27 ஜனவரி, 2021          புதன்

“….மோசே கடவுளை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால் தன் முகத்தை மூடிக் கொண்டான்.” – யாத்திராகமம் 3 : 6

கடவுளின் தெய்வீக கம்பீரத்தை எதிர்கொண்ட மனிதர்களின்  பயத்தையும் பிரமிப்பையும் வேதாகமம் பல இடங்களில் பதிவுசெய்திருக்கிறது. எரியும் ஒரு புதரில் கடவுள் மோசேக்குத் தோன்றியபோது, மோசே ‘கடவுளைப் பார்க்க பயந்ததால் முகத்தை மறைத்தார்’ என்று திருவசனம் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலின் கடவுளை ஆலயத்தில் பார்த்த ஏசாயா தீர்க்கதரிசி தனது பாவ உணர்வால் விரக்தியுடன் கூக்குரலிட்டார். இயேசுவின் மருரூபமாகுதலில், மூன்று சீடர்கள் கர்த்தர் மகிமையில் மாற்றப்படுவதைக் கண்டார்கள். பரலோகத்திலிருந்து வந்த குரலைக் கேட்டதும், பயந்து முகம் குப்புற விழுந்தார்கள் என்கிறது வேதாகமம்.

அதேசமயம் கடவுளின் இருப்பை மென்மையான, வரவேற்கத்தக்க   நிலையில் விவரிக்கும் இடங்களும் வேதாகமத்தில் உண்டு. சில சமயங்களில் கடவுள் மோசேயுடன் ஒரு மனிதன் தன் நண்பனுடன் பேசுவதைப் போல நேருக்கு நேர் பேசியிருக்கிறார்.(யாத்திராகமம் 33: 11). “என் மக்களை ஆறுதல்படுத்துங்கள், ஆறுதல்படுத்துங்கள்” (ஏசாயா 40: 1) என்ற கடவுளின் மென்மையான வார்த்தைகளை ஏசாயா இஸ்ரவேலருக்குச் சொன்னார். அவரது அன்பான அணுகுமுறையில் ஒன்றாகவே கடவுள் மனித உருவெடுத்து உலகில் பிறந்தார். தாம் மிகவும் நேசித்த தம் மக்களிடையே வாழ்ந்தார்.  குருடர்களின் கண்களிலும், காது கேளாதவர்களின் காதுகளிலும் தனது மென்மையான, குணப்படுத்தும் கைகளை வைத்தார்.

பரிசுத்த ராப்போஜனத்தில் கிறிஸ்து நம்மை அவருடைய மேஜைக்கு வரவேற்கிறார். அங்கு ‘இது என்னுடைய சரீரம் …இது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்’ என்கிற அவருடைய வாக்குறுதியின் வார்த்தைகளைக் கேட்கிறோம். அவருடைய பிரசன்னத்தையும் உணருகிறோம். நம்முடைய இரட்சகரின் முன்னிலையில் நாம் பந்திக்கு வரும்போது, பிரமிப்புடன் பயப்படுகிறோமா? அல்லது மேய்ப்பரின் மென்மையான, ஆறுதலான கரங்களில் மகிழ்ச்சியுடன் வருகிறோமா? இரண்டு பதில்களுக்கும் அங்கே இடம் உண்டு. நாம் பாவமுள்ள, தகுதியற்ற விருந்தினர்கள் என்பதை  அறிந்து, மனத்தாழ்மையிலும் பிரமிப்பிலும் வருகிறோம். நம்மைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த மேய்ப்பரிடம் ஆட்டுக்குட்டிகளைப் போல, பரிசுத்த மகிழ்ச்சியுடன் வருகிறோம். விருந்தினர்களான நமக்காக வழங்கப்பட்ட இயேசுவின் உடலையும், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தையும் பெறுகிறோம். கிறிஸ்துவின் இந்தப் பரிசு, அவருடைய பிரசன்னத்தின் கம்பீரம். நம்முடைய இருதயத்தின் மற்றும் ஆவியின் பலம். அச்சமின்றி இப் பரிசைப் பெற்றுக்கொள்ளுவோம்.

கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் தகுதியற்ற விருந்தினர்களாக இருந்தாலும், எங்களை உமது பிரசன்னத்திற்கு வரவேற்று, உமது உடலையும் இரத்தத்தையும் எங்களுக்குக் கொடுக்கிறீர். இந்த பரிசு எங்கள் ஆத்மாக்களுக்கு மிக உயர்ந்த நன்மையாக இருக்கிறது. நன்றிசெலுத்துகிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.