மத்தேயு 12 : 38-40 23 டிசம்பர் 2020, புதன்
“…மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.” – மத்தேயு 12 : 40
அறிவர் மார்ட்டின் லுத்தர் அப்போஸ்தலர் விசுவாசப் பிரமாணம் இரண்டாம் பிரிவுக்கு அர்த்தம் சொல்லும் போது `பிதாவினிடத்தில் அநாதியாய் பிறந்த மெய்யான கடவுளும், கன்னிமரியாளிடத்தில் பிறந்த மெய்யான மனிதனுமாயிருக்கும் இயேசுகிறிஸ்து என் கர்த்தரென்று விசுவாசிக்கிறேன்’ என்று குறிப்பிடுவார்.
இயேசு எப்படி மெய்யான கடவுளோ அதேபோல் அவர் மெய்யான மனிதனுமாவார். நேற்று இயேசு மெய்யான கடவுள் என்று தியானித்தோம். இன்று இயேசு மெய்யான மனிதன் என்பது குறித்து தியானிப்போம். ஆதித்திருச்சபை இயேசுவுக்கு அளித்த சிறப்பு பெயர் இது. அடிப்படையில் இது மனித நிலையைக் குறிக்கும் ஒரு சொற்றொடர். திருமறை இயேசுவை மனிதன் என்று தெளிவாக அழைக்கிறது. அவருக்கு மனித உடலும் உள்ளமும் உண்டென்று காண்கிறோம். அவருக்கு மனித உணர்வுகளும் செயல்களும் இருப்பதை காண்கிறோம். இதனால் அவர் மெய்யான மனிதன் என்பதை தெளிவுபடுத்துகிறது. பழைய ஏற்பாட்டில் இச்சொற்றொடர் வழக்கமாக மனித குணத்தை குறிக்கும். மறுபுறம் மனிதத் தன்மையின் சிறுமையையும், நிலையில்லா தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது. புதிய ஏற்பாட்டில் இயேசு தன்னையே குறித்துக் காட்டப் பயன்படுத்திய சிறப்பு பெயர் இது எனலாம். மனித குமாரன் என்ற பெயர் வரும் கூற்றுகளில் ஒன்றைத் தவிர அனைத்தும் இயேசு தன்னைப் பற்றி பேசும்போது கூறியவையாகும்.
இயேசு தம்மிடம் அடையாளம் கேட்ட மக்களுக்கு யோனாவின் அடையாளத்தை நினைவுபடுத்தினார். யோனா மீனின் வயிற்றில் இருந்ததை ஒப்பிட்டு மனுஷகுமாரன் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் என்றார். மனுக்குல வாழ்வுக்காக இயேசு பாடுபட்டு மரிப்பார். மரித்த இயேசு அடக்கம் பண்ணப்படுவார். இயேசு இரவு பகல் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். யோனா மீனின் வயிற்றில் இருந்து உயிருடன் வெளி வந்ததைப் போல இயேசு உயிருடன் எழுந்து வருவார் என்றார். இயேசு மெய்யான மனிதனாக பாடுகளை பெற்றுக் கொண்டார். மனித உணர்வும் வேதனைகளும் அவருக்கு இருந்தன. எனவே தம்மை விசுவாசிக்கும் மக்களுடைய உணர்வுகளை இயேசு அறிகிறார். சவுலிடம் ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய் என்று கேட்ட கேள்வி இதை தெளிவுபடுத்துகிறது.
இயேசு தலை. நாம் அந்த தலையில் இணைந்திருக்கிற அவயங்கள். எந்த உறுப்புக்கு வேதனை வந்தாலும் தலை உடனே அறியும். இதுவே நமக்கு இருக்கிற மிகப்பெரிய பலம். நம் பிரச்சனைகள், வேதனைகள், பசி, பட்டினி, தாகம், இழப்புகள் அனைத்தும் இயேசு அறிவார். ஏனெனில் அவர் மெய்யான கடவுளும் மெய்யான மனிதனுமாக இருக்கிறார். இந்த தைரியத்தில் துணிவோடு வாழுவோம்.
அன்புள்ள ஆண்டவரே! உமது நேசகுமாரனை மெய்யான மனிதனாகத் தந்தீர், நன்றி. இயேசு எங்களுக்குரிய அனைத்தையும் அறிவார். ஏற்ற சமயம் உதவி செய்வார் என்ற உறுதியில் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
