vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 618 blog entries.

மத்தேயு 7 : 13-14                28 டிசம்பர் 2020, திங்கள்

“இயேசு அவனிடம்: வழியும் சத்தியமும் ஜீவனும் நானே; என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடம் வரான்.” – யோவான் 14 : 6

கடவுள் ஆழி சூழ் உலகைப் படைத்தார். அதில் தன்னோடு வாழும்படி மனிதனையும் படைத்தார். கடவுளோடுள்ள உறவில் வாழ வாழும் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். ஆனால் மனிதன் பாவம் செய்ததினால் கடவுளோடு வாழும் பாக்கியமான வாழ்வை இழந்து போனான். உலகில் பிறக்கிற அனைவரும் மரித்து தான் ஆகவேண்டும். மரணம் இயற்கையானது, இயல்பானது. மனிதன் மரிக்கும் போது கடவுளோடு வாழ ஆசைப்படுகிறான். தன் அறிவுக்கு தோன்றியபடியெல்லாம் முயற்சி செய்கிறான். வழி தெரியாது தவிக்கிறான். இயேசு விண்ணுலகம் செல்லும் முன்பு சீடர்களிடம், ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்  போகிறேன் என்றார். நான் போகிற வழி உங்களுக்குத் தெரியும் என்றார். தோமா இயேசுவிடம் நீர் போகிற இடம் தெரியாதே, வழி எப்படித் தெரியும் என்று கேட்டார். இதற்கு இயேசு சொன்ன பதிலே நமது தியானப் பகுதி.

கடவுள் மனிதர்முன் இரண்டு வழிகளை வைத்திருக்கிறார். ஒன்று வாழ்வுக்கும் அமைதிக்கும் செல்லுகிற வழி. அடுத்தது சாவுக்கும் துன்பத்திற்குமான வழி. மனுக்குலம் அழியா வாழ்வைப் பெறவேண்டும். நித்திய வாழ்வில் இணைய வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இதை அடைகிற வழியைத் தான் கடவுள் இயேசுவில் உருவாக்கியிருக்கிறார். இயேசுவின் வழி கிருபையின் வழி. அவர் மரித்து விண்ணுலகம் சென்றார். புதிதும் ஜீவனுமான வழியைத் திறந்து வைத்திருக்கிறார். அது கிருபையின் வழி. இயேசு புதிய ஆதாரமாக வந்தார். அவர் உபதேசம் புதிது. அவர் கட்டளைகள் புதிது. அவருடைய வழியும் புதிது. இயேசு விண்ணுலக வாழ்வைப் பெற தடையாய் இருந்தார். இயேசு நமது பாவத்தை தம்மீது ஏற்று சிலுவையில் மரித்ததால் விண்ணுலக வாழ்வின் வாசல் நமக்குத் திறந்திருக்கிறது.

இயேசு விண்ணுலக வாழ்வுக்கு வழிமட்டுமல்ல, விண்ணுலக வாழ்க்கை வழித் துணையும் அவரே. காரணம் வாழ்வுக்குச் செல்லும் வழி ஒடுக்கமானது. வாசல் இடுக்கமானது. இந்த வழி நம்மை நித்திய இளைப்பாறுதலுக்கு வழிநடத்துகிறது. அதேவேளையில் அழிவுக்குச் செல்லும் வழி அகலமானது, அதன் நுழைவாயில் விரிவானது. இதில் இலகுவாக செல்லலாம்.

கிறிஸ்தவத்தை புதிய நெறி, புதிய வழி என்று அழைப்பார்கள். இயேசுவில் வைக்கிற விசுவாசத்தினால் நித்திய வாழ்வின் பாதையை கண்டிருக்கிறோம். இயேசு என்னை பின்பற்றி வா என்று நம்மை அழைக்கிறார். அவரது கரங்களை நாம் பற்றிக் கொள்வோம். அவர் அடிச்சுவடுகளை பின்பற்றி அழியாத நிலையான நிறைவான வாழ்வைப் பெறுவோம். இயேசுவில் தான் நம் விடுதலைப் பயணம் நிகழ்கின்றது. அன்பின் வழியைப் பின்பற்றி இயேசுவோடு என்றென்றும் நடப்போம்.

வாழும் வழிமுறைகளை வகுத்துத் தந்த கடவுளே! வழி தவறி, உம்மைக் கண்டடைய தடுமாறிய போது இயேசுவை வழியாக தந்தீர், நன்றி. அவரோடு இணைந்து பயணப்பட கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

2020-12-21T10:56:41+00:00

யோவான் 10 : 11-15           25 டிசம்பர் 2020, வெள்ளி

“….நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”– யோவான் 10 : 11

மனித வரலாற்றில் பழம்பெரும் நாகரீகம் ஆற்றோரங்களில் தான் தோன்றியது. ஆடு மேய்ப்பது அவர்கள் தொழிலாக இருந்தது. இதன்பின் விவசாயத் தொழிலில் ஈடுபட்டார்கள். விவசாயத்தின் இணைத் தொழிலாக மேய்ப்புத் தொழில் விளங்கியது. இது மானுட வரலாற்றில் செல்வச் செழிப்புமிக்கத் தொழிலாக அமைந்திருந்தது.

மேய்ப்பர்கள் மானுட வரலாற்றில் நாடோடிகளாக உலகை வலம் வந்தார்கள். உலகை ஆக்கிரமித்தார்கள் என்பதும் வரலாறு. இஸ்ரவேலரும் இத்தகைய தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்கள். கடவுளை மேய்ப்பவராகப் பார்ப்பது எல்லா சமயங்களிலும் காணப்படுகிறது. இஸ்ரவேலர் தீர்க்கர்களையும் அரசர்களையும் மேய்ப்பவர்களாக கருதினார்கள். கடவுளையும் மேய்ப்பராக எண்ணினார்கள். தங்களை கடவுளின் மந்தையாக சித்தரித்தார்கள். சங்கீதம் 23-ல் கடவுள் நம் மேய்ப்பர் என்று தாவீது விளக்குகிறார். இதன் மத்தியில் இயேசு தம்மை நல்ல மேய்ப்பராக குறிப்பிடுகிறார். இயேசுவின் பிறப்பை முன் அறிவிக்கிற மீகா தீர்க்கர் என் ஜனமாகிய இஸ்ரவேலை மேய்த்து நடத்தும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று கூறியதை எடுத்துக் காண்பிக்கிறார். மேய்ப்பர்கள் மந்தையை நேசிக்கிறவர்கள், நம்புகிறவர்கள், அறிகிறவர்கள், பாதுகாக்கிறவர்கள், நெறிப்படுத்து கிறவர்கள், வழி நடத்துகிறவர்கள், தன்னலத்தைத் துறந்து தியாக உணர்வோடு அளவில்லா பொறுமையோடும் வாழ்கிறவர்கள் என்பதை அறிய முடியும்.

இயேசு மந்தையின் ஆடுகளைத் தேடிவந்தார். காணாமல் போயிருந்தவற்றை கண்டுபிடித்தார். அல்லும் பகலும் மந்தையைப் பாதுகாக்கிறார். இவை எல்லாவற்றிற்கும் மேலாக மந்தை அழியா வாழ்வைப் பெறவேண்டும் என்பதற்காக தன் உயிரை ஈந்து ஆடுகளை காப்பாற்றியிருக்கிறார். இயேசுவின் அன்பு கல்வாரி சிலுவையில் வெளிப்பட்டது. தம் மந்தையிலுள்ள ஒவ்வொரு ஆட்டையும் பெயர் சொல்லி அழைக்கும்படி ஒவ்வொரு ஆட்டையும் அறிந்திருக்கிறார். மேற்கூறிய பண்புகளால் இயேசு நல்ல மேய்ப்பராக திகழ்கிறார்.

நாம் கடவுளின் மந்தை. இயேசு நல்ல மேய்ப்பர். பிரதான மேய்ப்பராம் கடவுளிடம் நம்மைச் சேர்க்கும்படி நாம் வாழுகிற இடங்களில் நம்மை மேய்த்து நடத்தும்படி மேய்ப்பர்களை தந்திருக்கிறார். நாம் சிதறிப்போகாதபடி கள்ள உபதேசத்தால் வழி விலகாதபடி இருக்க திருச்சபைகளை ஏற்படுத்தியிருக்கிறார். திருச்சபையில் இணைந்திருப்போம். கிருபையின் எத்தனங்களில் பங்கடைவோம். மறுமையில் கடவுளோடிருக்கிற வாழ்வைப் பெறுவோம்.

பிதாவின் மேய்ப்பரே, எங்களை இயேசுவின் வழியில் உம் மந்தையில் சேர்த்திருக்கிறீர். மந்தையை விட்டு விலகாமல் இணைந்திருக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

2020-12-21T10:51:09+00:00

மத்தேயு 12 : 38-40                             23 டிசம்பர் 2020, புதன்

“…மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.” – மத்தேயு 12 : 40

அறிவர் மார்ட்டின் லுத்தர் அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம் இரண்டாம் பிரிவுக்கு அர்த்தம் சொல்லும் போது `பிதாவினிடத்தில் அநாதியாய் பிறந்த மெய்யான கடவுளும், கன்னிமரியாளிடத்தில் பிறந்த மெய்யான மனிதனுமாயிருக்கும் இயேசுகிறிஸ்து என் கர்த்தரென்று விசுவாசிக்கிறேன்’ என்று குறிப்பிடுவார்.

இயேசு எப்படி மெய்யான கடவுளோ அதேபோல் அவர் மெய்யான மனிதனுமாவார். நேற்று இயேசு மெய்யான கடவுள் என்று தியானித்தோம். இன்று இயேசு மெய்யான மனிதன் என்பது குறித்து தியானிப்போம். ஆதித்திருச்சபை இயேசுவுக்கு அளித்த சிறப்பு பெயர் இது. அடிப்படையில் இது மனித நிலையைக் குறிக்கும் ஒரு சொற்றொடர். திருமறை இயேசுவை மனிதன் என்று தெளிவாக அழைக்கிறது. அவருக்கு மனித உடலும் உள்ளமும் உண்டென்று காண்கிறோம். அவருக்கு மனித உணர்வுகளும் செயல்களும் இருப்பதை காண்கிறோம். இதனால் அவர் மெய்யான மனிதன் என்பதை தெளிவுபடுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் இச்சொற்றொடர் வழக்கமாக மனித குணத்தை குறிக்கும். மறுபுறம் மனிதத் தன்மையின் சிறுமையையும், நிலையில்லா தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னையே குறித்துக் காட்டப் பயன்படுத்திய சிறப்பு பெயர் இது எனலாம். மனித குமாரன் என்ற பெயர் வரும் கூற்றுகளில் ஒன்றைத் தவிர அனைத்தும் இயேசு தன்னைப் பற்றி பேசும்போது கூறியவையாகும்.

இயேசு தம்மிடம் அடையாளம் கேட்ட மக்களுக்கு யோனாவின் அடையாளத்தை நினைவுபடுத்தினார். யோனா மீனின் வயிற்றில் இருந்ததை ஒப்பிட்டு மனுஷகுமாரன் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்றார். மனுக்குல வாழ்வுக்காக இயேசு பாடுபட்டு மரிப்பார். மரித்த இயேசு அடக்கம் பண்ணப்படுவார். இயேசு இரவு பகல் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனா மீனின் வயிற்றில் இருந்து உயிருடன் வெளி வந்ததைப் போல இயேசு உயிருடன் எழுந்து வருவார் என்றார். இயேசு மெய்யான மனிதனாக பாடுகளை பெற்றுக் கொண்டார். மனித உணர்வும் வேதனைகளும் அவருக்கு இருந்தன. எனவே தம்மை விசுவாசிக்கும் மக்களுடைய உணர்வுகளை இயேசு அறிகிறார். சவுலிடம் ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய் என்று கேட்ட கேள்வி இதை தெளிவுபடுத்துகிறது.

இயேசு தலை. நாம் அந்த தலையில் இணைந்திருக்கிற அவயங்கள். எந்த உறுப்புக்கு வேதனை வந்தாலும் தலை உடனே அறியும். இதுவே நமக்கு இருக்கிற மிகப்பெரிய பலம். நம் பிரச்சனைகள், வேதனைகள், பசி, பட்டினி, தாகம், இழப்புகள் அனைத்தும் இயேசு அறிவார். ஏனெனில் அவர் மெய்யான கடவுளும் மெய்யான மனிதனுமாக இருக்கிறார். இந்த தைரியத்தில் துணிவோடு வாழுவோம்.

அன்புள்ள ஆண்டவரே! உமது நேசகுமாரனை மெய்யான மனிதனாகத் தந்தீர், நன்றி. இயேசு எங்களுக்குரிய அனைத்தையும் அறிவார். ஏற்ற சமயம் உதவி செய்வார் என்ற உறுதியில் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

2020-12-21T10:36:42+00:00

தூதர்கள் – செய்தியைச் சுமந்து வருபவர்கள்

லூக்கா 1 : 11-15                                        08 டிசம்பர் 2020, செவ்வாய்

“தூதனோ அவனை நோக்கி சகரியாவே, பயப்படாதே.” – லூக்கா 1 : 13

உலக ஆரம்பத்தில் கடவுள் நாம் காண்கிற மண்ணுலகையும், நாம் காணாத விண்ணுலகையும் படைத்தார். மண்ணுலகில் சிறந்த படைப்பு மனிதன். விண்ணுலகில் சிறந்த படைப்பு தூதர்கள். தூதர்கள் பரிசுத்தத்திலும், பாக்கியத்திலும் நிலைவரப்படுத்தப்பட்டவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அதிக ஆற்றல் கொண்டவர்கள். தூதர்கள் என்ற பெயர் தன்மையைச் சுட்டிக்காட்டும் பெயரல்ல. அது செயலைக் குறிக்கும் பெயர். செய்தியைக் கொண்டு வரும் தூதர் என்பதே இதன் பொருள். கடவுளுக்கு ஊழியம் செய்பவர்கள். இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தம் ஊழியஞ் செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள். இரட்சிப்பின் வரலாற்றில் முக்கிய செய்திகளை அறிவிக்கிறவர்கள் இவர்கள்.

நமது பார்வைக்கு தூதர்கள் தோன்றுவதில்லை. விண்ணக சேனை முழுமையும் கடவுளின் புகழைப் பாடுகிறார்கள். இந்த தூதர்களைக் கொண்டு கடவுள் உலகை ஆளுகிறார். தமது திருவுளத்தை நிறைவேற்றுகிறார். இவர்கள் விண்ணுலகையும் மண்ணுலகையும் இணைக்கிறவர்கள். மனிதர்களின் ஜெபங்களை கடவுளிடம் எடுத்துச் செல்கின்றனர். பாவிகள் மனந்திரும்பும் போது ஏற்படும் மகிழ்ச்சியில் பிதாவோடு தூதர்களும் பங்கு கொள்ளுகிறார்கள். கபிரியேல் தூதன் என்றால் கடவுளின் வீரர் என்று பொருள். இவர் இரண்டு முறை கடவுளின் செய்தியை அறிவிக்க கடவுளால் அனுப்பப்பட்டார். சகரியாவிடம் ஒரு முறையும் மரியாளிடம் ஒரு முறையும் அனுப்பப்பட்டார். சகரியா, கபிரியேல் தூதன் சந்திப்பே நமது தியானப்பகுதி. சகரியா தூபங்காட்டிக் கொண்டிருந்தபொழுது தனிமையில் தூதன் சந்திக்கிறார். தூதனின் காட்சி சகரியாவுக்கு பயத்தை ஏற்படுத்திற்று. பயப்படும் மனிதர்களிடம் தூதர் வழக்கமாகக் கூறும் வார்த்தை, பயப்படாதே என்பதாகும். வயது முதிர்ந்த இவருடைய உள்ளத்தில் இருந்த குறை கடவுளின் முன் மன்றாட்டாகத் தினம்தினம் ஏறெடுக்கப்பட்டு வந்துள்ளது என்பது இங்கு தெளிவாகிறது.

தூதன் சகரியாவுக்கு மகன் பிறப்பான் என்றும் அவர் உயர்வுகள் பண்புகள் அனைத்தையும் அறிவிக்கிறார். முதுமையினிமித்தம் சகரியா மனது குழம்புகிறது. கடவுள் சொல்லி அனுப்பிய செய்தியைக் குறித்து சந்தேகப்படுகிறார். பேச்சை இழந்தார். ஆனால் தூதர் சொன்னபடியே எல்லாம் நடந்தது.

அன்பானவர்களே கடவுள் இன்றும் நம்மை தூதரைக் கொண்டு காப்பாற்றுகிறார். தூதர்கள் இன்றும் நம்மோடு பாதுகாவலராக இருக்கிறார்கள் என்பதை மறவாதிருப்போம். இறைவார்த்தைகள் நம் கைகளில் இருக்கின்றன. அதை வாசிக்கும் போதெல்லாம் கேட்டு படிக்கும்போதெல்லாம் கடவுள் நம்மோடு பேசுகிறார். இறை வார்த்தையை நம்புவோம். துணிவோடு வாழுவோம்.

விண்ணையும் மண்ணையும் படைத்தவரே, உம் வார்த்தையால் அனுதினம் எங்களோடு பேசும். உம் வார்த்தைகளை சந்தேகமின்றி நம்பி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

தூதர்கள் – செய்தியைச் சுமந்து வருபவர்கள்2020-12-07T09:48:54+00:00

சகரியா – நீதிமான்

லூக்கா 1 : 8-13                   01 டிசம்பர் 2020, செவ்வாய்

“சகரியாவே, பயப்படாதே உன் ஜெபம் கேட்கப்பட்டது;….” – லூக்கா 1 : 13

சிறையிருப்பின் பொழுது இருபத்து நான்கு ஆசாரிய வகுப்பினரும் சிறை சென்றனர். இவர்களில் நான்கு வகுப்பினர் திரும்பி வந்தனர். இந்த நான்கு வகுப்பினரும் மீண்டும் இருபத்து நான்கு வகுப்புகளாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு பழைய வகுப்பினரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. இவற்றுள் ஒன்றான அபியாவின் வகுப்பைச் சார்ந்தவரே சகரியா. சகரியா என்ற பெயருக்கு கடவுளினால் நினைவு கூரப்பட்டவர் என்று பொருள். இவர் திருமுழுக்குநர் யோவானின் தந்தை. அத்துடன் இயேசுவின் தாயாகிய மரியாளின் உறவினரான எலிசபெத்தின் கணவர். நீதிமானான குருவானவர். நீதிமான் என்ற வார்த்தை சிறந்த பொருளுடையது. சகரியாவும் எலிசபெத்தும் நீதிமான்கள். இவர்கள் கடவுளின் கற்பனைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்ததால் நீதிமான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சன்மார்க்க நியதிகளையும் தொழுகை நியதிகளையும் கடைபிடித்தனர். வயது முதிர்ந்த சகரியாவின் உள்ளத்தில் குழந்தை இல்லை என்கிற ஏக்கம் இருந்தது. இவர் கடவுளிடம் இதை மன்றாட்டாக தினம் தினம் ஏறெடுத்து வந்தார்.

சகரியா ஆலயத்தில் தூபம் காட்டிக் கொண்டிருந்த பொழுது வானதூதர் அங்கு தோன்றினார். இது சகரியாவுக்கு பயத்தை ஏற்படுத்தியது. மனிதர் பயப்படும்பொழுது வானதூதர் வழக்கமாகக் கூறும் வார்த்தை பயப்படாதே என்பதாகும். வானதூதர் சகரியாவிடம், ‘உன் ஜெபம் கேட்கப்பட்டது. உன் ஜெபத்தின்படியே உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவருக்கு யோவான் என்று பெயரிடு என்றார். சகரியா தன் வயது முதிர்ச்சியினிமித்தம் இந்நிகழ்வுக்கு அடையாளம் கேட்டார். இதனால் வானதூதர் இந்நிகழ்வு நடக்கும் வரை வாய் பேசாதபடி செய்தார்.

குழந்தை பிறந்து அதற்கு விருத்தசேதனம் செய்யும் நாள் வந்தபோது சகரியா தம் மனைவி கூறிய யோவான் என்ற பெயரையே எழுதி காண்பித்தார். மக்கள் ஆச்சரியப்பட்டனர். சகரியா பேசத் தொடங்கினார். மேசியா பற்றிய இஸ்ரவேலரின் நம்பிக்கை நிறைவேறுவது குறித்து இறைவாக்குரைத்தார். அன்பானவர்களே! நம் உள்ள உணர்வுகளை அறிகிறவர் கடவுள். நம் எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் அறிவார். நமக்கு எது தேவை எப்பொழுது தேவை என்பதை அறிவதால் தம் சித்தப்படி, நேரப்படி நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையில் வாழ இந்த வரலாற்று நிகழ்வு நம்மை அழைக்கிறது. இந்த நம்பிக்கையில் நிலைத்திருந்து வாழ்வோம்.

விண்ணகத் தந்தையே! நீர் எங்கள் தந்தையாய் எங்கள் தேவைகளை அறிகிறீர். கடவுள் தம் சித்தப்படி, சித்தமான வேளையில் தருவார் என்ற நிச்சயத்தில் வாழக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

சகரியா – நீதிமான்2020-11-30T11:31:27+00:00

அகிரிப்பா – கட்டிடப் பிரியர்

அப்போஸ்தலர் 26 : 30-32                             27 நவம்பர் 2020, வெள்ளி

“இவன் இராயனுக்கு அபயமிடாதிருந்தால் இவனை விடுதலை பண்ணலாகும்.” – அப்போஸ்தலர் 26 : 32

அகிரிப்பா, முதலாம் அகிரிப்பாவின் மகனாவார். இதனால் இவர் இரண்டாம் அகிரிப்பா என்று அழைக்கப்படுகிறார். இவர் கிலவுதியா பேரரசனால் ரோம அரசின் சில சிறிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்பு திபேரியா முதலிய பல மாவட்டங்களுக்கு ஆளுநரானார். பவுலடிகளார் உயிர்த்தெழுதலை மாத்திரம் நம்புகிறவரல்ல, அதோடு இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையும் உடையவர். அதனால் உயிர்த்தெழுதல் குறித்து உறுதியுடன் பேசினார். அகிரிப்பா இதுபற்றி தானும் விரிவாக அறிய விரும்பினார். அகிரிப்பா பவுலடிகளாரை சட்டத்திற்குத் தேவையான ஒழுங்குடன் விசாரிக்க ஆரம்பித்தார். செசரியாவின் ஐந்து சேனாதிபதிகள் படைகள் இருந்தன. உள்ளாட்சி அதிகாரிகளும் அங்கு குழுமி இருந்தார்கள். அதிகார சுற்றத்திற்குத் தேவையான மரியாதையோடு பெஸ்து பவுலடிகளாரை விசாரிக்கும்படி அகிரிப்பாவிடம் அனுமதி பெற்றார்.

அகிரிப்பா எருசலேமிலுள்ள அசமோனிய அரண்மனையை பெரிதாக்கினார். செசரியாவில் பல கட்டிடங்களை கட்டி எழுப்பினார். மதத்தின் மீது ஆர்வம் அற்றவராகவே வாழ்ந்தார். இவர் யூதர்களை வெறுத்தார். ரோமருக்கு விசுவாசமுள்ளவராக இருந்தார். ஆலயங்களில் அதிகாரம் செலுத்தினார். குருத்துவத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார். இதனால் எருசலேம் குருக்கள் இவரை வெறுத்தனர். கி.பி. 60-70-ல் ரோமாபுரி மக்களுக்கும் யூதர்களுக்குமிடையே போர் நடந்தது. இப்போரில் இவர் ரோமாபுரி மக்கள் பக்கமே விசுவாசமாயிருந்தார். போரின் முடிவில் இவர் தீத்துவோடு ரோமபுரி சென்றார். அங்கு ரோமப் படைத்தலைவனாக நியமிக்கப்பட்டார். கி.பி. 100-ல் மரித்தார். அகிரிப்பா முன் பவுலடிகளார் பேசி தம் நியாயத்தை எடுத்து வைத்தார். அவற்றைக் கேட்ட அகிரிப்பா பவுலடிகளார் ரோமாபுரி பேரரசருக்கு முறையீடு செய்யாமலிருந்திருந்தால் அவரை விடுதலை செய்திருக்கலாம் என்றார். இதிலிருந்து யூதர்களும் தெர்த்தல்லுவும் சாட்டிய குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை அகிரிப்பா அறிந்திருந்தார் என்பது நமக்கு புரிகிறது.

அன்பானவர்களே, நாம் மனசாட்சிக்கு மாறாக நடக்காமலும் பேசாமலுமிருப்போம். நம்மைப் பார்க்கிற, நம் பேச்சைக் கேட்கிற மக்கள் மனதில் கடவுள் செயலாற்றுகிறார். பவுலடிகளார் தன் பிரச்சனைகள் அனைத்தையும் கடவுளுக்காக ஏற்றார். அத்துடன் கடவுளின் தீர்மானத்தின்படி அவர் ரோமாபுரியில் சாட்சியிட வேண்டியிருந்தது. நம்மை கடவுளின் கரத்தில் ஒப்புவிப்போம். அவர் நடத்துகிற பாதையில் நடப்போம்.

கடவுளே! நீர் எங்கள் உள்ளங்களை ஆராய்ந்து அறிகிறீர். உமக்கு எங்களை ஒப்புவித்து, உம்மை நம்பி, உம்மைச் சார்ந்து வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

அகிரிப்பா – கட்டிடப் பிரியர்2020-11-24T09:10:31+00:00

பேலிக்ஸ் – இருமனமுள்ளவன்

அப்போஸ்தலர் 24 : 22-27                                        25 நவம்பர் 2020, புதன்

“பவுலைக் காவல் பண்ணவும் கண்டிப்பில்லாமல் நடத்தவும்….. கட்டளையிட்டான்.” – அப்போஸ்தலர் 24 : 23

பேலிக்ஸ் கிலவுதி பேரரசனால் விடுதலையாக்கப்பட்ட ஓர் அடிமை. இவர் சிறிது சிறிதாக அதிகாரத்தில் உயர்வு பெற்று செசரியாவின் ஆளுநராய் ஆனார். கூபானுக்குப் பிறகு கி.பி. 52-ல் இருந்து கி.பி. 60 வரை யூதேயாவின் ஆளுநராக இருந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாம் மனைவி முதலாம் ஏரோது அகிரிப்பாவின் மகள் துருகில்லாள். இக்கால கட்டத்தில் சேனாதிபதியாக இருந்தவர் கிலவுதியு லீசியா. இவர் பவுலடிகளாரை கொலை செய்யும் திட்டத்தை அறிந்தார். பவுலடிகளாரின் உயிரைப் பாதுகாக்க பேலிக்ஸ்க்கு கடிதம் எழுதி அவரை பத்திரமாக பேலிக்சிடம் அனுப்பி வைத்தார். பேலிக்ஸ் கடிதத்தைப் படித்து செய்தியை அறிந்து, ஏரோதுவின் கோட்டை மாளிகையில் பவுலை காவலில் வைத்தார். ஜெசிபஸ், டசிடஸ் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் பேலிக்ஸ் ஆட்சியில் மக்கள் சமாதானத்தையும் சவுக்கியத்தையும் அனுபவிக்கவில்லை என்று எழுதி வைத்திருக்கிறார்கள். பவுலடிகளார் கடைசிப் பயணமாக எருசலேமுக்குச் சென்று அங்கு சிறைப்படுத்தப்பட்டபோதும் பேலிக்ஸ் ஆளுநராக இருந்தார். இவர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதால் நீரோ மன்னனால் பேலிக்ஸ் திரும்ப அழைக்கப்பட்டார், தண்டிக்கப்பட்டார். புதிய ஆளுநராக பெஸ்து நியமிக்கப்பட்டு, பவுலடிகளார் ஒப்படைக்கப்பட்டார்.

பேலிக்ஸ், பவுலடிகளாரிடம் உன் காரியத்தை தீர விசாரிப்பேன் என்றார். அதுவரை பவுலடிகளாரை கண்டிப்பில்லாத காவலில் வைக்க அவருக்கு பணிவிடை செய்பவர்களை தடை பண்ணக்கூடாது என்றும் கட்டளையிட்டார். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஒன்று செல்வந்தரான பவுலடிகளாரிடம் பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்யலாம். இரண்டு தன் மனைவி லீசியாவிடமிருந்து பல தகவல்களை பெறலாம். அதனடிததளத்தில் விடுதலை செய்யலாம். மூன்று யூதர்களை பிரியப்படுத்தவேண்டும் என்பது.

அன்பானவர்களே பவுலடிகளார் ரோமபுரியில் சாட்சி பகரவேண்டும் என்பது கடவுளின் திட்டம். அதனால் அவர் பவுலின் உயிரைப் பாதுகாக்க பலரை கருவியாகப் பயன்படுத்துகிறார். கடவுள் வரலாற்றில் செயலாற்றுகிறவர். நமக்கு உதவி எப்பொழுது தேவையோ அப்பொழுது மக்கள் வழியாக அதைச் செய்கிறார். கடவுளின் பாதுகாப்பும் பராமரிப்பும் எப்பொழுதும் நமக்கு உண்டு என்ற உறுதியில் வாழ்வோம்.

வரலாற்றின் நாயகரே! உம் வழிகளையும் எண்ணங்களையும் எங்களால் அறிய இயலாது என்பதை எப்பொழுதும் உணர்ந்து உம்மை நம்பி வாழ துணை புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

பேலிக்ஸ் – இருமனமுள்ளவன்2020-11-23T08:00:40+00:00

தெர்த்துல்லூ – வழக்கறிஞர்

அப்போஸ்தலர் 24 : 1-8                                              24 நவம்பர் 2020, செவ்வாய்

“பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடம் பிராது பண்ணினார்கள்.” – அப்போஸ்தலர் 24 : 1

பவுலடிகளார் ஆலோசனை சங்கத்தாரால் விசாரிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொலை செய்யும் திட்டத்தை சேனாதிபதியாகிய கிலவுதியு லீசியா அறிந்து அவரை தேசாதிபதியாகிய பேலிக்சினிடம் அனுப்பி வைத்தார். பவுல் சிலிசியா நாட்டைச் சேர்ந்தவர் என்று பெலிக்ஸ் அறிந்து, ‘உன் காரியத்தை திட்டமாய் விசாரிப்பேன்’ என்று சொல்லி பவுலை ஏரோதுவின் கோட்டை மாளிகையில் காவலில் வைத்தான். ஐந்து நாட்களுக்குப் பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா சில மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்ற வழக்கறிஞரோடும் சென்று தேசாதிபதியிடம் குற்றஞ்சாட்டினார்கள். பேலிக்ஸ் என்ற ரோம ஆளுநரின் முன் பவுலடிகளார் மீது குற்றம் சாட்டிய வழக்கறிஞர் தெர்த்துல்லு இவர் ரோமனா? கிரேக்கனா? யூதனா? என்று முடிவாகக் கூற முடியவில்லை என்றார். அதனால் தெர்த்துல்லு யூதனாயிருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. ஒருவேளை வழக்குகளில் வாதாடுவதற்கென்று இவர் எல்லா சட்டங்களையும் படித்து பொது வழக்கறிஞராகவும் இருக்கலாம்.

தெர்த்துல்லு நல்ல மொழி நடையில், வசீகரிக்கும் பாணியில் பேச வல்லவர். பெலிக்ஸ்சின் முன் அரசியல் குற்றசாட்டுகளையே பவுலடிகளார் மீது சுமத்தினார். கொள்ளைநோய் மக்களை தொடர்ந்து பாதிக்கும். அதுபோலவே மக்களை இவன் பேச்சு பாதிக்கிறது. இதனால் இவர் ஒரு கொள்ளை நோய் என்றார். அடுத்து பவுலடிகளார் யூதருக்குள் கலகமூட்டுகிறான் என்றார். இறுதியாக நசரேய மதப் பிரிவுக்கு தலைவன் என்றார்.

நசரேய இயக்கம் ஒரு மேசியா இயக்கமாகும். அது ரோம அரசுக்கு எதிரானது என்று புரூஸ் அறிஞர் குறிப்பிடுகிறார். நசரேய இயக்கம் கிறிஸ்தவரைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். இயேசு நாசரேத்தூரார். ஆகையால் இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவத்தை ஒரு மதிப்பில்லாத வெறுக்கப்படும் இயக்கமாக சித்தரிக்க தெர்த்துல்லு முயன்றார். அதுமட்டுமல்ல ஆலயத்தை இவன் தீட்டுப்படுத்தப் பார்த்தான், ரோமர்களால் அங்கீகரிக்கப்பட்ட யூத ஆளுகை மன்றத்தை எதிர்த்து கலகமூட்டுபவன் என்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் பெஸ்து மரணதண்டனைக்கு ஏதுவான ஒன்றையும் பவுல் செய்யவில்லை என்று முடிவு செய்தார்.

அன்பானவர்களே நாம் கடவுளுக்குப் பயந்து அவர் வார்த்தையில் நிலைத்து வாழுவோம். யார் எந்த பொய்யான குற்றச்சாட்டுகள் சொன்னாலும், எதையும் வளைத்து திரித்து சொன்னாலும் அவைகளை கடவுள் கண்காணிக்கிறார். அவர் அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்குவார். இந்த நிச்சயத்தில் வாழ்வோம்.

உலக நியாயாதிபதியாகிய கடவுளே, நாங்கள் என்றும் எப்பொழுதும் உம் வழிகளிலேயே நடக்க, வார்த்தையில் நிலை நிற்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

தெர்த்துல்லூ – வழக்கறிஞர்2020-11-23T07:57:29+00:00

லீதியா – விருந்தோம்பல்

அப்போஸ்தலர் 16 : 13-15                                      20 நவம்பர் 2020, வெள்ளி

“என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று…. வருந்திக் கேட்டுக் கொண்டான்.” – அப்போஸ்தலர் 16 : 15

பவுலடிகளார் தம் இரண்டாம் நற்செய்தி பயணத்தில் பிலிப்பு பட்டணம் வந்து சேர்ந்தார். ஓய்வு நாளில் ஜெபம் பண்ண இடந்தேடினார். இதற்காக ஆற்றங்கரை ஓரமாகப் போனார். யூத ஜெப ஆலயங்கள் கடற்கரை, ஆற்றங்கரையில் பொதுவாகக் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆசிரியர் ஜெசிபஸ் குறிப்பிடுகிறார். தியத்தீரா, லீதியா ஆகிய இடங்களில் மக்கதோனியர்கள் குடியிருந்தார்கள். கி.மு. 133-ல் இது சின்னாசிய பகுதியின் அங்கமானது. தியத்திரா, லீதியா ஆகிய பகுதிகள் யூதக் காலனிகளாய் இருந்தன. இங்கு வாழ்ந்தவர்களுக்கு யூத சமயத்தைக் குறித்த அறிவு இருந்தது. லீதியா என்பது ஒரு பட்டணம். இங்குள்ள லீதியர்கள் இரத்தாம்பரம் விற்பனையில் முன்னோடிகள் என்று `ஹோமர்’ என்பவர் எழுதியிருக்கிறார். லீதியா இந்நகரைச் சேர்ந்தவராக இருந்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவர் யூதப் பெண்ணாக இருக்கலாம். இரத்தாம்பரம் விற்பதே இவரது தொழில். இதனால் இவர் ஓரளவுக்கு பண வசதியுள்ளவராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

பவுலடிகளாரும் மற்றவர்களும் ஜெபிக்கச் சென்றபோது அங்கு பெண்கள் கூடினார்கள். அவர்களில் லீதியாவும் ஒருவர். இக்கூட்டத்தைக் கண்டதும் பவுலடிகளார் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். பவுலடிகளாரின் செய்தியைக் கேட்ட லீதியா மனமாற்றம் அடைந்தாள். அவளும் அவள் குடும்பத்தினரும் திருமுழுக்குப் பெற்றனர். லீதியா பவுலடிகளாரையும் அவருடன் இருந்தவர்களையும் தங்கள் வீட்டில் தங்க வற்புறுத்தி உணவளித்தாள். அன்னியரை உபசரிப்பதும் விருந்தோம்பல் செய்வதும் கடவுள் விரும்புகிற காரியங்கள். பவுலடிகளாருக்கு மிகவும் பிடித்தத் திருச்சபை பிலிப்புத் திருச்சபை. மேலும் மற்ற எந்த திருச்சபையிடமிருந்தும் உதவியும் நன்கொடைகளும் பெறாத பவுலடிகளார் பிலிப்பு திருச்சபையிடமிருந்து மட்டும் இவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ளுகிறார். பிலிப்பு திருச்சபைக்கும் பவுலடிகளாருக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவுக்கு லீதியாவின் விருந்தோம்பும் பண்பே முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.

வசனத்தை போதிப்பவர்களை நேசிப்போம். அவர்களை போஷிப்போம். அவர்களது பணியில் உதவுவதன் வழியாக கடவுளை உபசரிக்கிறவர்களாவோம்.

அன்பு நிறைந்த கடவுளே! உம் வார்த்தையை கேட்டு ஏற்றுக் கொள்ளவும் வார்த்தைகளை தந்தவரை உபசரித்து ஊக்கப்படுத்த அதன் வழியாய் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

லீதியா – விருந்தோம்பல்2020-11-19T11:46:42+00:00

சீலா – விசுவாசிகளில் சிறப்பானவர்

அப்போஸ்தலர் 15 : 22-27                                                   17 நவம்பர் 2020, செவ்வாய்

“அப்படியே யூதாசையும் சீலாவையும் அனுப்புகிறோம்.” – அப்போஸ்தலர் 15 : 27

சீலா என்ற பெயருக்கு `சோலை’ என்று பொருள். இவர் ஒரு யூதன். ரோம குடியுரிமை பெற்றவர். சமூகத்தில் நல்மதிப்புப் பெற்றவர். சீலா என்ற பெயர் லத்தின் மொழியில் `சில்வானஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இவர் ஒரு தீர்க்கதரிசியுமாவார். அப்போஸ்தலர் நடபடியில் சீலா என்றும் நிருபங்களில் சில்வானு என்றும் குறிப்பிடப்படுகிறார். பவுலடிகளார், தூய பேதுரு ஆகியோருடன் நற்செய்திப் பணிகளில் பங்கு பெற்றவர். அந்தியோகியாவில் பிரச்சனை எழுந்தபோது அப்போஸ்தலர்களின் பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்களில் சீலாவும் ஒருவர்.

பவுலடிகளாரின் இரண்டாம் நற்செய்திப் பயணத்தில் மாற்குவுக்குப் பதிலாக சீலா சென்றார். இப்பயணத்தில் இக்கோனியா, கலாத்தியா, பிரிகியா, சீரியா, சிலிசியா ஆகியப் நகரங்களுக்குச் சென்று பணிபுரிந்தார். பவுலடிகளாருடன் அவரது சிறை வேதனைகளையும் பகிர்ந்து கொண்டார். தெசலோனிக்கே, பெரேயா பட்டணங்களில் குழப்பம் ஏற்பட்டபோது உடனிருந்த பவுலடிகளாரைக் காத்தார். பவுலடிகளார் பெரேயாவை விட்டுப் புறப்பட்டபோது சீலா தீமோத்தேயுவுடன் தங்கினார். பின்னர் கொரிந்துவில் பவுலடிகளாரோடு இணைந்து கொண்டார். சீலா தூய பேதுருவுக்கும் உதவியாளராக இருந்தார். பேதுருவின் முதலாம் நிருபத்தை ஆசியாவிலிருந்த சபைகளுக்குக் கொண்டு சென்ற உண்மையுள்ள சகோதரர் இவர்.

எருசலேம் மாமன்றம் பிற இன மக்கள் கிறிஸ்துவிடம் வரும்போது சட்டதிட்டங்களைக் காட்டி அவர்களை கலங்கப் பண்ணக்கூடாது என்று தீர்மானித்தது. அத்துடன் விக்கிரகங்களாகும் தீட்டுகளுக்கும், வேசித்தனத்திற்கும் நெருங்குண்டு செத்ததற்கும் இரத்தத்திற்கும் விலகி இருக்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். இத்தீர்மானங்களை அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அதற்கு பவுலடிகளாரோடும் பர்னபாவோடும் சகோதரரில் சிறந்தவர்களாகும் பர்சபா என்ற யூதாசும் சீலாவும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். சபைகளிலும் குடும்பங்களிலும், சமூகத்திலும் பிரச்சனைகளும், குழப்பங்களும் ஏற்படுவது இயல்பு. அத்தகைய வேளைகளில் அதை தீர்த்து வைக்கும், காரியங்களை தெளிவாய் எடுத்து சொல்ல நாம் தகுதியோடு இருக்கவேண்டும். இந்தத் தகுதி விசுவாசத்தாலும் இறைவார்த்தையாலுமே ஏற்படுகிறது. நம்மை தகுதிப்படுத்துவோம். மக்களில் சிறந்தவர்களாக மாற பாடுபடுவோம்.

ஞானத்தின் உறைவிடமான கடவுளே! ஞானத்தை உருவாக்கும். திருமறை எழுத்துக்களில் நிலைத்திருக்கவும் விசுவாசத்தில் உறுதியாக வாழவும் பிறருக்கு அவற்றை விவரிக்க ஞானத்தைத் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

சீலா – விசுவாசிகளில் சிறப்பானவர்2020-11-16T10:33:57+00:00
Go to Top