மாற்கு 1 : 21-31 11 அக்டோபர் 2020, ஞாயிறு
“அவர் கிட்டப்போய்க் கையைப் பிடித்து அவளைத் தூக்கிவிடவே, ஜீரம் அவளைவிட்டு நீங்கிற்று.” – மாற்கு 1 : 31
சுகவீனம் வரும்போது மருத்தவமனைக்குச் செல்கிறோம். தேர்ச்சி பெற்ற மருத்துவரைச் சந்திக்கின்றோம். விலை உயர்ந்து மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துகின்றோம். இறைவன் சித்தமில்லாமல் எந்த நோயும் குணமாகாது. சில மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட வாசகங்கள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. `Doctors Treats, God Cures.’ ஆம், மருத்துவர்கள் சிகிச்சையளிக்கின்றார்கள். குணப்படுத்துகிறவர் இறைவன்.
ஆண்டவர் இயேசு ஒரு முறை கப்பர்நகூம் என்ற ஊரில், பேதுரு என்ற சீடனின் வீட்டுக்குச் சென்றார். அங்கே பேதுருவின் மாமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இயேசு அவள் அருகில் சென்று கையைப் பிடித்து தூக்கிவிட்டார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி, சுகமானாள். உடனே அவர்களுக்கு பணிவிடை செய்தாள். இதுவே தியான வசனபகுதி. ஆண்டவர் இயேசு நமது நோய்களை குணமாக்குபவர். இவ்வுலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக் குட்டியாக வந்தார். பாவப் பிணியினால் தான் நோய்ப் பிணியும் உலகத்தில் வந்தது என்பது பொதுவான மக்களின் நம்பிக்கை. நோய்ப் பிணியையும் நீக்கவே இயேசு நமக்காகப் பலியானார். இயேசுவின் தழும்புகளால் நாம் குணமாக்கப்பட்டோம். இயேசு தாமே நமது நோய்களை தமது சரீரத்தில் ஏற்றுக் கொண்டார்.
எந்த மருத்துவராலும் குணமாக்கப்பட முடியாது என கைவிடப்பட்ட எத்தனையோ பேர் கிறிஸ்துவினால் அற்புதமான சுகத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு பேசி இருக்கிறோம். இயேசு இன்றும் நோயுற்றவர்களை சுகமாக்குகின்றார். நாம் எந்த மருந்தை உட்கொண்டாலும் குணமாக்குபவர் இறைவன். அவரே நமது மிகப்பெரிய மருத்துவர். இறைவனை நம்பும் பிள்ளைகளுக்கு அற்புதமான குணமாகுதல் உண்டு. இயேசுவில் வைக்கும் விசுவாசத்தில் வளருவோம். `அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார். அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் இருக்கிறார்’ என்ற பாடல் வரிகள் நமக்கு ஆறுதலை தருகின்றது.
நாம் இயேசுவில் இறைவனின் பிள்ளைகள். இறைவன் தம் பிள்ளைகள் சுகமும், பலமும் பெற்று வாழ விரும்புகின்றார். இறைவன் இயேசுவில் நம்மைத் தேடி வருகிறார். நம் தேவைகளை அறிகிறார். அவர் சித்தப்படி நமக்குத் தேவையான ஈவுகளை அருளுகிறார். நாம் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் போது அவருக்குப் பணிவிடை செய்ய விரும்புகின்றார். நாம் வாழ்வில் ஆண்டவருக்கு தொண்டு செய்வோம். மகிழ்ச்சியாய் வாழுவோம்.
மருத்துவர்க்கெல்லாம் மருத்துவரே! நாங்கள் நோய்களால் அவதியுறாமல் பாதுகாரும். எங்கள் நோய்களிலிருந்து உம் சித்தப்படி விடுதலை தாரும். விடுதலை பெறுகிற நாங்கள் உமக்குப் பணிவிடை செய்ய பலப்படுத்தும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
