vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 618 blog entries.

30 ஜனவரி, 2021          சனி

“…நானோ மாம்சமானவன், பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டவன்.”

– ரோமர் 7 : 14

நாம் அனைவரும் நன்கு அறிந்த நமக்கும் பழக்கமான ஒரு சூழ்நிலையைப் பற்றி பவுல் பேசுகிறார். நாம் செய்ய வேண்டுமென கடவுள் விரும்பும் நல்ல காரியங்களைச் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் அவற்றைச் செய்யாமல் தீமைகளையே செய்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் நமது குடும்பங்களில் அன்பையும் பொறுமையையும் காட்டி அமைதியை நிலைநிறுத்த விரும்புகிறோம். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே நம்முடைய திட்டம் தவிடுபொடியாகி சண்டை வந்து விடுகிறது. நாம் பணித்தளத்தில் நம்மால் முடிந்ததை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய விரும்புகிறோம். ஆனால் அது முடிவதில்லை. பல நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளே நாம் செய்ய இருக்கும் வேலைகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு நாளின் முடிவில், நாம் என்ன செய்தாலும், பாவம் நம்முடன் இருக்கிறது என்பதைக் காண்கிறோம். பாவத்தின் சக்திக்கும், நல்ல இயல்புக்கும் இடையில் நமக்குள் ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இது சாதாரணமானது! பவுல் ஒரு அப்போஸ்தலர். அவருக்குக் கூட இந்தப் பிரச்சினை இருந்தது. தியான வசனத்தின் முன் பின் பகுதிகளைப் பாருங்கள். இவை உங்கள் சொந்தக் கதை போல் தோன்றினால் நீங்கள் பவுலின் உடன் பயணியே.

இந்தப் போராட்டம் பவுலை எரிச்சலும் கோபமும் கொள்ளச் செய்கிறது. நாமும் தான். தனது சொந்த சக்தியால் அல்லது பலத்தால் இதிலிருந்து விடுபட முடியாது என்பதை அவர் அறிவார். உங்களை விடுவிக்க நீங்கள் முயற்சித்திருந்தால், உங்களுக்கும் தெரிந்திருக்கும். கடவுளின் சக்தியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சண்டையை முடிக்கப் போவதில்லை. அதனால்தான் பவுல் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்கிறார். ஆன்மத்திற்கும் உடலுக்குமான இச் சண்டை நம் அனைவருக்குள்ளேயும் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. இயேசு இந்தச் சண்டையை சிலுவையில் வென்றிருக்கிறார். உயிர்த்தெழுந்ததன் வழியே நம் அனைவருக்கும் இச் சண்டையை வெல்லும் திறனைக் கொடுத்திருக்கிறார். நாம் கடவுளின் பிள்ளைகளின் வாழ்க்கையை வாழுகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழ்கிறார், அவர் நம்மை இயேசுவின் சாயலில் ரீமேக் செய்கிறார். நமது போராட்டங்களில் நாம் ஜெயிக்க உதவி செய்கிறார். வீண் விரக்தி வேண்டாம். நன்மைக்கும் தீமைக்குமான நமது மனப்போராட்டம் எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் வழியே நம்மை பாதுகாக்கிறார் என்பதுவும் உண்மையே.  நம்பிக்கையோடு வாழ்வோம்.

கர்த்தாவே, நன்மைக்கும் தீமைக்குமான இந்தத் தினசரிப் போராட்டத்தில் நான் வெற்றிபெற எனக்கு உதவும். இயேசுவின் வழியே, ஆமேன்.

2021-01-22T07:54:16+00:00

29 ஜனவரி, 2021          வெள்ளி

“நன்னம்பிக்கையுடையவர்களாய்ச் சிறைப்பட்டவர்களே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேனென்று…”

– சகரியா 9 : 12

ஒரு பெரிய செய்தியை தன்னகத்தே கொண்ட புத்தகங்களில் சகரியாவும் ஒன்றாகும். ஆறாம் நூற்றாண்டில் இஸ்ரவேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட காலத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம். சகரியாவின் வார்த்தைகள் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தன. அக்காலகட்டம் அவர்களுக்கு கடினமாக இருந்தபோதிலும், பிரகாசமான நாட்களை அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர். அதாவது அவர்கள் தங்கள் அரசரை எதிர்பார்த்திருந்தனர். தாவீது மற்றும் சாலொமோனை விடப் பெரிய ராஜாவின் ஆட்சியை இஸ்ரவேலர் அனுபவிக்க காத்திருந்தனர். இதை இஸ்ரவேலர் எப்படி அறிந்து கொள்ளுவார்கள்? அரசர் அவர்களிடம் கழுதையின் மேல் பயணித்து வருவார். தேசங்களுக்கு சமாதானத்தைத் தருகிறவராக வருகிற இவருடைய ஆட்சி உலகமெங்கும் பரந்து விரிந்திருக்கும் என்பதை இஸ்ரவேலர் உறுதியாக நம்பினர். இயேசு பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ராஜாவின் வருகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டிருந்தது. இந்த விபரம் நற்செய்தி நூல்களான லூக்கா மற்றும் மத்தேயுவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு எருசலேம் பவனி வந்த அன்றைக்கு ஆலயத்திற்குச் சென்ற  உண்மையுள்ள யூதர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? பல காலமாய் காத்துக்கிடந்த ஒரு விஷயம் தங்கள் கண்முன்னே நிகழ்கிறதைக் கண்டு ஆச்சர்யப் பட்டிருப்பார்களே, கடவுள் தம் மக்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.

நமது வாழ்விலும் நாம் பல நேரங்களில் கடவுளுக்காகக் காத்திருக்கிறோம். காத்திருக்கும் காலம் கர்த்தரின் மீதான நமது நம்பிகையை பல நேரங்களில் நீர்த்துப்போகச் செய்கிறது. நம்மை களைப்படையச் செய்கிறது. ஆண்டவரின் செயல்பாடுகள் பலதும் நமது சாமான்ய அறிவிற்கு எட்டாதவை தான். ஆனாலும் திருமறை வழியே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற வாக்குறுதிகள் உண்மையானவை. வருங்காலத்தில் நமக்காகக் காத்திருப்பவை. இதை திருவசனம் நமக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே நம்பிக்கையோடு கர்த்தருக்குக் காத்திருங்கள்.

பரலோகத் தகப்பனே, உமது மீட்பின் திட்டம் ஒரு அற்புதம். எதிர்வரும் எல்லா நாட்களிலும் உம்மை நம்புவதற்கு எங்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். இயேசுவின் பெயரில், ஆமேன்.

2021-01-22T07:53:14+00:00

28 ஜனவரி, 2021          வியாழன்

 “ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு உமது செய்கைகளின் புகழைச் சொல்லும்…..” – சங்கீதம் 145 : 4

இன்று பலரும் கடந்த காலத்தை மறக்க விரும்புகிறார்கள். முக்கியமானவை நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்; தங்களைத் திருப்திப்படுத்தத் தேவையான அனைத்தும் நிகழ்காலத்திலேயே இருக்கிறது என்று அவர்கள்  நம்புகிறார்கள். ஆனாலும் திருமண நாள், பிறந்த நாள் போன்ற சந்தோஷமான விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

இன்றைய தியான வசனத்தை மீண்டுமொருமுறை வாசியுங்கள். நம்முடைய நகரங்களில் அமைக்கப்பட்ட அஞ்சலி மற்றும் போர் நினைவுச் சின்னங்கள், சமாதிகளை நமது பிள்ளைகளுக்குக் காட்டி அது பற்றிய செய்திகளைச் சொல்லுகிறோம் நாம். பல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுகளையும் கதைகளையும் ஒப்படைப்பது போலவே, கடவுளின் குடும்பமும் அதன் புனித வரலாற்றை ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் வாழ்கிறது. தேவாலயம் இயேசுவின் கதையைச் சொல்கிறது. அவருடைய வாழ்க்கையைப் பின்பற்றி, அட்வென்ட்டில் இருந்து கிறிஸ்துமஸ் வழியாகவும், எபிபானி மற்றும் லெந்து நாட்கள் வரையிலும் வேலைகளைச் செய்கிறது. கிறிஸ்துவின் பரமேறுதல் மற்றும் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு ஆகியவற்றின் வழியே, அப்போஸ்தலர்கள் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வாழ்வியலை நமக்கு நினைவுபடுத்துகிறது. பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தருடைய போதனைகளைப் படிக்கும்போது நாம் விசுவாசத்தில் வளர்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அன்பு மற்றும் சேவையின் செயல்களின் மூலம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயற்சிக்கிறோம். நமது வாழ்நாள் முழுவதும் இவற்றைக் கேட்பது மட்டுமல்லாமல் நமது தலைமுறைகளுக்கும் சொல்ல வேண்டுமென்பதை சங்கீதக்காரர் கூறுகிறார். 

இறைவழிபாட்டிற்காக வாரந்தோறும் கூடுவோம். துதிப்பாடல்களிலும், பிரசங்கங்களிலும், வேதத்தைப் படிப்பதிலும், நம் கடவுளின்  மகத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்துவோம். பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து ஆளாக்குவது மட்டுமே நமது கடமையல்ல. நமது ஆண்டவரைப் பற்றி அவர்கள் அறியச் செய்வதும் நமது கடமையே. அவர்கள் அனுபவிக்கும் கடவுளின் மன்னிப்பு, இரட்சிப்பு எங்கிருந்து எப்படி வருகிறது என்று தெரிந்தால் மட்டுமே அதற்கேற்ற வாழ்வை அவர்களால் முன்னெடுக்க முடியும். ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழமுடியும்.  ‘கிறிஸ்து நம்மை நேசித்தார், நமக்காக தன்னை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்’. ஆகவே நாம் கடவுளின் மக்களாயிருக்கிறோம். இதுவே நமது தலைமுறைகள் அறியவேண்டிய சத்தியம்.

கடவுளும் இரட்சகருமானவரே, எங்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்தீர். உம்முடைய வல்லமையுள்ள செயல்களை வரவிருக்கும் தலைமுறையினருக்கு அறிவிக்க உமது ஆவியினால் எங்களுக்கு உதவும். இயேசுவின் வழியே ஆமேன்.

2021-01-22T07:43:08+00:00

27 ஜனவரி, 2021          புதன்

“….மோசே கடவுளை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால் தன் முகத்தை மூடிக் கொண்டான்.” – யாத்திராகமம் 3 : 6

கடவுளின் தெய்வீக கம்பீரத்தை எதிர்கொண்ட மனிதர்களின்  பயத்தையும் பிரமிப்பையும் வேதாகமம் பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறது. எரியும் ஒரு புதரில் கடவுள் மோசேக்குத் தோன்றியபோது, மோசே ‘கடவுளைப் பார்க்க பயந்ததால் முகத்தை மறைத்தார்’ என்று திருவசனம் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலின் கடவுளை ஆலயத்தில் பார்த்த ஏசாயா தீர்க்கதரிசி தனது பாவ உணர்வால் விரக்தியுடன் கூக்குரலிட்டார். இயேசுவின் மருரூபமாகுதலில், மூன்று சீடர்கள் கர்த்தர் மகிமையில் மாற்றப்படுவதைக் கண்டார்கள். பரலோகத்திலிருந்து வந்த குரலைக் கேட்டதும், பயந்து முகம் குப்புற விழுந்தார்கள் என்கிறது வேதாகமம்.

அதேசமயம் கடவுளின் இருப்பை மென்மையான, வரவேற்கத்தக்க   நிலையில் விவரிக்கும் இடங்களும் வேதாகமத்தில் உண்டு. சில சமயங்களில் கடவுள் மோசேயுடன் ஒரு மனிதன் தன் நண்பனுடன் பேசுவதைப் போல நேருக்கு நேர் பேசியிருக்கிறார்.(யாத்திராகமம் 33: 11). “என் மக்களை ஆறுதல்படுத்துங்கள், ஆறுதல்படுத்துங்கள்” (ஏசாயா 40: 1) என்ற கடவுளின் மென்மையான வார்த்தைகளை ஏசாயா இஸ்ரவேலருக்குச் சொன்னார். அவரது அன்பான அணுகுமுறையில் ஒன்றாகவே கடவுள் மனித உருவெடுத்து உலகில் பிறந்தார். தாம் மிகவும் நேசித்த தம் மக்களிடையே வாழ்ந்தார்.  குருடர்களின் கண்களிலும், காது கேளாதவர்களின் காதுகளிலும் தனது மென்மையான, குணப்படுத்தும் கைகளை வைத்தார்.

பரிசுத்த ராப்போஜனத்தில் கிறிஸ்து நம்மை அவருடைய மேஜைக்கு வரவேற்கிறார். அங்கு ‘இது என்னுடைய சரீரம் …இது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்’ என்கிற அவருடைய வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்கிறோம். அவருடைய பிரசன்னத்தையும் உணருகிறோம். நம்முடைய இரட்சகரின் முன்னிலையில் நாம் பந்திக்கு வரும்போது, பிரமிப்புடன் பயப்படுகிறோமா? அல்லது மேய்ப்பரின் மென்மையான, ஆறுதலான கரங்களில் மகிழ்ச்சியுடன் வருகிறோமா? இரண்டு பதில்களுக்கும் அங்கே இடம் உண்டு. நாம் பாவமுள்ள, தகுதியற்ற விருந்தினர்கள் என்பதை  அறிந்து, மனத்தாழ்மையிலும் பிரமிப்பிலும் வருகிறோம். நம்மைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த மேய்ப்பரிடம் ஆட்டுக்குட்டிகளைப் போல, பரிசுத்த மகிழ்ச்சியுடன் வருகிறோம். விருந்தினர்களான நமக்காக வழங்கப்பட்ட இயேசுவின் உடலையும், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தையும் பெறுகிறோம். கிறிஸ்துவின் இந்தப் பரிசு, அவருடைய பிரசன்னத்தின் கம்பீரம். நம்முடைய இருதயத்தின் மற்றும் ஆவியின் பலம். அச்சமின்றி இப் பரிசைப் பெற்றுக்கொள்ளுவோம்.

கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் தகுதியற்ற விருந்தினர்களாக இருந்தாலும், எங்களை உமது பிரசன்னத்திற்கு வரவேற்று, உமது உடலையும் இரத்தத்தையும் எங்களுக்குக் கொடுக்கிறீர். இந்த பரிசு எங்கள் ஆத்மாக்களுக்கு மிக உயர்ந்த நன்மையாக இருக்கிறது. நன்றிசெலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

 

2021-01-22T07:39:37+00:00

26 ஜனவரி, 2021          செவ்வாய்

“அவரில் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.”

– யோவான் 1 : 4

இன்று இந்தியாவின் குடியரசு தினம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா கடந்து வந்த பாதை கரடுமுரடாகவும் பலநேரங்களில் இருண்டதாகவும் இருந்தது. ஆனால் நாம் தொடர்ந்து இருட்டிலேயே இருந்துவிடவில்லை. கர்த்தர் சரியான நபர்களின் வழியே கொஞ்சம் கொஞ்மாக நம்மை முன்னேற்றிக் கொண்டேதான் இருக்கிறார். ஒருவேளை நாம் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் வரவில்லை என்று சொல்லுவோமானால் அதற்கு நம்முடைய குறைவுகளும் காரணமாக இருக்கலாம்.

எந்த ஒரு இருண்ட சூழலிலும் நாம் நம்முடைய நம்பிக்கையை எதில் வைக்கிறோம் என்பதைப் பொறுத்தே வெளிச்சத்தைக் காணமுடியும். ஒளியைத்தருவதற்கு எதிரான விஷயங்களை நாம் நம்பிக் கொண்டிருந்தோமானால் தொடர்ந்து இருளிலேயே இருக்க நேரிடும்.  நாம் செயல்படுவதற்கு ஏற்ற சூழல்களுக்காகக் காத்திருப்பதைவிட இருக்கிற நிலையிலேயே வெற்றிகரமாகச் செயல்பட முயலுதலே நல்லது. ஒன்றுமில்லாதிருந்த இப்பேரண்டத்தை தனது வார்த்தையால் உருவாக்கின கர்த்தரை முன்மாதிரியாகக் கொள்ளுவோம்.

நம்முடைய வாழ்வும் பாவத்தால் கரடுமுரடாக, தரிசாக கிடக்கலாம். குற்ற உணர்வால் நிறைந்து கிடக்கலாம். கடவுளின் ஒளிக்காகக் காத்துக்கிடப்பவர்களில் ஒருவரா நீங்கள்? கடவுளின் அன்பு பூரணமானது. அவரது மன்னிப்பு மிக உயர்ந்தது. இவ்வுலக மக்கள் அனைவருக்கும் உரியது. அவர் பாவங்களையே வெறுக்கிறார். பாவிகளை அல்ல. மனிதனின் சுயநலம், பேராசை மற்றும் வெறுப்பை ஆண்டவரின் இரக்கம், கருணை மற்றும் அன்பு மாற்றிவிட முடியும். கொடூரமான சவுலை தூய பவுலாக மாற்றிய அன்பு அவருடையது. வல்லமை அவருடையது. மன்னிப்பு அவருடையது.

இயேசுவின் மீது நம்பிக்கையற்ற குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் நற்செய்தியையும் கிறிஸ்துவின் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும்போது, முழுக் குடும்பமும் கடவுளின் அன்பின் ஒளியால் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அது இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே கிடைக்கும் மகத்தான மன்னிப்பை மனிதனுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் வழியே அவருடைய வாக்குறுதியையும் நித்திய நம்பிக்கையையும் நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். மனுஷர்களான நமக்கு ஒளியாயிருக்கிற ஆண்டவரில் நிலைத்திருப்போம்.. 

பரலோகத் தகப்பனே, இருளை அப்புறப்படுத்தி எங்களுக்கு நம்பிக்கையைத் தரும் இயேசுவின் வெளிச்சத்திற்கு நன்றி. அவருடைய நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.

2021-01-22T07:38:29+00:00

25 ஜனவரி, 2021          திங்கள்

 “நற்கிரியைகளுக்கென்று … இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப் பட்டவர்களும், கடவுளின் கைவேலையுமாயிருக்கிறோம்.” – எபேசியர் 2 : 10

கல்லூரியில் படிப்பவர்களுக்கு இது ஒரு கடினமான ஆண்டாகும். வழக்கத்தை விட கடின உழைப்பு தேவைப்படுகிறது. நேரடி வகுப்புகள் இல்லாத நிலையில் கலந்துகொள்ள வேண்டிய விரிவுரைகள் மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்களும் கட்டுரைகளும் அதிகமாகின்றன. குறிப்பு எடுத்துக்கொள்வதும், மீண்டும் அவற்றை வாசித்துப் புரிந்து கொள்வதிலும் சிரமங்கள் இருக்கிறது. ஆனால் இச்சிரமங்கள் அனைத்தும் உங்கள் பட்டத்தைக் கையில் பெறும்போது காணாமல் போய்விடும். இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் நான் படித்துப் பட்டம் பெற்றேன் என்ற மனநிறைவும் மகிழ்ச்சியும் மாணவர்களையும், அவர்களது பெற்றோரயும் நிறைத்துவிடும். பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் இந்த உலகை எதிர்பார்ப்புகளுடனும், தைரியத்துடனும் எதிர்நோக்குகிறார்; நம்பிக்கையுடன் முன் நடக்கிறார்.  உலகைச் சந்திப்பதற்கான தனது திறமையில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

நம்முடைய எதிர்கால வாழ்விற்கென கர்த்தர் முன்னெடுக்கும் திட்டங்கள் என்ன? எரேமியாவின் புத்தகத்தில் கர்த்தர், ‘உங்கள் விஷயமாக நான் கொண்டிருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். அவைகள் கேட்டை அல்ல, வாழ்வையே குறித்தவை. வருங்கால நன்னம்பிக்கையை உங்களுக்குக் கொடுப்பதே என் நோக்கம்’ என்று குறிப்பிடுகிறார். பல சூழல்களின் வழியாக அதாவது ஏற்றதாழ்வுள்ள, நன்மையும் தீமையுமுள்ள வாழ்க்கையின்வழியாக நம்மை முன்நடத்துகிறார். அனுபவங்களின் வழியே பட்டம் பெறச்செய்கிறார். பல சூழ்நிலைகளின் வழியே வாழ்வை  நமக்குக் கற்பிக்கிறார். வாழ்க்கை மற்றும் அதன் மாற்றங்கள் வழியே கடவுள் நம்மை வடிவமைக்கிறார். நாம் தவறுகிற நேரத்திலும் அன்புடன், பொறுமையுடனும், மிகுந்த திறமையுடனும், அவர் தனது தொடுதலை நம் வாழ்வில் பயன்படுத்துகிறார். புதிய வேலையைத் தொடங்குவது, திருமணம் செய்துகொள்வது, இராணுவத்திற்குச் செல்வது அல்லது வாழ்க்கையின் பல தொடக்க புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடப்போகிறீர்களா? அவருக்கென்று செய்யுங்கள். அவர் சித்தம் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் கடவுள் காட்டும் திசையைக் கேட்க இது நல்ல நேரம்.

பரலோகத் தகப்பனே, வாழ்க்கையின் பல மாற்றங்களைச் சந்திக்கும்போது எங்களுடன் இரும். எங்களுக்காக தன்னைக் கொடுத்த உங்கள் குமாரனை நாங்கள் சார்ந்திருக்க உதவும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.

2021-01-22T07:37:15+00:00

24 ஜனவரி, 2021          ஞாயிறு

“என்னை நேசிப்பதிலும் தகப்பனையாவது தாயையாவது அதிகமாய் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவனல்ல;….” மத்தேயு 10 : 37

உண்மையில் இன்றைய தியான வார்த்தைகள் நம்மை பயமுறுத்துகின்றன: ‘என்னைவிட தன் தந்தையை அல்லது தாயை நேசிப்பவன் எனக்குத் தகுதியானவன் அல்ல. என்னைவிட மகனையோ மகளையோ நேசிப்பவன் எனக்குத் தகுதியானவன் அல்ல.’ இதற்கு என்ன பொருள்? நாம் விரும்பும் நபர்களை வரிசைப்படுத்த வேண்டும் என்றால் எப்படி அதைச் செய்வது? என் மனைவி அல்லது கணவன் குழந்தைகளை நான் நேசிப்பது போலவே நான் கடவுளையும் நேசிக்க வேண்டுமா?

இயேசு அப்படி அர்த்தப்படுத்தவில்லை. அவர் பேசுவது நம்முடைய அன்பின் செயல்பாடுகள், அன்பின் மிகுதியால் நிகழும் நமது தேர்ந்தெடுத்தல்கள், மற்றும் முடிவெடுத்தல். அவருடைய கேள்வி இதுதான்: நான் உங்களுக்குக் கட்டளையிடுவதற்கும், உங்கள் அன்புக்குரியவர் விரும்புவதற்கும் இடையில் நீங்கள் ஒரு முடிவை எடுக்கும்போது, எந்த வழியில் செல்வீர்கள்? கிறிஸ்தவக் குடும்பங்களில் கூட இதில் அடிக்கடி தடுமாற்றம் வருகிறது. உங்களுக்கு அன்பானவர் கடவுளுக்கு எதிரான செயல்களைச் செய்யும்படி உங்களைத் தூண்டும்போது அதற்கு செவி சாய்க்காதீர்கள் என்று ஆண்டவர்  சொல்லுகிறார். இதுபோன்ற சூழ்நிலைகள் உங்களை நெருப்பைப் போல சோதிக்கக்கூடும். ஆனால் ஆண்டவர் உங்கள் பக்கம் நிற்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லரையும்விட அதிகம் கடவுளை நேசிக்கிறவர்கள் இயேசுவின் வார்த்தையை மறுக்க மாட்டார்கள். இதுவே ஆண்டவரின் வார்த்தைகளின் அர்த்தம். மனிதனின் பாச உணர்வுகள் தவறல்ல. அதே சமயம் நம்முடைய செயல்பாடுகள், தேர்வுகள் இறைச் சித்தப்படி அமைவது முக்கியம்.

இது மிகவும் சிக்கலான, ஆபத்துகள் நிறைந்த பகுதி. இந்தப் பிரச்சனையால் உடைந்துபோன, பிரிந்துபோன குடும்பங்கள் ஏராளம். இயேசுவின் வாழ்விலும் கடவுளுடன் அவருக்கிருந்த அன்பின் பிணைப்பு தான் அவரை சிலுவைக்கு வழி நடத்தியது. இந்த ஊழியப் பயணத்தின் இடையே அவர் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவுகளையோ, நண்பர்களையோ பற்றி கவலைப்படவில்லை.

அவர் கடவுளுடைய மக்கள் அனைவரையும் மீட்பதற்கும், கடவுளின் குடும்பத்திற்குள் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நாமும் இறைவனைச் சார்ந்திருப்போம். அதனால் வரும் வலிகளை அவர் புரிந்துகொள்கிறார். அதைச் சுமக்க அவர் உங்களுக்கு உதவுகிறார்.

அன்பான பிதாவே, நான் இவ்வுலகில் கடுமையான தேர்வுகளை எதிர்கொள்ளும்போது, சரியானதைச் செய்ய எனக்கு உதவும். இயேசுவின் வழியே, ஆமேன்.

2021-01-22T07:36:09+00:00

23 ஜனவரி, 2021          சனி

“இப்பொழுதோ நாம் எழுத்திற்குரிய பழைய நிலைமையிலல்ல,…”

– ரோமர் 7 : 6

ஒரு கொடூரமான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுபவர், மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக சாட்சிகளின் அடிப்படையில் வழக்கு தலைகீழாக மாறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. பல ஆண்டுகளாக அவர் சிறை வாழ்க்கையின் மோசமான நிலைமைகளைத் தாங்கினார்: மோசமான கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களைச் சமாளித்த சூழல். வாழ்க்கையில் இனி ஒன்றும் இல்லை என்ற உணர்வே மிச்சமாக இருந்திருக்கும். இல்லையா?

இத்தகைய மிருகத்தனமான வாழ்க்கைக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியேறி மீண்டும் சமூகத்தில் நுழைவது எப்படி இருந்திருக்க வேண்டும்? ஒரு வகையில் இது நமது கதை. நமது பாவங்களின் தண்டனையை அனுபவிக்க வேண்டிய தருணத்தில் இயேசுவின் தலையீட்டால்  நமது குற்றம் மன்னிக்கப்பட்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. கடவுளின் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட நாம்-இயேசுவின் காரணமாக-சர்வவல்லவரின் முன் மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால் மேலே உள்ள கைதியுடனான பெரிய வித்தியாசம் என்னவென்றால், எங்கள் தண்டனை நியாயமானது; நாங்கள் குற்றவாளிகள், ஆனால் நிபந்தனையற்ற விடுதலையைப் பெற்றிருக்கிறோம்.

இயேசு தாம் தண்டனையை ஏற்பதன் வழியாக நம் சுதந்திரத்தை சாத்தியமாக்கியுள்ளார். நம்முடைய பாவங்களுக்கு இனி மதிப்பில்லை. பவுல் ஒரு இடத்தில் எழுதுவது போல், ‘அவருடைய இரத்தத்தினாலே நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.’ இயேசு நமக்காக நம்மீது கொண்ட அளவற்ற அன்பினால் இதைச் செய்திருக்கிறார். அவர் காரணமாக நாம் பாவத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். நம்முடைய பாவங்கள் இனி நம்மை சிறைபிடிக்க முடியாது. அதற்குரிய நன்றியோடு ஆண்டவரின் பிள்ளைகளாக வாழுவோம்.

பரலோகத் தகப்பனே, இயேசுவில் எங்களுக்கு சுதந்திரத்தையும் நித்திய ஜீவனையும் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. இயேசுவின் வழியே ஆமேன்.

2021-01-22T07:34:56+00:00

இருள் மற்றும் அழிவு

22 ஜனவரி, 2021                                  வெள்ளி

“ஒரு தீர்க்கதரிசி சமாதானத்தைப் பற்றித் துர்தரிசனம் சொல்வானானால்,……நடந்தால்தான் தெரியவரும்….”- எரேமியா 28 : 9 

எரேமியா நூலின் இந்தப் பகுதி எப்போதும் என்னை சிரிக்க வைக்கிறது. கர்த்தருடைய தீர்க்கதரிசி என்ற முறையில், எரேமியா மக்களுக்கு அவர்களின் துன்மார்க்கத்தைப் பற்றி எச்சரிக்கிறார். மேலும் அவர்கள் மனந்திரும்பாவிட்டால் தங்கள் நாட்டில் விஷயங்கள் மோசமடையப் போகிறது என்று அவர்களிடம் கூறினார். பாபிலோன் ராஜா ஏற்கனவே ஏராளமான மக்களையும், பொருட்களையும், ஆலயத்தின் அலங்காரங்களையும் கொண்டு போய்விட்டார். இன்னும் என்னென்ன செய்யப்போகிறாரோ என்று மக்கள் எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில் எரேமியா தீர்க்கதரிசி நம்பிக்கையூட்டுகிறார். ‘இல்லை, கடவுள் அந்த மக்களையும் பொருட்களையும் விரைவில் மீட்பார். அமைதி திரும்பும்’ என்கிறார். நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும்: பெரும்பாலான உண்மையான தீர்க்கதரிசிகள் போர், பஞ்சம் மற்றும் நோய் போன்ற பயங்கரமான விஷயங்களை முன்னறிவித்தனர். ஆகவே, எரேமியா போன்ற ஒரு தீர்க்கதரிசி சமாதானத்தை முன்னறிவிக்கும் போது அது சந்தேகத்துடனேயே பார்க்கப்படுகிறது. நிகழ்வின் முடிவை நாம் அறிவோம். 

மனித வரலாற்றைப் பார்க்கும்போது, வஞ்சகர்கள் மட்டுமே சுலபமான வாழ்க்கையைப் பற்றி வாக்குறுதிகள் அளிக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை அதை விட கடினமானது. மன்னிப்பு, மகிழ்ச்சி, நித்திய ஜீவன் என கடவுள் நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அதை விடச் சிறந்தது எது? கடவுளின் பிள்ளைகளாக வாழுவதில் சில துன்பங்கள் வரத்தான் செய்யும். மனிதகுல மீட்பிற்கான பாதை கல்வாரிப் பாதையாகத்தானே இருந்தது. அவர் நம்முடைய துன்பங்களை அவர்மீது எடுத்துக்கொண்டு, நம்மை விடுவித்தார். அவர் எங்களின் பதிலாளாக மரணம் அடைந்தார். அவர் வெற்றியையும் நித்திய ஜீவனையும், அவர் நேசிக்கும் மக்களோடு பகிர்ந்து கொள்ள அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். எனவே ஆம், வாழ்க்கை கடினமானது, நாம் அனைவரும் அறிந்ததே, எளிதான பதில்கள் இல்லை. ஆனால் நமக்காக எல்லா கஷ்டங்களையும் தீமைகளையும் வென்றவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் வார்த்தைகளில் நம்பிக்கைவையுங்கள்.

கர்த்தாவே, எனக்கு சிரமம் இருக்கும்போது, பொய்யர்கள் மீது அல்ல, உம்மை நம்புவதற்கு எனக்கு உதவுங்கள். இயேசுவின் வழியே ஆமேன்.

இருள் மற்றும் அழிவு2021-01-21T11:51:27+00:00

எண்ணாகமம் 6 : 22-27                 01 ஜனவரி 2021, வெள்ளி

“கடவுள் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காப்பாராக.”– எண்ணாகமம் 6 : 24

தியானமலர் வாசகர்கள் அனைவருக்கும் வான்மலர் நிலையத்தாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் நின்று கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டின் கசப்பான அனுபவங்களால் நம் உள்ளங்களில் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில் `கடவுள் நம்மை ஆசீர்வதித்து நம்மை காப்பார்’ என்று வாக்களிக்கிறார்.

நாம் வாசித்த திருமறைப் பகுதி ஆரோனுடைய ஆசீர்வாதம் என்று அழைக்கப்படுகிறது. நாம் காண்கிற, காணாத யாவையும் கடவுள் படைத்தார். இதை விசுவாசப் பிரமாணம் முதல் பகுதியில் அறிக்கையிடுகிறோம். அப்போஸ்தல விசுவாசப் பிரமாணம் முதல் பகுதிக்கு அறிவர் லுத்தர் பொருள் சொல்லும் போது `கடவுள் என்னையும் சகலவற்றையும் படைத்து எனக்கு உடலையும் ஆன்மாவையும் கண், காது முதலிய சகல அவயங்களையும், புத்தியையும், சகல திறமைகளையும் தந்து இன்று வரை காத்து நடத்தி வருகிறார் என்று விசுவாசிக்கிறேன் என்கிறார்.’ அத்துடன் என் உடலுக்கும் வாழ்வுக்கும் தேவையான சகல, ஆதாரமாகிய ஊண், உடை, பிழைப்புத் தொழில் மனைவி, கணவன் பிள்ளைகள், வீடு, வாசல், ஆடு, மாடு, நிலம் முதலிய எல்லா செல்வங்களையும் அவர் எனக்குக் கட்டளையிட்டு என்னை ஒவ்வொரு நாளும் நிறைவாகப் பராமரித்து சகல மோசங்களுக்கும் என்னை மறைத்து சகல தீமைகளுக்கும் விலக்கிக் காத்து வருகிறார்.

இவ்வாறு சொல்லிவிட்டு அதற்கான காரணத்தை பின்வருமாறு சொல்லுகிறார் `அவர் இவை எல்லாவற்றையும் தகப்பனுக்குரிய அன்புமிகு அருளாலும் சுத்த தயையினாலேயும் எவ்வித தகுதியுமற்ற எனக்குச் செய்து கொண்டு வருகிறார்’ என்று சொல்லுகிறார். நாம் பாவத்தில் வீழ்ந்து கடவுளோடுள்ள வாழ்வை இழந்தபோது இயேசுவில் நம்மை மீட்டுக் கொண்டார். இயேசுவில் நாம் கடவுளை அப்பா பிதாவே  என்று அழைக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

ஒரு தகப்பன் தன் பிள்கைளுக்காக தன்னை ஒறுத்து, வெறுத்து அழித்து வாழ்வு கொடுப்பது போல நமது பரம பிதா நமக்கு வாழ்வருளுகிறார். கடந்தகால அனுபவங்களின் அடித்தளத்தில் கடவுளில் நம்பிக்கை வைப்போம். நாம் வாழுகிற  உலகம் ஆபத்துக்கள் நிறைந்தது. கடவுள் இச்சூழலில் நம்மை ஆசீர்வதிப்பது மட்டுமல்ல நம்மை எல்லா ஆபத்துக்களிலுமிருந்து பாதுகாக்கிறார். கடவுள் வாக்கு மாறாதவர். நம்மை பிள்ளையாக ஏற்றுக் கொண்டவர். தம் வாக்குத்தத்தங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நிச்சயத்தில் புதிய ஆண்டில் மகிழ்ச்சியாய் வாழ்வைத் தொடங்குவோம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.

திரியேக கடவுளே! உம் பெரிதான கிருபையால் புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்க கிருபை செய்தீர் நன்றி. உம் கரங்களைப் பற்றிக் கொண்டு உம் அடிச்சுவடைப் பின்பற்றி தைரியத்தோடு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

2020-12-21T10:54:17+00:00
Go to Top