லூக்கா 1 : 8-13                   01 டிசம்பர் 2020, செவ்வாய்

“சகரியாவே, பயப்படாதே உன் ஜெபம் கேட்கப்பட்டது;….” – லூக்கா 1 : 13

சிறையிருப்பின் பொழுது இருபத்து நான்கு ஆசாரிய வகுப்பினரும் சிறை சென்றனர். இவர்களில் நான்கு வகுப்பினர் திரும்பி வந்தனர். இந்த நான்கு வகுப்பினரும் மீண்டும் இருபத்து நான்கு வகுப்புகளாக பிரிக்கப்பட்டனர். இவர்களுக்கு பழைய வகுப்பினரின் பெயர்கள் கொடுக்கப்பட்டன. இவற்றுள் ஒன்றான அபியாவின் வகுப்பைச் சார்ந்தவரே சகரியா. சகரியா என்ற பெயருக்கு கடவுளினால் நினைவு கூரப்பட்டவர் என்று பொருள். இவர் திருமுழுக்குநர் யோவானின் தந்தை. அத்துடன் இயேசுவின் தாயாகிய மரியாளின் உறவினரான எலிசபெத்தின் கணவர். நீதிமானான குருவானவர். நீதிமான் என்ற வார்த்தை சிறந்த பொருளுடையது. சகரியாவும் எலிசபெத்தும் நீதிமான்கள். இவர்கள் கடவுளின் கற்பனைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்ததால் நீதிமான்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சன்மார்க்க நியதிகளையும் தொழுகை நியதிகளையும் கடைபிடித்தனர். வயது முதிர்ந்த சகரியாவின் உள்ளத்தில் குழந்தை இல்லை என்கிற ஏக்கம் இருந்தது. இவர் கடவுளிடம் இதை மன்றாட்டாக தினம் தினம் ஏறெடுத்து வந்தார்.

சகரியா ஆலயத்தில் தூபம் காட்டிக் கொண்டிருந்த பொழுது வானதூதர் அங்கு தோன்றினார். இது சகரியாவுக்கு பயத்தை ஏற்படுத்தியது. மனிதர் பயப்படும்பொழுது வானதூதர் வழக்கமாகக் கூறும் வார்த்தை பயப்படாதே என்பதாகும். வானதூதர் சகரியாவிடம், ‘உன் ஜெபம் கேட்கப்பட்டது. உன் ஜெபத்தின்படியே உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவருக்கு யோவான் என்று பெயரிடு என்றார். சகரியா தன் வயது முதிர்ச்சியினிமித்தம் இந்நிகழ்வுக்கு அடையாளம் கேட்டார். இதனால் வானதூதர் இந்நிகழ்வு நடக்கும் வரை வாய் பேசாதபடி செய்தார்.

குழந்தை பிறந்து அதற்கு விருத்தசேதனம் செய்யும் நாள் வந்தபோது சகரியா தம் மனைவி கூறிய யோவான் என்ற பெயரையே எழுதி காண்பித்தார். மக்கள் ஆச்சரியப்பட்டனர். சகரியா பேசத் தொடங்கினார். மேசியா பற்றிய இஸ்ரவேலரின் நம்பிக்கை நிறைவேறுவது குறித்து இறைவாக்குரைத்தார். அன்பானவர்களே! நம் உள்ள உணர்வுகளை அறிகிறவர் கடவுள். நம் எண்ணங்கள், ஏக்கங்கள் எல்லாம் அறிவார். நமக்கு எது தேவை எப்பொழுது தேவை என்பதை அறிவதால் தம் சித்தப்படி, நேரப்படி நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையில் வாழ இந்த வரலாற்று நிகழ்வு நம்மை அழைக்கிறது. இந்த நம்பிக்கையில் நிலைத்திருந்து வாழ்வோம்.

விண்ணகத் தந்தையே! நீர் எங்கள் தந்தையாய் எங்கள் தேவைகளை அறிகிறீர். கடவுள் தம் சித்தப்படி, சித்தமான வேளையில் தருவார் என்ற நிச்சயத்தில் வாழக் கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.