2 இராஜாக்கள் 11 : 1-12 07 செப்டெம்பர் 2020, திங்கள்
“அத்தாலியாள் தேசத்தை அரசாண்டு வருகையில், … கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்.” – 2இராஜாக்கள் 11 : 3
ஒரு குழந்தை வீதியில் கவனிப்பாரற்று பசியோடு அழுது கொண்டிருந்தது. அதனுடைய தாய் யார் என்று தெரியவில்லை. இதை கவனித்த காவல் துறையில் பணியாற்றிய பெண் காவலர் ஒருவர் அந்த குழந்தையை எடுத்து, அதைத் தன் குழந்தையைப் போல கவனித்தார். பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பெண் காவலரின் மனித நேயத்தை, அரசாங்கம் பாராட்டியது. பொதுமக்களும் பாராட்டினார்கள். இது பத்திரிக்கைச் செய்தி.
யோசேபாள் இஸ்ரவேல் அரசன் யோராவின் மகள். இறைவனுக்கு பயந்தவள். அன்பு நிறைந்தவள். தன் சொந்த குழந்தையாக இல்லாதபோதும், தன் சகோதரன் அகசியாவின் குழந்தையைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெற்றாள். அத்துடன் அதற்கு தாயாக உதவி செய்தாள். இதற்கு இறைவன் யோசேபாளை பயன்படுத்தினார். அத்தாலியாள் அரச வம்சத்தாரை கொலை செய்தாள். யோவாஸ் கொல்லப்படாதபடி அவனையும் அவன் தாதியையும் மூன்று மாதம் பள்ளியறையில் ஒளித்தாள். அத்துடன் ஆறு ஆண்டுகள் தங்களுடைய ஆலயத்தில் ஒளித்து வைத்தாள். எவ்வளவு கடினம். குழந்தையின் சத்தம் கேட்டால் கூட உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்ற சூழ்நிலையில் ஆறு வருடம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைத்து குழந்தையை பாதுகாத்தாள். துணிச்சல் மிக்க பெண், குழந்தைக்கு வளர்ப்பு தாயாக இருந்திருக்கிறார். குழந்தை யோவாஸின் ஏழாம் வருடத்தில் யோயாதா என்னும் ஆசாரியன் யோவாஸை அரசனாக்கினார். யோசேபாளின் திட்டத்தினால் அரச வம்சம் பாதுகாக்கப்பட்டது. நம்முடைய குழந்தைகளுக்கு எந்த ஆபத்து நேரிட்டாலும், நாம் எத்தனை துரிதமாக செயல்பட்டு, குழந்தையை காப்பாற்றுகிறோம். நம்முடைய குழந்தைகளை மட்டுமல்ல பிறருடைய குழந்தைகளைக் கூட ஆபத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி இறைவன் விரும்புகிறார். உதவி செய்யத் தயங்கக்கூடாது. இதைத்தான் யோசேபாள் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.
கர்த்தருடைய ஆலயத்திற்கு நமது பிள்ளைகளைக் கொண்டு வருவோம். அவர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். இறை உறவிலும், ஆலயத்தோடும் இணைந்தும் வாழ வழி நடத்துவோம். இறைவன் கையிலிருந்து நமது பிள்ளைகளை சாத்தான் பறித்துக்கொள்ள முடியாது. ஏனெனில் கர்த்தர் நம் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர்களை இறைவனுக்கேற்ற விதத்தில் வளர்த்து ஆளாக்குவோம்.
எங்களை நேசிக்கிற இறைவா, நீர் எங்களுக்குத் தந்த பிள்ளைகள் நீர் தந்த பலன், சுதந்திரம். இவர்களை நாங்கள் பாதுகாத்து உமக்கு உகந்த பிள்ளைகளாக வளர்க்க எங்களுக்கு தயை செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
