ஏசாயா 52 : 1-10                                   15 செப்டெம்பர் 2020, செவ்வாய்

“நற்செய்தியை அறிவித்துச் சமாதானத்தைக்கூறி … இரட்சிப்பைத் தெரியப்படுத்தி…”- ஏசாயா 52 : 7

ஏசாயா தீர்க்கதரிசி ஆமோத்சின் மகன். எரேமியா, எசேக்கியேல், ஏசாயா ஆகிய இவர்கள் மூன்று பெரிய தீர்க்கதரிசிகள். ஏசாயா என்பதற்கு `கர்த்தர் இரட்சிப்பு’ என்பது பொருள். யூதாவின் அரசனாகிய உசியா அரசன் மரணமடைந்த வருடத்தில் கி.மு. 740-ல் தீர்க்கதரிசனம் உரைத்தார். உயிருக்கு அஞ்சாதவர். தேசத்தின் நலனில் அக்கறை உள்ளவர். இவரது தீர்க்கதரிசனங்கள், தவறான உறவுகளுக்கு எதிராக அம்புகள் போலப் பாய்ந்தன. தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு பாவங்களினிமித்தம் தண்டனை உண்டு என்றார். இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தவர்கள் நன்மை பெற்றனர்.

பாபிலோனில் சிறையிருப்பில் இருந்த மக்களுக்கு ஆறுதலான செய்திகளைச் சொன்னார். அழிவைக் காட்டிலும், ஆறுதலையும், நீதியைக் காட்டிலும், கிருபையையும் வலியுறுத்தினார். இறைவன் இஸ்ரவேல் மக்களை மீட்பார். அவர்களை சொந்த நாட்டில் புதுவாழ்வு வாழும்படி அழைத்துச் செல்வார். வரலாற்றில் இறைவன் உங்களோடு இருக்கிறார். அவர் உலகம் முழுவதையும் அரசாளுகிறார் என்று மேசியாவின் வருகையை ஏசாயா விவரிக்கின்றார். எனவே இதை நற்செய்தியாகச் சொல்லுங்கள், சமாதானத்தை கூறுங்கள், இரட்சிப்பை தெரியப்படுத்துங்கள் என்கிறார்.

போரில் வெற்றிவாகை சூடிவரும் அரசனது வெற்றியைக் கூறி அறிவிக்க பட்டணத்தை நோக்கி ஓடி வரும் தூதுவனின் கால்கள் விரைவுடன் ஓடும். கால்களின் விரைவு மூலமாக மக்கள் செய்தியை புரிந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை நீங்கள் காண்பீர்கள். இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல அனைத்துலக மக்களும் காண்பார்கள். இஸ்ரவேலரின் இரட்சிப்பு உலகம் அறிய பிரசித்தமாகும். இப்படி சொல்லுகிறவர்களுடைய பாதங்கள், மலைகளின் மேல் எவ்வளவு அழகாய் இருக்கின்றன என உரைக்கின்றார் ஏசாயா. இதுவே தியான வசனம்.

இரட்சிப்பைப் பெற இன்று மக்கள் எங்கெல்லாமோ ஓடுகின்றார்கள். சிலர் உடலை வருத்திக் கொள்ளுகிறார்கள். பலர் புண்ணிய இடங்களை தரிசிக்கிறார்கள். பலர் ஆறுகளையும், மலைகளையும் நாடுகின்றார்கள். இவற்றால் நாம் இரட்சிப்பைப் பெற முடியாது. நாம் இரட்சிப்பை பெறவே இறைவன் தமது ஒரே பேறான குமாரன் இயேசுவை உலகத்துக்கு அனுப்பினார். இயேசுவின் வழியாக நாம் கிருபையாக மீட்கப்பட்டிருக்கிறோம். இன்றும் இறை ஆளுகையில் தான் இருக்கின்றோம். நாம் பெற்ற இரட்சிப்பை பிறருக்கு கூறி அறிவிப்போம்

திரியேக இறைவனே, நாங்கள் பெற்ற இரட்சிப்பை, பிறருக்கு கூறி அறிவிக்க பரிசுத்த ஆவியை எங்களுக்கு தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.