29 ஜனவரி, 2021 வெள்ளி
“நன்னம்பிக்கையுடையவர்களாய்ச் சிறைப்பட்டவர்களே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேனென்று…”
– சகரியா 9 : 12
ஒரு பெரிய செய்தியை தன்னகத்தே கொண்ட புத்தகங்களில் சகரியாவும் ஒன்றாகும். ஆறாம் நூற்றாண்டில் இஸ்ரவேலர் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட காலத்தில் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கலாம். சகரியாவின் வார்த்தைகள் நாடு கடத்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தன. அக்காலகட்டம் அவர்களுக்கு கடினமாக இருந்தபோதிலும், பிரகாசமான நாட்களை அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர். அதாவது அவர்கள் தங்கள் அரசரை எதிர்பார்த்திருந்தனர். தாவீது மற்றும் சாலொமோனை விடப் பெரிய ராஜாவின் ஆட்சியை இஸ்ரவேலர் அனுபவிக்க காத்திருந்தனர். இதை இஸ்ரவேலர் எப்படி அறிந்து கொள்ளுவார்கள்? அரசர் அவர்களிடம் கழுதையின் மேல் பயணித்து வருவார். தேசங்களுக்கு சமாதானத்தைத் தருகிறவராக வருகிற இவருடைய ஆட்சி உலகமெங்கும் பரந்து விரிந்திருக்கும் என்பதை இஸ்ரவேலர் உறுதியாக நம்பினர். இயேசு பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ராஜாவின் வருகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டிருந்தது. இந்த விபரம் நற்செய்தி நூல்களான லூக்கா மற்றும் மத்தேயுவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு எருசலேம் பவனி வந்த அன்றைக்கு ஆலயத்திற்குச் சென்ற உண்மையுள்ள யூதர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? பல காலமாய் காத்துக்கிடந்த ஒரு விஷயம் தங்கள் கண்முன்னே நிகழ்கிறதைக் கண்டு ஆச்சர்யப் பட்டிருப்பார்களே, கடவுள் தம் மக்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.
நமது வாழ்விலும் நாம் பல நேரங்களில் கடவுளுக்காகக் காத்திருக்கிறோம். காத்திருக்கும் காலம் கர்த்தரின் மீதான நமது நம்பிகையை பல நேரங்களில் நீர்த்துப்போகச் செய்கிறது. நம்மை களைப்படையச் செய்கிறது. ஆண்டவரின் செயல்பாடுகள் பலதும் நமது சாமான்ய அறிவிற்கு எட்டாதவை தான். ஆனாலும் திருமறை வழியே நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற வாக்குறுதிகள் உண்மையானவை. வருங்காலத்தில் நமக்காகக் காத்திருப்பவை. இதை திருவசனம் நமக்கு உறுதிப்படுத்துகிறது. எனவே நம்பிக்கையோடு கர்த்தருக்குக் காத்திருங்கள்.
பரலோகத் தகப்பனே, உமது மீட்பின் திட்டம் ஒரு அற்புதம். எதிர்வரும் எல்லா நாட்களிலும் உம்மை நம்புவதற்கு எங்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். இயேசுவின் பெயரில், ஆமேன்.
