தாவீது -வெற்றி தரும் கடவுள்
2 சாமுவேல் 5 : 1-25 24 ஆகஸ்ட், 2020 திங்கள்
“போ! பெலிஸ்தியரை நிச்சயமாகவே உன் கையில் ஒப்புக் கொடுப்பேன்’ என்று தாவீதுக்குச் சொன்னார்.” – 2 சாமுவேல் 5 : 19
எந்த மனிதனும் தோல்வியை விரும்புவதில்லை. வெற்றியையே விரும்புகின்றனர். வெற்றியை நோக்கமாக கொண்டே நாம் செயல்படுகிறோம்.
இன்றைய தியான பகுதியில் கடவுளின் பெலத்தால் வெற்றி பெற்று வீரனாக, அரசனாக விளங்கிய தாவீதைப் பற்றி காண்போம்.
தாவீது, பெத்லகேமியனான ஈசாயின் குமாரன். யூதா கோத்திரத்தான். இவர் ஆடுகளை மேய்ப்பவராக இருந்தார். தாவீது தைரியசாலியும், வீரனும், சுரமண்டலம் என்ற இசைக்கருவியை வாசிப்பதில் தேறினவனாக இருந்தார். இப்படிப்பட்ட தாவீதை கடவுள் இஸ்ரவேலின் அரசனாக தெரிந்து கொண்டார். தாவீதுக்கு முன் அரசனாக இருந்த சவுல் கீழ்படியாததினால் கடவுள் நீக்கினார். பெலிஸ்தியர்க்கும், இஸ்ரவேலருக்குமிடையே யுத்தம் நடந்தது. போருக்குச் சென்றிருந்த தன் சகோதரரை காண தாவீது சென்றார். போர்களத்தில் கோலியாத் என்ற மாவீரன், தன்னோடு யுத்தம் செய்து தன்னை கொன்றால் தாங்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருப்போம் என்று இஸ்ரவேலரையும், இஸ்ரவேலின் கடவுளையும் இழிவாகப் பேசிக் கொண்டிருந்தான். தாவீது கவணினாலும், ஒரு கல்லினாலும் அந்தப் பெலிஸ்தியனை கடவுளின் பெயரினால் வெற்றிக் கொண்டர். தாவீது சவுலின் மகள் மீகாளை திருமணம் செய்தார். தாவீது புத்திமானாய் நடந்து கொண்டான். தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது. இதனிமித்தம் சவுல் தாவீதைக் கொன்றுபோட யோசித்தான். சவுலை அசுத்த ஆவி பிடித்தபோது தாவீது சுரமண்டலம் வாசித்துக் கொண்டிருக்கும்போது ஈட்டியால் அவனைக் குத்த முயற்சித்தான். பலமுறை கடவுள் தாவீதை பாதுகாத்தார். கடவுள் அவரோடு இருந்தார்.
தாவீது சவுலை கொல்ல வாய்ப்பு கிடைத்தும் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர் என்ற ஒரே காரணத்தினால் கொல்லாமல் விட்டார். தாவீது முப்பது வயதில் அரசனாகி நாற்பது ஆண்டு அரசாண்டான். தாவீது எதிர்கொண்ட எல்லா போரிலும் வெற்றிபெற்றார். இஸ்ரவேலுக்குள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் தாவீது. தாவீது நாத்தான் தீர்க்கனிடம் கடவுளுக்கு ஆலயம் கட்டவேண்டும் என்ற விருப்பத்தை கூறினார். ஆனால் நாத்தான் தீர்க்கன் தாவீதின் மகன் சாலமோன் கட்டுவார் என்று கூறினார்.
பின்னாளில் தாவீது பாவம் செய்து கடவுளின் கோபத்துக்குள்ளானார். தன் பாவத்தை உணர்ந்து மன்னிப்புப் பெற்றார். தன் இடத்தில் சாலமோனை அரசனாக ஏற்படுத்தினார்.
பல திறமைகளை கடவுள் நமக்கு கொடுத்துள்ளார். பல வெற்றிகளை பெற உதவி செய்கின்றார். தவறுகள், தீயசெயல்கள் செய்யும் போது அது உணர்த்தப்படும் போது மனஸ்தாபத்தோடு விட்டுவிடவேண்டும். அதுவே நமக்கு ஏற்ற வாழ்வு. ஆண்டவருக்கேற்ற வாழ்வு வாழுவோம்.
கடவுளே! உம்முடைய பிள்ளையாக வாழ்வில் பெறும் வெற்றி அனைத்தும் நீரே கொடுக்கிறீர் என்ற உணர்வோடு உம்மில் இணைந்து வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
