2 இராஜாக்கள் 17 : 1-6 23 ஆகஸ்ட், 2020 ஞாயிறு
“அவன் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தான்… முன்னிருந்த … போல் செய்யவில்லை.” – 2 இராஜாக்கள் 17 : 2
வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்து எட்டையப்பன் துரோகம் செய்தான். துரோகம் செய்யும் குணம் தீமையானது. மற்றவர்களுக்கு எதிராக துரோகம் செய்வது நமக்கு அழிவைக் கொண்டு வரும். துரோகம் செய்யாமல் இருப்பது உறவுகளை வளர்க்கும்.
ஓசேயா இஸ்ரவேல் அரசின் கடைசி அரசன். ஒசேயா என்ற பெயரின் பொருள் `கர்த்தர் உதவி செய்கிறார்’ என்பதாகும். ஒசேயா எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் என்று கூறப்பட்டுள்ளது. அசீரியரால் சிங்காசனத்தில் வைக்கப்பட்ட இவர். எகிப்தியரின் ஏவுதலினால் அசீரியருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார். அசீரிய அரசர்கள் நாலாம் சல்மனாசாரும், சர்கோனும், சமாரியாவை முற்றுகையிட்டு அதை அழித்தார்கள். ஒசேயா இவருக்கு முன்னிருந்த பெக்கா அரசாண்ட நாட்களில் அசீரியர் இஸ்ரவேல் நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி அரசனை திறைகொடுக்கப் பண்ணினார்கள். பின்பு ஒசேயா, பெக்கா அரசனைக் கொலை செய்து அரசனானார். சில காலம் கப்பங்கட்டிக் கொண்டிருந்த பின் எகிப்தின் உதவியை நம்பி, கப்பம் கொடாமல் விட்டு விட்டபோது அசீரிய அரசனாகிய சல்மனாசார் ஒசேயாவைப் பிடித்துச் சிறையில் அடைத்தான். பின்பு சமாரியாவை முற்றுகையிட்டு மூன்று வருடங்களில் பிடித்தார். இவர் இஸ்ரவேலரை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டு போனார்.
ஒசேயா சமாரியாவில் இஸ்ரவேலின் மேல் அரசனாகி ஒன்பது வருஷம் அரசாண்டான். அவர் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தார். என்றாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் அரசர்களைப் போல் செய்யவில்லை. ஒசேயா சல்மனாசர் அசீரிய அரசருக்குக் கப்பங்கட்டி வந்தார். பின் ஒசேயா எகிப்தின் அரசனாகிய `சோ’ என்பவனிடம் ஆட்களை அனுப்பினார். இஸ்ரவேல் மக்கள் கர்த்தருக்கு விரோதமாய் பாவஞ்செய்தபடியால், சிறையிருப்பிலும், கப்பம் கட்டுவதிலும் துன்பம் அனுபவிக்க நேர்ந்தது. ஒசேயா நம்பிக்கை துரோகம் செய்ததால், சிறைப்பட்டு போனார். தண்டனை அனுபவித்தார். செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தான். இவரால் மக்களும் தண்டனை அனுபவித்தார்கள்.
நாம் நேர்மையாக இருக்க கடவுள் விரும்புகிறார். அவர் பார்வையில் கடவுளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்யாதிருப்போம். நாம் கடவுளுக்குப் பயந்து, நாம் வாழுகின்ற சமூகத்தில் மனித நேயத்தோடு வாழுவோம்.
கடவுளே, நாங்கள் பிறருக்கு விரோதமாக நம்பிக்கை துரோகம் செய்யாமல், நேர்மையோடு, வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
