2 இராஜாக்கள் 15 : 13-21 20 ஆகஸ்ட், 2020 வியாழன்
“அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.” – 2 இராஜாக்கள் 15 : 17
ஒவ்வொரு மனிதனும், உழைத்து சுயமாக தன் காலிலே நிற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். பிறர் உதவி இன்றி வாழ்விலே முன்னேற்றம் பெறவேண்டும் என்ற உறுதி கொள்ளுகிறார்கள். தானே பொறுப்பேற்று தானே எல்லாவற்றையும் நடத்தவேண்டும் என்ற உணர்வு எல்லோருக்கும் உண்டு.
இன்றைய தியான பகுதியில் மெனாகேம் அரசனான பின் தானே தன்னாட்சியை நிறைபெறும்படி செயல்பட்டதை இப்பகுதி நமக்கு விளக்குகின்றது. மெனாகேம் என்ற பெயருக்கு `ஆறுதல் அளிப்பவர்’ என்று பொருள். மெனாகேம் கி.மு. 745-738 வரை இஸ்ரவேல் மக்களை அரசாண்டார். இவர் சல்லூமைக் கொன்று அரியணை ஏறியவர். வடநாட்டில் சகரியா அரசன் இறந்த பின் ஆட்சியை கைப்பற்ற பலர் விரும்பினர். சல்லூம் ஒரு கட்சியின் தலைவராகவும், மெனாகேம் மற்றொரு கட்சியின் தலைவராகவும் இருந்தனர். மெனாகேம் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்ததாக கூறப்படுகின்றது. இவன் எப்போது இறந்தான் என்பது தெரியவில்லை. மெனாகேம் காலத்தில் மேற்கு அசீரியர்களின் செல்வாக்கு மிகுதியாக இருந்தது. அசீரியாவின் அரசன் இஸ்ரவேல் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது மெனாகேம் அவனுடைய உதவியால் தன்னாட்சி நிலைபெறும் பொருட்டு ஆயிரம் தாலந்து நிறையுள்ள வெள்ளிக் காசுகளை கொடுத்தான்.
அதாவது மெனாகேம் திகிலத் பிலேசருக்கு 1000 தாலந்துகள் நிறையுள்ள வெள்ளிக்காசுகளைக் கப்பம் கட்டியதாக திகிலத் பிலேசரின் ஏடுகள் கூறுகின்றன. மெனாகேம் ஆள் ஒன்றுக்கு 50 செக்கேல் வெள்ளி வீதம் வரி வசூலித்தான். வரி கொடுக்கக் கூடியவர்கள் சுமார் 60,000 பேர் இருந்தனர் என அறிய முடிகிறது. இந்த நிலையில் செல்வம் சேர்ப்பதை ஆமோஸ், ஒசேயா தீர்க்கர்கள் கண்டித்தனர். மெனாகேம் அமைதியான மரணம் அடைந்தான் என்று கூறப்படுகிறது. மெனாகேம் கடவுளின் பார்வையில் தீமையானதை செய்தான். இவன் தன் வாழ்நாள் முழுவதும் பாவ வழியை விட்டு விலகவில்லை என்பது உண்மை. கடவுளின் கோபம் உண்டாகும்படி தன் மக்களை பாவம் செய்ய தூண்டினான். அது மட்டுமல்லாமல் தன் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள மக்களின் மேல் வரிப் பளுவை சுமத்தினான். மனம் போல வாழ்ந்தான், கடவுளின் கோபம் அவன் மேல் வந்தது.
சுயநலத்துடன் வாழுவதற்காக நாம் படைக்கப் படவில்லை. பிறர் நலத்திற்காகவே வாழ்ந்த இயேசு ஆண்டவரின் பிள்கைள் நாம். நாமும் சுயநலமில்லா மக்களாக வாழுவோம். பதவி ஆசைகளை துறப்போம். நமக்காக தன்னையே தியாகம் செய்த இயேசுவை நம்முன் நிறுத்தி வாழுவோம்.
வல்லமையுள்ள கடவுளே, சுயநலமுள்ள தன்னாட்சி நிலையை எதிர்த்து குரல் கொடுக்க பெலன் தாரும்.மக்கள் நலனை மனதில் கொண்டு வாழ வழிநடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
