அப்போஸ்தலர் 1 : 23-26 02 நவம்பர் 2020, திங்கள்
“சீட்டு மத்தியா பேருக்கு விழுந்தது.” – அப்போஸ்தலர் 1 : 26
இயேசு தம் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றிய பின்பு அச்செய்தி உலகமெங்கும் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தார். இதற்காக தம்மோடு இருந்து எல்லாவற்றையும் பார்த்து, கேட்டு சாட்சியிட சீடர்களைத் தெரிந்தெடுத்தார். அதிலிருந்து பன்னிரெண்டு பேரை பிரத்தியேகப்படுத்தினார். இயேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒரு இடம் காலியானது. இந்த இடத்தை வேறொருவன் நிரப்புவான் என்ற தீர்க்க தரிசனம் நிறைவேறவேண்டும். இதற்காக இயேசுவின் ஊழியத்தை அறிந்த, பங்கெடுத்த ஒருவரை தேர்ந்தெடுக்க தீர்மானித்தார்கள். விசுவாசிகள் கூடி தகுதியுள்ளவர்களாகக் கருதப்பட்ட பர்சபா என்ற யோசேப்பையும் மத்தியாவையும் முன் நிறுத்தினார்கள். இவர்களில் ஒருவரை குறித்து சீட்டுப் போடும் முன் தங்களை வழி நடத்தவும், கடவுள் தெரிந்தெடுக்கிறவரை காட்டும்படியும் மன்றாடினார்கள். அதன்பின் யூதர்கள் வழக்கப்படி சீட்டுப் போட்டார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழுந்தது. மத்தியா பன்னிருவருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். யுசேபியும், எப்பிபானியும் எழுதிய வரலாற்றில் மத்தியா எழுபத்து இரண்டு சீடர்களில் ஒருவர் என்று குறிப்பிடுகின்றனர். இவர் யூதேயாவில் நற்செய்தியை அறிவித்தார் என்றும் யூதர்களால் கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்றும் பாரம்பரிய வரலாறு கூறுகிறது.
அன்பானவர்களே நம்முடைய தெரிந்தெடுப்பு எப்படி இருக்கிறது? நமது விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தி தெரிந்தெடுக்கிறோமா? கடவுளின் சித்தத்திற்கு விட்டு விடுகிறோமா? யோசிப்போம். இப்படிப்பட்ட காரியங்களில் ஜெபத்திற்கு தனியுரிமை கொடுப்போம். காரியங்கள் எதுவானாலும் கடவுளிடம் ஒப்படைத்து அவர் சித்தத்தை அறிந்து செய்வோமேயானால் ஒன்று கூட தவறிப்போகாது என்பதை உணருவோம். நம் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி கடவுளின் விருப்பத்தை அறிந்து செயல்படுவோம். வழிகாட்ட வேதாகமம் நம் கைகளில் இருக்கிறது என்பதை மறவாதிருப்போம். இறைவார்த்தையில் நிலைநிற்போம். வாக்குத்தத்தங்களை நம்பி வாழ்வோம்.
எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிற கடவுளே! நாங்கள் வசனத்தில் நிலைத்திருந்து உம் சித்தத்தை ஆய்ந்தறிந்து செயல்பட கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
