தொழுநோயாளி – நீண்டநாள் நோய் குணமானது
மாற்கு 1 : 40-45 16 அக்டோபர் 2020, வெள்ளி
“அவர் மனமுருகி, தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு” என்றார்.” – மாற்கு 1 : 41
தென் பசிபிக் தீவுகளில் தொழுநோய் பரவியபோது நோயாளிகளை தீவில் தனிமையில் வைத்தனர். மக்கள் கைவிட்டுவிட்டார்கள். இறைவனும் கைவிட்டுவிட்டார் என்ற எண்ணத்தில் வாழ்ந்தார்கள். அம்மக்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை. ஏனெனில் அத்தீவுக்கு சென்றவர்கள் யாரும் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் கட்டளை. அம்மக்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டவர் தான் டாமியன். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். அம்மக்களுக்கு மருத்துவமனைகளை கட்டினார். நோயினால் துன்பப்பட்டோருக்கு உதவினார். கடைசியாக இருவருக்கும் அந்த நோய் வந்தது. அதே நோயினால் இறந்தார்.
இறைமைந்தன் இயேசு வாழ்ந்த நாட்களில் தொழுநோய் உடையவர்கள் சமுதாயத்தை விட்டு விலகி மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் தான் வாழ வேண்டியிருந்தது. அவர்கள் மற்றவர்களை தொடவோ, பார்க்கவோ, பேசவோ கூடாது. தொழுநோய் உடையவர்களின் நிழல்கூட சுகமாய் இருப்பவர்கள் மீது படக்கூடாது என்ற நிலை இருந்தது. நோய் முற்றிலும் சுகமான பின்பு, சமயத் தலைவர்களிடம் தங்களைக் காட்டி, அவர்களின் ஒப்புதலோடு சமூகத்தில் சேர்ந்து வாழலாம். இன்றைய தியானப் பகுதியில் ஒரு தொழுநோயாளி யூதச் சட்டங்களை, பாரம்பரியங்களை மீறி இயேசுவிடம் வந்தார். முழங்கால் படியிட்டார். உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மாலே முடியும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனின் சித்தத்துக்கு தன்னை அர்ப்பணித்தார். இயேசு அவனைக் கண்டு மனதுருகினார். யூத சட்டத்தை மீறி, மனித நேயத்தோடு தமது கையை நீட்டி அவனைத் தொட்டார். எனக்குச் சித்தமுண்டு, நீ சுத்தமாகு என்றார். உடனே அவன் சுகமானான். சுகம் பெற்றவன் ஆண்டவருக்கு சாட்சி பகர்ந்தான்.
இப்பகுதி நமக்கு புதிய பாடத்தை கற்று தருகிறது. நாம் இறைவனின் சித்தத்தை அறிய முடியாதவர்கள். தொழுநோயாளி, ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மாலாகும் என்ற வேண்டுதல் செய்கிறார். இதன் மறுபக்கம், ஆண்டவரே உமக்கு சித்தமில்லாவிடில் நான் தொழுநோயுடன் வாழுகிறேன் என்பதாகும். அருள்திரு. அறிவர் மார்ட்டின் லுத்தர் ஜெபத்தைக் குறித்து விவரிக்கும் போது, சரீர தேவைக்காக ஜெபிக்கும் போது சித்தமானால் தாரும் என்று ஜெபிக்க வேண்டும். ஆன்மீக தேவைக்காக ஜெபிக்கும் போது கட்டாயம் தாரும் என்று ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். நாம் பாவம் என்னும் தொழுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். இந்நோய் தீர இயேசு ஒருவரே பரம வைத்தியர். அவர் அருளுகிற பாவமன்னிப்பு பாவம் என்னும் தொழுநோயைக் குணப்படுத்துகிறது. இயேசுவிடம் வருவோம். சுகம் பெறுவோம். சாட்சி பகருவோம்.
கருணையுடையவரே! வாழ்வின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் எங்களுக்கு நம்பிக்கையின் நங்கூரமாக இரும். உமது இரக்கத்தை நாங்களும் ருசிக்க கிருபைதாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
