யோவான் 6 : 5-13                            09 அக்டோபர் 2020, வெள்ளி

“ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு.” – யோவான் 6 : 9

இறைவனைத் தேடி தினம்தோறும் ஆயிரமாயிரம் மக்கள் அலை மோதுகின்றனர். மன நிம்மதிக்காக, சுகத்திற்காக, அற்புதங்களுக்காக, தேவைகளுக்காக, பிசாசின் கட்டுகளிலிருந்து விடுதலைக்காக இப்படி எத்தனையோ காரியங்களுக்காக ஓடி ஓடி அலைகின்ற மக்கள் கூட்டத்தை பார்க்கிறோம். ஒரு சமயம் இயேசுவின் போதனைகளைக் கேட்க பல்லாயிரம் பேர் ஓர் இடத்தில் கூடி வந்தார்கள். அந்த இடம் வனாந்திரமானது. ஆண்டவர் இயேசு அநேக காரியங்களைக் குறித்து பேசினார். பெண்கள், சிறுவர்கள் நீங்கலாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இருந்தார்கள். இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார். மாலை நேரம் இருள் சூழ ஆரம்பித்தது. ஐயா இவர்களை அனுப்பிவிடும் என்று ஆண்டவரிடம் சொன்னார்கள் சீடர்கள். இயேசு அவர்களிடம் அவர்கள் செல்ல வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்றார். நாங்கள் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் இவர்களுக்கு காணாதே என்றார் பிலிப்பு. அப்போது அந்திரேயா இயேசு ஆண்டவரிடம் வந்து, இங்கே ஒரு சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன என்றார். இதுவே தியான வசனம்.

அந்திரேயா தொடர்ந்து ஆண்டவரிடம் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும் என்றார். இந்தச் சிறுவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. உணவை கூட உண்ண மறந்து இயேசுவின் போதனைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவன். இந்த சிறுவனிடமிருந்த ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் பல்லாயிரம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இறைசித்தம் நிறைவேறுவதற்காக இவனிடம் இருந்திருக்கிறது. இயேசு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைவனைப் போற்றி அமர்ந்திருந்தோருக்கு கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சியவைகளை பன்னிரெண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

இன்றும் இறைவனைத் தேடி அலைகிற கூட்டம் எண்ணிலடங்கா. பலர் அற்புதங்களைப் பெற கூட்டம் கூட்டமாக வருகின்றார்கள். ஆசீர்வாதம் வேண்டும், ஆனால் ஆண்டவர் வேண்டாம். ஆசீர்வாதம் பெற்றபின்பு, ஆண்டவரை மறந்துவிடுகிறோம். அழியும் உணவை விட அழியா உணவை, உயிருள்ள உணவை, வாழ்வு தரும் உணவை ஆண்டவர் இயேசு நமக்கு தருகிறார். அழியா உணவான நித்திய ஜீவன், நித்திய சமாதானம், நித்திய சந்தோஷம் இவைகளை இயேசு தருகிறார். நாம் தேட nண்டியது இரட்சிப்பு, நாம் கேட்க வேண்டியது பாவமன்னிப்பு அதை ஆண்டவர் அருளுகிறார். நாமும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவோம். பிறருக்குப் பகிர்ந்தளிப்போம்.

வாழ்வு தரும் உணவைத் தருகிறவரே! அழிந்து போகாத நித்திய ஜீவனை எங்களுக்கு கிறிஸ்துவின் வழியாக தந்ததற்காய் உமக்கு நன்றி சொல்லுகிறோம். வாழ்வில் இதை இழந்து போகாதிருக்க கிருபை செய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்.