1 இராஜாக்கள் 18 : 3-16                                         06 செப்டெம்பர் 2020, ஞாயிறு

“நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்க, அவன்: நான் தான் நீ போய்…… சொல் என்றான்.” – 1 இராஜாக்கள் 18 : 7

முழு திருமறையிலும் ஒபதியா என்ற பெயரில் பதிமூன்று பேர் இருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றார்கள். ஒருவர் ஒபதியா தீர்க்கதரிசி. மற்றொருவர் இஸ்ரவேல் அரசன் ஆகாப்பின் அரண்மனை விசாரிப்புக்காரன். இந்த தியானப்பகுதி ஆகாப் அரசனின் அரண்மனை விசாரிப்புக்காரனைப் பற்றியது. ஒபதியா சிறுவயது முதலே இறைபக்தியுள்ளவர். ஆகாப் அரசனின் மனைவி யேசபேல் இறைவனின் தீர்க்கதரிசிகளை கொலை செய்தாள். அப்போது ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளை சேர்த்து கெபிக்கு ஐம்பது பேராக ஒளித்து வைத்திருந்தார். அவர்களுக்கு ஆகாரமும், தண்ணீரும் கொடுத்தார்.

தேசத்தில் எலியா தீர்க்கதரிசி சொன்னபடி மழை இல்லாமல் போயிற்று. பஞ்சம் தாண்டவமாடியது. ஆகாப் அரசன் ஒபதியாவை அழைத்தார். தேசத்திலுள்ள சகல நீரூற்றுகளையும், நீரோடைகளையும் சுற்றிப் பார்த்து வா என்று அனுப்பினார். மிருகங்களையும், குதிரைகள், கோவேறு கழுதைகளையும் உயிரோடு காப்பாற்ற வேண்டும். இதற்கு எங்காவது புல்லோ, தண்ணீரோ கிடைக்குமா என்று பார்ப்பதற்காக ஆகாப் ஒருபுறமும் ஒபதியா இன்னொரு புறமும் சென்றார்கள். எலியாவை இதுவரை ஒபதியாவுக்கு அடையாளம் தெரியாது. இவர்தான் எலியா என்று அறிந்து முகங்குப்புற விழுந்து என் ஆண்டவனாகிய எலியா அல்லவா நீர் என்று கேட்டார். அவர் நான் தான் என்றார். இதுவே தியான வசனம். ஆகாப் அவரிடம் இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லோ….? என்றான். எலியா பாகால் வழிபாட்டுக்காரனான நீரும் உம் தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவர்கள் என்றார்.

தேசத்தின் அழிவுக்கும், மக்களின் சீரழிவுக்கும் காரணமாக விளங்கும் ஆகாப், யேசபேலை போன்ற மக்கள் அனுதினமும் இறைப்பணியாளர்களை கொன்று குவிக்கிறார்கள். ஆலயங்கள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இறைமக்களை கலங்கப்பண்ணுகிறவர்கள் தங்கள் தவறை மறைத்து கிறிஸ்தவர்கள் மீதே பழி போடுவதும் நடக்கிறது. இறைவனுக்கு எதிராக செயல்படுபவர்கள் இருக்கிறார்கள். எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலும் இறைவன் தம் பிள்ளைகளைப் பாதுகாத்து, பராமரிக்கிறார். தம் பிள்ளைகளைத் தப்புவிப்பதற்கான வழிமுறைகளை ஒபதியா போன்றவர்களைக் கொண்டு உண்டு பண்ணுகிறார். எலியாவின் விசுவாச உறுதிப்பாட்டை அறிந்திருக்கிறோம். இறைவனில் வைக்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையில் வாழுவோம். கடவுள் இயேசுவில் நிச்சயம் மிகப்பெரிய மாற்றங்களை நம் மத்தியில் கொண்டு வருவார்.

ஜீவனுள்ள இறைவா, நாங்களும் எல்லா சூழ்நிலைகளிலும், உமக்கு சாட்சியாக இருக்க உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.