vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

அகீயா- மக்கள் மேல் மனித நேயம்

1 சாமுவேல் 21 : 1-9                                     12 ஆகஸ்ட், 2020 புதன்

“ஆசாரியன் தாவீதினிடம்: பரிசுத்த அப்பம் இருக்கிறதேயொழிய சாதாரண அப்பம் என்னிடம் இல்லை.” – 1 சாமுவேல் 21 : 4

இந்தியாவில் உணவற்றவர்கள், அதிக ஏழைகள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். பசித்த ஏழைக்கு கஞ்சியே பிரியாணி போன்றது. உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடு என்று இயேசு நமக்கு கூறுகின்றார்.

இன்றைய தியான பகுதியில் அகியா பரிசுத்த அப்பத்தை பசியோடு வரும் தாவீதிடம் கொடுத்து மனித நேயத்தோடு நடந்துகொண்டதை அறிந்துக் கொள்கின்றோம். அகியா என்ற பெயருக்கு `கர்த்தரின் சகோதரன்’ என்று பொருள். இவர் சவுல் அரசனின் காலத்தில் இருந்த பிரதான ஆசாரியன். சீலோவில் கர்த்தரின் ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரன் பீனெகாசுக்குப் பிறந்த ஈகா போத்தின் சகோதரனான அகீதூபின் குமாரன் அகியா. இவனுக்கு அசீமேலக் என்ற பெயரும் உண்டு.

ஏபோத்து என்பது பாரம்பரியப் பெரிய குரு அணிந்து கொள்ளும் ஆடையாகும். பொன்நூல், இளநீலம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல் முதலியவற்றால் நெய்யப்படும் விலைமதிப்பு மிக்க, இரு புயங்களிலிருந்து தொங்கும் இந்த அங்கியை ஏபோத்து அணிந்திருந்தார். அகீயா சவுலின் சேனையோடு போய் கடவுளின் சித்தத்தை அறிவித்தவன். தாவீது ஆசாரியனாகிய அசீமலேக்கிடம் தனியாக போனான். ஆசாரியன் ஏன் தனிமையில் வந்துள்ளீர் என கேட்டார். நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னார். மேலும் தாவீது அவரிடம் உம்மிடத்தில் ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும் இருப்பதை எனக்குக் கொடும் என்றான். ஆசாரியன் தாவீதினிடம் பரிசுத்த அப்பம் இருக்கிறதேயொழிய சாதாரண அப்பம் என்னிடம் இல்லை என்றார். பின்பு அசீமேலக் பரிசுத்த அப்பங்களை தாவீதினிடம் கொடுத்தான். மீண்டும் தாவீது அசீமேலேக்கிடம் இங்கே உமது வசம் ஒரு ஈட்டியாகிலும், பட்டயமானாலும் இல்லையா? அவசரமாக வந்ததினால் ஆயுதம் கொண்டு வரவில்லை என்றார். அதற்கு அசீமேலேக் நீர் கொன்ற கோலியாத்தின் பட்டயம் இருக்கிறது. எடுத்துக்கொள்ளும் என்றான். அசீமேலேக் தாவீதுக்கு கடவுளின் சமூக அப்பத்தை கொடுத்ததினாலும் கோலியாத்தின் பட்டயத்தை கொடுத்ததினாலும் சவுல் இவனையும் இவன் இனத்தார் யாவரையும் கொன்று போட்டான்.

பிரியமானவர்களே, இன்று பசியினால் தவிக்கும் மக்கள் ஏராளம். பசியின் கொடுமையினால் இறக்கிறவர்கள் அதிகம். ஆனால் கடவுள் ஏழை மக்களின் பசியை போக்கக் கூடியவராக இருக்கிறார். இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க கூறுகின்றார். கொடுக்க கற்றுக் கொள்வோம். ஏழைகளின் பசி போக்குவோம்.

அன்பின் ஆண்டவரே! ஏழை மக்களின் பசி போக்கும் தந்தையே. நாங்களும் தேவையுள்ள மக்களுக்கு பசியாற்ற உதவிகரம் நீட்ட பெலன் தாரும். எங்களுக்குள்ளதை பகிர்ந்து, மனித நேயத்துடன் வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

அகீயா- மக்கள் மேல் மனித நேயம்2020-08-10T10:23:45+00:00

யாவீர் – பிள்ளைகளிடம் ஒரே மாதிரி அன்புகாட்டியவர்

நீதிமொழிகள் 4 : 1-4                             11 ஆகஸ்ட், 2020 செவ்வாய்

“யாவீர்…இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். அவனுக்கு முப்பது குமாரர் இருந்தார்கள்.” – நியாயாதிபதிகள் 10 : 3

பல குடும்பங்களில் பிள்ளைகளிடையே பிரச்சனை தோன்றுவதற்கு பெற்றோரே ஒரு விதத்தில் காரணமாக அமைகின்றனர். ஒரு பிள்ளையை வெறுப்பதும் இன்னொரு பிள்ளையை அளவுக்கு அதிகமாக கொஞ்சுவதும் அவர்களுக்கிடையே பொறாமையை பகையை வளர்த்து விடுகிறது. திருமறையில் யாக்கோபு என்பவரை குறித்து வாசிக்கிறோம். அவர் தம் குமாரரில் யோசேப்பிடம் அதிகமாக அன்பு கூர்ந்ததால் பிற பிள்ளைகள் யோசேப்பை பகைக்கிற நிலை ஏற்பட்டது.

யாவீர் இஸ்ரவேலில் பல வருடங்கள் நியாயாதிபதியாக இருந்தவர். தன் வீட்டிலும் பிள்ளைகள் மேல் அதிக கவனம் செலுத்தினார். ஒன்றல்ல இரண்டல்ல முப்பது பிள்ளைகளையும் ஒன்று போல நேசித்தார். அனைவருக்கும் ஒரே மாதிரியான வாகனமாக கழுதையை கொடுத்திருந்தார். முப்பது பேரும் சென்றுவர முப்பது ஊர்களை ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஊர் என்று சொல்லாமல் முப்பது ஊர்களும் முப்பது பேருக்கும் சொந்தமானது என்ற எண்ணத்தை உருவாக்கி இருந்தார்.

இதை ஒரு கூட்டுத் தலைமை என்றும் கூறலாம். யாரும் தாழவோ, உயரவோ செய்யாமல் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் நிலை இதில் ஏற்படுகிறது. தாங்கள் சென்ற வந்த இந்த முப்பது ஊர்களையு¹ம் தங்கள் தந்தை பெயரிலேயே யாவீர் பட்டி என்று அவர்கள் அழைத்துக் கொண்டனர். இது அவர்கள் குடும்ப நல்லுறவை வெளிப்படுத்துகிறது.

நம்மில் ஒருவர் ஒரு சிறிய அதிகாரத்தில் ஒருவர் வந்தாலும் அவர் பிள்ளைகள் செய்யும் அடாவடித்தனம் சொல்லி முடியாது. இவர்கள் யாவீரின் பிள்ளைகளைப் பார்த்து படிக்க வேண்டும். அதிகாரம், பதவி வரும் போகும். ஆனால் அன்பு தாழ்மை என்றும் நிலைக்கும். மனதை விட்டு நீங்காத நல்ல பெற்றோராக, தலைவராக நாம் வாழ கடவுள் அனுக்கிரகம் செய்வாராக.

கிருபையுள்ள கர்த்தரே! உமதன்பினால் ஆட்கொள்ளப்பட்ட நாங்கள் அந்த அன்பை குடும்பத்திலும் சமூகத்திலும் காட்ட உதவி செய்யும். அதிகார தோரணைணை எங்களை விட்டகற்றும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யாவீர் – பிள்ளைகளிடம் ஒரே மாதிரி அன்புகாட்டியவர்2020-08-10T10:21:30+00:00

அபிமலேக்கு – வினை விதைத்தவர்

சங்கீதம் 7 : 14-17                          31 ஜூலை, 2020 வெள்ளி

“ஒரு ஸ்திரீ ஒரு எந்திரத்து மேற்கல்லை அபிமலேக்கின் தலைமேல் போட அது அவர் மண்டையை உடைத்தது.” – நியாயாதிபதிகள் 9 : 53

தினை விதைத்தவன் தினையை அறுப்பான் வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பது பழமொழி. வாழ்வில் பெரும்பகுதியை அக்கிரமங்களிலும் பிறரை அழிப்பதிலும் செயல்பட்ட அபிமலேக்கு என்பவர் அழிந்து போனதை குறித்து இத்தியானம் விளக்குகிறது.

இஸ்ரவேலில் கிதியோன் என்ற நியாயாதிபதி மகத்தானவர். நற்பண்புகள் நிறைந்தவர். இவருடைய ஒரு மகன் தான் அபிமலேக்கு. தானோ தன் குடும்பத்தாரோ அரசனாக இருக்க மாட்டார்கள் என்று கிதியோன் வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அபிமலேக்கு தன் கவர்ச்சியான பேச்சினால் தன்னை ஒரு தலைவனாக்கிக் கொண்டு அரசனானார். மூன்று வருடம் கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். மக்கள் பொறுத்து பார்த்து பின்னர் பொங்கி எழுந்தனர். தன்னை எதிர்த்தவர்களை ஊர் ஊராக சென்று அபிமலேக்கு அழித்தார். அப்படி ஒரு ஊரை அழிக்க அவ்வூரை நெறுங்கியபோது, அவ்வூர் மதிலிலிருந்து ஒரு பெண் பெரிய எந்திரக்கல்லைத் தூக்கிப் போட அது அபிமலேக்கின் மண்டையை உடைத்தது, அவர் கொல்லப்பட்டார்.

ஒரு தலைவன் எப்படி இருக்கக் கூடாதோ அதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருக்கலாம். ஆனால் தீமையை மாத்திரமே செய்து வந்த அபிமலேக்கு அதே மாதிரியான தீமையினால் அழிந்து போனார்.

எதற்கும் ஒரு முடிவு. உண்டு எல்லை உண்டு. நம்மை யார் தடுப்பார் என்ற எண்ணத்தில் நாம் தீமை செய்யாதிருப்போம். கடவுள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். அவர் கோபத்திற்கு நம்மால் தப்ப இயலாது. நன்மை செய்ய பழகுவோம். தீமையை விட்டு விலகுவோம். இயேசுவின் நற்பண்புகளை பற்றிக் கொள்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! இரக்கமின்றி அக்கிரமங்களை செய்யும் எங்களை நல் வழிப்படுத்தும். உமதன்பினால் எங்களை ஆட்கொண்டு பிறர் வாழ உதவும் நற்பண்புகளை எங்களில் உருவாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.

அபிமலேக்கு – வினை விதைத்தவர்2020-07-15T08:39:03+00:00

யோவாகாஸ் – கடவுளைப் பற்றிக்கொண்ட அரசன்

2 இராஜாக்கள் 13 : 1-10                             30 ஜூலை, 2020 வியாழன்

“யோவாகாஸ் கர்த்தரை நோக்கி கெஞ்சினான்,… அவனுக்குச் செவி சாய்த்தார்.” – 2 இராஜாக்கள் 13 : 4

`இறைவனை சிக்கென பிடித்தேன்’ என்பது வள்ளலாரின் வரிகள். துன்பம், கஷ்டம் வரும்போது மனிதர் நமக்கு உதவினாலும் இறைவனின் உதவிதான் நமக்கு தேவை. இறைவனின் வழியாகவே மனித உதவிகள் நமக்கு வரும். இறைவனை பற்றிக் கொள்வோர். பாதுகாக்கப்படுவார் என்பது உண்மை.

யோவாகாஸ் துன்பத்தின் மத்தியில் இறைவனிடம் கெஞ்சி பாதுகாப்பை பெற்றதை தியானப்பகுதியில் காண முடிகின்றது. கி.மு. 815-801 இல் இஸ்ரவேலை அரசாண்ட 11 வது அரசன். யோவாகாஸ் கடவுளின் பார்வையில் தீமையானதை செய்தார், அதிலும் தன் முன்னோரைப் பின்பற்றினார். இது இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவரை அசீரியர் கையில் ஒப்படைத்தார். இஸ்ரவேல் நாடு ஒரு அடிமை நாடாக மாறியது. யோவாகாஸ், அந்நாட்களில் கர்த்தரை நோக்கிக் கெஞ்சினான். சீரியாவின் அரசன் இஸ்ரவேலை ஒடுக்கி அவர்களுக்கு வருவித்த உபத்திரவத்தை கர்த்தர் கண்டு அவனுக்குச் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு இரட்சகனை அனுப்பினார். அவர்கள் சீரியரின் கையின் கீழிருந்து நீங்கினார்கள்.

கடவுளின் அருளை கெஞ்சி பெற்றாலும் மக்கள் முந்திய பாவங்களிலே நிலைத்திருந்தார்கள். அசீரியா அரசன் அவர்களை அழித்துப் போரடிக்கும் களத்தின் தூசிபோல் ஆக்கியிருந்தான். தாங்கள் செய்த பாவத்தினால் இஸ்ரவேல் முழுவதும் அழிக்கப்பட்டது.

கடவுளின் அருள் கிடைக்கும் போது அதை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை முறையை மாற்றி தூய்மையுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதை இஸ்ரவேலர் மறந்து போனார்கள். தண்டனை அனுபவித்தார்கள். நம்முடைய வாழ்விலும் கடவுள் கொடுக்கும் வாய்ப்புகளை நேர்த்தியான முறையில் பயன்படுத்துவோம். மகிழ்ச்சியோடு வாழுவோம். நாம் அழிவுக்குரியவர்கள் அல்ல, அடிமைக்குரியவர்களும் இல்லை கடவுளுக்குரியவர்கள். மறக்காமல் அவருடையவர்களாக வாழ்வோம். கடவுள் இயேசுவில் நம்மை மீட்டு சுதந்திரராக நித்திய வாழ்வுக்கு சொந்தக்காரர்களாக மாற்றியிருக்கிறார். கடவுளில் மகிழ்ச்சியோடு வாழுவோம்.

கடவுளே, நாங்கள் எங்களை திருத்திக் கொண்டு வாழ வாய்ப்பு கிடைக்கும் போது அதை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வை, சுயாதீனமாக வாழ பெலன் தாரும். சாத்தானுக்கு அடிமையாகாதபடி காத்துக் கொள்ளும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

யோவாகாஸ் – கடவுளைப் பற்றிக்கொண்ட அரசன்2020-07-15T08:36:32+00:00

எசேக்கியா – கடவுளைச் சார்ந்திருந்த அரசன்

2 இராஜாக்கள் 18 : 1-16                                 28 ஜூலை, 2020 செவ்வாய்

“எசேக்கியா… தன் கடவுளாகிய கர்த்தருடைய பார்வையில்… உண்மையுமானதைச் செய்து வந்தான்.” – 2 நாளாகமம் 31 : 20

தான் செய்த காரியங்களினால் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த அரசன் எசேக்கியாவை பற்றி இன்று காண்போம்.

ஆகாஸ் அரசனின் மகன். யூதாவின் பன்னிரெண்டாம் அரசன். எசேக்கியா தன் ஆளுகையின் ஆரம்பத்திலேயே ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, பழுது பார்த்து, சுத்திகரித்து, ஜனங்கள் கர்த்தரிடம் திரும்பவும், அவரை உண்மையாக சேவிக்கவும் உடன்படிக்கை செய்யும்படி செய்தான். எருசலேமில் பஸ்கா பண்டிகை ஆசரிப்புக்காக, யூதா இஸ்ரவேல் ஜனங்களையும், எப்பிராயீம், மனாசே கோத்திரத்தாரையும் அழைத்தான். சாலமோனின் நாட்களுக்குப் பின்பு இப்படிப்பட்ட ஒரு பண்டிகை நடந்ததில்லை. எசேக்கியா அநேக சமய சீர்த்திருத்தங்களைச் செய்தனர். மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மோசே செய்த வெண்கல சர்ப்பத்தையும் உடைத்தார். ஒரு குளம் வெட்டி தண்ணீர் நகரத்துக்குள் வரும்படிச் செய்தார். ஆசாரியர், லேவியருடைய வகுப்புகளை உறுதிபடுத்தி அவர்கள் தங்கள் ஊழியத்தைச் செய்து, துதித்து கடவுளை தோத்தரிக்கவும் ஏற்படுத்தினான். எசேக்கியா கடவுளுக்கு முன்பாக நன்மையும், செம்மையுமானதைத் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்தி பெற்றார்.

ஒருசமயம் எசேக்கியா மிகவும் சுகமில்லாமல் இருக்கையில் கடவுளை நோக்கி வேண்டிக் கொண்டார். கடவுள் ஏசாயாவை அனுப்பி அவரை குணமாக்கினார். அவருடைய ஆயுளையும் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியா கடவுளை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்தார். எசேக்கியா தன்நலம் கருதாமல், மக்கள் நல்ல நிலையில் கடவுளை சார்ந்து வாழவேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழிகளை செய்தார். கடவுள் வாழும் இடமாகிய ஆலயத்தை சுத்திகரித்து சீர்திருத்தம் செய்து கடவுளின் கட்டளைகளை ஏற்று அவரை சார்ந்து வாழ உடன்படிக்கை செய்தார். தான் நோய்வாய் பட்டபோது கடவுளிடம் விண்ணப்பம் செய்து சுகம் பெற்றார். பதினைந்து வருடங்கள் நீடித்த வாழ்வைப் பெற்றுக் கொண்டார்.

நாமும் மாறாத நம்பிக்கையில் அவரை சார்ந்து வாழக் கற்றுக் கொள்ளுவோம். அவர் நம்மை படைத்து, மீட்டு வாழ்விக்கின்றவர். அவருடைய பிள்ளைகளாக அவரில் நிலைத்து வாழ்வோம். நிறைவான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

அன்பின் கடவுளே, உம்மில் நிலைத்து உம் கற்பனைகளை கைக்கொண்டு, உண்மையோடு, உம்மில் நிலைத்து வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

எசேக்கியா – கடவுளைச் சார்ந்திருந்த அரசன்2020-07-15T08:32:25+00:00

யோசியா – சீர்திருத்தம் செய்த அரசன்

2 இராஜாக்கள் 23 : 1-14                               29 ஜூலை, 2020 புதன்

“கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்து தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம்… நடந்தான்.” – 2 இராஜாக்கள் 22 : 2

பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், வாழும்போது ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். “பிறந்தது நிகழ்வாக இருந்தாலும், வாழ்வது வரலாறாகட்டும்” என்பார்கள்.

சீர்திருத்தம் செய்து கடவுளின் பார்வையிலும், மக்களின் மனதிலும் இடம்பிடித்த அரசன் யோசியாவை பற்றி இன்று பார்ப்போம். இவர் யூதாவின் அரசன், எதிதாளின் மகன். இவர் தன் இராஜ்யபாரத்தில் எட்டாம் வருடம் கடவுளை தேட ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வருடத்தில் மேடைகள், விக்கிரகங்களை அற்றுப் போகும்படி செய்தார். பதினெட்டாம் வருடத்தில் ஆலயத்தை சுத்திகரித்தபோது, ஆசாரியனாகிய இல்க்கியா நியாயப்பிரமாணப் புத்தகத்தைக் கண்டெடுத்தான். இது உபாகமப் புத்தகமாயிருக்கலாம். அதை வாசித்தவுடனே அரசனுக்கும், மக்களுக்கும் குற்றவுணர்ச்சி உண்டானதினிமித்தம், எல்லாரும் அதில் சொல்லப்பட்டவைகளைக் கைக் கொள்ளும்படி உடன்படிக்கை செய்தார்கள். பின்பு யோசியா கர்த்தருக்கு பஸ்காவை ஆசரிக்கும்படி சகல மக்களுக்கும் கட்டளையிட்டான். அதற்கு முன்னும், பின்னும் நடவாதவிதமாய், எருசலேமில் யோசியாவின் காலத்தில் இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது.

யோசியாவைப் போன்ற அரசன் அவனுக்கு முன்னிருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதும் இல்லை. யோசியா செய்த சீர்திருத்தங்கள்… இன்றும் நினைக்கப்படுகின்றன. கடவுள் பயத்தோடு தான் எடுத்துக்கொண்ட அரசப்பணியை சிறப்பாக நேர்மையாக செய்தார். நியாயப்பிரமானத்தை கண்டு அதில் சொல்லப்பட்டவைகளை மக்கள் கேட்க வாசிக்க செய்தார். அன்னிய தெய்வ பலிபீடங்களையும், மேடைகளையும் இடித்துப் போட்டார். அவர் ஆலயத்தில் செய்த சீர்திருத்தங்கள் இன்றும் பேசப்படுகின்றன. தனக்கு கொடுக்கப்பட்ட அரசுரிமையை சரியான முறையில் பயன்படுத்தி நல்லாட்சி செய்தவர் யோசியா.

ஆண்டவர் உங்களை எப்படிப்பட்ட பொறுப்பில் நிலையில் வைத்திருக்கிறார்? உங்கள் வேலைகளை கடவுளின் திட்டப்படி செய்கிறீர்களா? கடவுளின் சித்தப்படி செயல்படும் யாருக்கும் எதிர்ப்புகள் வருவது இயல்பே. ஆனால் அவற்றை எதிர்கொள்ள நமக்கு பலம் தருகிறவர் நமது ஆண்டவர் இயேசுவே. வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு யோசியாவின் வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு. கடவுளில் நிலைத்திருப்போம். நலமானதை செய்வோம். கடவுளுக்கு ஏற்புடைய மக்களாக வாழ்வோம்.

கடவுளே! உமது பாதையை விட்டு விலகாமல் நீர் காண்பிக்கிற பாதையில் நற்காரியங்களை பயனுள்ளதாக செய்து, உமது பார்வையில் நேர்மையாக வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யோசியா – சீர்திருத்தம் செய்த அரசன்2020-07-15T08:34:49+00:00

ஆகாஸ் – மகனை அக்கினியில் போட்ட அரசன்

2 இராஜாக்கள் 16 : 1-14                               27 ஜூலை, 2020 திங்கள்

“கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாகத் துரத்தின … படியே தன் குமாரனை முதலாய் அக்கினியிலிட்டான்.” – 2 இராஜாக்கள் 16 : 3

மிருகங்களை பலியிட தடைசெய்யப்பட்ட காலத்திலும்கூட நரபலிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தொழில் சிறக்க, செல்வம் பெருக, குடும்பம் செழிக்க நரபலி கொடுக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

இன்றைக்கு தன் மகனை அக்கினியிலிட்ட அரசன் ஆகாஸ் பற்றி காண்போம். இவன் யூதாவின் அரசனாசிய யோதாமின் மகன். ஆகாஸ் பாகால்களுக்கு விக்கிரகங்களைச் செய்து பலியிட்டு, தன் குமாரரை அக்கினியில் போட்டான். தன்னுடைய மேல் வீட்டில் வான சேனைகளுக்குப் பலிபீடங்களைக் கட்டினான். ஆகாஸ் இஸ்ரவேலுக்கும், அசீரியாவுக்கும் விரோதமாக, ஏசாயாவின் ஆலோசனையைக் கேளாமல், ஆகீரியா அரசனின் உதவியைத் தேடி செல்வங்களையும், வெள்ளியையும், பொன்னையும் காணிக்கையாக அனுப்பினான். இதினால் யூதா அசீரியாவுக்குக் கீழ்ப்பட்டது. ஆகாஸ் திகியாத்பிலேகனைச் சந்தித்து தமஸ்குவுக்கு சென்று திறை கொடுக்கப் போனபோது அங்கு பலிபீடங்களைக்கண்டான். அதைப்போலவே எருசலேமிலே பலிபீடங்களைச் செய்யும்படி ஆசாரியனாகிய உரியாவிடம் கட்டளையிட்டான். புதிய பலிபீடத்தில் ஆகாஸ் பலி செலுத்தினான். இந்த காரியங்களினால் கடவுள் ஆகாசை சீரிய அரசனின் கையில் ஒப்புக் கொடுத்தார். ஆனாலும் ஒதேத் என்னும் ஒரு தீர்க்கதரிசி முன் வந்து அவர்களைத் திரும்ப அனுப்பும்படி செய்தான். சீரியரும், எப்பிராயீமியரும் யூதாவுக்கு விரோதமாய்ச் சேர்ந்துக் கொண்டார்களென்று ஆகாஸ் கேள்விப்பட்ட போது, அவன் இதயம் கலங்கினது. கடவுளின் சொற்படி ஏசாயா அவனிடம் போய் அவனைத் தைரியப்படுத்தி கடவுளிடத்தில் ஓர் அடையாளத்தைக் கேட்கும்படி சொன்னான். அவன் கேட்கமாட்டேன் என்றபோது ஏசாயா தீர்க்கர் இம்மானுவேலைப்பற்றிய பேர் பெற்ற தீர்க்க தரிசனைத்தை உரைத்தான்.

நம்முடைய பாவங்களுக்காக தன்னையே சிலுவையில் பலியாக்கியவர் இயேசு. நாம் எந்தவித பலியையும் நமது மீட்பிற்காக செய்ய வேண்டியது இல்லை. நம்மை மீட்ட ஆண்டவரை நேசிப்பதும் நன்றியோடு அவரில் சார்ந்து வாழ்ந்திருப்பதுமே நமது கடமை. இதை மறந்துவிடாதிருப்போம். இயேசுவில் விசுவாசம் வைப்போம். அழியாத நிலை வாழ்வைப் பெறுவோம்.

இம்மானுவேலராக குமாரனைத் தந்த அன்பின் கடவுளே! இயேசுவில் உம்மைக் கண்டு உண்மைக் கடவுளாகிய உம்மை மட்டும் வணங்கி, வழிபட்டு வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

ஆகாஸ் – மகனை அக்கினியில் போட்ட அரசன்2020-07-15T08:30:46+00:00

உசியா – தொழுநோயாளியான அரசன்

2 நாளாகமம் 1 : 4-23                                     26 ஜூலை, 2020 ஞாயிறு

“கடவுளுக்குப் பயப்படுகிற பயத்தைப் போதித்து வந்த சகரியாவின் நாட்களிலே கடவுளைத் தேடிவந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாளெல்லாம் கடவுள் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.” – 2 நாளாகமம் 26 : 5

பழைய ஏற்பாட்டின் காலத்தில் தொழுநோய் ஒரு தீட்டான நோய். நோயாளிகள் சமூகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் பிரிந்து ஊருக்கு வெளியே கூட்டமாக வாழ்ந்து வந்தனர். இன்றைக்கு தொழுநோய் ஒழிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தியான பகுதியில் தொழுநோய் பிடித்த அரசன் உசியாவைப் பற்றி பார்ப்போம். இவனுடைய மறுபெயர் அசரியா. அமத்கியா கொல்லப்பட்டபோது, யூதா ஜனங்கள் பதினாறு வயதுள்ள, அவன் மகனாகிய உசியாவை அரசனாக்கினார்கள். உசியா ஏலாதைக் கட்டி யூதாவின் வசமாக்கினான். அவன் ஐம்பத்திரண்டு வருடம் எருசலேமில் அரசாண்டான். அவன் தாயின் பேர் எக்கோலியாள், அவள் எருசலேம் நகரத்தாள். அகன் தகப்பன் அமத்கியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்து வந்தான்.

உசியாவிடம் மூன்று லட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேர் அடங்கிய படை இருந்தது. கோபுரங்கள் மேலும், அலங்கக் கோடிகள் மேலும் நின்று அம்புகளையும், பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு மிகவும் சாமர்த்தியமாய் அமைந்த இயந்திரங்களையும் எருசலேமில் செய்தான்.

உசியாவின் புகழ் வெகுதூரம் பரவிற்று. அவன் பலமடைந்தான். அவன் மனம் கர்வங்கொண்டது. அவன் கேடானவைகளைச் செய்து தன் கடவுளாகிய கர்த்தருக்குத் துரோகம் பண்ணினான். அவன் தூப பீடத்தின் மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். அது ஆசாரியனின் வேலை. ஆசாரியனாகிய அசாரி இதை எதிர்த்தார். எச்சரித்தார். உசியா கையில் தூபக்கலத்தோடு, ஆசாரியர் மீது கடுங்கோபம் கொண்டவனாய் நிற்கும்போதே அவன் நெற்றியில் தொழுநோய் துவங்கியது. பின்பு தொழுநோயாளியாகவே தனித்து ஒரு வீட்டில் வாசம் பண்ணி வந்தான். தொழுநோயாளியாகவே இறந்தான்.

கடவுள் நம்மை கிருபையாக உயர்த்துகிறார். இதை நாம் மறந்து விடக்கூடாது. உழைப்பால், செல்வத்தால் உயர்வடையும் போது உயர்த்துகின்ற கடவுளை மறந்து தலைகர்வம் கொள்ளுதல் அழிவை கொண்டு வரும். கடவுளின் பரிசுத்த இடங்களில் பாவத்தை உணருகிறவர்களாக தாழ்மையுள்ளவர்களாக நமக்கு கடவுள் தருகின்ற பணியை பணிவோடு கடவுள் பயத்தோடு செய்வோம்.

கடவுளே, உம் பரிசுத்த பிரசன்னத்தை உணர்ந்து எங்கள் பொறுப்புகளை மட்டும் செய்யவும், உம் பரிசுத்தத்தைக் குலைத்து போடாமல் நீர் விரும்பும் வாழ்க்கை வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.

உசியா – தொழுநோயாளியான அரசன்2020-07-15T08:28:32+00:00

அத்தாலியாள் கொலைபாதகப் பெண்

2 இராஜாக்கள் 8 : 25-29                                    25 ஜூலை, 2020 சனி

“அத்தாலியாள் என்னும் தெயவபயமற்ற ஸ்திரீயின் மக்கள்….” – 2 நாளாகமம் 24 : 7

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்பது பழமொழி. பெற்றோர்களிடம் காணப்படும் குணங்கள் அப்படியே பிள்ளைகளிடம் வெளிப்படும். நாம் நமது குணங்களினால் பாராட்டப்படுகிறோம். அல்லது இகழப்படுகின்றோம். நல்ல பண்புகளை காட்டும் போது பாராட்டு கிடைக்கிறது. தீய பண்புகளை வெளிப்படுத்தும் போது அவப்பெயர் பெறுகின்றோம்.

தன் பெற்றோர்களின் தீயகுணங்களை, வெளிப்படுத்திய அத்தாலியாள் பற்றி இன்றைக்குக் காண்போம். இஸ்ரவேலன் அரசனாகிய ஆகாப், யேசவேல் என்பவர்களின் மகள் அத்தாலியாள். யூதா அரசனாகிய யோராம் இவளை விவாகம் செய்தான். இவளுடைய தாயாகிய யேசபேலிலிருந்த தீய குணங்கள் இவளிலும் காணப்பட்டது.
யோராம் மரித்தபோது அவனுடைய மகன் அகசியா அரசனானான். ஒரு வருடத்தில் யெகூ அகசியாவைக் கொன்றான். அப்பொழுது அத்தாலியாள் இராஜவம்சத்தாராகிய தன் பேரப்பிள்ளைகளைக் கொன்று விட்டு, தானே ஆட்சியை எடுத்துக் கொண்டாள். யோராமின் குமாரர் கொல்லப்பட்டபோது அவனுடைய இளையமகனாகிய யோவாசை, யோராமின் சகோதரியாகிய யோசேபியாத் தப்பவைத்தாள். யோவாஸ் ஆறு வருஷமாகக் கடவுளின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தான்.

அத்தாலியாள் பாகால் வழிபாடு உச்சநிலை அடைய காரணமாக விளங்கினாள். அவளது வெட்கம்கெட்ட தாயைப் போல் மிகுந்த செல்வாக்கு செலுத்தினாள். இரத்த வெறியோடு 6 ஆண்டுகள் ஆண்டாள். பாகாலின் பெயரால் ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கினாள். யோவாஸ் தன் அரசிக்கு எதிராக கலகம் செய்தார். பின்பு ஆலயத்திலிருந்தவர்கள் முன் யூதாவின் அரசனாக யோவாசு முடி சூட்டி கொண்டார். இதை அறிந்த அரசியாகிய அத்தாலியா அதை அடக்க முயன்றாள். போர் வீரர்கள் முன் தான் ஒன்றும் செய்ய இயலாமையை அறிந்து தப்பியோட முயன்றபோது கொல்லப்பட்டாள். இதனால் எருசலேமில் பாகால் வழிபாடு முடிவுக்கு வந்தது.

பிறக்கும்போதே யாரும் கெட்டவர்களாகப் பிறப்பதில்லை. சூழலும் வளர்ப்பு முறையுமே மனிதர்களை உருவாக்குகிறது. சந்தர்ப்ப சூழலால் தவறான குணங்களோடு சிலர் உருவாகிவிடும்போது நாம் அவர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. அவர்களையும் ஆண்டவர் இயேசு நேசிக்கிறார். அவர்கள் மனந்திரும்பக் காத்திருக்கிறார். அவர்களுக்கும் இயேசுவின் அன்பைச் சொல்லுவது நம் கடமையே. ஆனால் இந்த முயற்சியில் நாமும் அவர்களுடைய வழிக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுவது சிறப்பு. கடவுள் பயத்தோடு திருமறை கற்பிக்கும் குணங்களை கைக்கொண்டு வாழ்வோம்.

கடவுளே, தூய்மையான குணத்தை வெளிப்படுத்தி, தீய குணங்களை விட்டு வாழ எங்களுக்கு பெலன் தாரும். கடவுளின் நாமம் மகிமைப்படுத்தும்படி வாழ வழி நடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அத்தாலியாள் கொலைபாதகப் பெண்2020-07-15T07:16:06+00:00

சிம்சோன் – கர்த்தரால் பலப்படுத்தப்பட்டவர்

நியாயாதிபதிகள் 16 : 25-31                  24 ஜூலை, 2020 வெள்ளி

“கர்த்தராகிய ஆண்டவரே!… இந்த ஒரு விசை மட்டும் என்னை நினைத்தருளும். என்னைப் பலப்படுத்தும்.” – நியாயாதிபதிகள் 16 : 28

இஸ்ரவேலர்களை பெலிஸ்தியர் நாற்பது ஆண்டு காலம் ஆண்டு வந்தனர். இக்காலகட்டத்தில் மனோவா என்பவருக்கு கடவுள் சிம்சோன் என்னும் குழந்தையைக் கொடுத்தார். குழந்தை பிறப்பிலிருந்தே கடவுளுக்குரியவன் என்ற கோட்பாட்டில் சவரக்கத்தி அவன் தலை மீது படாமல் நாசீராக வளர்க்கப்பட்டார். ஆண்டவரின் ஆவி சிம்சோனுடன் இருந்தது.

சிம்சோன் கடவுளின் ஆற்றலை அதிகமாக பெற்ற வீரனாக திகழ்ந்தான். தன்னை தாக்க வந்த சிங்கத்தின் வாயை பிளந்தான். யூதர்கள் தன்னை பிடித்து கட்டிய போது கட்டப்பட்ட கயிறுகள் நெருப்பில் சணலைப் போல் விழுந்தது. மேலும் ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றான்.

சிம்சோன் தெலிலா என்ற பெண்ணை விரும்பி நேசித்தான். பெலிஸ்திய சிற்றரசர்கள் சிம்சோனின் ஆற்றல் எதில் இருக்கிறது என்பதை கண்டறியும் பொறுப்பை தெலிலாவிடம் கொடுத்திருந்தனர். சவரக்கத்தி உடலில் தலையில் படக்கூடாது என்ற ரகசியத்தை தெலிலா அறிந்தாள். ஒருநாள் தெலிலா மடியிம் சிம்சோன் படுத்திருக்கும் போது, ஒரு ஆளை வைத்து சிம்சோன் தலையின் மயிர் கற்றைகளை மழித்துப்போட்டாள். அவன் கண்களும் பிடுங்கப்பட்டன. ஒரு நாள் சிம்சோன் ஒரு தெய்வீக விழாவில் வேடிக்கை காட்டுவதற்காக அழைக்கப்பட்டான். நாம் வேடிக்கை பார்க்கும்படி சிம்சோனைக் கூட்டி வாருங்கள் என்று சொல்லி கூட்டிவந்தார்கள். சிம்சோன் அவர்களுக்கு வேடிக்கையானான். கடவுளின் ஆற்றல் அவனைவிட்டு அகன்றுபோனதை உணராத சிம்சோன் இரு மிகப்பெரிய தூண்களின் நடுவில் நிறுத்தப்பட்டான். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்களும் பெண்களும் கூடி இருந்தனர். அப்போது சிம்சோன் கடவுளைத் தேடி வேண்டுதல் செய்தான். இந்த ஒரு முறை மட்டும் ஆற்றல் தாரும் என்று கடவுளிடம் வேண்டினார். கடவுள் வல்லமையைக் கொடுக்கவே, சிம்சோன் அந்த வீட்டை தாங்கி நின்ற இரு தூண்களையும் சாய்த்தான். வீட்டில் இருந்த அனைவரும் மாண்டனர்.

நமக்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? நமது பலம் கடவுளிடமிருந்து வருகிறது என்பதை அறிந்து நம்பி வாழ்வோம். நமது பலத்தை தவறாக உபயோகிக்காதிருப்போம். தூய ஆவியானவர் இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டு நம்மை ஆற்றல்படுத்தி வருகிறார். சிம்சோனைப் போல வல்லமையை கடவுளிடம் பெற்று வாழ்வோம்.

ஆற்றல் மிக்க கடவுளே! பலமிழந்து, பலகீனர்களாக வாழும் எங்களுக்கு உமது ஆவியின் பலத்தை தாரும். ஆற்றலைத் தாரும்! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.

சிம்சோன் – கர்த்தரால் பலப்படுத்தப்பட்டவர்2020-07-15T05:47:55+00:00
Go to Top