28 ஜனவரி, 2021          வியாழன்

 “ஒரு தலைமுறை வருந்தலைமுறைக்கு உமது செய்கைகளின் புகழைச் சொல்லும்…..” – சங்கீதம் 145 : 4

இன்று பலரும் கடந்த காலத்தை மறக்க விரும்புகிறார்கள். முக்கியமானவை நிகழ்காலத்தில் மட்டுமே உள்ளன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள்; தங்களைத் திருப்திப்படுத்தத் தேவையான அனைத்தும் நிகழ்காலத்திலேயே இருக்கிறது என்று அவர்கள்  நம்புகிறார்கள். ஆனாலும் திருமண நாள், பிறந்த நாள் போன்ற சந்தோஷமான விஷயங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.

இன்றைய தியான வசனத்தை மீண்டுமொருமுறை வாசியுங்கள். நம்முடைய நகரங்களில் அமைக்கப்பட்ட அஞ்சலி மற்றும் போர் நினைவுச் சின்னங்கள், சமாதிகளை நமது பிள்ளைகளுக்குக் காட்டி அது பற்றிய செய்திகளைச் சொல்லுகிறோம் நாம். பல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுகளையும் கதைகளையும் ஒப்படைப்பது போலவே, கடவுளின் குடும்பமும் அதன் புனித வரலாற்றை ஆண்டுதோறும் மீண்டும் மீண்டும் வாழ்கிறது. தேவாலயம் இயேசுவின் கதையைச் சொல்கிறது. அவருடைய வாழ்க்கையைப் பின்பற்றி, அட்வென்ட்டில் இருந்து கிறிஸ்துமஸ் வழியாகவும், எபிபானி மற்றும் லெந்து நாட்கள் வரையிலும் வேலைகளைச் செய்கிறது. கிறிஸ்துவின் பரமேறுதல் மற்றும் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு ஆகியவற்றின் வழியே, அப்போஸ்தலர்கள் மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வாழ்வியலை நமக்கு நினைவுபடுத்துகிறது. பரிசுத்த வேதாகமத்தில் கர்த்தருடைய போதனைகளைப் படிக்கும்போது நாம் விசுவாசத்தில் வளர்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அன்பு மற்றும் சேவையின் செயல்களின் மூலம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயற்சிக்கிறோம். நமது வாழ்நாள் முழுவதும் இவற்றைக் கேட்பது மட்டுமல்லாமல் நமது தலைமுறைகளுக்கும் சொல்ல வேண்டுமென்பதை சங்கீதக்காரர் கூறுகிறார். 

இறைவழிபாட்டிற்காக வாரந்தோறும் கூடுவோம். துதிப்பாடல்களிலும், பிரசங்கங்களிலும், வேதத்தைப் படிப்பதிலும், நம் கடவுளின்  மகத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்துவோம். பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து ஆளாக்குவது மட்டுமே நமது கடமையல்ல. நமது ஆண்டவரைப் பற்றி அவர்கள் அறியச் செய்வதும் நமது கடமையே. அவர்கள் அனுபவிக்கும் கடவுளின் மன்னிப்பு, இரட்சிப்பு எங்கிருந்து எப்படி வருகிறது என்று தெரிந்தால் மட்டுமே அதற்கேற்ற வாழ்வை அவர்களால் முன்னெடுக்க முடியும். ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழமுடியும்.  ‘கிறிஸ்து நம்மை நேசித்தார், நமக்காக தன்னை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார்’. ஆகவே நாம் கடவுளின் மக்களாயிருக்கிறோம். இதுவே நமது தலைமுறைகள் அறியவேண்டிய சத்தியம்.

கடவுளும் இரட்சகருமானவரே, எங்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்தீர். உம்முடைய வல்லமையுள்ள செயல்களை வரவிருக்கும் தலைமுறையினருக்கு அறிவிக்க உமது ஆவியினால் எங்களுக்கு உதவும். இயேசுவின் வழியே ஆமேன்.