அப்போஸ்தலர் 1 : 21-26 01 நவம்பர் 2020, ஞாயிறு
“பர்சபா எனப்பட்ட யோசேப்பு, மத்தியா என்ற இருவரை நிறுத்தி….. சீட்டுப் போட்டார்கள்.” – அப்போஸ்தலர் 1 : 20, 26
பர்சபா என்ற பெயருக்கு ஓய்வு நாளின் மகன் என்று பொருள். இவருக்கு யுஸ்து என்ற பெயரும் இருந்தது. கடவுளின் குமாரனான இயேசு மெய்யான மனிதனாக பிறந்து மீட்பின் பணியை நிறைவு செய்தார். இயேசுவில் மட்டுமே மீட்பு என்கிற செய்தியை உலகெங்கும் கொண்டு செல்ல சீடர்களைத் தெரிந்தெடுத்தார். இச்சீடர்களில் யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்து, பின்பு தற்கொலை செய்து கொண்டான். இயேசு விண்ணுலகம் சென்றபின் யூதாசின் இடத்தை நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது தீர்க்க தரிசனமுமாகும். எனவே தீர்க்கதரிசனம் நிறைவேற ஒரு சீடரைத் தெரிந்தெடுக்கத் தீர்மானித்தார்கள். இயேசு ஞானஸ்நானம் பெற்று ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் விண்ணுலகம் செல்லும் வரை சீடர்களோடு இருந்தவர்களில் ஒருவரைத் தெரிந்தெடுக்க முடிவு செய்தார்கள். பர்சபா எனப்பட்ட யோசேப்பையும், மத்தியாவையும் தெரிந்தெடுத்தார்கள். இருவர் மீதும் சீட்டுப் போட்டார்கள். திருவுளச் சீட்டு வழியாக மத்தியா என்பவர் தெரிந்தெடுக்கப்பட்டார். அவர் சீடர்களோடு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பர்சபா சீடராகத் தெரிந்தெடுக்கப்படவில்லை. அது கடவுளின் சித்தம். ஆனால் இயேசுவின் மீட்பின் ஊழியத்தை முழுமையாக அறிந்திருந்தார் என்பதே அவர் பண்புகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஓர் சிறப்பு வாக்கியம் உண்டு. அது ஒலிம்பிக் என்பது வெற்றி பெறுவதல்ல, அதில் பங்கடைவதே என்பதாகும். சீடர்களோடு இணையும் தகுதி பர்சபாவுக்கு இருந்தது என்பதே சிறப்பு. இயேசுவுக்கு பன்னிரெண்டு சீடர்கள் மட்டுமல்ல வேறே சீடர்களும் இருந்தார்கள். அவர்களிலிருந்து தான் பன்னிருவரைத் தெரிந்தெடுத்து அப்போஸ்தலர் என்று பெயரிட்டார். பர்சபாவும், மத்தியாவும் மற்ற சீடர்கள் கூட்டத்தில் இருந்தவர்கள் என்று எண்ண இடமிருக்கிறது.
அன்பானவர்களே! கடவுள் நம்மை இயேசுவின் சீடர்களாக அழைத்திருக்கிறார். கடவுள் தம் சித்தப்படி நம் ஒவ்வொருவருக்கும் பணிகளையும் தந்திருக்கிறார். நாம் நினைத்தது கிடைக்காமல் போனால் ஒதுங்கி நிற்கிறோமா, இணைந்து செயலாற்றுகிறோமா என்பதை சிந்திப்போம். இயேசு நம்மை அவருடைய சாட்சிகள் என்றார். உலகிற்கு உப்பு என்றார். மலையின் மேல் இருக்கிற பட்டணம் என்றார். இவை இயேசுவே மீட்பர் என்பதை சாட்சியிடுவதற்கான அறைகூவல். இருக்கிற இடங்களில், வாழுகிற இடங்களுக்கு ஆண்டவருக்கு சாட்சிகளாயிருப்போம். தீர்மானிக்கிற பொறுப்பை கடவுளிடம் விட்டுவிடுவோம். அது ஒரு போதும் தவறாகாது.
அன்பு நிறைந்த கடவுளே! நாங்கள் உம் பிள்ளைகள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உம் நேசக் குமாரனுக்கு சாட்சிகளாக வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
