vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

குற்றச்சாட்டுகள்

மாற்கு 15 : 1-15                                27 மார்ச், 2020-வெள்ளி

“பிரதான ஆசாரியர் அவர்மேல் அநேக குற்றங்களைச் சாட்டினார்கள்.” – மாற்கு 15 : 3

நீதித்துறையில் ஓர் சட்டமுண்டு. குற்றஞ் செய்கிறவன் தண்டிக்கப்படாமல் போகலாம். ஆனால் குற்றம் செய்யாதவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதே அது. நிரபராதிகள் தண்டனை அனுபவிப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? குற்றங்களை ஜோடித்து ஒருவனை குற்றவாளி எனத் தீர்ப்பவர்களைப் பற்றி உங்கள் நிலை என்ன?

அன்னாவும், காய்பாவும் ஆசாரியர்களுக்குப் பிரதானமாக ஆண்டு வந்தனர். இயேசு கைது செய்யப்பட்ட உடனே விசாரணைக்காக பிரதான ஆசாரியனிடம் கொண்டு போகப்பட்டார். பிரதான ஆசாரியனுக்கு தீர்ப்பு எழுதும் உரிமை இல்லாதபடியால் இயேசுவின் மீது அனேக குற்றங்களை சாட்டினார்கள். இயேசு தேவ நிந்தனை செய்தார் என்பதும் எருசலம் தேவாலயத்தை இழிவுபடுத்தினார் என்பதும் மதரீதியாக வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் ஆகும். என்றாலும் இவை ஆதாரப்பூர்வமாக, விளக்கங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.

இக்காலத்தில் மனந்திரும்பவேண்டிய இன்னொரு கூட்டம் குற்றம் சாட்டுபவர்களும் விசாரிக்கிறவர்களுமே. இவர்கள் நீதி, நியாயம் இறைவார்த்தைகள் எல்லாம் அடிப்படையாக வைத்து விசாரிக்கிறார்களா? தீர்ப்பு சொல்லுகிறார்களா?
வழக்குகளிலும் விசாரணைகளிலும் உண்மைகள் எடுத்து வைக்கப்படுகிறதா? இன்றைய சமயவாதிகளிடம் அதிகம் காணப்படுவது பணப்பற்றா? இறைப்பற்றா? நம்மில் அனேகர் தீர்ப்பை முதலில் எழுதிவிட்டுத்தானே, பிறகு சாட்சிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். திருந்துவோம். இறை வார்த்தைகள் நம்மை கடவுகளிடம் திரும்பிட அழைக்கிறது.

நம் ஆண்டவர் நீதிபரர். அவர் நீதிபதியும் கூட. அவர்தம் இரண்டாம் வருகையில் ஒவ்வொருவருக்கும் எழுதும் தீர்ப்பே இறுதியானது. நம்மேல் குற்றம் சாட்டுபவர்களுக்காக ஜெபிப்போம். குற்றமற்ற மீட்பர் நம் பாவம் முற்றும் அற நீக்குவார். நம்மை நீதிமானாக்குவார். நித்திய வாழ்வில் சேர்ப்பார் என்ற உறுதியோடு வாழுவோம்.

நீதிபரரான கடவுளே! எங்களை பொல்லாங்கின் கைகளுக்கு நீங்கலாக்கி இரட்சியும். இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

குற்றச்சாட்டுகள்2020-03-17T08:43:57+00:00

கள்ளன்

லூக்கா 23 : 39-43                                26 மார்ச், 2020-வியாழன்

“சிலுவையில் தொங்கின குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துதானே! உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரைத் தூஷித்தான்.” – லூக்கா 23 : 39

கொள்ளையடித்தல், திருட்டு, வழிப்பறி என பாவச் செயல்கள் உலகெங்கும் பெருகிவிட்டன. நாட்டின் சட்டங்களும் சிறைச்சாலைகளும் வருந்தும் அளவிற்கு குற்றவாளிகளும் பெருகிவிட்டார்கள். குற்றம் செய்தல் பற்றிய மக்களுடைய மனநிலை பெரிய அளவில் மாறுதல் அடைந்துவிட்டதை இது காட்டுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய பொழுது அவரது இருபக்கங்களிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்ட இரு கள்ளர்கள் அறையப் பட்டிருந்தார்கள். இவ்விருவரும் சிலுவையில் இயேசுவை குறித்து பேசிக்கொண்டே தொங்கினர். ஒருவன் இயேசு எந்த குற்றமும் செய்யாதவர். ஆனால் அவர் தண்டிக்கப்படுகிறாரே என்று அவருக்காக கவலைகொள்கிறான். மட்டுமல்ல தனக்குக் கிடைத்த தண்டனைக்கு தான் முழுமையாகத் தகுதியுடையவன் என்பதையும் ஒப்புக்கொண்டான். இன்னொரு கள்வனோ இயேசுவை இகழ்ந்தான். நீர் எங்களைச் சிலுவையிலிருந்து விடுவிக்கலாமே என்று பரிகாசம் பண்ணினான். ஆனால் மற்ற கள்ளனோ தனக்கு பரலோகத்தில் இடம்வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொண்டான்.

தன்னிலை உணர்ந்து நான் குற்றவாளி என்பதையும் அறிக்கை செய்து, மன்னிப்பு கேட்ட குற்றவாளியான கள்ளனுக்கே பரதீஸில் இடம் கொடுத்தார் இயேசு கிறிஸ்து. இந்தத் தவக்காலங்களில் நாம் அனைவரும் குற்றங்களை உணரவும் அறிக்கையிடவும் மனந்திரும்பவும் கடவுள் விரும்புகிறார். நம்மில் காணப்படும் அத்தனை கள்ளத்தனங்களும் மாறிப்போகட்டும்.

கள்ளக் கணக்குகள், கள்ளக் கையெழுத்துக்கள், கள்ளத் தொடர்புகள், கள்ள ஆவணங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கிட சிலுவையண்டையில் வருவோம். மன்னிப்பைப் பெறுவோம். கள்ளனுக்கு கிடைத்த கிருபையும், இரட்சிப்பும் நமக்கும் கிடைக்கும். இயேசுவின் கிருபை நம்மை வாழ்விக்கும். சிலுவையண்டை வருவோம். கிருபையாக வாழ்வுபெறுவோம்.

மன்னிக்கிற கடவுளே, உண்மையின்றி நேர்மையின்றி, ஒழுக்கமின்றி வாழும் எங்களை கண் பார்த்து மன்னியும், இரட்சியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

கள்ளன்2020-03-17T08:41:07+00:00

இரத்தம்

யோவான் 19 : 32-37                                 25 மார்ச், 2020-புதன்

“ஆகிலும், போர்ச்சேவகரில் ஒருவன் அவர் விலாவில் ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிப்பட்டன.” – யோவான் 19 : 34

இரத்தம் என்பது மாம்சத்தின் உயிர் என்று திருமறை கூறுகிறது. இரத்தத்தை சாப்பிடக்கூடாது என்றும் ஆத்ம பிராயச்சித்தம் செய்ய இரத்தம் பயன்படுத்தபட வேண்டும் எனவும் திருமறை விளக்குகிறது.

இயேசுவின் பாடுகளில் அவரது உடலில் இருந்து சிந்தப்பட்ட இரத்தம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாட்டை அடிகள் இயேசுவின் உடலை கிழத்தபோதும், கை கால்களில் ஆணிகள் அடிக்கப்பட்ட போதும், தலையில் முட்கிரீடம் தைக்கப்பட்டபோதும், அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்பட்ட வேளையிலும், இயேசுவின் இரத்தம் இம்மண்ணில் சிந்தப்பட்டது.

இயேசுவின் இரத்தத்தினாலேயே ஒருவன் நீதிமான் ஆக்கப்படுகிறான். இயேசுவின் இரத்தம் சகல பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது. இயேசுவின் இரத்தத்தை நிந்திக்கிறவன் ஆக்கினைத் தீர்ப்பைப் பெறுகிறான். இறைவார்த்தைகள் இவற்றைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும் ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதை நினைத்துக்கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் இந்த இரத்தம் விசுவாசத்தில் திருவிருந்தில் நமக்கு அருளப்படுகிறது. இயேசுவின் திருவிருந்தில் பங்குபெறுவது நமக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பாக்கியமே!

இயேசுவின் இரத்தம் நம்மை இக்காலத்தில் சுத்திகரிக்கட்டும். பாவம் நீங்கிட கழுவப்படுவோம். இந்தத் தவக்காலம் நம்மை நித்திய வாழ்வுக்கு ஆயுத்தம் செய்கிற காலமாயிருக்க கடவுளிடம் மன்றாடுவோம்.

உயிர் காக்கும் காவலனே! கடவுளே! உமது குமாரனின் இரத்தம் சிந்துதலுக்காய் தோத்திரம். அந்த இரத்தினால் எங்களை தூய்மையாக்கும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்!

இரத்தம்2020-03-17T08:38:12+00:00

காடி

யோவான் 19 : 28-30                         24 மார்ச், 2020-செவ்வாய்

“…அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி அவர் வாய்க்கு நீட்டினார்கள்.” – யோவான் 19 : 29

தண்ணீர் குடிக்கக் கேட்கும் ஒருவனுக்கு நாம் ஆமணக்கு எண்ணெயைக் கொடுக்கலாமா? இது கொடுமையானது. மீன் தின்னக் கேட்போருக்கு எவனாகிலும் பாம்பு உண்ணக் கொடுப்பானோ என்று இயேசு கேட்டார். ஆனால் தாகமாய் இருக்கிறேன் எனக் கேட்ட இயேசுவுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டு காடி கொடுக்கப்பட்டது. இதன் கொடுமையை நாம் உணருகிறோமா?

சிலுவையில் தொங்குகிறவர்களின் உடல் வலி குறைய அங்கு காடி நிறைந்த பாத்திரம் வைத்திருப்பார்கள். இயேசு இந்தக் காடியைக் குடிக்க சம்மதிக்கவில்லை என்றும்(மத்தேயு 27:34) அவர் இந்தக் காடியை வாங்கினார் என்றும் திருமறை கூறுகிறது. ஏனெனில் நசரேய கோலம் பூண்டவர்கள் இந்தக் காடியைக் குடிப்பதில்லையென்றும் (எண்ணாகம் 6:3) திருமறை கூறுகிறது.

நாம் நமது வலிகளுக்கும், வேதனைகளுக்கும் எந்தப் பானத்தைக் குடிக்கிறோம். இன்று கோடிக்கணக்கானவர்கள், மனவலி உடல்வலி நிவாரணமாக மதுபானத்தையே நாடுகிறார்கள். மதுபானம் வலிகளை ஒருபோதும் குறைப்பதில்லை. வலிகளை பன்மடங்கு பெருக்கி உறவுகளுக்குள்ளேயும் பகிர்ந்துவிடுகிறது என்பதே உண்மை.

இயேசு கிறிஸ்து மட்டுமே நமது வேதனைகளை சிலுவையில் உணர்தார். முழுமனதுடன் சுமந்தார். நமது பாவ நிவாரணி இயேசு கிறிஸ்துவே!

மயங்க வைக்கும் காடிகள் நம்மைவிட்டு நீங்கட்டும். நம்மை மாற்ற வைக்கும் இயேசுவின் வல்லமை நம்மில் பெருகட்டும். வலிகளினால் தள்ளாடுகிறீர்களா? கலங்காதீர்கள். சிலுவை நாதரிடம் நம் வலிகளை, வேதனைகளை, துயரங்களை ஒப்படைப்போம். விடுதலை பெறுவோம். நமது கசப்பான அனுபவங்களை கடவுள்தாமே நீக்குவாராக.

தாகம் தீர்க்கும் தண்ணீரைப் படைத்தவரே! கடவுளே! எங்களது வாழ்வின் தாகம் உடலின் தாகம் மனதின் தாகம் யாவும் போக்கும். உமது ஜீவதண்ணீரால் போக்கும். இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

காடி2020-03-17T08:36:08+00:00

சிலுவை

யோவான் 19 : 17-22                                23 மார்ச், 2020-திங்கள்

“(அப்பொழுது) அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்….” – யோவான் 19 : 18

உலகில் ஒரு பொருள் பலரைப் பார்க்க வைக்கவும் சிந்திக்கவைக்கவும் தொழ வைக்கவும் செய்கிறதென்றால் அது சிலுவை மட்டுமே. பெண்களின் தாலியிலும் ஆண்களின் செயின்களிலும் ஆலயத்தின் கோபுரங்களிலும் ஆலயப் பீடங்களிலும் இச்சிலுவை ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. இதற்கு மூல காரணம் இயேசு கிறிஸ்து. அவரே இதனைச் சுமந்தார். இதில் மரித்தார். இதன் வழியே சிலுவையை இந்த உலகம் தவிர்க்கமுடியாத அன்பின் அடையாளமாக்கினார். இப்போது உன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றி வா என இயேசு நம்மை அழைத்துக் கொண்டிருக்கிறார்.

எருசலேமில் இருந்து கல்வாரி மலை வரை இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு வந்தார். பின்னர் இயேசுவை சிலுவை சுமந்து கொண்டு நின்றது. இந்தச் சிலுவையில் தொங்கிக் கொண்டும் இயேசு பிறருக்காக ஜெபித்தார். ஒரு திருடனுக்கு பரதீஸைக் கொடுத்தார். தன் தாயாருக்கு பாதுகாப்பை வழங்கினார். தன் பகைவர்களை எல்லாம் மன்னித்தார். இப்படி உயரிய, தெய்வீக ஆசீர்வாதங்களை வழங்கியது சிலுவையில் தொங்கிய இயேசுவே.

இதனால்தான் சிலுவையை நான் விடேன் என்று ஒரு பக்தனும் சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில் என் பாவ பாரம் நீங்கிப் போயின என மற்றொரு பக்தனும் சிலுவையைப் பாடினார்கள். விந்தை கிறிஸ்து ஏசு ராஜா உந்தன் சிலுவை என் மேன்மை என்று பாடினான் இன்னொரு பக்தன். சிலுவை உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்கள் வாழ்வில் சிலுவையின் பங்கு என்ன?

இயேசு கிறிஸ்துவின் அன்பு, தியாகம் மன்னிப்பு, இரட்சிப்பு, பரதீஸ் என அத்தனையையும் உள்ளடக்கிய சிலுவை நமக்கு ஏற்புடையதாக இருக்கிறது. நமது வாழ்வின் பாரங்களை சுமக்க சிலுவை ஏதுவாக இருக்கட்டும். சிலுவையின்றி பாவமன்னிப்பில்லை. சிலுவையின்றி நித்திய வாழ்வு இல்லை. சிலுவைச் சிந்தையோடு வாழ்ந்து பாவமன்னிப்பையும், பாவ மன்னிப்பினால் வரும் நித்திய வாழ்வையும் ஆண்டவருக்குள்ளாகப் பெற்று வாழுவோம்.

பாரம் போக்கும் கடவுளே! உமது நேசகுமாரன் சுமந்த உமது சிலுவைக்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் வாழ்வில் வருகின்ற சிலுவைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் சுமக்கவும் பெலன்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

சிலுவை2020-03-17T08:34:06+00:00

பஸ்கா-திருவிருந்து

லூக்கா 22 : 7-13                                   22 மார்ச், 2020-ஞாயிறு

“பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.” – லூக்கா 22 : 7

பண்டிகைகளையும் விழாக்களையும் ஏற்படுத்தி கொண்டாடி மகிழ்வது உலக நாடுகளில் காணப்படுகிறது. இவ்விழாக்களிலே விருந்துகள் சிறப்பான இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இஸ்ரவேல் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது உலகளாவிய விருந்தும் கொண்டாட்டமும் பஸ்கா பண்டிகையில் அமைந்திருந்தது. இது இஸ்ரவேலர்களின் விடுதலை நாள் கொண்டாட்டம் ஆகும்.

கடவுள் எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேல் மக்களை விடுதலை பண்ணி, எகிப்து தேசத்தைவிட்டு இரவு வேளையில் கடந்து போகச் செய்தார். இதனால் இரவு வேளையில் அப்பங்களை ஆயத்தம் செய்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காலையில் புளிப்போடு உண்ணப்பட வேண்டிய அப்பம், இரவிலே புளிப்பில்லாமல் உண்ணப்பட்டது. அத்துடன் ஒரு வயதுள்ள ஆட்டுக் குட்டியை அடித்து அதன் இரத்தத்தை வீட்டு நிலைக் கால்களில் பூச வேண்டும். அன்று இரவு அதன் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும். இந்த நாளே விடுதலை நாளாகவும், இந்த விருந்தே கடவுளின் கட்டளைப்படி வருடம் தோறும் பஸ்கா பண்டிகை மற்றும் விருந்தாகவும் நினைவு கூரப்பட்டது. இந்த பஸ்கா விருந்தில் தங்களது அடிமைத்தன வாழ்வை நினைக்கும் வகையில் உப்புத்தண்ணீர், கசப்பான கீரை, பழ பேஸ்ட் மற்றும் ஆட்டை பலியிட்டு உண்ணுதல் போன்றவை இடம் பெற்றன.

இயேசு கிறிஸ்துவும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தார். யூதாஸ் அவரைக்காட்டிக் கொடுத்த, அதாவது அவர் சிலுவையில் இறந்த நாளுக்கு முந்தினநாள் இரவு இயேசு திருவிருந்தை ஏற்படுத்தினார். இந்த விருந்தில் இயேசு அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தம் உடலாகவும் தம் இரத்தமாகவும் கொடுத்தார். இயேசு அப்பத்திலும் அப்பத்தோடும் அப்பத்தைக் கொண்டும் தம் சரீரத்தையும், திரட்ச ரசத்திலும், ரசத்தோடும் ரசத்தைக்கொண்டும் தம் இரத்தையும் நமக்கு அளிக்கிறார்.

இந்த விருந்தில் பங்கு பெறுதல் நமது ஆன்மீக வாழ்விற்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. பாவ மன்னிப்பு கிடைப்பதும் இயேசுவின் பிரசன்னமாகுதலும் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாக்கியமாகும். இயேசுவின் அருளும் (கிருபை) நமக்கு வழங்கப்படுகிறது. நமது பஸ்கா பலியாகிய இயேசுகிறிஸ்து நமக்காக பலிவிருந்தாகியிருக்கிறார். பாவப்பரிகாரியாகிய இயேசுவில் பலியிலும் பலி விருந்திலும் பங்கடைவோம். பாவமன்னிப்பைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழுவோம்.

மன்னிக்கிற கடவுளே! நாங்கள் எப்போதும் பரமவிருந்தில் பங்குபெற்று உமது கிருபையைப் பெற்று வாழத் துணை செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பஸ்கா-திருவிருந்து2020-03-17T08:32:00+00:00

கல்வாரி மலை

லூக்கா 23 : 33-35                              21 மார்ச், 2020-சனி

“கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அங்கே அவரை……… சிலுவைகளில் அறைந்தார்கள்.” – லூக்கா 23 : 33

மலைகளிலும், அலைகளிலும், கலைகளிலும் கடவுளையும் அவர் வல்லமையையும் காணும் பக்தர்கள் மிகவும் உயர்ந்த விசுவாசத்தோடு இருப்பார்கள் என்பது உண்மைதானே!

மலைகளின் மேல் கோவில்களை அமைப்பதை நமது முன்னோர்கள் தமிழ்நாட்டில் வழக்கமாக வைத்திருந்தார்கள். காரணம் கடவுளைத்தேடி, நடந்து, மலை ஏறினால் அவரது காட்சியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது அக்காலத்து நம்பிக்கையாய் இருந்தது.

திருமறையில்கூட சீனாய் மலை, கார்மேல் மலை, ஒலிவமலை, சீயோன்மலை, கல்வாரிமலை இவை இறைவனின் திருக்காட்சியகங்களாக காட்டப்பட்டுள்ளன. எனினும் கல்வாரி மலை அனைத்து மலைகளிலும் வேறுபட்டது. காரணம் இம்மலை குற்றவாளிகளுக்கு மட்டுமே சொந்தமானது. இந்த மலையில்தான் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இயேவுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனையும் கல்வாரி மலையில்தான் நிறைவேற்றப்பட்டது. கல்வாரி என்றதும் இயேசுவும் அவரது சிலுவையும் வந்து நம் உள்ளத்தை வாட்டவில்லையா? அன்பின் சிகரத்தைக் காட்ட சிலுவைக் காட்சிபோல் ஒரு காட்சி இந்த உலகம் கண்டதுண்டா?

விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையில் இயேசுவின் உடல் தொங்குவதைத் தாங்கிநின்ற மலைக்கு நேராக நம் கண்களை ஏறெடுப்போம். ஏனெனில் நமக்கு இரட்சிப்பு, விடுதலை, மீட்பு அங்கிருந்துதான் வருகிறது. கல்வாரி மலை நாதராம் இயேசுவை நோக்கிப் பார்ப்போம் அவரையே பாடுவோம்! மாறுவோம் இரட்சிப்பு பெறுவோம்.

உயர்ந்த கடவுளே! சிலுவை மலையை நோக்கிப் பார்த்து உமது அன்பிற்கு நன்றி படைக்கின்றோம். சிலுவையில் காணும் அன்பு எங்களை காக்கட்டும். இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

கல்வாரி மலை2020-03-17T08:29:30+00:00

மாளிகை-அரண்மனை

யோவான் 19 : 8-13                                    20 மார்ச், 2020-வெள்ளி

“மறுபடியும் மாளிகைக்குள்ளே போய், இயேசுவினிடம்: நீ எங்கிருந்து வந்தவன் என்று கேட்க, …….” – யோவான் 19 : 9

நான்கு திசைகளிலும் அரண்களைகட்டி நடுவில் மனை ஒன்றை பெருங்காவல்களுக்கும் மத்தியில் எழும்பி நிற்கச்செய்வது மாளிகையாகும். பொதுவாக மாளிகை என்பது மன்னர்களின் சொர்க்கபூமி என்றும் உலகம் கூறுகிறது. தஞ்சாவூர் அரண்மனை, மைசூர் அரண்மனை, ஜெய்ப்பூர் அரண்மனைகள் இதற்கு சாட்சி பகர்கின்றன.

இயேசு கிறிஸ்துவின் காலத்தில் பலஸ்தீனா தேசத்தின் ஆளுநராக ரோமப் பேரரசால் நியமிக்கப்பட்டிருந்தவன் பொந்தியு பிலாத்து ஆவான். இந்த தேசாதிபதியின் அரண்மனைக்கு இயேசு கிறிஸ்து குற்றம் சாட்டப்பட்டவராக கொண்டு வரப்பட்டார். மாளிகை வாசத்தை வெறுத்தவர் இயேசுகிறிஸ்து. மனுஷகுமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை என்று வாழ்ந்தவர் இயேசு. தன்னையே வெறுமையாக்கின இயேசுவுக்கு இந்த மாளிகையில் போர்ச் சேவகர்கள் உடல் ரீதியான துன்பங்களைக் கொடுத்தார்கள்.

இந்த மாளிகையில் தான் இயேசு ‘நான் அரசன் தான்’ என்று பிலாத்துவிடம் கூறினார். ஆனால் அவரது மாளிகை பரலோக அரசு என்பதை வெளிப்படுத்தினார். பிலாத்துவின் அரசு இயேசுகிறிஸ்துவை பெரும் பாடுகளுக்குள் தள்ளியதால்தான் நமக்கு நிலையான வாழ்வு பரலோக அரசில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

பாடுகள் மூலம் பரலோக வாழ்வில் நுழைய முடியும் என்ற உண்மை இயேசு பிலாத்துவின் மாளிகையில் நுழைந்ததன் வழியே நமக்கு உறுதி செய்யப்படுகிறது. இயேசுவின் பாடுகளை நினைவிற்கு கொண்டுவந்து இத்தவக் காலத்தில் மனம் மாறுவோம். மாளிகை வாசம் தராத இன்பம் பரமனின் வீட்டில் உண்டு என்று நம்பிக்கை பெறுவோம். விண்ணுலக வாழ்வில் இயேசு ஆயத்தம் செய்த மாளிகை நமக்காகக் காத்திருக்கிறது. கடவுள் நம்மை ஆயத்தம் செய்து இங்கே கொண்டு சேர்ப்பார் என்ற உறுதியில் வாழ்வோம்.

பரலோகத்தில் வாழுகின்ற கடவுளே! உம்முடைய பரம மாளிகைக்குள் வர எங்களை இயேசுவின் பாடுகளைக் கொண்டு ஆயத்தமாக்கும் இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.

மாளிகை-அரண்மனை2020-03-17T08:27:39+00:00

கெத்செமனே தோட்டம்

மத்தேயு 26 : 36-46                                   19 மார்ச், 2020-வியாழன்

“அப்பொழுது இயேசு அவர்களோடே கெத்செமனே என்னும் இடத்திற்கு வந்த சீஷரை நோக்கி: நான் அங்கே போய் ஜெபித்து வருமளவும்…..” – மத்தேயு 26 : 36

யூத மண்ணிலே கெதரோன் ஆற்றுக்கு மேல் ஒலிவமலைச் சாய்வில் இருந்தது ஒலிவ மரத்தோட்டம். இதன் நடுவில் ஒரு கிணறும் ஒலிவ என்ணெய் எடுக்க ஒரு ஆலையும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஏதேன் தோட்டத்தில் படைப்பின் வரலாற்றை அறிந்துகொள்ளும் நாம் கெத்சமெனே தோட்டத்தில் இயேசு நமக்கு தரும் இரட்சிப்பின் வரலாற்றை அறிய முடியும்.

இயேசு கிறிஸ்துவின் உருக்கமான ஜெபம், அவரது வியர்வை இரத்தமாக மண்ணில் விழுதல், தேவதூதன் இயேசுவைத் தேற்றும் நிகழ்வு போன்றவை நடைபெறுகின்றன. தொடர்ந்து இயேசு கைதாகும் நிகழ்வும் இத்தோட்டத்தில் நடைபெறுகிறது. இயேசு அனுபவித்த பாடுகளின் துவக்கமே மிக கொடுமையானது. எனது சித்தமா? கடவுளின் சித்தமா? என்ற கேள்வியே மிகப் பெரிய வேதனையாக அவருக்கு அமைந்திருந்தது. மன அழுத்தத்திலும் மரணத்திற்கேதுவான துக்கத்திலும் இயேசு குழப்பத்தில் இருந்தார். அவரது வியர்வைத்துளிகள் இரத்தத் துளிகளாய் விழுந்த துயரமும் அவரை வாட்டியது. மெய்யான மனிதனாக மரண வேதனை அவருக்கு இருந்தது. பாடுகள் ஆரம்பம் ஆனபோதே இயேசு கடவுளின் சித்தத்திற்கு தம்மை ஒப்படைத்தார். நாமும் சோதனைகள் நீங்க கடவுகளின் சித்தம் நம்மில் நிறைவே இடங்கொடுக்கும் படி அழைக்கப்படுகிறோம்.

இந்தத் தவக்காலத்தில் சோதனைகள் நீங்கிட கடவுளின் விருப்பத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்வோம். நமது சித்தம் துன்பம் வேண்டாம் என்று இருக்கலாம். ஆனால் துயரங்கள் எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்களையும் தேவதூதனின் தேறுதலையும் கொண்டுவருகிறது என்பதை உணருவோம். கெத்செமனே அனுபவங்கள் நமக்குக் கிடைக்கட்டும். நாமும் அவற்றைச் சகித்து, தாண்டிவர, வெற்றி காண கடவுள் அருள்வார்.

படைப்பின் கடவுளே! கெத்செமெனே தோட்டத்தில் உமது குமாரன் இயேசுவின் பாடுகளை துவக்கி கல்லறை தோட்டம்வரை காத்து நடத்தினதைப்போல் எங்களையும் கடைசிவரை காத்து நடத்தியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

கெத்செமனே தோட்டம்2020-03-17T08:25:10+00:00

யோவான்

யோவான் 21 : 20-25                    18 மார்ச், 2020-புதன்

“அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச்சாட்சி பகர்ந்து இவைகளை எழுதினவன்;…” – யோவான் 21 : 24

இயேசு கிறிஸ்துவின் முதல் மூன்று நெருங்கிய சீடர்களில் ஒருவர் யோவான் ஆவார். இந்த மூன்று பேர்களிலும் யோவான் இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு பத்மு என்னும் தீவில் நாடுகடத்தப்பட்டு மரித்துபோனார். இயேசுவின் உயரிய போதனைகளையும் எவரும் எழுதாத இயேசுவின் சத்தியங்களையும் தனது நற்செய்தி நூலில் சாட்சியாக எழுதியுள்ளார்.

இயேசுவின் திருப்பாடுகள் நேரத்தில் அவரது சீடர்கள் பலவித பயங்களுக்கும் கேள்விகளுக்கும் ஆளாகவே அவரை விட்டுவிட்டு தலைமறைவானார்கள். எனினும் இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் என இயேசுவின் கடைசி நேரம் வரை சிலர் உடனிருந்தனர்.

இருபது வருட நட்பு கூட சிறு கருத்து வேறுபாடு நிமித்தம் ஒரே நாளில் அழியும். ஆனால் யோவான் இயேசுவின் மேல் நட்பும் நம்பிக்கையும் அவரது பரமேறுதலுக்குப் பிறகும் வைத்திருந்தார். இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த வேளையிலும், இயேசு தான் தேர்ந்தெடுத்த சீடர்களில் ஒருவரிடம் பேசினார் என்றால் அவர் யோவான் தான். மட்டுமின்றி தன் தாயைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் இயேசு யோவானிடம் தான் ஒப்படைக்கின்றார்.

யோவான் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை தனது நற்செய்தி நூலில் எழுதி சாட்சி பகர்ந்தார். அவரது எழுத்தும் புத்தகமும் இன்றைக்கும் இயேசுவுக்கு சாட்சி பகர்கின்றன. சாட்சி கூறுவது மட்டுமின்றி எழுதி வெளியிடுவதும் உயர்ந்தது தானே! இயேசுவைப் பற்றிய சாட்சிகளை ஒரு நேரம் ஒலிப் பெருக்கியில் கூறி வாழ்வதல்ல, எழுதி பலகாலம் பலருக்கும் அறிவிக்க ஆயத்தம் ஆவோம்.

இறுதி வரை நம்பிக்கையாய் இருந்து பாடுகளை வெல்ல கடவுள் பலம் அருளுகிறார். சாட்சி பகர்வோம். கடவுள் கடைசிவரை தூய ஆவியானவரைக் கொண்டு நம்மை நடத்துவார். இந்த நிச்சயத்தில் சாட்சியிட்டு வாழுவோம்.
நித்திய கடவுளே, வாழ்வின் கடைசி நேரம்வரை எங்களைக் காத்தருளும். நாங்களும் இறுதிவரை உமக்கு சாட்சியாக வாழ அருள் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

யோவான்2020-03-17T08:19:32+00:00
Go to Top