அப்போஸ்தலர் 16 : 13-15                                      20 நவம்பர் 2020, வெள்ளி

“என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று…. வருந்திக் கேட்டுக் கொண்டான்.” – அப்போஸ்தலர் 16 : 15

பவுலடிகளார் தம் இரண்டாம் நற்செய்தி பயணத்தில் பிலிப்பு பட்டணம் வந்து சேர்ந்தார். ஓய்வு நாளில் ஜெபம் பண்ண இடந்தேடினார். இதற்காக ஆற்றங்கரை ஓரமாகப் போனார். யூத ஜெப ஆலயங்கள் கடற்கரை, ஆற்றங்கரையில் பொதுவாகக் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆசிரியர் ஜெசிபஸ் குறிப்பிடுகிறார். தியத்தீரா, லீதியா ஆகிய இடங்களில் மக்கதோனியர்கள் குடியிருந்தார்கள். கி.மு. 133-ல் இது சின்னாசிய பகுதியின் அங்கமானது. தியத்திரா, லீதியா ஆகிய பகுதிகள் யூதக் காலனிகளாய் இருந்தன. இங்கு வாழ்ந்தவர்களுக்கு யூத சமயத்தைக் குறித்த அறிவு இருந்தது. லீதியா என்பது ஒரு பட்டணம். இங்குள்ள லீதியர்கள் இரத்தாம்பரம் விற்பனையில் முன்னோடிகள் என்று `ஹோமர்’ என்பவர் எழுதியிருக்கிறார். லீதியா இந்நகரைச் சேர்ந்தவராக இருந்ததால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இவர் யூதப் பெண்ணாக இருக்கலாம். இரத்தாம்பரம் விற்பதே இவரது தொழில். இதனால் இவர் ஓரளவுக்கு பண வசதியுள்ளவராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

பவுலடிகளாரும் மற்றவர்களும் ஜெபிக்கச் சென்றபோது அங்கு பெண்கள் கூடினார்கள். அவர்களில் லீதியாவும் ஒருவர். இக்கூட்டத்தைக் கண்டதும் பவுலடிகளார் அவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார். பவுலடிகளாரின் செய்தியைக் கேட்ட லீதியா மனமாற்றம் அடைந்தாள். அவளும் அவள் குடும்பத்தினரும் திருமுழுக்குப் பெற்றனர். லீதியா பவுலடிகளாரையும் அவருடன் இருந்தவர்களையும் தங்கள் வீட்டில் தங்க வற்புறுத்தி உணவளித்தாள். அன்னியரை உபசரிப்பதும் விருந்தோம்பல் செய்வதும் கடவுள் விரும்புகிற காரியங்கள். பவுலடிகளாருக்கு மிகவும் பிடித்தத் திருச்சபை பிலிப்புத் திருச்சபை. மேலும் மற்ற எந்த திருச்சபையிடமிருந்தும் உதவியும் நன்கொடைகளும் பெறாத பவுலடிகளார் பிலிப்பு திருச்சபையிடமிருந்து மட்டும் இவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ளுகிறார். பிலிப்பு திருச்சபைக்கும் பவுலடிகளாருக்கும் இடையே இருந்த நெருங்கிய உறவுக்கு லீதியாவின் விருந்தோம்பும் பண்பே முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.

வசனத்தை போதிப்பவர்களை நேசிப்போம். அவர்களை போஷிப்போம். அவர்களது பணியில் உதவுவதன் வழியாக கடவுளை உபசரிக்கிறவர்களாவோம்.

அன்பு நிறைந்த கடவுளே! உம் வார்த்தையை கேட்டு ஏற்றுக் கொள்ளவும் வார்த்தைகளை தந்தவரை உபசரித்து ஊக்கப்படுத்த அதன் வழியாய் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.