2 இராஜாக்கள் 15 : 23-31                                    22 ஆகஸ்ட், 2020 சனி

“ஏலாவின் குமாரன் ஒசேயா ஒமலியாவின் குமாரன் பெக்காகுருக்கு விரோதமாக சதியாலோசனை செய்து…” – 2 இராஜாக்கள் 15 : 30

நாம் யாருக்கும் அடிமைப்பட்டு வாழ விருப்பப்படமாட்டோம். அடிமை என்ற சொல் பலருக்கு பிடிக்காத சொல். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ சில பண்புகளுக்கோ அல்லது சில பழக்கத்திற்கோ அடிமைகளாக இருப்போம்.

இன்றைய தியான பகுதியில் பெக்காகு கடவுளின் பார்வையில் தீமையைச் செய்தபடியினால் அசீரியாவிற்கு சிறைப்பட்டு போனதை அறிய முடிகிறது. பெக்காகு என்ற பெயருக்கு `விழிப்பு’ என்று பொருள். இவன் ரெமலியாவின் குமாரன். இஸ்ரவேலின் 18வது அரசன். ரெமலியாவின் குமாரன் பெக்காகு என்னும் மெய்காவலாளரின் அதிபதி அவனுக்கு விரோதமாய்ச் சதியாலோசனை பண்ணி அர்கோபையும், ஆரியேயையும் சேர்த்துக்கொண்டு கிலியாத்தியரில் ஐம்பது பேரைக் கூட்டி வந்து, சமாரியவில் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள்ளே அவனை வெட்டிக்கொன்று போட்டு அவன் இடத்தில் அரசனானான். பெக்காகு சீரியாவின் அரசன் ரெத்சின் என்பவனுடன் சேர்ந்து கொண்டு யூதாவின் மேல் படையெடுத்தான். இப்படையெடுப்பு அசீரியர்கள் படையெடுப்பதற்கு முன் அவர்களுக்கு எதிராய் யூத அரசன் ஆகாசைக் கூட்டுச் சேர்ப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சியாகும்.

திகிலத் -பிலேசரால் ஒசேயா இஸ்ரவேலின் அரசனாக நியமிக்கப்பட்டான். இஸ்ரவேல் அரசின் கடைசிக் காலகட்டத்திலே அரசர்கள் அசிரியாவைச் சார்ந்தோ, அவர்களை எதிர்த்தோ ஆட்சி செய்தனர். பெக்காகு அசீரியர்களை எதிர்த்தே ஆட்சி செய்வதை விரும்பினான். யூதா மக்கள் கர்த்தரை விட்டுவிட்டபடியால் பெக்காகு அவர்களுக்கு விரோதமாக வந்து, அநேகரைக் கொன்றுபோட்டதோடு, அநேகரைச் சிறைபிடித்து சமாரியாவுக்குக் கொண்டு போனான். பின்பு ஓதேத் தீர்க்கனின் சொற்படி அவர்களைத் திரும்பி அனுப்பினான். பிற்பாடு ஒசேயா கலகம் பண்ணி இவனைக் கொன்று, தான் அரசனானான். பெக்காகு கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான். பேக்காகு தனக்கு கிடைத்த தருணத்தை பற்றிக் கொள்ளாமல் கடவுளை மறந்து, அன்னிய தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டான். தான் செய்த பாவங்களினாலேயே கொல்லப்பட்டான்.

நாம் கடவுள் கொடுக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அவர் விருப்பம் எதுவோ அதன்படி செய்ய நம்மை அற்பணிப்போம். கடவுளின் தண்டனையினின்றும் தப்பிப்போம். கிருபையுள்ள கடவுள் நாம் அழியாதபடி காப்பார்.

கடவுளே, பாவம் எப்போதும் உம் விருப்பத்தை நிறைவேற்றி வாழ தடையாக இருக்கின்றது. இந்த பாவ தடைகளை எங்களைவிட்டு அகற்றி உம்முடைய விருப்பம் செய்ய பெலன் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.