2 இராஜாக்கள் 15 : 23-26                                   21 ஆகஸ்ட், 2020 வெள்ளி

“நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவில்லை.” – 2 இராஜாக்கள் 15 : 24

இந்தப் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை என்று சிலர் கூற கேட்டிருக்கின்றோம். எந்த ஒரு நீண்ட நாள் பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கைவிட முடியும் என்று கூறுபவரும் உண்டு.

இன்றைய தியான பகுதியில் பாவத்தைவிட மனமில்லாத அரசனாகிய பெக்காக்கியாவைப் பற்றிப் பார்ப்போம்.

பெக்காக்கியா என்ற பெயரின் பொருள் `கர்த்தர் கண்களைத் திறந்தார்’ என்பதாகும். பெக்காக்கியா இஸ்ரவேலின் அரசனாகிய மொகேமின் மகன் ஆவார். மெனாகேமின் மகனான இவர் தன் தந்தைக்குப் பிறகு அரசன் ஆனார். இவர் பெக்காவால் கொலை செய்யப்பட்டார். மெனாகேமின் ஆட்சிக் காலத்திலே இருந்த குழப்பமிகுந்த சூழ்நிலை இவர் மகன் பெக்காகியா காலத்திலும் தொடர்ந்து. இச்சமயத்தில் அசீரியர்களைச் சார்ந்தோ, அவர்களை எதிர்த்தோ இரு கட்சிகள் இஸ்ரவேல் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போட்டியிட்டன. பெக்காகியா தம் தந்தை வழியில் அசீரியர்களுக்குக் கீழ் ஆட்சி செய்தார். பெக்காக்கியா பாவத்தை விட மனமில்லாதவனாக தானும் கெட்டு இஸ்ரவேல் மக்களையும் பாவஞ் செய்யவைத்தான். இவனும் நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.

ரெமலியாவின் குமாரன் பெக்காகு என்னும் மெய்காவலாளரின் அதிபதி அவனுக்கு விரோதமாய்ச் சதியாலோசனை பண்ணி அர்கோபையும் ஆரீயேயையும் சேர்த்துக்கொண்டு கிலியாத்தியரில் ஐம்பது பேரைக் கூட்டி வந்து சமாரியாவில் அரசனின் வீடாகிய அரண்மனைக்குள்ளே அவனை வெட்டிக் கொன்று போட்டு அவன் இடத்தில் அவன் அரசனானான். பெக்காக்கியா தன் மக்கள் இஸ்ரவேலரையும் பாவத்திலே வழிநடத்தி கடவுளின் கோபத்துக்கு ஆளானான். அதன் பலன் குறுகிய நாட்களிலேயே அவன் கொல்லப்பட்டான். அவன் பாவத்தை விட்டு விலக மனமில்லாதவனாக தன் முடிவை அவனே தேடிக் கொண்டான்.

அன்பானவர்களே! சில வேளைகளில் நம்மிடத்தில் கூட சில விடமுடியாத பழக்கங்கள், தீய செயல்கள் நம்மை அழிவின் பாதைக்கு அழைத்து செல்லுகின்றன. விடமுடியாத பழக்கங்கள் நம்மை பாவத்தில் அமிழ்த்தி அழிவுக்கு இட்டுச் செல்லும். எனவே விடமுடியாத பழக்கங்களை விட்டு விட முயற்சிப்போம். பெக்காக்கியாவின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். எனவே கடவுளின் துணை கொண்டு தீயவைகளை விட்டுவிடுவோம். கடவுளின் வார்த்தையின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ளுவோம். புதுப் படைப்பாக வாழ கடவுள் தம் ஆவியானவரில் பலம் தருவார்.

தந்தையாகிய கடவுளே! உம் பிள்ளைகளாகிய எங்களிடம், இருக்கும் தீய பழக்கங்களை விட்டு, உம்முடைய பிள்ளைகளாக நல்ல பண்புகளை பற்றிக்கொண்டு உம்மில் வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.