அப்போஸ்தலர் 9 : 1-9                    10 நவம்பர் 2020, செவ்வாய்

“என் நாமத்தைச் சுமந்துக் கொண்டு போவதற்கு நான் தெரிந்தெடுத்தப் பாத்திரம்.” – அப்போஸ்தலர் 9 : 15

பவுலடிகளாரின் இயற்பெயர் சவுல். இவர் சிசிரியா நாட்டின் தலைநகர் தர்சு பட்டணத்தில் பிறந்தவர். இவர் பெற்றோர் எபிரேய மொழி பேசிய பரிசேயர்கள். செல்வந்தரான இக்குடும்பம் ரோமக் குடியுரிமை பெற்றது. இவர்கள் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்கள். பவுலடிகளார் சிறு வயதில் தர்சு பட்டணத்தில் கல்வி கற்றார். பதினான்கு வயதில் இவர் பெற்றோர் இவரை எருசலேமுக்கு கமாலியேல் என்பவரிடம் பாடம் கற்க அனுப்பினார்கள். அங்கு யூத சமய பாரம்பரியங்களையும் வேதாகம நூல்களையும் கற்றுத் தேர்ந்தார். யூத சமயத்திலிருந்த வைராக்கியத்தினால் கிறிஸ்தவ சமயத்தை அழிக்கும் முயற்சியில் இறங்கினார். ஸ்தேவானின் மரணம் இவர் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இயேசு இவருக்கு தரிசனமானார். பவுலடிகளார் கண்பார்வையை இழந்தார். அனனியா என்பவரால் திருமுழுக்குப் பெற்றார். இழந்த கண்பார்வையையும் பெற்றார். தூய ஆவியானவரால் நிரப்பப்பட்டு பவுல் ஆனார்.

இயேசு இவரை பிற இனமக்களுக்கும் அரசர்களுக்கும் இறை நாமத்தை சுமந்து செல்லும் பணியாளராக்கினார். மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்றார். ஊனுடலுடன் வாழ்ந்த இயேசு மரித்து உயிர்த்தார். இந்த இயேசுவை கண்டதால் ஏற்பட்ட மன உறுதியே பவுலடிகளாரின் வாழ்க்கை முழுவதும் இறைப்பணியாற்ற அடித்தளம் அமைத்தது. மனமாற்றத்திற்குப் பின் பவுலடிகளார் நற்செய்தி பரப்பும் பணிகளில் தலைமையாளராக மாறினார். இவர் தன்னை புற இனத்தாரின் அப்போஸ்தலன் என்று அழைத்துக் கொண்டார். நற்செய்திப் பயணங்கள் மேற்கொண்டு திருச்சபைகளை நிறுவினார். அத்திருச்சபைகளோடு கடிதங்கள் வழியாக தொடர்பு கொண்டார். இவர் ஆதிக்கம் உலக முடிவு வரை திருச்சபைகளில் நிலைநிற்கும்.

கிறிஸ்வத்தின் படைப்பாற்றல் மிக்க ஆட்தன்மையுடைய இயேசுவுக்கு அடுத்தபடியாக குறிப்பிடப்பட வேண்டியவர் பவுல். அந்தியோகியா திருச்சபையை இவர் நிறுவவில்லை. ஆனால் இந்தத் திருச்சபை தான் பவுலடிகளாரை புற இனத்தாரின் அப்போஸ்தலனாக மாற்றியது.

பவுலடிகளாரின் நிருபங்களை வாசிக்கும் போது அவற்றில் காணப்படும் உணர்ச்சி மிக்க நடை பவுலடிகளார் ஆழ்ந்த மனவெழுச்சி ஆர்வம் உடையவர் என்பதை காட்டும். கிறிஸ்தவத்தின் வரலாற்றில் பவுலடிகளார் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர் ஆவார். புதிய ஏற்பாட்டு இறையியலை வகுத்துத் தந்தவர் இவர். கிறிஸ்துவோடு தன்னை ஒன்றித்துக் கொண்டு அவருக்குப் பின்னால் தன்னை மறைத்து அழித்துக்கொள்வதில் தன் வாழ்வை முழுவதும் செலவிட்டார். இறுதியில் இரத்த சாட்சியாக மரித்தார்.

விண்ணுலக தந்தையே! நீர் எங்களை கிருபையாக இயேசுவில் அழைத்திருக்கிறீர். உம் அழைப்பின் நோக்கத்தைப் புரிந்து வாழ்நாள் முழுவதும் வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.