யோவான் 4 : 28-30, 39-42                               18 அக்டோபர் 2020, ஞாயிறு

“அந்த ஸ்திரீயின் வார்த்தையினிமித்தம் அந்த ஊர்ச் சமாரியாவில் அநேகர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.” – யோவான் 4 : 39

சமாரியப் பெண் பெயர் குறிப்பிடப்படாதவர். மேசியாவைப் பற்றி சில காரியங்களை கேள்விப்பட்டிருந்தாள். இப்பெண்ணுக்கம் இயேசுவுக்கும் நிகழ்ந்த உரையாடலே இன்றைய தியானம். ஆண்டவர் இயேசு ஒரு முறை சமாரியாவில் உள்ள சீகார் என்ற ஊருக்கு சென்றிருந்தார். இயேசு களைப்படைந்தவராய் அங்கேயிருந்த கிணற்றருகே உட்கார்ந்திருந்தார். பகல் பன்னிரண்டு மணி அப்பொழுது. சமாரியப் பெண் ஒருத்தி தண்ணீர் மொண்டுக்கொள்ள வந்தாள். இயேசு அவளிடம் தாகத்துக்கு தண்ணீர் தா என்று கேட்டார். இயேசுவை கண்ட அந்தப் பெண் இயேசு யூதர் என்று அறிந்து கொண்டார். அதனால், நீர் யூதர், நான் சமாரியப் பெண். தாகத்துக்குத் தா என்று என்னிடம் கேட்பது எப்படி? என்றாள். யூதர்களோடு சமாரியர்கள் உறவாடுவதில்லை.

இயேசு அந்த பெண்ணைப் பார்த்து, தாகத்துக்குத் தா என்று உன்னிடம் கேட்கிறவர் யார் என்று நீ அறிந்திருந்தால் நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவர் உனக்கு ஜீவ தண்ணீரை தருவார் என்றார். சமாரியப் பெண்ணின் கடந்தகால குடும்ப வாழ்வையும் நிகழ்கால வாழ்வையும் இயேசு சொன்னார். சமாரியப் பெண் இயேசுவை தீர்க்கதரிசி என்று அறிந்து கொண்டாள். கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார் என்று தெரியும் என்றாள். இயேசு அவளைப் பார்த்து உன்னோடு பேசும் நானே அவர் என்றார். அவர்தான் மேசியா, என்று நம்பினாள். உடனடியாக ஊருக்குள் ஒடிச் சென்றாள். சாட்சி பகர்ந்தாள். அவளுடைய வாழ்வில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இயேசுவின் உபதேசத்தைக் கேட்ட அநேகர் அவரிடம் நம்பிக்கை வைத்தார்கள். அவரே உலக இரட்சகர் கிறிஸ்து என்று அறிந்தார்கள். சாட்சி பகர்ந்தார்கள். சமாரியாவில் கிறிஸ்துவை அறியக் காரணமாய் இருந்தவர் இந்தப் பெயர் சொல்லப்படாத பெண்.

நம்மை முழுமையாக அறிந்தவர் நம் ஆண்டவர். நமக்கு எப்போது எது தேவை என்பதை அறிந்து நிறைவேற்றுபவர் அவரே. நமக்கு வாழ்வு தரும் தண்ணீரைத் தருகிறவர் ஆண்டவர் இயேசுவே. இயேசுவை நம்பும் பிள்ளைகளுக்கு நித்திய வாழ்வு உண்டு. இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா. திருமறை எழுத்துக்களில் அவரைக் கண்டுகொள்ளுவோம். அவரில் விசுவாசம் வைப்போம். பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். பாவ மன்னிப்பின் நிச்சயத்தைப் பெறுவோம். மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ளுவோம். சாட்சியாய் வாழுவோம்.

விண்ணையும் மண்ணையும் ஆளுகிற கடவுளே! உம் நேசகுமாரனில் புதுவாழ்வு பெற எங்களை வழி நடத்தும். நேசகுமாரனை வசனங்கள் வழியாக அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் எங்களில் செயலாற்ற உதவி செய்யும். உமக்கு சாட்சியாக வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.