vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 620 blog entries.

ஆபகூக் நியாயம் தீர்க்கிறவர்

ஆபகூக் 1 : 1-7                                 25 செப்டெம்பர் 2020, வெள்ளி

“பொல்லாதவன் நீதிமானை வளைந்து கொள்ளவே, வெளிவருகிற நியாயம் கோணலாகிறது.” – ஆபகூக் 1 : 4

ஆபகூக் கி.மு. 7-ம் நூற்றாண்டின் இறுதியில் கல்தேயர் இனத்தாரான பாபிலோனியரின் ஆட்சியில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆபகூக் என்னும் பெயருக்கு பொருள் `அணைத்தல்’ என்பதாகும். இவர் இறைவன் மீது பலத்த நம்பிக்கை உடையவர். இறைவனின் உண்மையான தாசன். எல்லா தீர்க்கதரிசிகளும், இறைவனின் கட்டளையைப் பெற்று மக்களுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இவர் இறைவனை நோக்கி சில கேள்விகளைக் கேட்டார். இவரது கேள்விகள் இறைவனை கோபப்படுத்தவில்லை. அவரது கேள்விகளுக்கு, அவர் பெற்ற பதிலையும், அவரது நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆபகூக். அதிலே ஒரு கேள்வி தான் தியான வசனம். நியாயம் ஒருபோதும் வெளி வருகிறதில்லை. முதல் கேள்வி, பார்க்கும் இடமெல்லாம் அநியாயம், அக்கிரமம் நிறைந்திருக்கிறது. கொலை, கொள்ளை, கொடுமை, சூது, வாது, நிறைந்த இந்த மக்கள் நியாயம் தீர்க்கப்பட மாட்டார்களோ? அவர்களது தீமையின் தீர்ப்புக்காகப் பாபிலோனிய பேரரசு உருவாகிக் கொண்டிருக்கிறது. பாபிலோனும் தனது அக்கிரமத்தினாலேயே மாபெரும் அழிவை அடையும் என்று இறைவன் பதிலளித்தார்.

ஆபகூக் தீர்க்கரின் கேள்விகள் தற்கான உலகுக்கு மிகவும் பொருத்தமானவை. நாமும் இதுபோன்ற கேள்விகளை பல சமயங்களில் இறைவனிடம் கேட்கின்றோம். அக்கிரமம், அநியாயம் நிறைந்த இந்த உலகின் போக்கு நிச்சயமாக நியாயம் தீர்க்கப்படும். அவ்வப்போது நியாயம் தீர்க்கப்பட்டுக்கொண்டேதானிருக்கிறது. போர்கள், இயற்கை சீற்றங்கள், கொள்ளை நோய்கள் ஆகியவற்றின் பின்னணியில் இறைவனின் நியாயத்தீர்ப்பு உண்டு. அனைத்துக்கும் திட்டமிடப்பட்ட குறுகிய காலங்கள் தான் உண்டு. அனைத்தையும் கட்டுப்படுத்தும் கடிவாளத்தைக் கொண்ட உயர் அதிகாரி உன்னதத்தில் உண்டு. அவர் உறங்குவது இல்லை விரைவில் புதியதோர் உலகம் அமையும் பொல்லாத உலகில், நீதிமானாக வாழ்வதும், இறைவனை பெலனாக எண்ணி, விசுவாசித்து அவரைச் சார்ந்து வாழ்வது அவசியமானவை.

நாம் சந்திக்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் பாவமே அடித்தளம். இயேசு நம் பாவங்களை தம் மீது ஏற்றுக் கொண்டதால் நாம் நீதிமானக்கப்படுகிறோம். நாம் நீதிமானாக்கப்படுவதால் நித்திய வாழ்வுக்கு உரிமையாளராகின்றோம். இந்த வாழ்வை இறைவன், இயேசுவில் கிருபையாக அருளுகிறார். விசுவாசத்தில் நிலைத்திருப்போம். அழியா பேரின்ப வாழ்வை பெறுவோம்.

அன்புள்ள இறைவா, கேள்விகளால் பதிலை கண்டடைந்து, உமது நேச குமாரனில் வைக்கும் விசுவாசத்தில் வளர உதவி செய்யும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஆபகூக் நியாயம் தீர்க்கிறவர்2020-09-24T13:54:33+00:00

பர்தொலொமேயு தியானம் செய்பவர்

மத்தேயு 10 : 1-15                                      25 அக்டோபர் 2020, ஞாயிறு

“நீ அத்திமரத்தின் கீழிருக்கும் போது உன்னைக் கண்டேன்.” – யோவான் 1 : 48

யோவான் நற்செய்தி நூலில் நாத்தான்வேல் என்று குறிப்பிடப்படுபவர் இயேசுவின் சீடர். இவர் பிற நற்செய்தி நூல்களில் பர்தொலொமேயு என்று குறிப்பிடப்படுகிறார். பர்தலொமேயு என்பதற்கு `தோல்மாயின் மகன்’ என்பது பொருள். நாத்தான்வேல் திருமறையை அறிந்தவர். கடவுளையும் இறை அரசையும் குறித்து தியானிப்பவர். ஒரு ஜெபவீரர் என்றும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பிலிப்புவை தன்னை பின்பற்றி வா என்று அழைத்தார். பிலிப்பு இயேசுவின் அழைப்பை ஏற்றார். அவரே நாத்தான் வேலைக் கண்டு பிடித்தார். தான் கண்டுக்கொண்ட இயேசுவை அவருக்கு அறிமுகப்படுத்தினார். நாத்தான்வேலை இயேசுவிடம் அழைத்து வந்தார். நாத்தான்வேல் வருவதைக் கண்ட இயேசு இவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

நாத்தான்வேல் அதிர்ச்சியடைந்தார். நீர் எப்படி என்னை அறிவீர் என்று கேட்டார் இயேசு. பிலிப்பு உன்னை அழைக்கும் முன் நீ அத்திமரத்தின் கீழே இருக்கும்போதே உன்னைக் கண்டேன் என்றார். நாத்தான்வேல் ரபீ நீர் கடவுளின் குமாரன் என்றார். இவர் இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கும் போது குரு, ரபீ, கடவுளின் குமாரன், இஸ்ரவேலின் அரசன் என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இயேசு மரித்த போது இவரும் கூட ஆறு சீடர்களும் மீன்பிடிக்கச் சென்றனர். இயேசு இவர்களுக்குத் தன்னை உயிருள்ளவராக காண்பித்தார். மீண்டும் சாட்சியிட அழைத்தார். நாத்தான்வேல் ஆர்மீனியாவில் இறைப்பணி புரியும் போது பல அற்புதங்களை செய்தார் என்ற குறிப்புகளும் இருக்கின்றன. இவர் கி.பி. 68ம் ஆம் இரத்த சாட்சியாக மரித்தார்.

திருமறை எழுத்துக்களை வாசித்து கடவுளை அறிய முற்படுகிறவர்களுக்கு கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். தியானம், ஜெபம் இவற்றில் பிரியங்கொள்ளுகிறவர்களை அறிகிறார். திருமறை வசனங்களே நமக்கு இயேசுவை கண்டுக் கொள்ளச் செய்கின்றன. தூய ஆவியானவர் வசனத்தின் வழி நம் உள்ளங்களில் செயலாற்றுகிறார். நற்செய்தி வழியாக நம்மை கடவுளின் மகிமையைப் பெற அழைக்கிறார். நாம் நித்திய வாழ்வை பெற வழி நடத்துகிறார். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தால் நித்திய வாழ்வை நாம் இலவசமாகப் பெறுகிறோம். இச்செய்தியை பிறருக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணருவோம். சாட்சியாய் வாழுவோம்.

அன்பு நிறைந்த கடவுளே! உம் திருவார்த்தைகள் வழியாய் உம் நேசக் குமாரனை அறிந்துகொள்ள கிருபை செய்யும். நாங்கள் அறிந்த ஆண்டவரை பிறரோடு பகிர்ந்தளிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பர்தொலொமேயு தியானம் செய்பவர்2020-09-24T13:49:00+00:00

ஒசேயா – அழைக்கிறவர்

ஒசேயா 14 : 1-9                   18 செப்டெம்பர் 2020, வெள்ளி

“இஸ்ரவேலே, உன் கடவுளாகிய கர்த்தரிடம் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.” – ஒசேயா 14 : 1

இறைவனின் அன்பு மாறாதது, அளவிட முடியாதது. அறிவுக்கு எட்டாதது. பல நேரங்களில் மனிதன் இறைவனை விட்டு தூரமாய் போகிறான். ஆனாலும் இறைவன் மனிதர் மேல் அன்பு கூறுகின்றார். மனிதர்கள் நித்திய வேதனை தரும் நரக வாழ்க்கைக்கு சென்றுவிடக்கூடாது என்று விரும்புகின்றார். இறைவனின் செட்டைகளின் நிழலிலே அடைக்கலம் புகுந்து பாதுகாப்போடு வாழவேண்டும் என்று விரும்புகின்றார். அவன் நித்திய மகிழ்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றார்.

தியானபகுதியில் இறைவனின் அன்பு உள்ளத்தை நமக்குச் சொல்லுகிறார் ஒசோயா தீர்க்கதரிசி. ஒசேயா தீர்க்கர் ஆமோஸ் தீர்க்கருக்கு சற்று பின்னர் வாழ்ந்தவர். கி.மு. 722-ல் சமாரியா வீழ்ச்சியுற்ற சமயத்தில் இறைவாக்கு உரைத்தார். கோமேர் என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவள் ஒசேயாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தாள். அவரை விட்டு விலகிச் சென்றாள். அந்த பெண்ணோடு கொண்டிருந்த மண உறவை பின்னணியாகக் கொண்டு ஒசேயா தீர்க்க தரிசனம் உரைத்தார். இறைமக்களாய் இருந்த இஸ்ரவேலர்கள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கவில்லை. விக்கிரக ஆராதனை செய்தார்கள். இறைவனுக்கு எதிராக துரோகம் செய்தார்கள். பிற சமூகத்தவர்களோடு தவறான மணஉறவுகளை வைத்திருந்தனர். பாகால் வழிபாட்டை இறை வழிபாட்டோடு இணைத்துக் கொண்டனர். ஒசேயா தீர்க்கதரிசி சமூக மாற்றத்தை வலியுறுத்தினார். இஸ்ரவேல் மக்களை இறைவனாகிய கர்த்தரிடம் திரும்ப அழைத்தார். அக்கிரமத்தில் விழுந்து, இறைவனை விட்டு விலகிச் சென்றால் இறைவனின் தண்டனை உண்டு என்று எச்சரித்தார். இறைவனின் அன்பு இறுதிவரை நிலைத்திருக்கும். அதனால் மக்களை தம் பக்கம் சேர்த்துக் கொள்ளுவார். அதன் மூலம் முறிந்த உறவு மலரும் என்கிறார் தீர்க்கர்.

தனக்கு உண்மையாயிராமல் துரோகம் செய்த மனைவியை தேடிச் சென்றார் ஒசேயா. நாம் உண்மையற்றவர்களாக இருந்தாலும் நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர். இறைவனை விட்டு விலகிப்போன நம்மையும் கடவுள் இயேசுவில் தேடி வருகிறார். இன்று நாம் அதிகாரம் பதவி, பணம், சிற்றின்பம் போன்றவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். இவற்றில் நமக்கு நிம்மதி கிடைப்பதில்லை. இறைவனின் இடத்தை பிற காரியங்கள் ஆக்கிரமிக்கக் கூடாது. இயேசு நம்மை நேசிக்கிறார். அவருக்கு உண்மையாயிருப்போம். நமக்காக தன் ஜீவனையே தந்தவர். கல்வாரி மேட்டிலே, சிலுவையிலே பலியானவர், நம்மை மீட்டுக்கொண்டவர் இறைமைந்தன் இயேசுகிறிஸ்து. அவருக்கு உயிருள்ள சாட்சிகளாவோம்.

மனம் திரும்பும் போது எங்களை மன்னிக்கிற கடவுளே! நெருங்கி வரும் பாவங்களிலிருந்து விலகி உமது எச்சரிப்பின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஒசேயா – அழைக்கிறவர்2020-09-14T10:18:58+00:00

எசேக்கியேல் – எச்சரிப்பை உணர்த்தியவர்

எசேக்கியேல் 2 : 1-10                                 17 செப்டெம்பர் 2020, வியாழன்

“அவர்கள் கேட்டாலும், கேளாவிட்டாலும், நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்.” – எசேக்கியேல் 2 : 7

திருமறை வரலாற்றில் பெரிய தீர்க்கதரிசிகள் மூவர் ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகியோர். எசேக்கியேல் தீர்க்கராகவும், ஆசாரியராகவும் இருந்தார். எசேக்கியேல் என்பதன் பொருள் `கர்த்தர் பலப்படுத்துகிறார்’. ஆசாரிய வகுப்பைச் சார்ந்த பூசி என்னும் ஆசாரியரின் மகன் கி.மு. 597-ல் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டு போனவர்களில் இவரும் ஒருவர்.

இஸ்ரவேலர் இறைவன் தெரிந்தெடுத்த மக்கள். இஸ்ரவேலர்கள் சிறைப்பட்டிருக்கிற சூழ்நிலையில் இந்த வார்த்தை அவர்களுக்குச் சொல்லப்பட்டது. தீர்க்கதரிசி தரிசனம் காண்கிறவர். இறைவனோடு வாழ்ந்தவர். இறை வார்த்தைகளைச் சொல்லி மக்களை எச்சரித்தவர். இந்த எச்சரிப்பு செழிப்பான அல்லது வசனிப்பான வார்த்தைகள் அல்ல. இறைவன் சொல்வதைச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்கள் முகத்தைக் கண்டு திகில் கொள்ளவும் வேண்டாம். என் எச்சரிப்பை சொல் என்றார் இறைவன்.

இறைவன் இஸ்ரவேலர்களை உயர்வாகவே வைத்திருந்தார். அவர்களுடைய பொறுப்பும் அதிகமாகவே இருந்தது. இஸ்ரவேலர்கள் இறைவனுக்கு முன்பாக செம்மையாக நடக்கவில்லை. பரிசுத்த இடம் தீட்டுப்பட்டு போயிற்று. சீர்கெட்டு நடந்தார்கள், விக்கிரக வணக்கம் செய்தனர். இரகசியப் பாவம் செய்தனர். மூடநம்பிக்கை, சூரிய வணக்கமும் இருந்தது. தங்கள் தவறையும் பாவச் செயல்களையும் உணராதவர்களாகவும் இருந்தார்கள். எனவே தான் எசேக்கியேல் மூலமாக இறைவன் பேசினார்.

இன்றைக்கும் அநேக ஊழியங்கள் மனிதரை பிரியபடுத்தும் வார்த்தைகள், செழிப்பான வார்த்தைகள் தங்கள் சொந்த வார்த்தைகளைக் கொண்டு எச்சரிக்கின்றார்கள். தங்கள் மனதில் தோன்றியபடியெல்லாம் பேசுகிறார்கள். இயேசுவின் நாமத்தினால் எச்சரிக்க வேண்டும். காரணம் மக்கள் மனம் திரும்ப வேண்டும். இறை உறவில் வாழ வேண்டும். பாவத்தை சொல்லி எச்சரிக்கிற ஊழியன் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. செழிப்பான வாழ்வை குறித்துச் சொல்லும் ஊழியன் ஏற்றுக் கொள்ளப்படுகிறான். ஆலோசனை இல்லாத இடங்களில் மக்கள் சீர்கெட்டுப் போவார்கள் என்பது எத்தனை உண்மை. மோசம் போக வேண்டாம். ஆண்டவர் தம்மை பரிகாசம் பண்ணவொட்டார்.

ஜீவனுள்ள இறைவா, உம் வசனத்தால் எங்களை உம்மண்டைக்கு அழைத்திருக்கிறீர். நியாயப் பிரமாணத்தால் பாவங்களை உணரவும் நற்செய்தியால் புதுவாழ்வு பெறவும் வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

எசேக்கியேல் – எச்சரிப்பை உணர்த்தியவர்2020-09-14T10:16:00+00:00

எரேமியா

எரேமியா 18 : 1-10                        16 செப்டெம்பர் 2020, புதன்

“இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறது போல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.” – எரேமியா 18 : 6

மூன்று பெரிய தீர்க்கதரிசிகளில் எரேமியாவும் ஒருவர். இவர் ஆனதோத் ஊரைச் சேர்ந்தவர். இல்க்கியா என்ற ஆசாரியரின் மகன். செம்மையானவர். அன்புள்ளம் கொண்டவர். ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்த 60 ஆண்டுகளுக்கு பின்பு தீர்க்கதரிசனம் உரைத்தவர் எரேமியா. எரேமியா என்பதன் பொருள் `கர்த்தரை உயர்த்துங்கள்’ என்பதே. இவர் 40 ஆண்டுகள் தீர்க்க தரிசன பணி செய்தார்.

இஸ்ரவேலர்கள் மீட்பின் திட்டத்திற்காக இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். இவர்களை இறைவன் எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டார். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்துக்கு கொண்டு வந்து சேர்த்தார். அது அழகான, செழிப்பான தேசம். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் இறைவனுக்கு விரோதமாக பாவம் செய்தனர். இறைவனை விட்டு விலகிச் சென்றனர். இதனால் மீண்டும் அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். பாபிலோனிய படைகளும், நேபுகாத்நேச்சாரும் இஸ்ரவேலர்களை சூறையாடினர். எருசலேம் அழிவுற்றது. யூதா அரசனும், நாட்டினரும் நாடு கடத்தப்பட்டதை தன் கண்களினாலே கண்டார் எரேமியா. எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை வந்தது. நீ எழுந்து குயவன் வீட்டிற்கு போ, அங்கே என் வார்த்தைகளை உனக்கு தெரிவிப்பேன் என்றார். அப்படியே எரேமியா குயவன் வீட்டுக்குச் சென்றார். இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறது போல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள் என்றார். இதுவே தியான வசனம். நீங்கள் தீமையை விட்டு விலகினால், நானும் உங்களுக்கு செய்ய நினைத்த தீங்கினிமித்தம் மனமாறி அதை செய்யாமல் விடுவேன் என்றார்.

நாம் இறைவன் கையில் களிமண்ணாக இருக்கிறோம். அருள்திரு அறிவர் லுத்தர் விசுவாசப்பிரமாணம் இரண்டாம் பிரிவின் அர்த்தத்தை இப்படி எழுதுகிறார். `கெட்டுப் போய் சபிக்கப்பட்ட நம்மை ஆண்டவர் இயேசு பொன்னினாலும், வெள்ளியினாலும் அல்ல விலைமதிக்க முடியாத தமது பரிசுத்த இரத்தத்தினாலே, குற்றமில்லாமல் பட்ட பாடுகளினாலே, மரணத்திலே, எல்லா பாவங்களிலும் மரணத்திலும், பிசாசின் வல்லமையிலிருந்து மீட்டு இரட்சித்தார். தமக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.’ கிறிஸ்துவில் நாம் புதுப் படைப்பு. நமக்குப் புதுவாழ்வைத் தந்திருக்கிறார்.

இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்து மனந்திரும்பிய போது அவர்களை மன்னித்தார். பாவிகளாகிய நாம் நமது பொல்லாத சிந்தனை, ஆண்டவருக்குப் பிரியமற்ற வாழ்வு, சுயநலம் இவைகளிலிருந்து மனந்திரும்புவோம். கிறிஸ்துவில் இறைவன் நம்மையும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுவார். மனம் திரும்புவோம், திருந்தி வாழ்வோம். மன்னிப்பை பெறுவோம். இயேசுவில் புதுப் பாத்திரமாக வாழுவோம்.

சர்வசிருஷ்டிக்கும் எஜமானரே, நீர் குயவன், நாங்கள் களிமண். கெட்டுப்போன எங்களை புதிய பாத்திரமாக வனைந்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

எரேமியா2020-09-14T10:13:19+00:00

ஏசாயா – இரட்சிப்பை அறிவித்தவர்

ஏசாயா 52 : 1-10                                   15 செப்டெம்பர் 2020, செவ்வாய்

“நற்செய்தியை அறிவித்துச் சமாதானத்தைக்கூறி … இரட்சிப்பைத் தெரியப்படுத்தி…”- ஏசாயா 52 : 7

ஏசாயா தீர்க்கதரிசி ஆமோத்சின் மகன். எரேமியா, எசேக்கியேல், ஏசாயா ஆகிய இவர்கள் மூன்று பெரிய தீர்க்கதரிசிகள். ஏசாயா என்பதற்கு `கர்த்தர் இரட்சிப்பு’ என்பது பொருள். யூதாவின் அரசனாகிய உசியா அரசன் மரணமடைந்த வருடத்தில் கி.மு. 740-ல் தீர்க்கதரிசனம் உரைத்தார். உயிருக்கு அஞ்சாதவர். தேசத்தின் நலனில் அக்கறை உள்ளவர். இவரது தீர்க்கதரிசனங்கள், தவறான உறவுகளுக்கு எதிராக அம்புகள் போலப் பாய்ந்தன. தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு பாவங்களினிமித்தம் தண்டனை உண்டு என்றார். இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்கள் நன்மை பெற்றனர்.

பாபிலோனில் சிறையிருப்பில் இருந்த மக்களுக்கு ஆறுதலான செய்திகளைச் சொன்னார். அழிவைக் காட்டிலும், ஆறுதலையும், நீதியைக் காட்டிலும், கிருபையையும் வலியுறுத்தினார். இறைவன் இஸ்ரவேல் மக்களை மீட்பார். அவர்களை சொந்த நாட்டில் புதுவாழ்வு வாழும்படி அழைத்துச் செல்வார். வரலாற்றில் இறைவன் உங்களோடு இருக்கிறார். அவர் உலகம் முழுவதையும் அரசாளுகிறார் என்று மேசியாவின் வருகையை ஏசாயா விவரிக்கின்றார். எனவே இதை நற்செய்தியாகச் சொல்லுங்கள், சமாதானத்தை கூறுங்கள், இரட்சிப்பை தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

போரில் வெற்றிவாகை சூடிவரும் அரசனது வெற்றியைக் கூறி அறிவிக்க பட்டணத்தை நோக்கி ஓடி வரும் தூதுவனின் கால்கள் விரைவுடன் ஓடும். கால்களின் விரைவு மூலமாக மக்கள் செய்தியை புரிந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை நீங்கள் காண்பீர்கள். இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல அனைத்துலக மக்களும் காண்பார்கள். இஸ்ரவேலரின் இரட்சிப்பு உலகம் அறிய பிரசித்தமாகும். இப்படி சொல்லுகிறவர்களுடைய பாதங்கள், மலைகளின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கின்றன என உரைக்கின்றார் ஏசாயா. இதுவே தியான வசனம்.

இரட்சிப்பைப் பெற இன்று மக்கள் எங்கெல்லாமோ ஓடுகின்றார்கள். சிலர் உடலை வருத்திக் கொள்ளுகிறார்கள். பலர் புண்ணிய இடங்களை தரிசிக்கிறார்கள். பலர் ஆறுகளையும், மலைகளையும் நாடுகின்றார்கள். இவற்றால் நாம் இரட்சிப்பைப் பெற முடியாது. நாம் இரட்சிப்பை பெறவே இறைவன் தமது ஒரே பேறான குமாரன் இயேசுவை உலகத்துக்கு அனுப்பினார். இயேசுவின் வழியாக நாம் கிருபையாக மீட்கப்பட்டிருக்கிறோம். இன்றும் இறை ஆளுகையில் தான் இருக்கின்றோம். நாம் பெற்ற இரட்சிப்பை பிறருக்கு கூறி அறிவிப்போம்

திரியேக இறைவனே, நாங்கள் பெற்ற இரட்சிப்பை, பிறருக்கு கூறி அறிவிக்க பரிசுத்த ஆவியை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஏசாயா – இரட்சிப்பை அறிவித்தவர்2020-09-14T10:11:09+00:00

யோசேபாள் – நற்செயல் செய்தவள்

2 இராஜாக்கள் 11 : 1-12                               07 செப்டெம்பர் 2020, திங்கள்

“அத்தாலியாள் தேசத்தை அரசாண்டு வருகையில், … கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.” – 2இராஜாக்கள் 11 : 3

ஒரு குழந்தை வீதியில் கவனிப்பாரற்று பசியோடு அழுது கொண்டிருந்தது. அதனுடைய தாய் யார் என்று தெரியவில்லை. இதை கவனித்த காவல் துறையில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் அந்த குழந்தையை எடுத்து, அதைத் தன் குழந்தையைப் போல கவனித்தார். பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பெண் காவலரின் மனித நேயத்தை, அரசாங்கம் பாராட்டியது. பொதுமக்களும் பாராட்டினார்கள். இது பத்திரிக்கைச் செய்தி.

யோசேபாள் இஸ்ரவேல் அரசன் யோராவின் மகள். இறைவனுக்கு பயந்தவள். அன்பு நிறைந்தவள். தன் சொந்த குழந்தையாக இல்லாதபோதும், தன் சகோதரன் அகசியாவின் குழந்தையைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெற்றாள். அத்துடன் அதற்கு தாயாக உதவி செய்தாள். இதற்கு இறைவன் யோசேபாளை பயன்படுத்தினார். அத்தாலியாள் அரச வம்சத்தாரை கொலை செய்தாள். யோவாஸ் கொல்லப்படாதபடி அவனையும் அவன் தாதியையும் மூன்று மாதம் பள்ளியறையில் ஒளித்தாள். அத்துடன் ஆறு ஆண்டுகள் தங்களுடைய ஆலயத்தில் ஒளித்து வைத்தாள். எவ்வளவு கடினம். குழந்தையின் சத்தம் கேட்டால் கூட உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற சூழ்நிலையில் ஆறு வருடம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைத்து குழந்தையை பாதுகாத்தாள். துணிச்சல் மிக்க பெண், குழந்தைக்கு வளர்ப்பு தாயாக இருந்திருக்கிறார். குழந்தை யோவாஸின் ஏழாம் வருடத்தில் யோயாதா என்னும் ஆசாரியன் யோவாஸை அரசனாக்கினார். யோசேபாளின் திட்டத்தினால் அரச வம்சம் பாதுகாக்கப்பட்டது. நம்முடைய குழந்தைகளுக்கு எந்த ஆபத்து நேரிட்டாலும், நாம் எத்தனை துரிதமாக செயல்பட்டு, குழந்தையை காப்பாற்றுகிறோம். நம்முடைய குழந்தைகளை மட்டுமல்ல பிறருடைய குழந்தைகளைக் கூட ஆபத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி இறைவன் விரும்புகிறார். உதவி செய்யத் தயங்கக்கூடாது. இதைத்தான் யோசேபாள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

கர்த்தருடைய ஆலயத்திற்கு நமது பிள்ளைகளைக் கொண்டு வருவோம். அவர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். இறை உறவிலும், ஆலயத்தோடும் இணைந்தும் வாழ வழி நடத்துவோம். இறைவன் கையிலிருந்து நமது பிள்ளைகளை சாத்தான் பறித்துக்கொள்ள முடியாது. ஏனெனில் கர்த்தர் நம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர்களை இறைவனுக்கேற்ற விதத்தில் வளர்த்து ஆளாக்குவோம்.

எங்களை நேசிக்கிற இறைவா, நீர் எங்களுக்குத் தந்த பிள்ளைகள் நீர் தந்த பலன், சுதந்திரம். இவர்களை நாங்கள் பாதுகாத்து உமக்கு உகந்த பிள்ளைகளாக வளர்க்க எங்களுக்கு தயை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

யோசேபாள் – நற்செயல் செய்தவள்2020-09-03T10:39:13+00:00

ஒபதியா – இறைவனுக்கு பயந்தவர்

1 இராஜாக்கள் 18 : 3-16                                         06 செப்டெம்பர் 2020, ஞாயிறு

“நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்க, அவன்: நான் தான் நீ போய்…… சொல் என்றான்.” – 1 இராஜாக்கள் 18 : 7

முழு திருமறையிலும் ஒபதியா என்ற பெயரில் பதிமூன்று பேர் இருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றார்கள். ஒருவர் ஒபதியா தீர்க்கதரிசி. மற்றொருவர் இஸ்ரவேல் அரசன் ஆகாப்பின் அரண்மனை விசாரிப்புக்காரன். இந்த தியானப்பகுதி ஆகாப் அரசனின் அரண்மனை விசாரிப்புக்காரனைப் பற்றியது. ஒபதியா சிறுவயது முதலே இறைபக்தியுள்ளவர். ஆகாப் அரசனின் மனைவி யேசபேல் இறைவனின் தீர்க்கதரிசிகளை கொலை செய்தாள். அப்போது ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளை சேர்த்து கெபிக்கு ஐம்பது பேராக ஒளித்து வைத்திருந்தார். அவர்களுக்கு ஆகாரமும், தண்ணீரும் கொடுத்தார்.

தேசத்தில் எலியா தீர்க்கதரிசி சொன்னபடி மழை இல்லாமல் போயிற்று. பஞ்சம் தாண்டவமாடியது. ஆகாப் அரசன் ஒபதியாவை அழைத்தார். தேசத்திலுள்ள சகல நீரூற்றுகளையும், நீரோடைகளையும் சுற்றிப் பார்த்து வா என்று அனுப்பினார். மிருகங்களையும், குதிரைகள், கோவேறு கழுதைகளையும் உயிரோடு காப்பாற்ற வேண்டும். இதற்கு எங்காவது புல்லோ, தண்ணீரோ கிடைக்குமா என்று பார்ப்பதற்காக ஆகாப் ஒருபுறமும் ஒபதியா இன்னொரு புறமும் சென்றார்கள். எலியாவை இதுவரை ஒபதியாவுக்கு அடையாளம் தெரியாது. இவர்தான் எலியா என்று அறிந்து முகங்குப்புற விழுந்து என் ஆண்டவனாகிய எலியா அல்லவா நீர் என்று கேட்டார். அவர் நான் தான் என்றார். இதுவே தியான வசனம். ஆகாப் அவரிடம் இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லோ….? என்றான். எலியா பாகால் வழிபாட்டுக்காரனான நீரும் உம் தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றார்.

தேசத்தின் அழிவுக்கும், மக்களின் சீரழிவுக்கும் காரணமாக விளங்கும் ஆகாப், யேசபேலை போன்ற மக்கள் அனுதினமும் இறைப்பணியாளர்களை கொன்று குவிக்கிறார்கள். ஆலயங்கள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இறைமக்களை கலங்கப்பண்ணுகிறவர்கள் தங்கள் தவறை மறைத்து கிறிஸ்தவர்கள் மீதே பழி போடுவதும் நடக்கிறது. இறைவனுக்கு எதிராக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் இறைவன் தம் பிள்ளைகளைப் பாதுகாத்து, பராமரிக்கிறார். தம் பிள்ளைகளைத் தப்புவிப்பதற்கான வழிமுறைகளை ஒபதியா போன்றவர்களைக் கொண்டு உண்டு பண்ணுகிறார். எலியாவின் விசுவாச உறுதிப்பாட்டை அறிந்திருக்கிறோம். இறைவனில் வைக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில் வாழுவோம். கடவுள் இயேசுவில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றங்களை நம் மத்தியில் கொண்டு வருவார்.

ஜீவனுள்ள இறைவா, நாங்களும் எல்லா சூழ்நிலைகளிலும், உமக்கு சாட்சியாக இருக்க உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

ஒபதியா – இறைவனுக்கு பயந்தவர்2020-09-03T10:37:20+00:00

சாரிபாத் கைம்பெண் – தீர்க்கதரிசிக்கு உணவளித்தவள்

1 இராஜாக்கள் 17 : 13-16                                      05 செப்டெம்பர் 2020, சனி

“கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும்… கலசத்தில் எண்ணெய் இல்லாமற்போவதுமில்லை.” – 1 இராஜாக்கள் 17 : 14

இஸ்ரவேலின் 7-வது அரசர் ஆகாப். இவருடைய நாட்களில் எலியா தீர்க்கராக இருந்தார். இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை விட்டு விலகி பாகால் வழிபாட்டில் இணைந்தார்கள். இறைவன் எலியா தீர்க்கதரிசியை ஆகாப் அரசனிடம் அனுப்பினார். மூன்றரை வருடம் நாட்டில் மழையோ, பனியோ பெய்யாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். தீர்க்கரின் கூற்றுப்படி நாட்டில் மழை பெய்யவில்லை. இதனால் கொடிய பஞ்சம் உண்டாயிற்று. இறைவன் எலியாவை சாரிபாத் ஊருக்கு அனுப்பினார். தீர்க்கர் களைப்புடன் அங்கு சென்றார். விறகு சேகரித்த கைம்பெண்ணிடம் குடிக்கத் தண்ணீரும், கொஞ்சம் அப்பமும் கொண்டுவரும்படிக் கேட்டார். விதவை எலியாவிடம் தன்னிடம் ஒரு பிடி மாவும், கொஞ்சம் எண்ணையுமே இருக்கிறது. அதைச் சுட்டு கடைசி முறையாக சாப்பிட்டு மடிந்து போக வேண்டியது தான். அதற்காக விறகு சேகரிக்கின்றேன் என்றாள். எலியா தீர்க்கதரிசி அவளிடம், அம்மா முதலில் எனக்கு ஒரு சிறிய அடையைச் செய்து கொண்டு வா என்றார். இறைவன் தேசத்தில் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் மாவு செலவழிந்து போகாது. கலசத்தில் எண்ணெய் குறைந்து போகாது என்று இஸ்ரவேலின் இறைவன் சொல்லுகிறார் என்றார். இதுவே நமது தியானவசனம். அந்தப் பெண் தீர்க்கதரிசியின் வார்த்தையை நம்பினாள். கீழ்ப்படிந்தார். அவர் சொன்னபடி செய்தாள். கர்த்தர் தந்த வாக்கின்படியே அப்பெண்மணி வீட்டுப் பாத்திரங்கள் வறண்டு போகவில்லை. அவள் குடும்பம் பாதுகாக்கப்பட்டது. இச்சூழலில் அவளுடைய ஒரே மகன் இறந்து போனான். இதை அறிந்த எலியா இறைவனிடம் விண்ணப்பம் பண்ணினார். இறைவன் எலியாவின் விண்ணப்பத்தைக் கேட்டார். பிள்ளை உயிர் பிழைக்கச் செய்தார். விதவைப் பெண் எலியா தீர்க்கதரிசியிடத்தில், ‘நீர் இறைவனின் மனிதன். உமது வாயின் வார்த்தை இறைவனுடையது. உண்மையானது’ என்றாள்.

திக்கற்றவர்களை இறைவன் பாதுகாக்கிறார். அவர்களுக்கு அற்புதமாக உணவளிக்கிறார். ஆண்டவர் இயேசு நம்மீது மனதுருகுகிறவர். நமது உணர்வுகளை, தேவைகளை அறிகிறார். எனவே கவலைப்படவேண்டாம். ஆண்டவரை நம்புவோம். இறைவனின் வார்த்தையை நம்புவோம், கீழ்ப்படிவோம். மேன்மையடைவோம். நம்முடையவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்வோம். இறையாசி பெற்று இறைமக்களாக வாழுவோம்.

விண்ணப்பத்தை கேட்பவரே, எங்களுக்கு எப்பொழுது என்ன தேவை என்பதை அறிகிறீர். உமக்கு நன்றி. எங்கள் தேவைகளை நிறைவேற்றும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

சாரிபாத் கைம்பெண் – தீர்க்கதரிசிக்கு உணவளித்தவள்2020-09-03T10:34:58+00:00

எலியா பக்தி வைராக்கியமுள்ளவர்

1 இராஜாக்கள் 19 : 9-13                                                        04 செப்டெம்பர் 2020, வெள்ளி

“அதற்கு அவன்: சேனைகளின் கடவுளாகிய கர்த்தருக்காக வெகுபக்தி வைராக்கியமாயிருந்தேன்.” – 1 இராஜாக்கள் 19 : 10

ஆகாப் இஸ்ரவேலை ஆண்டு கொண்டிருந்தான். தீருவின் அரசியான இவன் மனைவி யெசபேலால் நாட்டில் பாகால் வழிபாடு தீவிரமடைந்தது. இக்காலத்தில் எலியா தீர்க்கர் பணியாற்றினார். இவர் பாகால் வழிபாட்டை கடுமையாக எதிர்த்தார். தீர்க்கர் அரசனிடம் நீ கடவுளை மறந்துவிட்டதால் நாட்டில் மழையோ பனியோ பெய்யாது என்றார். அப்படியே பஞ்சம் ஏற்பட்டது. கடவுள் எலியாவுக்கு கெரீத் நீரோடையிலும், அதைத் தொடர்ந்து சாரிபாத் கைம்பெண்ணைக் கொண்டும் உணவளித்தார். இறுதியாக கர்மேல் மலையில் பாகால் தீர்க்கர்களை சவாலுக்கு அழைத்தார் எலியா. அதில் வெற்றி பெற்றார். பாகால் தீர்க்கர்களை கொன்று போட்டார். கர்மேல் மலை நிகழ்வுகளை யெசபேல் அறிந்தாள். கடுங்கோபங்கொண்ட அவள் எலியாவை கொலை செய்வதாக செய்தி அனுப்பினாள். அரசனும், அவள் வழியில் மக்களும் கடவுளை மறந்து வாழ்ந்த சூழ்நிலையில் எலியா தன்னுயிருக்குப் பயந்தார். கடவுள் வாழும் மலை என்ற எண்ணத்தில் ஓரேப் மலைக்குச் சென்று ஓர் குகையில் தங்கினார்.

கடவுள் இறைப் பணியாற்ற வேண்டிய தீர்க்கரைத் தேடி வந்தார். தன் பணியை மறந்து முடங்கியிருந்த தீர்க்கரிடம், எலியாவே இங்கு நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டார். அதற்கு எலியா சொன்ன பதிலே நமது தியான வாக்கியம். கர்மேல் மலையில் எலியா கண்ட அற்புத செயல்பாட்டை மறந்தார். கடவுள் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையை இழந்தார். தன் செயலை நியாயப்படுத்த தீர்க்கர் வழி தேடுகிறார். எனவே `நான் உங்கள் கடவுள். நீங்கள் என் மக்கள்’ என்கிற உடன்படிக்கையை மக்கள் மீறிவிட்டார்கள். பாகாலை தங்கள் தெய்வமாகக் கொண்டார்கள் என்கிறார். தீர்க்கதரிசிகளை கொன்று இறைவார்த்தை தேவையில்லை என்கிறார்கள் என்று கடவுளின் கேள்விக்குப் பதில் சொல்லுகிறார்.
அதே வேளையில் தான் மட்டும் கடவுளுக்காக பக்தி வைராக்கியமாய் இருக்கிறேன் என்கிறார். கடவுள் அவர் அறியாமையை அறிந்தார். தீர்க்கரிடம் நீ மட்டுமல்ல உன்னைப் போன்று ஏழயிரம் பேர் இருக்கிறார்கள் என்றார். தீர்க்க செய்ய வேண்டிய பணியை பட்டியலிட்டு அனுப்புகிறார். நாமும் நம் வாழ்க்கையில் கடவுளின் மகத்துவமான செயல்களை அனுபவிக்கிறோம், சாட்சியிடுகிறோம். ஆனால் சில நாட்களில் பிரச்சனைகள், நோய்கள் போன்றவைகளை சந்திக்கும்போது தளர்ந்து சோர்ந்து போகிறோம். கடவுளின் மீது நம்பிக்கை இழந்து போகிறோம்.
கடவுள் வரலாற்றில் செயலாற்றுகிறவர். கடந்தகால நிகழ்வுகளைக் கொண்டு எதிர்கால நம்பிக்கையூட்டுகிறார். யோசுவா ஏக்கத்தோடும் எதிர்பார்ப்போடும் மலைத்து திகைத்து நின்றார். கடவுள் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்று கடந்த கால நிகழ்வை சுட்டிக்காட்டி எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டுகிறார். வாழ்வின் அனுபவங்கள் வழி புது நம்பிக்கைப் பெறுவோம். கடவுளைச் சார்ந்து துணிவோடு வாழுவோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! கடந்தகால அனுபவங்களைக் கொண்டு வாழ்வில் நம்பிக்கையோடு வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

எலியா பக்தி வைராக்கியமுள்ளவர்2020-09-03T10:33:00+00:00
Go to Top