிகாரி என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். குற்றங்களை மன்னிக்கிறவர் என்றும் உணராதவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் முடிவை தாங்களே தேடிக் கொள்கிறார்கள் என்பதை யூதாஸிடமிருந்து கற்றுக் கொள்ளுவோம். தவறான முறையில் சம்பாதிக்கப்படும் செல்வம் நம்மை நிச்சயம் காப்பாற்றப் போவதில்லை. வெள்ளிக்காசுகள் யூதாஸிற்கு வாழ்வைக் கொடுக்கவில்லை. மாய்மால அன்பும், பணவெறியும் நம் வாழ்விற்கு என்றும் ஆபத்தானவை. சிலுவை, இயேசுவின் அன்பின் ஆழம், அகல உயரங்களை நமக்கு காட்டுகின்றன. மனந்திரும்புவோம், அழிவுநிலை மாறி வாழ்வு நிலைக்கு வந்திடுவோம். சிலுவை நாதர் இரங்கி நம்மைக் காப்பாராக!

எங்கள் வாழ்வின் ஆதாரமே! கடவுளே!! நாங்கள் உலகப் பொருளுக்கும் உமக்கும் ஒரே நேரத்தில் சேவை செய்ய இயலாது என்பதை உணர்ந்து வாழ கிருபை தாரும்! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

யூதாஸ்2020-03-06T07:01:11+00:00

மனம் வருந்திய பேதுரு

தரிசனம் 2 : 3-5                                     29 பிப்ரவரி, 2020-சனி

“…ஆண்டவர் தன்னிடம் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைத்துக் கொண்டு…. மனங்கசந்து அழுதான்.” – லூக்கா 22 : 61-62

உயிருக்கு பயம் வரும் போது மனிதன் எதையும் விட்டுவிடத் தயங்கமாட்டான். பேதுருவுக்கும் இப்படிப்பட்ட சூழல் வந்த போது அவர் ஆண்டவரை மறுதலித்தார். இருப்பினும் அதை நினைத்து மனங்கசந்து அழுதார். இதுவே நம் தியானப்பகுதி.

ஆண்டவர் இயேசு தம் சீடர்களை தனியாக அழைத்து பல காரியங்களை உபதேசித்து வருவதுண்டு. அதுபோல தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முற்தைய நாளில் அவர்களுக்கு பல காரியங்களை கூறினார். அதில் ஒன்று வரப்போகிற ‘சோதனை.’ அவர் பேதுருவைப் பார்த்து, சாத்தான் உங்களை சோதிக்க போகிறான்; எனவே விசுவாசத்தில் விழுந்து விடாதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென கூறினார். ஆனால் பேதுரு இதைப் பெரிதாக எண்ணவில்லை. காவலிலும் சாவிலும் உம்மை விட்டு விலகேன் என்றார். ஆனால் நடந்ததென்ன? இயேசுவைக் கைது செய்த பின், அவர் விசாரிக்கப்பட்ட அரண்மனைக்குள் பேதுருவும் நுழைந்தார். அங்குதான் அவர் அந்த சோதனையை சந்தித்தார். அங்குள்ளவர்கள் நீயும் இயேசுவோடிருந்தவன்தானே என்று கேட்ட போது, தன் உயிர் மேல் உள்ள பற்றினால் ‘இல்லை’ என்றார். ஒன்றுக்கு மூன்று முறை தனக்கும் இயேசுவுக்கும் சம்மந்தமே இல்லை என்றார். விசாரணையின் மத்தியில் இயேசு வெளியே வந்தபோது பேதுருவை உற்றுப் பார்த்தார். அந்த பார்வை பேதுருவை மனம் வருந்தச் செய்தது. ஐயோ, நான் ஆண்டவரை மறுதலித்து விட்டேனே என்று புலம்பினார்.

நம்மில் பலரும் ஆண்டவரை மறுதலித்துக் கொண்டு தான் வருகிறோம். வேலைக்காக, மக்களுக்காக, ஊருக்காக இன்று ஆண்டவரை விட்டுவிட பலர் தயார். அன்பர்களே, இயேசு உங்களையும் உற்றுப் பார்க்கிறார். மனம் திரும்புவோம். மனம் கசந்து அழுத பேதுருவை ஏற்றுக் கொண்ட ஆண்டவர் நம்மையும் ஏற்றுக் கொள்வார். நம் பாவங்களுக்காக மனம் வருந்துவோம். மன்னிப்புப் பெறுவோம்.

எல்லாம் அறிந்த கடவுளே! என்னென்ன காரியங்களில் நாங்கள் உம்மை மறுதலித்து வருகிறோம் என்பதை நீர் அறிவீர். வேலைக்காக, பிறர் தயவை பெற உம்மை மறுத்திருக்கிறோம். இது தவறு என்று ஒத்துக் கொண்டு மன்னிப்பு கோருகிறோம். மன்னிப்பீராக. இயேசுவில் பிதாவே ஆமேன்.

மனம் வருந்திய பேதுரு2020-02-24T06:29:05+00:00

திருந்திய சவுல்

1 தீமோத்தேயு 1 : 12-15                                            28 பிப்ரவரி, 2020-வெள்ளி

“…நான் அறியாமல் அவிசுவாசத்தில் அப்படிச் செய்த படியினால் இரக்கம் பெற்றேன்.” – 1 தீமோத்தேயு 1 : 13

சவுல் இஸ்ரவேலரின் பென்யமீன் கோத்திரத்தில் பிறந்தவர். மத காரியங்களில் மிகவும் வைராக்கியமாயிருந்தார். தங்களுக்கு எதிராக வருவோரை அவர் துன்புறுத்தினார். குறிப்பாக கிறிஸ்தவம் வளர்ந்து வந்த காலங்களில் அதை நசுக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தன்னுயிரை ஈந்த முதல் இரத்த சாட்சி ஸ்தேவானின் மரணத்திற்கு இவர் சாட்சியாக இருந்தார்.

கிறிஸ்தவத்தை அழிக்கத் துடித்த சவுலை இயேசு கிறிஸ்து சந்தித்தார். ‘நீ ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?’ என்று கேட்டார். கிறிஸ்தவர்களை துன்புறுத்துவது கிறிஸ்துவை துன்புறுத்துவதற்கு சமமா என்ற கேள்வி சவுலுக்குள் எழுந்தது. பாடுபடுகிற கிறிஸ்தவர்களோடு தன்னை இணைத்துக் கொள்கிற இயேசுவே எனது இரட்சகர் என்பதை புரிந்து கொண்ட சவுல் மனமாறி கிறிஸ்தவரானார். அன்று முதல் அவர் பிறருக்கு கிறிஸ்துவைக் குறித்தும் தன் மனமாற்றத்தைக் குறித்தும் சாட்சி பகர்ந்து வந்தார். தான் ஆண்டவரை அறிவதற்கு முந்தைய காலம் அறியாமையின் காலம் என்று கூறினார். தான் செய்த அக்கிரமம் அனைத்தும் அறியாமல் செய்தது என்று மனங்கலங்கி சொல்லி வந்தார். அவருடைய உண்மையான மனவருத்தம் அவரை ஆண்டவரிடம் சேர்த்தது. கடவுளின் இரக்கத்தினால் அவரைத் தண்டனையிலிருந்து விடுவித்தது.

எந்த அளவிற்கு கிறிஸ்தவர்களை அவர் பாடுபடுத்தினாரோ அந்த அளவிற்கு தன்னை அர்ப்பணித்தார். இன்று இதை வாசிக்கும் நாம் அறியாமல் செய்து வந்த தவறுகளை அறிந்தும் செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். தெரிந்தும் செய்கிற தவறுகளை கடவுள் மன்னிப்பாh என்றும் சிந்திக்க வேண்டும். எப்படியாயினும் பாவங்களுக்காக மனந்திரும்பி இயேசுவிடம் வருவோம். தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்லாதிருப்போம். இயேசுவில் பாவமன்னிப்பைப் பெறுவோம். நித்திய வாழ்வின் சுதந்திரவாளிகளாவோம்.

அனைவரையும் அரவணைக்கும் இறைவா! உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை மன்னித்தருளும். அறியாமல் செய்த தவறுகளுக்கு மனம் வருந்துகிறோம். உம் இரக்கப் பார்வையை எங்கள் மேல் வீசி எங்களை ஏற்றுக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.

திருந்திய சவுல்2020-02-24T06:27:14+00:00

திருந்திய சகேயு

லூக்கா 6 : 33-36                                     27 பிப்ரவரி, 2020-வியாழன்

“…இதோ, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன்.” – லூக்கா 19 : 8

பெருவியாதியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் உயிர் காக்க தம் ஆஸ்திகளை இழக்க சம்மதிப்பர். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் கள்ளனிடம் தம் உடைமைகளை கொடுக்க சிலர் ஒத்துக் கொள்வர். உயிரை காப்பாற்ற இவர்கள் தம் செல்வங்களை இழக்க சம்மதிப்பர். மற்றபடி தமது செல்வங்களை தானமாய் ஏழைகளுக்கு வழங்க யாரும் முன்வருவதில்லை.

பெரும் பணக்காரனாய் வாழ்ந்த சகேயு தன் ஆஸ்திகளில் பாதியை வழங்குவேன் என்று கூறியது அவருடைய மனமாற்றத்தின் வெளிப்பாடு. இம் மனமாற்றம் அவருக்கு இயேசுவை பார்த்ததினால், அவரோடு பேசினதால், அவரோடு உணவருந்தியதால் உண்டானது. இயேசுவை சந்தித்தது அவர் வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. சகேயு ஒரு வரி வசூல் செய்யும் அரசுப் பணியாளர். தன் விருப்பப்படி மக்களிடம் அநியாய வரி வசூல் செய்யும் அதிகாரம் அவருக்கு இருந்தது. இதனாலேயே அவர் பணக்காரனாக முடிந்தது. மக்கள் அவரை வெறுக்க இதுவும் ஒரு காரணம்.

ஒரு நாள் இயேசு தன் ஊருக்கு வருவதை சகேயு கேள்விப்பட்டார். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்குள் ஏற்பட்டது. தான் அவரைக் காண வேண்டும், ஆனால் அவர் தன்னைக் கண்டுவிடக் கூடாது என்பதற்காக அத்திமரத்தின் மேல் ஏறிப் பார்த்தார். ஆனால் ஆண்டவர் இயேசு அந்த மரத்தின் கீழ் வரும்போது அவரைப் பார்த்து, சகேயுவே இறங்கி வா நான் இன்று உன் வீட்டில் தங்கப் போகிறேன் என்றார். இந்த வார்த்தைகள் தான் சகேயுவின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. ஊரார் தன்னை வெறுக்க, ஒதுக்க, இயேசுவோ தான் பாவி என்று தெரிந்தும் அன்பு காட்டுகிறாரே என்று எண்ணினார். இந்த எண்ணமே அவரை மனம்மாறச் செய்தது. அந்த மனமாற்றம் ஏழைகள் பயன்பெற தன் ஆஸ்திகளை விட்டுக் கொடுக்க வழி வகுத்தது.

இயேசுவால் ஆட்கொள்ளப் பட்டவர்கள் மனமாற்றம் அடைகிறார்கள். பிறர் மேல் அன்பு செலுத்துகிறார்கள். நாம் என்ன செய்கிறோம். கடவுளின் பெயரால் சொத்துக்கள் சேர்க்கிறோமா? பிறரை ஏமாற்றுகிறோமா? முழு மனமாற்றத்தோடு பிறருக்கு அன்பின் பணிகளைச் செய்து நமது மனமாற்றத்திற்கு செயல்வடிவம் கொடுப்போம்.

அன்பின் இறைவா! உண்மையான மனமாற்றம் எங்களில் ஏற்பட துணை செய்யும். பிறர் மேல் கரிசனை கொள்ளும் உள்ளத்தை தாரும். உமது அன்பின் பணிகளை தொடர எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

திருந்திய சகேயு2020-02-24T06:25:33+00:00

மனம் திருந்திய மைந்தன்

லூக்கா 15 : 13-20                               26 பிப்ரவரி, 2020-புதன்

“…தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமது பார்வையிலும் பாவஞ்செய்தேன்,….” – லூக்கா 15 : 21

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் திரும்ப திரும்ப தவறு செய்தால் அது அழிவை கொண்டு வரும். செய்தது தவறு என்று தெரிந்த உடன் அதை குறித்து மனம் வருந்தி தன்னை திருத்திக் கொள்வதே ஒருவனை வாழ்வுக்கு வழிநடத்தும். சாம்பல் புதன் கிழமையான இன்று இந்தத் தியானத்தின் வழியே கடவுள் உங்களை மனந்திரும்ப அழைக்கிறார்.

மனந்திருந்திய மைந்தன் பற்றிய செய்தியில் இதைப் புரிந்து கொள்ளுகிறோம். இந்த உவமையில் வருகிற பிள்ளைகள் இருவருமே ஏதோ ஒரு விதத்தில் தவறு செய்தவர்களாகவே இருந்தனர். இளையவன் வெளியே சென்று தவறிழைத்தான். மூத்தவன் வீட்டிற்குள்ளேயே இருந்து தகப்பனின் அன்பை புரியாமலிருந்தான். கடவுள் பார்வையில் இரண்டு பேருமே மனம் வருந்த கடமைப்பட்டவர்களே. புத்தி தெளிகிற போது மனவருத்தம் ஏற்படுகிறது. புத்தி மயங்கி இருக்கிற போது மனவருத்தம் ஏற்படுவதில்லை. புத்தி மயக்கம் நாம் செல்வச் செழிப்பில் புரளும் போது ஏற்படுகிறது. அதிகார உச்சத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. என்னை கேட்பதற்கு யார் இருக்கிறார் என்று எண்ணும் போது ஏற்படுகிறது. வாழ்க்கையில் இவை மாறும் போது மனதில் குழப்பம் ஏற்படுகிறது. தான் செய்தது சரியா தவறா என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது. பல சமயம் நமது செயல்களை நியாயப்படுத்தியே நாம் மயக்கத்தை விட்டு எழாதிருப்போம். தவறு என்று எண்ண ஆரம்பிக்கும் போது புத்தி தெளியும். புத்தி தெளிந்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உணரச் செய்யும்.

புத்தி தெளிந்த பின்னரே இளைய மகன் தகப்பனின் அன்பை புரிந்து கொண்டான். அன்பான தகப்பனுக்கு செல்வமல்ல நானே முக்கியமாக இருப்பேன் என்ற எண்ணமும் ஏற்பட்டது. திரும்பினான். தகப்பனின் அன்பை பெற்றான்.

நாமும் எத்தனையோ தவறுகளைச் செய்தவர்களாக இருக்கிறோம். மனம் வருந்துகிறோமா? நம்மை நம் தவறுகளுக்காக தண்டிக்காத நம் பரம தந்தை நமக்கு உண்டு. தவக்கால ஆரம்ப நாளில் நிற்கிறோம். நம் பாவங்களுக்காக தன் உயிரை சிலுவையில் கொடுத்த இயேசுவை, சிலுவையை வரும் நாட்களில் அதிகம் சிந்திப்போம். இவைகளை நினைக்கும் போது நம்மில் நிச்சயம் மனஸ்தாபம் ஏற்படும். அன்பான இறைவனைத் தேடி அவரிடம் வருவோம். இயேசுவில் கடவுள் மன்னித்து ஏற்றுக் கொள்ளுவார்.

மன்னிக்கும் கடவுளே! தவறுகள் பல புரிந்து உமது அன்பை புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறோம். எங்களை மன்னியும். எங்களுக்காக சிலுவையில் தன்னுயிரை ஈந்த இயேசு கிறிஸ்துவின் அன்பை புரிந்து உம்மிடம் திரும்ப எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மனம் திருந்திய மைந்தன்2020-02-24T06:23:51+00:00

யாகேல் – தைரியமானவள்

நீதிமொழிகள் 24 : 1-6                          25 பிப்ரவரி, 2020-செவ்வாய்

“…வாரும், நீர் தேடுகிற மனுஷனை உனக்குக் காண்பிப்பேன்.” – நியாயாதிபதிகள் 4 : 22

புதிய ஊருக்கு மாற்றலாகிச் செல்லும் போது அங்கே நம் தூரத்து உறவினர்களைச் சந்திப்போமானால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம் அல்லவா? ஆத்திர அவசரத்திற்கு அவர்களும் நாமும் உதவி செய்து கொள்வோம். யாராவது பிரச்சனை செய்தால் அவர்கள் உதவியை நாடுவோம். இது மனித இயல்பு.

இஸ்ரவேலர் கானான் நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த போது, அந்த நாட்டு மன்னன் யாபின் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்தான். இந்த யாபினுக்கு நண்பர் கெபர் என்பவர். கெபர் மோசேயின் மாமாவின் சந்ததியில் வந்தவர். இஸ்ரவேலருக்கு தூரத்துச் சொந்தம் என்றுகூட கூறலாம். இந்த கெபரின் குடும்பத்துக்கு யாபின் இஸ்ரவேலரை அடிமைப்படுத்தியிருந்தது பிடிக்கவில்லை. நண்பராக இருந்தபடியால் சொல்லவும் முடியவில்லை.

இச்சூழலில் தெபோராள் இஸ்ரவேலரை ஊக்குவித்து யாபீனோடு போரிட செய்தாள். படைத்தலைவனாக பாராக் என்பவர் இருந்தார். தெபோராளும் பாராக்கோடு இணைந்து போருக்குச் சென்றாள். இவர்கள் வலிமைமிக்க கானானியரை போரில் எதிர் கொண்டனர். கானானியரின் படைத்தளபதியாக சீசரா என்பவர் இருந்தார். போரில் கானானியர் தோற்கடிக்கப்பட்டனர். சீசரா படைக்களத்திலிருந்து ஓட்டம் பிடித்தார். அவர் நேராக கெபரின் வீட்டிற்கு சென்று ஒளிந்து கொண்டார். கெபரின் மனைவி அவனுக்கு தாகம் தீர்க்க பால் கொடுத்து தனியறையில் படுக்கச் செய்தார். இதுதான் வாய்ப்பு என்று கருதி யாகேல், சீசராவின் நெற்றியில் ஒரு ஆணியை அடித்துக் கொன்று போட்டாள். இதன் வழியாக இஸ்ரவேலரின் விடுதலைக்காக தன்னாலான உதவியை செய்தாள். அப்போது அவனை தேடி வந்த பாராக்கிடம் சொன்னதே ‘வாரும், நீர் தேடினவனை காண்பிப்பேன்’ என்ற நமது தியானப்பகுதி.

நாம் எல்லாரும் பலதரப்பட்ட மக்களாயினும் கிறிஸ்துவின் பெயரால் ஒன்றுபட்டவர்கள். ஒருவர் துன்பங்களை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சமூக வாழ்வு என்பது கூட்டு வாழ்வே. நாம் உதவுவதால் அத்தகைய உதவிகள் நமக்கு கிடைக்க வாய்ப்புண்டு. பலவீனப்பட்டவர்களையும் இறைவன் பயன்படுத்துகிறார். நம்மையும் பயன்படுத்தி வல்லமையான காரியங்களை செய்வார்.

தீமையை வெறுக்கும் சுத்த கண்ணரே! கண் முன்னால் நடக்கும் தீமைகளை கண்டும் காணாமல் போகும் எண்ணத்தை எங்களை விட்டு அகற்றும். துன்புறுவோருடன் துணை நிற்கும் பலத்தை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

யாகேல் – தைரியமானவள்2020-02-24T06:21:45+00:00

தெபோராள் – போரில் துணை நின்றவர்

1 கொரிந்தியர் 1 : 26-29                                             17 பிப்ரவரி, 2020-திங்கள்

“…தெபோராள் என்னும் தீர்க்கத்தரிசினி இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தாள்.” – நியாயாதிபதிகள் 4 : 4

தற்காலத்தில் ஆண்களை போலவே பெண்களும் பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் அவர்களுக்கு எல்லா துறைகளிலும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்வதில் நமது நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ முன்னேறிய இந்தக் காலத்திலேயே இப்படியென்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் எப்படிப்பட்ட நிலை இருந்திருக்கும். பெண்களை வீட்டிற்குள்ளே வைத்திருந்த காலம் அது. பெண்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ளாத காலம். கல்வி மறுக்கப்பட்ட காலம். அப்படிப்பட்ட காலத்திலேயே சில பெண்கள் தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்பதை நம்ப முடிகிறதா? அப்படி உருவான ஒரு தலைவியே தெபோராள் ஆவார்.

இஸ்ரவேலர் கானான் நாட்டில் குடியேறிய பின்னர் அவர்களை சில தலைவர்கள் நியாயம் விசாரித்து வந்தனர். அவர்களைப் பிற நாட்டவர்கள் அடிமைப்படுத்திய போதெல்லாம் இந்தத் தலைவர்கள் போரிட்டு மக்களை விடுவித்து வந்தனர். இவர்களே நியாயாதிபதிகள் என்று அழைக்கப்பட்டனர். ஒரு கால கட்டத்தில் தகுதியான ஆண்கள் தலைவர்களாக எழும்பவில்லை. அப்போது தெபோராள் நியாயாதிபதியாக மக்களை வழி நடத்தி வந்தார். இஸ்ரவேலர் கானான் நாட்டு அரசனுக்கு அடிமைப்பட்டு இருந்தனர். தெபோராள் பாராக்கு என்பவரை அழைத்து கானான் நாட்டுக்கு விரோதமாக போரிடச் செய்தார். தானும் அப்போரில் கலந்து கொண்டார். இஸ்ரவேலர் வெற்றி பெற்று விடுதலை அடைந்தனர்.

தன்னுடைய மக்களின் விடுதலைக்காகவும் நல்வாழ்வுக்காகவும் உழைத்தவர் தெபோராள். தைரியமான வழிகாட்டியாக விளங்கிய அவர் பணி மகத்தானது. தெபோராளைப் போல ஆற்றல் மிக்க பெண்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் காணுவோம். பெண்தானே என்று தாழ்வாக எண்ணாதிருப்போம். பலவீனர்களையும் கடவுள் தம் பணிக்கென பயன்படுத்துகிறார் என்பதை மறவாதிருப்போம். நம்மை பலப்படுத்தி வழிநடத்துகிற கடவுள் நமக்கு உண்டு.

எங்களை பலப்படுத்தும் கடவுளே! பல காரியங்களை தனித்துச் செய்ய பலமில்லாதிருக்கிறோம். உம் துணையோடு வெற்றியுள்ள வாழ்வைப் பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

தெபோராள் – போரில் துணை நின்றவர்2020-02-07T08:23:44+00:00

அக்சாள் – பெற்றோருக்கு ஏற்றவள்

எபேசியர் 6 : 1-4                                        16 பிப்ரவரி, 2020-ஞாயிறு

“ …வறண்ட தென்னாட்டிலே என்னைக் கொடுத்து விட்டீர். நீரூற்று நிலத்தை எனக்குத்தர வேண்டும்.” – நியாயாதிபதிகள் 1 : 15

வீரத்துக்கு பேர் பெற்ற தமிழர் சமூகத்தில் ஒரு காலத்தில் சிலர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை தேட போட்டிகள் நடத்துவார்கள். காளைகளை அடக்கும் வீரருக்கு பணமுடிப்போடு தன் மகளையும் திருமணம் செய்விக்கும் பெற்றோரை குறித்து நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். அப்படி வாக்கு கொடுக்கும் தந்தையின் விருப்பப்படி தங்கள் கழுத்தை நீட்டும் வீரமங்கைகள் குறித்து தமிழர் வரலாறு பறை சாற்றுகிறது.

திருமறையில் காலேப்பு என்பவர் தன் மகளை இவ்வாறே மணமுடித்து கொடுத்தார். அக்காலத்தில் இஸ்ரவேலர் போரிட்டு தங்களுக்குரிய தேசத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது கிரியத் சேபர் என்னும் இடத்தை போரிட்டு வெற்றி பெறுவோனுக்கு தன் மகள் அக்சாளை மணமுடித்து வைப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். ஒத்னியேல் என்பவர் போரிட்டு வெற்றி பெற்றார். காலேப்பு தாம் வாக்கு கொடுத்தபடியே தன் மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அக்சாளும் அவரை தன் கணவராக ஏற்றுக் கொண்டாள். பிறகுதான் அக்சாளுக்கு தான் மணம்முடித்து கொடுக்கப்பட்ட இடம் வறண்ட நிலம் என்று தெரிந்தது. அவள் தன் தந்தையிடம் இப்படிச் செய்து விட்டீர்கள் என்று கோபப்படாமல் எனக்கு நீரூற்று நிலத்தைத் தாரும் என்று வேண்டுகோள் வைத்தாள். மகளின் கோரிக்கை நியாயமானது என்றறிந்து அவளுக்கு நீரூற்று நிலத்தை காலேப்பு கொடுத்தார். அக்சாள் பெற்றோருக்கு ஏற்ற மகள். கீழ்ப்படிதலுள்ள பெண். தன்னுடைய விருப்பமல்ல பெற்றோருடைய விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்தாள். எதைச் செய்தாலும் பெற்றோர் தனக்கு நன்மையைத் தான் செய்வார்கள் என்று நம்பினாள். தனக்கு குறைவு ஏற்பட்டதை அறிந்த போது தந்தையிடமே கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.

நம் தந்தையாம் இறைவனோடு நமக்கு எத்தகைய உறவு இருக்க வேண்டுமென்பதற்கு அக்சாள் நல்ல உதாரணம். கடவுள் இயேசுவில் நம் தந்தையாம் இறைவனிடம் நம் குறைகளைச் சொல்லி அதை நிறைவாக்குவோம். ஒரு தகப்பனாக நம் தேவைகளை அறிந்த அவர் அதை நமக்கு அருளுவார்.

பரம பிதாவே! எங்கள் தேவைகள் என்னவென்று அறிந்திருக்கிறீர். உமது விருப்பப்படி எங்களை வறட்சியான இடத்தில் அல்ல செழிப்பான இடங்களில் வாழத் துணைபுரியும். வறட்சியைச் செழிப்பாக்கும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அக்சாள் – பெற்றோருக்கு ஏற்றவள்2020-02-07T08:21:40+00:00

மெத்தூசலா – நீண்ட ஆயுள் கொண்டவர்

சங்கீதம் 34 : 12-15                                        15 பிப்ரவரி, 2020-சனி

“மெத்தூசலா உயிரோடிருந்த நாளெல்லாம் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.” – ஆதியாகமம் 5 : 27

மனிதன் நீண்ட நாட்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. உடற்கூறுகளில் மாற்றங்களை கொண்டு வந்து என்றும் இளமையாயிருக்கும் வழி கிடைத்தால் இது சாத்தியம் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து. ஆனால் இது முடியுமா என்பது கேள்விக்குரியே.

திருமறை மாந்தர்களில் அதிக நாட்கள் உயிரோடிருந்தவர் மெத்தூசலா ஆவார். இவர் கடவுளோடு சஞ்சரித்து அவரால் உயிரோடே வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஏனோக்கு என்பவருடைய மகன். மெத்தூசலா சுமார் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருடங்கள் வாழ்ந்ததாக திருமறை கூறுகிறது. இத்தனை வருடங்கள் வாழ முடியுமா என்ற கேள்வியும் ஆராய்ச்சியும் தேவையில்லை. ஆனால் அதிக நாட்கள் உயிரோடிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திருமறை நன்றாகவே கூறுகிறது. அது குறித்து காண்போம். கடவுளுடைய சித்தத்திற்கும் வழிநடத்துதல்களுக்கும் தங்களை அர்ப்பணித்த ஆபிரகாம், ஈசாக்கு, சாலொமோன் போன்றவர்கள் அதிக நாட்கள் வாழ்ந்தார்கள். நீடித்த நாட்களை விரும்புகிறவர் நல்லெண்ணம் கொண்டவனாய் தீமையை வெறுத்து நன்மையைத் தேடுகிறவனாயிருத்தல் வேண்டும் என்றும் பார்க்கிறோம். நீதிமொழிகளில் கற்பனைகளைக் காத்து நடக்கிறவன் தீர்க்காயிசு பெறுவான் என்று வாசிக்கிறோம். ஞானத்தைத் தேடுவதும் அநியாய லாபத்தை வெறுப்பதும் ஆயுளைக் கூட்டும்.

கடவுள் விரும்புகிறதை நடப்பிக்கும் நமக்கு, நாம் விரும்புகிற தீர்க்காயுசை அவர் தருவார். எப்படி இருந்தாலும் எசேக்கியா ராஜா ஜெபித்து ஆயுளை கூட்டி பெற்றார். நம்மாலும் முடியுமா என்பது கேள்வி. தீர்க்காயுசு பெரிதல்ல. கடவுள் விரும்பும் வாழ்க்கை வாழ்வதே பெரிது. அவர் நம்மை முதிர் வயது வரை வாழச் செய்தால் ஏற்றுக் கொள்வோம். இல்லையெனில் அவர் சித்தப்படி மரணத்தை எதிர்கொள்வோம். ஆண்டவரின் சித்தத்திற்கு நம்மை ஒப்புவிப்போம்.

நீண்ட ஆயுள் உள்ளவரே! உம்மாலேயன்றி யாருமே தீர்க்காயுசோடு வாழ்வதில்லை. நாங்களும் வாழ்வோம் என்று சொல்ல முடியாது. இருப்பினும் பாதி வயதில் எங்களை எடுத்துக் கொள்ளாதிரும். உமது சித்தப்படியான வாழ்க்கை வாழ உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

மெத்தூசலா – நீண்ட ஆயுள் கொண்டவர்2020-02-07T08:19:48+00:00

ஆகான் – தாமதமாக மனம் வருந்தியவர்

பிரசங்கி 3 : 16-18                                    14 பிப்ரவரி, 2020-வெள்ளி

“…நான் இஸ்ரவேலின் கடவுளாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ் செய்தேன்…” – யோசுவா 7 : 20

எந்த ஒரு தவறையும் செய்தவர்கள் அதை உடனடியாக ஒத்துக் கொள்வதில்லை. போலீசார் பாணியில் விசாரிக்கும் போதுதான் உண்மையைக் கூறுவார்கள். இது தண்டனையை அதிகப்படுத்துமேயொழிய, குறைக்காது.

இஸ்ரவேலர் கானான் நாட்டைச் சொந்தமாக்கும் வண்ணமாக ஒவ்வொரு நகரையும் வெற்றி கொண்டு வந்தனர். அவர்கள் எரிகோவை வெற்றி கொண்ட பின் அதைவிட மிகச் சிறிய நகராகிய ஆயியை பிடிக்கச் சென்றனர். ஆனால் அதைப் பிடிக்க முடியாமல் தோற்றுப்போயினர். யோசுவா கடவுளிடம் விசாரித்த போது இதற்கு காரணம் ஆகான் என்பவர் எனத் தெரிந்தது. அப்போது ஆகான் எரிகோவிலிருந்து சில பொருட்களைத் திருடியதாக ஒத்துக் கொண்டான். அந்தத் திருட்டினாலே கடவுள் அவர்களை தோல்வியுறச் செய்தார் என்பதை யோசுவா புரிந்து கொண்டார். ஒத்துக் கொண்ட ஆகான் செய்த பாவ அறிக்கையே நமது தியானப்பகுதி. ஆனால் கடவுளோ, யோசுவாவோ அந்த அறிக்கையை ஏற்கவில்லை. அவன் தண்டிக்கப்பட்டான். அவன் செய்த பாவஅறிக்கை காலம் கடந்த ஒன்றாகும்.

பாவம் நம்மை அழிவிற்கு வழி நடத்தும். எல்லோரும் பாவம் செய்பவர்கள். ஒருவர் செய்கிற பாவம் முழுச் சமூகத்தையும் பாதிக்கும். ஒரு ஓட்டுநர் செய்கிற தவறு பல பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக அமைவதைப்போல. நமது பாவம் பிறரைப் பாதிக்க வழி செய்யக் கூடாது. இதைக் கடவுள் விரும்புவதில்லை. நாம் நமது பொறுப்புகளை உணர்வோம். காலம் கடந்த செயல்கள் நமக்கு பயனற்றது. அது போல காலம் கடந்த மன வருத்தமும் பயனற்றது. நமது செயல் நமக்கும் பிறருக்கும் நன்மை கொண்டு வருவதாக அமையட்டும்.

கருணையுள்ள கடவுளே! எங்கள் பாவங்கள் பிறருக்கு அழிவைத் தந்து விடாதபடி எங்கள் பாவங்களை மன்னியும். நாங்கள் பொறுப்போடு நடந்து பிறர் வாழ துணை செய்ய எங்களுக்கு உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ஆகான் – தாமதமாக மனம் வருந்தியவர்2020-02-07T08:17:55+00:00
Go to Top