அகசியா – கடவுளை மறந்த அரசன்
2 இராஜாக்கள் 1 : 1-17 23 ஜூலை, 2020 வியாழன்
“பாகாலைச் சேவித்து, அவனைத் தொழுது கொண்டு… கர்த்தருக்குக் கோபமூட்டி வந்தான்.” – 1 இராஜாக்கள் 22 : 53
சமூகத்தில் பல வழிகளில் நஷ்டம் அடைந்தவர்கள் ஏராளம், ஷேர் மார்க்கெட் பணம் கட்டி நஷ்டம் அடைந்தவர்கள், அரச வேலைக்காக ஏஜன்ட்டிடம் பணம் கட்டி நஷ்டம், தொழிலில் நஷ்டப்பட்டவர்கள் … பட்டியல் தொடர்கின்றது. ஆனால் நஷ்டமடைதல் கடவுளை விட்டு விலகக் காரணமாகலாமா?
கடவுளை மறந்த, கப்பல் கட்டும் தொழிலில் நஷ்டம் அடைந்த அரசன் அகசியா பற்றி இன்றைக்குக் காண்போம். மோவாபியர் அகசியாவிற்கு விரோதமாகக் கலகம் பண்ணினார்கள். இவன் யூதாவின் அரசன் யோசபாத்துடன் சேர்ந்து கொண்டான். இருவரும் தர்ஷீசுக்குச் செல்லும் கப்பல்களைச் செய்வதற்கு ஈடுபட்டவர்கள். அப்போது மரேஷா ஊரானாகிய எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, நீ அகசியாவோடு சேர்ந்துகொண்டபடியினால் நீர் செய்தவைகளை கடவுள் அதமாக்கினார் என்றாள். இருவரும் தர்ஷீசுக்கு செல்ல செய்த கப்பல்கள் உடைந்துபோயின. அகசியா சமாரியாவிலிருந்த தன் வீட்டின் மேல் மெத்தையிலிருந்து பால்கனி வழியாய் விழுந்து வியாதிப்பட்டான். பிழைப்பானோ என்று பாகால் செபூபினிடம் விசாரிக்க ஆள் போயிற்று. எலியா அவர்களுக்கு எதிர்பட்டு, இஸ்ரவேலில் கடவுள் இல்லையென்றோ நீங்கள் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செபூனிடம் விசாரிக்கப் போகிறீர்கள்? இப்படிச் செய்ததினிமித்தம் அகசியா சாவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களுக்குச் சொல் என்றான். எலியாவின் வார்த்தைகள் அகசியாவிற்கு சொல்லப்பட்டது. இதைக் கேட்ட அகசியா எலியாவை கைது செய்ய ஆட்களை அனுப்பி முயற்சி செய்தான். நடக்கவில்லை. கடைசியில் அகசியா இறந்து போனான்.
அகசியா தொழில் நஷ்டமடைந்தான் என்பதைவிட, தன்னை அமர்த்திய கடவுளை மறந்தான் என்பதே முக்கியமானது. நோயில் கிடந்த போதும் உண்மைக் கடவுளிடம் போகாமல் பாகால் தெய்வத்திடம் போனான் கடவுளின் கோபத்துக்கு ஆளானான். கடவுளின் கோபத்தினால் அழிந்தும் போனான்.
எதைச் செய்தாலும் கடவுளின் சித்தப்படி, அவரது துணையோடு செய்யுங்கள். லாபமும் நஷ்டமும் வாழ்வின் அங்கங்களே. நாம் உண்மைத் தெய்வத்தில் நிலைத்திருக்கும்போது நஷ்டங்களைச்சந்திக்கும் தைரியத்தையுத் பலத்தையும் அவரே தருகிறார். நம்பிக்கையோடு ஆண்டவரில் சார்ந்திருப்போம்.
அன்பின் கடவுளே, உம்மை நம்பி, எப்போதும் உம்மை விட்டு விலகாமல் இருந்து உம் வழி நடத்துதலுக்கு எங்களை அர்ப்பணித்து வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
