ரோமர் 1 : 1-17                                31 அக்டோபர் 2020, சனி

“தேவ வசனத்தை… போதித்து உங்களை வழி நடத்தினவர்களை … அவர்கள் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” – எபிரேயர் 13 : 7

இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். திருச்சபை சீர்திருத்தல் நாள். சுநகடிசஅயவiடிn னுயல. உலகமெங்கிலுமுள்ள சீர்திருத்தச் சபைகள் சீர்திருத்தல் வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூர்ந்து இறைவனை போற்றும் நாள். இறையவருக்கு நன்றி செலுத்தும் நாள்.

பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகள் திருச்சபைக்கு இருண்டகாலம். மூடப்பழக்க வழக்கங்கள் மேலோங்கி நின்றன. விசுவாசிகள் கைகளில் திருமறை இல்லை. திருமறை சங்கிலிகளால் கட்டப்பட்டு பாதுகாப்பாக இருந்தது. சமயத் தலைவர்கள் மட்டும் இலத்தீன் வேதாகமத்தை வைத்திருந்தனர். அவரவர் மொழியில் ஆராதனை நடைபெறவில்லை. சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவ ஞானிகளின் தத்துவங்கள் போதிக்கப்பட்டன. பாவ மன்னிப்புச் சீட்டு மும்முரமாகவே விற்பனை செய்யப்பட்டது. புனிதர்கள் வணக்கம் இருந்தன. மரணம் அடைந்தவர்களை வணங்கினார்கள். இவை எல்லாம் வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அந்நாட்களில் தூய ஆவியானவரின் துணையோடு எத்தனையோ திருச்சபை தலைவர்கள் சபைகளில் மாபெரும் சீர்திருத்தங்களை கொண்டு வந்தனர். இவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர் அருள்திரு. அறிவர். மார்ட்டின் லுத்தர். 1517-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் உரோம் திருச்சபைகளில் இருந்த தவறான கொள்கைகளை எல்லாம் பட்டியலிட்டு 95 நியாயங்களை எழுதி அதை விட்டன்பர்க் நகரின் தேவாலயக் கதவில் ஆணிகள் அடித்து மக்கள் பார்க்கும்படி வைத்தார். அந்நாள் தான் திருச்சபை சீர்திருத்தத்தின் உச்சகட்டம்.

மார்ட்டின் லுத்தருடைய மிகப்பெரிய அறைகூவல்; திருமறை வசனங்களுக்கு விரோதமாக கூறப்படும் எந்த மனிதனுடைய கூற்றையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதோ நான் இங்கே விசுவாச உண்மைக்காக நிற்கிறேன். வசனம், கிருபை, விசுவாசம் இவைகளில் நிற்கிறேன் என்றார் (Here I Stand, I Can’t Do) உலகமெங்கிலும், சீர்த்திருத்தல் கருத்துக்கள் பரவின. மாபெரும் மாற்றங்கள் திருச்சபைகளில் உருவாயின.

தியான வசனத்தின் படி நமக்கு தேவ வசனத்தை திருத்தூதுவர்கள், போதகர்கள், உபதேசிமார்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போதித்தனர். அந்த விசுவாசத்தை பின்பற்றுவோம். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, இறைவனின் நீதி விசுவாசத்தில் தொடங்கி விசுவாசம் வளருவதற்காக அந்த சுவிசேஷத்தில் வெளியாக்கப்படுகிறது. நமது நம்பிக்கை மாம்சமாய் உருவெடுத்த இறைவார்த்தை இயேசு கிறிஸ்துவே. பாரம்பரிய கட்டுகளிலிருந்து நம்மை விடுவித்த இயேசுவை நம்புவோம். தேவ வசனம், கிருபை, விசுவாசத்தில் நிலைத்திருப்போம். வாழ்வின் வழிகாட்டியாக இருக்கும் திருவசனத்தை தினம்தோறும் தியானிப்போம். அவைகளின்படி நடப்போம்.

நித்திய வாழ்வின் அதிபதியே! சபையின் பாரம்பரியங்களை களைந்து வசனத்தில் நிலை நின்று உண்மையான, ஆன்மீக ஆராதனைகளில் பிரியம்கொள்ள எங்களை வழிநடத்துவீராக. இயேசுவில் பிதாவே, ஆமேன்.