30 ஜனவரி, 2021          சனி

“…நானோ மாம்சமானவன், பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டவன்.”

– ரோமர் 7 : 14

நாம் அனைவரும் நன்கு அறிந்த நமக்கும் பழக்கமான ஒரு சூழ்நிலையைப் பற்றி பவுல் பேசுகிறார். நாம் செய்ய வேண்டுமென கடவுள் விரும்பும் நல்ல காரியங்களைச் செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் அவற்றைச் செய்யாமல் தீமைகளையே செய்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் நமது குடும்பங்களில் அன்பையும் பொறுமையையும் காட்டி அமைதியை நிலைநிறுத்த விரும்புகிறோம். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே நம்முடைய திட்டம் தவிடுபொடியாகி சண்டை வந்து விடுகிறது. நாம் பணித்தளத்தில் நம்மால் முடிந்ததை உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய விரும்புகிறோம். ஆனால் அது முடிவதில்லை. பல நேரங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளே நாம் செய்ய இருக்கும் வேலைகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு நாளின் முடிவில், நாம் என்ன செய்தாலும், பாவம் நம்முடன் இருக்கிறது என்பதைக் காண்கிறோம். பாவத்தின் சக்திக்கும், நல்ல இயல்புக்கும் இடையில் நமக்குள் ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இது சாதாரணமானது! பவுல் ஒரு அப்போஸ்தலர். அவருக்குக் கூட இந்தப் பிரச்சினை இருந்தது. தியான வசனத்தின் முன் பின் பகுதிகளைப் பாருங்கள். இவை உங்கள் சொந்தக் கதை போல் தோன்றினால் நீங்கள் பவுலின் உடன் பயணியே.

இந்தப் போராட்டம் பவுலை எரிச்சலும் கோபமும் கொள்ளச் செய்கிறது. நாமும் தான். தனது சொந்த சக்தியால் அல்லது பலத்தால் இதிலிருந்து விடுபட முடியாது என்பதை அவர் அறிவார். உங்களை விடுவிக்க நீங்கள் முயற்சித்திருந்தால், உங்களுக்கும் தெரிந்திருக்கும். கடவுளின் சக்தியைத் தவிர வேறு எதுவும் இந்தச் சண்டையை முடிக்கப் போவதில்லை. அதனால்தான் பவுல் “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்கிறார். ஆன்மத்திற்கும் உடலுக்குமான இச் சண்டை நம் அனைவருக்குள்ளேயும் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. இயேசு இந்தச் சண்டையை சிலுவையில் வென்றிருக்கிறார். உயிர்த்தெழுந்ததன் வழியே நம் அனைவருக்கும் இச் சண்டையை வெல்லும் திறனைக் கொடுத்திருக்கிறார். நாம் கடவுளின் பிள்ளைகளின் வாழ்க்கையை வாழுகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாழ்கிறார், அவர் நம்மை இயேசுவின் சாயலில் ரீமேக் செய்கிறார். நமது போராட்டங்களில் நாம் ஜெயிக்க உதவி செய்கிறார். வீண் விரக்தி வேண்டாம். நன்மைக்கும் தீமைக்குமான நமது மனப்போராட்டம் எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு கர்த்தர் பரிசுத்த ஆவியானவர் வழியே நம்மை பாதுகாக்கிறார் என்பதுவும் உண்மையே.  நம்பிக்கையோடு வாழ்வோம்.

கர்த்தாவே, நன்மைக்கும் தீமைக்குமான இந்தத் தினசரிப் போராட்டத்தில் நான் வெற்றிபெற எனக்கு உதவும். இயேசுவின் வழியே, ஆமேன்.