தாயாராகிய மரியாள்
யோவான் 19 : 25-27 17 மார்ச், 2020-செவ்வாய்
“இயேசுவினுடைய சிலுவையின் பக்கத்தில் அவர் தாயாரும், அவர் தாயாரின் சகோதரியும்,…. நின்றுகொண்டிருந்தார்கள்.” – யோவான் 19 : 25
தன் குழந்தைக்கு சுகமில்லை என்றவுடன் ஒருதாய் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பிள்ளைக்கு ஊசி போடுவதற்காக ஆயத்தப்பட்டார். இதைக் கண்ட தாய் பயப்படவும் பதறவும் ஆரம்பித்தாள். பிள்ளையின் கையில் ஊசி நுழையும்போது தனக்கு வந்த வலி போல சத்தமிட்டாள். பிள்ளையின் வலியைத் தாங்காத தாய் அவள்.
இயேசுவின் தாயாராகிய மரியாளும் தன் மகனாகிய இயேசு படும் வேதனைகளைக் காண முடியாமல் கலங்கினாள். இயேசுவை விடுவிக்க இயலாத நிலைமை, உதவிக்கு யாருமில்லாத கொடுமை அநியாயமான தீர்ப்பு, மரணம் எல்லாம் மரியாளுக்கு மிகத் துயரங்களைக் கொடுத்தன. தாய்க்கே உரிய பண்பான பொறுமையையும் வேதனைகளையும் சகித்துக்கொண்டு மௌனமாக பாடுகளில் பங்கேற்கிறாள்.
இன்று தாய்ப் பாசம் எங்கே விற்கிறது! அவசரமான உலகத்திலே பாசம் என்பது வெறும் பணத்தை அடிப்படையாக வைத்துப் பேசப்படுகிறது. எல்லா உறவுகளுமே விலை போடப்பட்டுவிட்டனவே. துன்ப வேளையில் வேதனை நேரத்தில் கூட இருக்கும் பாசமே உயர்ந்தது என்பதை இயேசுவின் தாயார் பிரதிபலிக்கின்றார்கள்.
இயேசுவின் தாயாராகிய மரியாள் உறவின் மேன்மையைப் பாடுகள் நேரத்தில் உயர்த்திக் காட்டுகிறார்கள். முதியோர்களை, பெற்றோர்களை தவிக்கவிடும் பிள்ளைகள் மனந்திரும்ப வேண்டும். பிள்ளைகளை உதாசீனப்படுத்தும் பெற்றோர்களும் சிலுவைக்கு முன்நிற்க வேண்டும். சிலுவையில் வழிந்ததோடும் இயேசுவின் ரத்தம் உங்களோடு பேசுகிறது. அன்பு பாசம் இவைகளுக்கு விளக்கம் சொல்லுகிறது. சிலுவை நம் ஒவ்வொருவரையும் இணைக்கட்டும். உறவுகளை ஐக்கியமாக்கட்டும். இதற்கு சிலுவை வழியே ஆண்டவர் உதவி செய்வாராக! சிலுவையருகே வருவோம். மனந்திரும்புவோம். அன்பில் பிறரோடு இணைவோம். ஐக்கியமாய் வாழுவோம்.
குடும்பத்தின் தலைவரே! அன்பரே! பாசம் எனும் பந்தத்தில் எங்கள் உறவுகள் பலப்பட கிருபை தாரும்! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
