vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

மீறுதல்கள்

ஏசாயா 23 : 17-18                                 ஜூன் 9, 2020 – செவ்வாய்

“அவர் நமது மீறுதல்கள் நிமித்தம் ஒப்புக் கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.” ரோமர் 4 : 25

நான் நேசிப்பவர்க்கு உதவுவது என்னால் இயலும். என்னை அறியா தவருக்கும் உதவுவேன்; அதுவும் என்னால் இயலும். நீங்கள் என் வாழ்வில் செய்த உதவியை மறக்க மாட்டேன். என் உயிரைக் கூடக் கொடுப்பேன் என்றும் சொல்லலாம். உண்மையில் அடுத்தவருக்காக நம் அதிக அக்கறைப்படுவது போன்றும் காண்பித்துக் கொள்ளலாம். சுயநலம் மிகுந்த உலகம் இது. ஆனால் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஒருவரைப் பார்த்து ‘நீ போ! நான் உன் தண்டனையை ஏற்பேன்’ என்று நம்மால் சொல்ல முடியுமா? இது போன்றது தான் நமது தியானவரி.

கடவுளின் பார்வையில் நாம் பாவக்குற்றவாளிகள்! கடவுளின் அன்பை மீறினவர்கள். கடவுளின் தண்டனைக்குரியவர்கள். நமது நீதி, கடவுளின் முன் கறைப்படிந்த ஆடை போல் உள்ளது. கடவுள் விரும்பும் நீதியைச் செய்யத் தவறியவர்கள் நாம். கடவுள் நமது மீறுதல்களை மன்னிக்க விருப்பங்கொண்டார். தமது ஒரே பேறான குமாரனை அனுப்பினார். ஏசாயா தீர்க்கர் தனது 53ஆம் அதிகாரத்தில் நமது மீறுதல்கள் நிமித்தமே அவர் காயப்பட்டார், நமது அக்கிரமங்களினிமித்தமே அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை விளைவிக்கும் ஆக்கினை அவர் மேல் வந்தது என்றார். இதற்கிசைய இயேசு கிறிஸ்து இந்த முழு மனுக்குலத்தின் மீறுதல்களையும் சிலுவையில் சுமந்தார். உயிர்த்த ஆண்டவராக நம்மைப் பிதாவோடு இணைத்தார். நம்மை கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்றினார்.

நானும் நீங்களும் கிறிஸ்துவினால் கடவுள் முன் நீதிமான்கள்! எவ்வளவு பெரிய பாக்கியம்! மரண தண்டனைக்குரிய நான் விடுதலை யாக்கப்பட்டேன். இயேசு கிறிஸ்துவில் எனக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது! எத்தனை மகிழ்ச்சி! நமக்காக தம்மைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்த இயேசுவுக்கு நம்முடைய கைம்மாறு என்ன? நம்மை அவருக்கு அர்ப்பணிப்பது அல்லவா?

‘வா பாவி மலைத்து நில்லாதே வா..
உன்னிடத்தில் ஒன்றுமில்லை என்று எண்ணித்
திகையாதே…உன்னிடத்தில் ஒன்றுமில்லை யென்று
அறிவேனே உள்ளபடி வாயேன்’

என்ற பரமனின் அழைப்பை ஏற்போம்! இயேசுவில் நீதிமானாக உலகில் வலம் வருவோம்! புதிய வாழ்வில் மகிழ்ச்சி கொள்வோமாக.

எங்கள் மீறுதல்களை ஏற்றுக் கொண்டு, எங்களை மன்னித்து கடவுளோடு இணைத்த கிறிஸ்துவே! உம்மில் வாழ கிருபை செய்தருளும். ஆமேன்.

மீறுதல்கள்2020-06-04T10:21:47+00:00

மீட்கும் விசுவாசம்

ஆதியாகமம் 12 : 1-8                            ஜூன் 8, 2020 – திங்கள்

“உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத் தத்தம்…. நியாயப் பிரமாணத்தின் மூலமாய்க் கிடையாமல் விசுவாச நீதியின் மூலமாய்க் கிடைத்தது.” ரோமர் 4 : 13

இயேசுகிறிஸ்துவிற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ஆபிரகாம். இஸ்ரவேல் மக்களின் முற்பிதா எனப் போற்றப்படுகின்றவர். ஆபிரகாமை கடவுள் அழைத்தார். நான் காண்பிக்கிற தேசத்திற்குப் போ – உன்னைப் பெரிய ஜனமாக்குவேன் என்று வாக்குத் தந்தார். ஆபிரகாம் பிள்ளைப் பேறு இல்லாதவராக இருந்தும் கடவுள் தமக்கு தேசம் தருவார்; தனக்குச் சந்ததி உண்டு பண்ணுவார் என்று விசுவாசித்தார்.

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கைப் பலியிடுமாறு கடவுள் கேட்ட போதும் ஆபிரகாம் கீழ்ப்படிந்தார். பலியிடுவதற்கு ஆடு எங்கே என்று மகன் ஈசாக்கு கேட்ட போது ‘கர்த்தர் பார்த்துக் கொள்வார்’ என்று கூறினார். ஆபிரகாமின் ஆழ்ந்த இறைப் பற்றுறுதியே அவரைக் கடவுளுக்கு ஏற்புடையவர் என்பதை வெளிப்படுத்துகிறது. கடவுள் தமது கிருபையை ஆபிரகாமிற்கு வெளிப்படுத்தினார். ஆபிரகாம், இறைவனின் வாக்குத் தத்தத்தை நம்பினார். விசுவாசித்தார். ஆபிரகாம் நீதிமானாக்கப்பட்டார்.

நியாயப் பிரமாணம், அதன் கிரியைகள், விருத்தசேதனம் போன்றவற்றில் இரட்சிப்பு இல்லை. இதை ஆபிரகாமின் சரித்திரத்தின் வழியாக பவுல் தெளிவுப்படுத்துகிறார். ஆனால் நியாயப் பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஆபிரகாமுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆபிரகாம் விசுவாசித்தார். நீதிமான் ஆனார். நியாயப் பிரமாணம் என்பது மோசேயின் காலத்தில்தான் கர்த்தரால் கொடுக்கப்பட்டது. ரோம நூற்றுக்கதிபதியைப் பற்றித் திருமறையில் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். ‘நீர் ஒரு வார்த்தை சொல்லும்; என் வேலைக்காரன் சுகமாவான்’ என்றார். இயேசுவின் வார்த்தையில், அவரில் விசுவாசம் வைத்தார். வேலைக்காரன் சுகமானான். நூற்றுக்கதிபதி இரட்சிப்பிற்குள் வழிநடத்தப்பட்டார்.

இயேசுகிறிஸ்துவினாலேயே இரட்சிப்பு. இந்த இரட்சிப்பு இலவசமாக மனுக்குலத்திற்குக் கொடுக்கப்படுகிறது. கடவுளைக் காண கடவுளுக்கு ஏற்புடையவர்களாக ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. மனுக்குலத்தின் இன்றைய எல்லா வினாக்களுக்கும் இயேசுவே பதில் என்று பறைசாற்றினார் இந்திய இறையியல் வல்லுநரான பால் சுதாகர் என்பவர். இன்றும் நமக்கு இறை வாக்குறுதி உள்ளது. இயேசுவில் ஆமேன் என்று நிறைவேறியுள்ளது. இயேசுவை விசுவாசித்து வாழ்வோமாக!

பிதாவே! உம்முடைய நேசக்குமாரன் இயேசுவில் மீட்பு என்பதை உணர்ந்து அவரில் விசுவாசம் வைத்து வாழ உதவி செய்தருளும். ஆமேன்.

மீட்கும் விசுவாசம்2020-06-03T12:35:35+00:00

நீதிமான்

கலாத்தியர் 2 : 15-20                                ஜூன் 7, 2020 – ஞாயிறு

“கிரியை செய்யாமல், அவபக்தனை நீதிமானாகத் தீர்க்கிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனுக்கோ அவன் விசுவாசமே நீதியாக எண்ணப்படும்.” ரோமர் 4 : 5

ஆச்சரியமான கிருபை (Amazing Grace) என்ற புகழ் பெற்ற ஆங்கிலப் பாடலை எழுதிய ஜான் நியூட்டன் இளவயதில் கப்பல் படை வீரராக இருந்தார். இவர் ஒரு நாத்திகர். இவர் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை ஏற்றி வரும் கப்பலின் தலைவராக நியமிக்கப்பட்டார். அடிமைகளை ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் புயலில் சிக்கியது. இவர் தான் கற்ற அனைத்து நுணுக்கங்களையும் கையாண்டார். ஆனால் தன்னுடைய திறமைகள் அனைத்தும் வீண் என்று கண்டார். கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற முடிவிற்கு வந்தார். கடவுளிடம் மண்டியிட்டார். பாவங்களை அறிக்கை செய்து இயேசுவுக்குள் வழிநடத் தப்பட்டார். புயல் அமர்ந்தது. மனித அறிவு, மனித முயற்சிகள் மனித ஈடேற்றத்திற்கு வழிவகுக்காது என்பதைப் பிறருக்குக் கூறத் துவங்கினார்.

மனித முயற்சிகள், சமய வழக்க ஒழுக்கங்கள் மனிதனை இரட்சிப்புக்குள் வழிநடத்தாது. இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசமே நம்மை இரட்சிப்புக்கு வழிநடத்தும் என்பதை தெளிவுபடுத்துகிறது தியானப்பகுதி. யூதர்கள் தாங்கள் கடவுளின் மக்கள். கடவுளின் சட்டத்தைப் பெற்றவர்கள். சட்டத்தைக் கடைபிடிப்பதால் கடவுளின் அன்பைப் பெறலாம். இரட்சிக்கப்படலாம் என்று நம்பினர். இதற்காகப் பல பலிகளைச் செலுத்தினர். கடவுளின் அன்பு இயேசு கிறிஸ்துவில் வெளிப் படுத்தப்பட்டதை யூதர்கள் ஏற்க மறுத்தனர்.

மனித ஈடேற்றத்திற்குப் பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. நல்ல செயல்கள் செய்வதால், புண்ணியத்தலங்கள் செல்வதால், தங்களின் அறிவைச் சார்ந்திருப்பதினால் மீட்புப் பெறலாம் என்று எண்ணுகின்றனர். தங்களின் பணம் தங்களை மீட்கும் என்றும் சிலர் கருதுகின்றனர். சில வெளியரங்கமான செயல்பாடுகளினால்தான் இயேசு கிறிஸ்துவில் நாம் இரட்சிப்புப் பெற்றிட முடியும் என்றும் சிலர் போதிக்கின்றனர்.

கிருபையினாலேயே விசுவாசத்தின் மூலமாய் இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது கடவுளின் ஈவு (எபேசியர் 2 : 8) என்பது திருவாக்கு. இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே இரட்சிப்பு கிடைக்கிறது என்பதை உணர்வோம். இயேசுவே வாழ்வு! வழி! இரட்சிப்பு! இயேசுவால் மட்டுமே நாம் நீதிமானாக்கப்படுகின்றோம். இந்த நம்பிக்கையில் நிலைத்திருப்போமாக.

பிதாவே! அவபக்தனான என்னை உமது அன்பினால் இயேசு கிறிஸ்துவில் நீதிமானாக ஏற்றவரே உமக்கு நன்றி. இயேசு வழியே ஆமேன்.

நீதிமான்2020-06-03T12:33:33+00:00

ஒரே கடவுள்

சங்கீதம் 24 : 3-7                           ஜூன் 6, 2020 – சனி

“கடவுள் யூதருக்கு மாத்திரமா கடவுள்? புறஜாதிகளுக்கும் கடவுள் அல்லவோ? கடவுள் ஒருவர் என்றால் புறஜாதிகளுக்கும் அவரே கடவுள்.” ரோமர் 3 : 29

இல்ல ஜெபம் ஒன்றை நடத்தச் சென்றேன். இல்லத்தார் ஜெபத்திற்கு ஆயத்தமானார்கள். அப்போது அங்கிருந்த ஒரு சகோதரி என்னிடம் வந்து, ‘ஐயா! நான் படிப்பறிவில்லாதவள். நான் வேற்று மதத்தைச் சார்ந்தவள். பக்கத்து வீட்டில் இருக்கிறேன். நான் இந்த ஜெபத்தில் கலந்து கொள்ளலாமா’ என்று கேட்டார். தாராளமாகக் கலந்து கொள்ளுங்கள் என்றேன். ஏன் இந்த வினா? உங்கள் கடவுள், எங்கள் கடவுள் என்ற எல்லை வைத்து கிறிஸ்தவர்களாகிய நாம் வாழ்கிறோமா? கடவுள் ஒருவரே. அவர் எல்லாருக்குமுரியவர். எல்லைகளுக்கப்பாற் பட்டவர். முழு உலகைப் படைத்தவர், மீட்கிறவர் கடவுள். முழு உலகும் அவருக்கே சொந்தம் என்பதைத் தெளிவாக்குகிறது இன்றைய தியான வசனம்.

யூதர்களைக் கடவுள் தெரிந்தெடுத்தார். ஆனால் கடவுளால் தெரிந்து கொள்ளப் பட்டதின் நோக்கத்தை அவர்கள் மறந்தார்கள். யூதர்களின் அழைப்பின் நோக்கம் பூமியின் கடைமுனைமட்டும் ஒரே கடவுளின் புகழை வெளிப்படுத்துவதுதான். பல தீர்க்கர்கள் யூதர்களுக்கான இறை அழைப்பை நினைவு படுத்தினர். ஆனால் யூதர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

கடவுள் ஒருவரே. அவரே முழு மனுக்குலத்திற்கும் தந்தை. இதை கடவுள் தமது ஒரே பேறான குமாரனில் வெளிப்படுத்தினார். ஒருவரும் கெட்டுப் போகாமல் நிலையான வாழ்வைப் பெறவே கடவுள் இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் முழு மனுக்குலத்தையும் பிதாவோடு ஒப்புரவாக்கினது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் யாராயிருந்தாலும் கடவுளுக்குச் சொந்தம். கடவுளுக்கு ஏற்புடையவர்களே.

இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்பதை ஏற்போம். அண்ட சராசரங்களையும் படைத்த கடவுள் ஒருவரே என்பதைப் பறைசாற்றுவோம். எல்லா ஏற்ற தாழ்விற்கும் அப்பாற்பட்டவர் கடவுள் என்பதை உணர்வோம். நமது சாதி, மதம், அந்தஸ்து, எதுவும் மெய்க் கடவுளை இயேசுவில் அறியத் தடை இல்லை என்பதே உண்மை. இங்கே யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரே மனுஷனாயிருக்கிறீர்கள் என்கிறது திருவசனம். கிறிஸ்துவில் ஒரே கடவுள்! ஒரே மக்கள் ஒரே இனம்!

பிதாவே! எந்தவிதப் பாகுபாடுமின்றி உம்மை ஒரே கடவுளாக ஏற்க கிருபை செய்தருளும். கிறிஸ்துவின் வழியே! ஆமேன்.

ஒரே கடவுள்2020-06-03T12:31:35+00:00

பாவிகள்

ரோமர் 1 : 28 – 32                                   ஜூன் 5, 2020 – வெள்ளி

“எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமை அடையாதிருக்கிறார்கள்.” ரோமர் 3 : 23

முழு மனுக்குலமும் தனது பாவத்தின் காரணமாக கடவுள் முன் நிற்க வேண்டியவர்கள் என்கிறது தியானவரி. இந்த உலகமும் நாமும் கடவுளின் படைப்பு. மனிதப்படைப்பின் முன்னோடி முதல் மனிதனான ஆதாம். மனிதனைக் கடவுள் தம்முடைய சாயலில் படைத்தார். தம்மோடு அன்போடும் ஐக்கியத்தோடும் வாழ அனுமதித்தார். மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கு கடவுளோடு சஞ்சரிப்பது. கடவுளோடு சஞ்சரிப்பது அல்லது வாழ்வது என்பது இறைமகிமை.

ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட மனிதனோ தன்னைப் படைத்தவரையே ஒதுக்கினான். கீழ்ப்படியாமற் போனான். பாவம் என்ற கீழ்ப்படியாமை, இலக்கு தவறிய நிலை, மனித இனத்தையே பீடித்தது. பாவத்திலிருந்து மனித குலம் மீள முடியவில்லை. கடவுளை விட்டு விலகி விட்டது மனித இனம். மனிதர்கள் தேவ மகிமைக்குத் தகுதி யற்றவர்களானார்கள். பாவ சாபத்திற்கு மனுக்குலத்தில் ஒருவரும் விலக்கல்ல. பாவசாபத்தில் இருந்து மீள என்ன வழி என்று மனிதன் முயற்சிக்கிறான். பலவற்றை வழிகளாக நம்பிக் கண்டுபிடிக்கிறான். இறுதியில் தோல்வியடைகிறான். புனிதர் அகுஸ்தீன் என்பவர் மனிதனின் நிலையை ‘மனிதன் முற்றிலும் இயலாமையில் இருக்கிறான்’ என்கிறார். (கூடிவயட னநயீசயஎவைல டிக அயn) படைக்கப்பட்ட மனித குலத்தை மீட்க கடவுள் திட்டமிட்டார். செயலாற்றினார். கடவுளின் குமாரன் இயேசு உலகின் மீட்பரானார். இயேசு கிறிஸ்துவில் இறைவனின் உலக மீட்புத் திட்டம் ஒருவர் கூட கெட்டுப் போகாமல் புதிய வாழ்வு பெற்று கொள்ள வேண்டும் என்பதே. ஒருவரும் பழைய பாவ வாழ்வில் நிலைத்து பரம வாழ்வை, புதிய வாழ்வை இழந்து போகக் கூடாது என்பதே கடவுளின் திட்டம்.

எல்லாரும் பாவிகள் என்ற நிலைமாறி, நாம் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை இயேசுவில் கடவுள் தருகிறார். நாம் புதிய படைப்புகள் ஆக்கப்பட்டிருக்கிறோம். மீண்டும் நாம் கடவுளுக்குரியவர்கள். சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே பூலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள யாவையும் அவர் மூலமாய்த் தம்மோடு சமாதானப்படுத்தி ஒப்புரவாக்கிக் கொள்ளவும் பிதாவானவர் பிரியங் கொண்டார் என்கிறது திருவசனம். (கொலோசேயர் 1 : 20) மகிழ்வுடன் வாழ்ந்திருப்போம். இயேசுவில் நமக்குப் பாவ மன்னிப்பு! தேவ சமாதானம்! தேவ மகிமை நமக்கு உறுதிசெய்யப் பட்டுள்ளது.

கடவுளே! கெட்டுப் போன என்னை உமது குமாரனில் மீட்டு உமக்குச் சொந்தமாக்கிக் கொண்டதற்கு நன்றி படைக்கிறேன். ஆமேன்.

பாவிகள்2020-06-03T12:29:48+00:00

நியாயப்பிரமாணம்

ரோமர் 7 : 7-12                                 ஜூன் 4, 2020 – வியாழன்

“நியாயப் பிரமாணத்தினால் உண்டாவது பாவத்தை அறிகிற அறிவு.” ரோமர் 3 : 20

உடலின் வெப்பத்தை அறிய உதவும் கருவி தெர்மா மீட்டர். இது உடலின் உஷ்ணத்தை காண்பிக்கும். ஆனால் அவ்வெப்பத்தைத் தணிக்க அத்தெர்மா மீட்டரால் இயலாது. நோயிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடும் மருந்துகளே உதவும். தியானப்பகுதியில் நியாயப் பிரமாணம் என்பது நமக்குப் பாவத்தைப் பற்றிய அறிவைத் தரும். ஆனால் நியாயப் பிரமாணம் நமக்குப் பாவ நிவாரணம் தராது என்பதை பவுலடிகளார் தெளிவுபடுத்துகிறார். ஆனால் யூதர்களின் நிலை வேறாயிருந்தது. ஒவ்வொரு மனிதனும் அறிந்து வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று நியாயப்பிரமாணம் என்ற இறைச்சட்டம் என்றும், நியாயப் பிரமாணமே இறைவனிடம் நம்மை வழிநடத்தும் என்றும் நம்பினர். எனவே அதுவே ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைச் சட்டங்கள் ஆகும் என்றும், நியாயப்பிரமாணமே இறை மக்களாக வாழ உதவி செய்யும் என்று யூதர்கள் நம்பினர். யூதர்கள் இறைசட்டத்தை முற்றிலும் கடைப்பிடிப்பதாகவும் நம்பினர்.

நியாயப்பிரமாணம் பாவத்தை உணர்த்துகிறது. அது பாவப் பரிகாரியாகிய இயேசு கிறிஸ்துவிடம் தங்களை வழி நடத்துகிறது என்பதை யூதர்கள் உணரவில்லை. மார்டீன் லுத்தர் நியாயப்பிரமாணத்தைக் குறித்து விளக்கும் போது ‘முகம் பார்க்கும் கண்ணாடி’ போன்று அது நம்முடைய பாவ சுபாவத்தைச் சுட்டிக்காட்டும் என்று குறிப்பிடுகிறார். நியாயப் பிரமாணம் பாவத்தை, பாவத்தின் அகோரத்தைக் காண்பிக்கிறது. சுவிசேஷமோ இயேசுகிறிஸ்துவில் உள்ள பாவ விடுதலையைக் காண்பிக்கிறது. அன்று நியாயப்பிரமாணம் இரட்சிப்பின் வழி என்று போதித்து வாழ்ந்த யூதர்களைப் போன்று, இன்றும் சிலர் வெள்ளாடை இரட்சிப்புக்கு வழி, நகை அணியாமல் இருப்பது இரட்சிப்புக்கு வழி என்று கூறுகின்றனர். சிலர் திருமறைப் போதனைகளைத் திரித்துக் கூறி இரட்சிப்புக்கு வழி என்று கூறுகின்றனர். இவை யாவும் தவறு.

இயேசு கிறிஸ்துவே பாவப் பரிகாரி. அவரே பாவத்திற்குத் தீர்வு. மோட்சத்திற்கு வழி என்பதை உணருவோம். இயேசு கிறிஸ்துவே நமது இரட்சிப்பு. நியாயப் பிரமாணம் நமது பாவத்தை உணர்த்தட்டும். பாவப் பரிகாரியாகிய இயேசு கிறிஸ்துவிடம் வழி நடத்தட்டும். இயேசு கிறிஸ்து நமக்காக நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றியுள்ளார்.

இறைவா! நியாயப்பிரமாணத்தின் உதவியினால் பாவத்தை உணர்ந்து கிறிஸ்துவில் பாவ மன்னிப்புப் பெற்று வாழ உதவி செய்தருளும். ஆமேன்.

நியாயப்பிரமாணம்2020-06-03T12:27:27+00:00

பொய்சாட்சிகள்

மாற்கு 14 : 55-64                        31 மார்ச், 2020-செவ்வாய்

“…அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை.” – மாற்கு 14 : 56

நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்குகளுக்கு சாட்சிகள்தான் முக்கியமானவர்கள். சாட்சியங்கள் எழுத்து வடிவிலோ, பேச்சுவடிவிலோ நேருக்கு நேராகவோ, தடங்கள் வடிவிலோகூட இருக்கலாம். அவை உண்மையானவைதானா? என்பதுதான் கேள்வியாகும்.

பெரும்பாலும் கள்ள சாட்சிகள் நீதியை அழித்துவிட உதவிசெய்கிறார்கள். சில சமயங்களில் கள்ள சாட்சியங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்படுகிறார்கள். நிரபராதிகள் தண்டனை பெறுகிறார்கள். இயேசுவின் திருப்பாடுகளுக்கு கள்ளச் சாட்சிகளின் பங்கும் இருக்கிறது. அவர்களின் சாட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாக இருந்தன. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக என்பது பத்துக் கற்பனைகளில் ஒன்று. பல நேரங்களில் நாம் இந்தத் தவறை தெரிந்தே செய்கிறோம். இப்பாவச் செயல்குறித்து நாம் மனம் வருந்துகிறோமா?

இந்த தவக்கால தியானங்களும் சிலுவைச் சிந்தனைகளும் நம்மை இயேவுக்கு உண்மையான சாட்சிகளாக மாற்ற வேண்டும். எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள் என்று நம்மை அழைத்திருக்கிற ஆண்டவர் முன் நம்பொய்களை எல்லாம் களைந்துவிடுவோம்.

நமது உள்ளங்கள் கள்ளத் தனங்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தாலும் சிலுவையைப் பற்றிய தியானங்கள் நம்மை உண்மையான சாட்சியின் வாழ்வுக்கு வழி நடத்தட்டும். இயேசு கிறிஸ்துவே வாழ்வின் உண்மை என்பதை மறுபடியும் ஏற்றுக்கொண்டு பொய்களை நீக்கிவாழ தூய ஆவியானவர் நம் இருதயங்களை சுத்தப்படுத்துவாராக!

எங்கள் பொய்கள், மாய்மாலங்கள் பித்தலாட்டங்கள் அனைத்தையும் இந்த ஒருசந்திக் காலத்தில் மாற்றித்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பொய்சாட்சிகள்2020-03-17T09:16:20+00:00

லஞ்சம்

மத்தேயு 28 : 11-15                              30 மார்ச், 2020-திங்கள்

“அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு தங்களுக்குக் கற்பிக்கப்பட்ட படியே செய்தார்கள்…” – மத்தேயு 28 : 15

உலகில் ஒவ்வொருவனும் அவனுக்குரிய வேலையையும் உழைப்பையும் அவனே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனக்கு கடவுள் தந்த திறமை, அறிவு இவற்றைப் பயன்படுத்தி வாழ்வை நானே அமைத்துக் கொள்கிறேன். எனக்குரிய சம்பளம் போதவில்லையெனில் நான் அதிகமாக உழைக்க வேண்டுமே தவிர திருடக் கூடாது. பேராசையும் தேவையில்லாதது.

பண ஆசையே லஞ்சம் வாங்குதற்கான முதல் காரணம். ஆடம்பர வாழ்வு, பெருமை, புகழ் இவை தான் வாழ்க்கை என முடிவு செய்கிறவர்கள் இந்த கொடுமையான பாவத்தைச் செய்கிறார்கள். பிறரின் பணத்தை, அதிகாரத்தைக் காட்டி, பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அபகரித்தல் லஞ்சமாகும். இயேசுவின் பாடுகளிலும் லஞ்சம் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். பண ஆசை நிறைந்தவர்கள் லஞ்சம் பெற்று இயேசுவுக்கு எதிராக நின்றார்கள். குரல் எழுப்பினார்கள். பரிதானம் பெறுவது கடவுளின் வார்த்தைகளுக்கு எதிரானது.

அனைத்து லஞ்சங்களும் வெளிப்படையானவை அல்ல. அனைத்தும் பணம் சம்மந்தப்பட்டவைகளும் அல்ல. மக்கள் பரிதானம் வாங்கியோ பாரபட்சம் காட்டியோ நீதியைப் புரட்டக் கூடாது என திருமறை கூறுகிறது. எப்படியெனில் லஞ்சம் பிறருக்குக் கிடைக்கவேண்டிய வாழ்வை, நீதியை பறித்துக்கொள்கிறது.

லஞ்சம் வாங்குகின்ற, கொடுக்கின்ற இந்தப் பாவ செயலால் ஏழைகள் வாழ்வு உயராதபடி அநீதி இழக்கப்படுகிறது. இச்செயலில் இன்று ஈடுபட்டிருக்கிறவர்கள் சிலுவையில் இயேசுவின் ஆணி பாய்ந்த கைகளை பார்த்து மனந்திரும்ப வேண்டும். இதற்காகவே அவர் தம் தூய்மையான கைகளை நமக்கு முன்பாக விரித்துக் காட்டுகிறார். நெஞ்சங்கள் அமைதி பெற லஞ்சங்கள் அகல வேண்டும். கடவுள் நம் கைகளை பரிசுத்தமாக்குவராக!

சுத்தம் விரும்பும் கடவுளே! எங்கள் உள்ளங்கள் மாசற்றதும் எங்கள் கைகள் சுத்த மானதாகவும் இருக்க வரம்தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

லஞ்சம்2020-03-17T09:13:33+00:00

தூண்டிவிடுதல்

மத்தேயு 27 : 20-24                             29 மார்ச், 2020-ஞாயிறு

“பரபாஸை விடுதலை செய்யக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்விக்கவும், பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களைத் தூண்டிவிட்டார்கள்.” – மத்தேயு 27 : 20

போதிய அறிவும், பணமும் வேலையும் இல்லாத அப்பாவி மக்களை நினைத்துப் பாருங்கள். பணமே பிரதானம் என எண்ணி தீமைகளுக்கு ஆதரவு கொடுக்கும் மக்களை என்ணிப் பாருங்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அன்று பிலாத்து இயேசுவுக்கு எதிரான தீர்ப்பு எழுதிட உதவினார்கள்.

இயேசு கிறிஸ்துவை விடுதலை பண்ண பிலாத்து முயன்றது உண்மைதான். பஸ்கா பண்டிகையை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் கைதியாக இயேசுவை பிலாத்து முன் நிறுத்தினார். ஆனால் மக்கள் பரபாஸிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள். அவர்கள் அப்படிப் பேச மதத்தலைவர்களும் மூப்பர்களும் தூண்டிவிட்டார்கள். இப்படிப்பட்ட தவறான, சுயநலமான தூண்டுதல் இன்றைக்கும் நிழ்கிறது. இப்படிப்பட்ட தவறான தூண்தலுக்கு ஆதரவாக பலர் இன்றும் செயல்படுகிறார்கள். இது ஆண்டவருக்கு ஏற்புடையதல்ல. தூண்டிவிடுதல் பெரும் பாவமே. பிறரைத் தவறான வழியில் தூண்டிவிட்டு பிரச்சனைகளை உருவாக்குகிறவர்கள் இந்தத் தவக்காலத்தில் நேராக சிலுவையின் பக்கத்தில் செல்வோம்.

ஏனெனில் சிலுவையில் தொங்கும் இயேசுகிறிஸ்து மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். அவர்களுக்காகவே வந்தார். பாடுகளை ஏற்றார். அந்த மக்களை வெறும் பணத்திற்காகத் தூண்டிவிடும் இழி குணம் படைத்த மக்கள் மனம் மாறிட உபவாசம் இருப்போம். தூண்டிவிடும் மக்கள் சிலுவையை நோக்கி வர வழி நடத்துவோம்.

மனசாட்சிக்கு எதிராக வாழ்பவர்கள், பிறரைத் தூண்டிவிட்டு லாபம் அடைய நினைப்பவர்கள் அனைவரும் சிலுவைக்கு முன்வந்து நிற்பார்களாக! மக்களை சுய நலத்திற்காக பயன்படுத்தும் நாம் அனைவரும் இயேசுவிடம் திரும்புவோம். சிலுவை நம்மை இயேசுவை நோக்கிப் பார்க்கத் தூண்டுவதாக!

பாவங்களைப் பகைக்கிற எங்கள் அன்பு கடவுளே! பிறரை தீய காரியங்களுக்காக தூண்டிவிட்ட எங்கள் பாவச் செயல்களை மன்னியும். உம்மை நோக்கி நாங்கள் திரும்ப தூண்டப்பட உதவியருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

தூண்டிவிடுதல்2020-03-17T09:12:00+00:00

அநியாயமான தீர்ப்பு

யோவான் 19 : 13-16                               28 மார்ச், 2020-சனி

“அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்புக் கொடுத்தான்.” – யோவான் 19 : 16

ஒரு குடும்பம் தங்கள் பாரம்பரிய சொத்துகளைப் பாதுகாக்க சுமார் 16 வருடங்களாக வழக்கு நடத்தி வந்தனர். தங்கள் பணத்தை இழந்து வாழ்வை நீதிமன்றத்திலேயே கழித்து வந்தனர். அப்படியும் அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் பாதி சொத்துக்களையே பெற முடிந்தது. இன்று இலட்சக்கணக்கானவர்கள் நல்ல தீர்ப்புக்காக நீதி மன்றத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பிலாத்து என்கிற பலஸ்தீனா ஆளுநர் இயேசுவை சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக்கொடுத்தார். இயேசுவிடம் ஒரு குற்றமும் காணேன் என்று கூறியவர் பிலாத்து. உங்கள் அரசனையா நான் சிலுவையில் அறைய வேண்டும் என்று மக்களிடம் கேட்டவர் பிலாத்து . இயேசுவைத் தண்டித்து விடுதலை ஆக்குவேன் என்று தீர்மானித்தவன் நீதி நியாயத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தார்.

ஏனெனில் பதவியும், பணமும், ஆடம்பரமும், உல்லாசமும் உண்மையைச் சார்ந்து நிற்பதில்லை. சுயநலம் எப்போதும் நீதியை விரட்டி அடித்துவிடும். இந்நிலையில் நியாயமான தீர்ப்புகள் எப்படிக் கிடைக்கும்? நீதி சந்தையில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் செயலாக மாறி வரும்பொழுது கடவுளின் நீதிக்கு பூமியில் இடமேது? முதலாவது கடவுளையும் அரசையும் நீதியையும் தேடுவோம். மற்றவை யாவும் எல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் என்று இயேசு கூறியிருக்கிறார். நாம் அவருடைய தீர்ப்புக்குக் காத்திருப்போம். அவருக்கு உண்மையான சாட்சிகளாய் வாழ்வோம். நம் குற்றங்களை தம்மீது ஏற்றவர் அவர். நமது நியாயமான வேண்டுதல்களையும் ஏக்கங்களையும் ஏற்று சாதகமான தீர்ப்பைத் தருவார். நியாயத் தீர்ப்பு நாளில் நாம் மகிழ்ந்திட கடவுள் நம்மை நடத்துவார்.

உலகத்தை ஆளுகிற கடவுளே! கடைசி நாளில் உம் நேசகுமாரன் எங்களை நியாயம் விசாரிக்கும் போது குற்றமற்றவர்களாக காணப்பட்டு நித்திய வாழ்வில் பிரவேசிக்க அருள் செய்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

அநியாயமான தீர்ப்பு2020-03-17T09:10:22+00:00
Go to Top