கொர்நேலியு – விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு
அப்போஸ்தலர் 10 : 1-8 13 நவம்பர் 2020, வெள்ளி
“பக்தியுள்ளவன். தன் வீட்டார் அனைவரோடும் கடவுளுக்குப் பயந்தவன்.” – அப்போஸ்தலர் 10 : 2
கொர்நேலியு, செசரியாவில் இருந்த இத்தாலியப் படையின் நூற்றுவர் தலைவர்களில் ஒருவர். இவரும் இவர் குடும்பமும் பக்தியுள்ளவர்கள். கடவுளுக்குப் பயந்து வாழ்ந்தவர்கள். இவர் யூதர்களுக்கு ஜெபக்கூடம் கட்டிக் கொடுத்தவர். யூதர்களில் அதிக அன்பு காண்பித்தவர். அவர்களுடன் நல்ல உறவு கொண்டவர். கொர்நேலியுவுக்கு விருத்தசேதனம் ஒன்றைத் தவிற யூதனாவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தன. இவர் ஒரே கடவுள் என்னும் யூத சமய நம்பிக்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். கொர்நேலியு சமூகத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு தானதர்மம் செய்தவர். கடவுளிடம் இடைவிடாது ஜெபித்துக் கொண்டிருந்தவர். இவர் யூத சமயத்தையும் கிறிஸ்தவத்தையும் இணைக்கும் இலட்சிய புற இனத்தவராக கருதப்படுகிறார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுளை நம்பும் யூத சமயம் இயேசு கிறிஸ்துவின் தந்தையே கடவுள் என்னும் விசுவாசத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இயேசுவை விசுவாசிக்கிற புற இனத்தவருக்கும் வாழ்வு உண்டு. இந்த வாழ்வு நியாயப் பிரமாண கிரியையினால் வருவதல்ல. இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே வருகிறது என்று இவர் விசுவாசித்தார். பிற இனத்தவர் வாழ்வு பெற விருத்தசேதனம் அவசியமில்லை. கடவுளை தந்தையாக ஏற்று அவருக்குப் பயந்து வாழவேண்டும். தன்னால் இயன்றவரை ஏழை எளிய மக்களுக்கு உதவவேண்டும். கடவுளிடம் ஜெபத்தில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய பண்புள்ள மக்களை கடவுள் விரும்புகிறார். அவர்களை அழைக்கிறார். விருத்ததேசனம் பெறாத கொர்நேலியு மற்றும் குடும்பத்தினர் அனைவர் மேலும் தூய ஆவியானவர் இறங்கினது. அவர்கள் திருமுழுக்குப் பெறுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. கடவுள் தமது அழைப்பை தூய ஆவியானவர் அருளப்படுவதின் வழி உறுதி செய்கிறார். இதை எதிர்ப்பது கடவுளை எதிர்ப்பதாகும் என்பதை தூய பேதுரு உணர்ந்தார்.
அன்பானவர்களே! கொர்நேலியுவின் வரலாறு, மீட்பு அனைவருக்கும் உரியது என்பதை தெளிவுபடுத்துகிறது. விருத்தசேதனம் இல்லாமல் ஒருவர் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசத்தினால் மீட்பின் பாதையைப் பின்பற்றலாம் என்ற கருத்தை உறுதிசெய்கிறது. இயேசுவை வெளிப்படுத்துகிற வசனத்தில் நிலைத்திருப்போம். அவர் அருளும் கிருபையினால் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து இம்மையிலும் மறுமையிலும் வாழவு பெறுவோம்.
அன்பின் கடவுளே! நாங்கள் உம் திரு வசனங்களில் நிலைத்திருந்து இயேசுவில் வெளிப்பட்ட உம் கிருபையைச் சார்ந்து அவரில் வைக்கும் விசுவாசத்தால் வாழ்வு பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
