லூக்கா 23 : 27-31                            16 மார்ச், 2020-திங்கள்

“இயேசுவோ அவர்கள் முகமாய்த்திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் என் நிமித்தம் அழாமல், உங்கள் நிமித்தமும் உங்கள் பிள்ளைகள் நிமித்தமும் அழுங்கள் என்றார்.” – லூக்கா 23 : 28

ஒரு பெண்ணின் வாழ்வு பாடுகள் நிறைந்தது என்பதே வரலாறு. தியாகம் என்பது பெண்களின் சொத்து. பிறரின் பாடுகளைக் கேட்டவுடன் அழுவார்கள். இயேசுவின் சிலுவைப்பாடுகளில் ஆண்களின் பங்கைவிட பெண்களின் பங்கு அதிகம் இருந்தது. இயேசுவின் கடைசி ஊர்வலம் கல்வாரி மலையை நோக்கி இருந்தது. அவர் அந்த மலையை நோக்கி சிலுவை சுமந்து கொண்டு போனார். தனக்குப்பின்னால் எருசலேமிலிருந்து வந்த பெண்கள் அழுதுகொண்டு வந்த கொண்டிருந்ததைக் கண்டார். அப்பொழுது அவர் அவர்கள் பக்கம் திரும்பி தனக்காக அழவேண்டாம் என்றும் எதிர்காலத்தில் எருசலேமிற்கு நிகழ இருக்கும் அழிவை மனதில் கொண்டு உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார்.

இயேசுவின் பாடுகள் இரண்டு நாட்கள் மட்டுமே. மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்து விடுவார். அதன்பிறகு வேதனைகளும் பாடுகளும் அவரை நெருங்கமுடியாது. ஆனால் எதிர்கால ரோமப்படைகள் எருசலேமை வளைந்து கொள்ளும்போது உங்கள் நிலமை என்னவாகும்? உங்கள் பிள்ளைகளின் நிலைமை என்ன வாகும்? அதை நினைத்து அழுது இப்போதே மனந்திரும்புகள் என்று அழைத்தார்.

நாமும் இயேசுவின் பாடுகளுக்காய் அழுவதிலும் கறுப்பு தினம் அனுசரிப்பதிலும் நாட்களை கடத்துகிறோம். நம் இருதயங்களை சுத்தப்படுத்துவோம். சிலுவையைப் பற்றிய தியானங்கள், வார்த்தைகளால் உள்ளத்தூய்மையைப் பெற்றுக்கொள்ளுவோம். நம் கண்ணீரின் நோக்கம் நிறைவேறட்டும். நம் கண்ணீரையும் நம் பிள்ளைகளின் கண்ணீரையும் கடவுள் ஒருவரே துடைக்கிறவர். இறைவார்த்தையில் நிலை நிற்போம். துணிவோடு வாழுவோம்.

கண்ணீரைக் காண்பவரே! இரக்கத்தின் கடவுளே! எங்கள் கண்ணீரையும் எங்கள் பிள்ளைகளின் கண்ணீரையும் துடைப்பீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.