மத்தேயு 9 : 9-13 26 அக்டோபர் 2020, திங்கள்
“இயேசு அவனிடம் என்னைப் பின்பற்றி வா என்றார்.” – மத்தேயு 9 : 9
மத்தேயு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூமில் பிறந்தவர். மத்தேயு என்பதற்கு `கர்த்தரின் ஈவு’ என்பது பொருள். இவர் சுங்கச் சாவடியில் வரிவசூலித்துக் கொண்டிருக்கும் போது இயேசு அவரை சீடராக அழைத்தார். இவரது இயற்பெயர் லேவி. இறைவனை ஆராதிப்பதற்காகவும், இறைப்பணி செய்வதற்காகவும் இந்த பெயர் இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.
சீமோனுக்கு பேதுரு என்ற பெயர் கொடுத்தது போல லேவிக்கு மத்தேயு என்ற பெயர் கொடுத்திருக்கலாம். இவர் வரி வசூலித்து ரோமருக்கு கொடுத்தார். வரி வசூலிப்பவர்களை ஆயக்காரர்கள் என்று அழைப்பதுண்டு. ஆலய வழிபாடுகளில் இவர்களுக்கு இடமில்லை. இவர்களின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வரி செலுத்தும் யூதர்கள் இவர்களிடமிருந்து மீதித் தொகையைப் பெறுவதைக் கூட அருவருப்பாக எண்ணினர். பன்னிரெண்டு சீடர்களிலும் கல்வி அறிவுமிக்கவர் இவர்.
இயேசு இவரை சீடராக அழைத்த உடனே, தனது தொழிலையும், பழைய வாழ்க்கையையும் விட்டு இயேசுவை பின்பற்றி வந்தார். இவர் வசதியுள்ளவராக இருந்தபடியால் இயேசுவுக்கும் மற்ற சீடர்களுக்கும் பல முறை தமது இல்லத்தில் விருந்தளித்தார். மத்தேயு பதினைந்து ஆண்டுகள் யூதர்கள் மத்தியில் இறைப்பணி செய்தார். கல்வியில் சிறந்த மத்தேயு அரசர்களுக்கும், அரசவை உறுப்பினர்களுக்கும், நற்செய்தியை சொன்னார். பல உரையாடல்களை அவர்களோடு நடத்தினார். இருபத்தி மூன்று ஆண்டுகள் எகிப்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இறைபணி செய்தார். கி.பி. 90ம் ஆண்டு தொமிதியன் ஆளுகையின் கீழ் இரத்தசாட்சியாக மரித்தார். மத்தேயு ஆரம்பத்தில் யூதர்கள் மத்தியில் இறைப்பணி செய்து வந்தபடியால், தனது நற்செய்தி நூல் `மத்தேயு’வை அரேமேய மொழியில் எழுதினார். இது யூத சமயத்திலிருந்து வந்த கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது.
இறைவன் எந்த மனிதனையும் வெறுக்கிறவர் அல்ல. ஏற்றுக் கொள்ளுகிறவர். சமூகத்தால் இழிவாக்கப்பட்ட மத்தேயுவை தேடிச் சென்று அழைத்தவர். நம்மையும் அழைக்கிறார். நமது கல்வி, ஞானம், திறமை வரங்களை இறைப்பணிக்கு பயன்படுத்துவோம். இறை அழைப்பின் மேன்மையை உணருவோம். அழைத்த இயேசுவை பின்பற்றுவோம். இறைப் பணி செய்வோம்.
இயேசுவில் மனுக்குலத்தை தேடி வந்த இறைவா, எங்களுடைய கல்வி, ஞானம், வரங்கள், படிப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், உமக்கு முன்பாக நாங்கள் எங்களை தாழ்த்தி வருகிறோம். எங்களை உமது கருவிகளாக பயன்படுத்தியருளும் இயேசுவில் பிதாவே, ஆமேன்.
