யோவான் 1 : 35-42 23 அக்டோபர் 2020, வெள்ளி
“அவருடைய சீஷரில், இயேசுவுக்கு அன்பாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பருகே சாய்ந்திருந்தான்.” – யோவான் 13 : 23
செபதேயுவின் குமாரர்கள் இருவர் இயேசுவின் சீடர்களாக இருந்தார்கள். மூத்தவர் யாக்கோபு, இளையவர் யோவான். இவர் பேதுருவோடும், தன் சகோதரன் யாக்கோபோடும் மீன் பிடிக்கும் தொழிலை செய்தவர். அந்த வேலையை விட்டு இயேசுவின் பின் சென்றவர். பன்னிரெண்டு சீடர்களில் சிறியவர் என்று கூறப்படுகிறவர் யோவான். யோவான் என்பதன் பொருள் `இறைவன் கிருபையுள்ளவர்’ என்பதாகும். யோவான் தன் தாயின் வழியில் இயேசுவுக்கு உறவினர். யோவானின் தாயார் சலேமே.
புனித திருமறையில் யோவான் சீடரை குறித்து பல குறிப்புகளைப் பார்க்கிறோம். கானாவூரில் இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய அற்புதத்தை கண்டவர். ஒரு முறை யோவானும், அவர் சகோதரர் யாக்கோபும் இயேசுவிடம் வந்து உமது மகிமையிலே நீர் வீற்றிருக்கும் போது நாங்கள் இருவரும் உமது வலதுபுறமும், இடது புறமும் அமர உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். இயேசு மக்கள் மீது காட்டும் அன்பை கண்டவர் எனவே ஆண்டவர் இயேசுவின் அன்பை அதிகமாக அனுபவித்தவர். ஆகவே அன்பின் திருத்தூதுவர் என்றும் அழைக்கப்படுகிறார் யோவான். பஸ்கா பண்டிகை நாளில், பன்னிரு சீடர்களோடு இயேசு பந்தியிருந்த சமயத்தில் அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது உங்களில் ஒருவன் என்னைக் காட்டி கொடுப்பான் என்றார். யாரைக் குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பார்த்தார்கள், திகைத்தார்கள். இயேசுவுக்கு அன்பாயிருந்த இந்த யோவான் இயேசுவின் மார்பருகே சாய்ந்திருந்தார். இதுவே தியான வசனப் பகுதி. அவன் யார் என்று கேட்டார். நான் துணிக்கையை யாருக்கு கொடுப்பேனோ அவன் தான் என்றார் இயேசு. துணிக்கையை வாங்கின யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். புறப்பட்டு சென்றான். சமயம் வாய்த்த போது இயேசுவை காட்டிக் கொடுத்தான். இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் போது, யோவான் மட்டுமே அங்கிருந்தார். இயேசு தனது அன்னையை கவனிக்க இவரிடமே சொன்னார். இறுதிக் காலத்தில் யோவான் பத்மு தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். தான் கண்ட பரலோக தரிசனங்களை அங்கிருந்தே எழுதினார். அது தரிசனம் அல்லது, வெளிப்படுத்தல் நிருபம் எனப்படுகிறது. இயேசுவின் சீடர்களால் முதலில் இரத்த சாட்சியாக மரித்தவர் யாக்கோபு. கடைசியாக கி.பி. 100ம் ஆண்டு மரித்தவர் அவரது சகோதரர் யோவான்.
நாம் இயேசுவின் அன்பை ருசித்திருக்கிறோம். இந்த அன்பை பிறருக்கும் சொல்லுவோம். அன்பானவர்களாக வாழுவோம்.
அன்பின் சிகரமான இறைவனே, நீர் எங்களில் அன்பு கூர்ந்திருக்கிறீர். உமது அன்பை இயேசுவில் ருசித்திருக்கிற நாங்கள் உம்மிடத்திலும், பிறரிடத்திலும் அன்பாய் இருக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
