1 சாமுவேல் 21 : 1-9 12 ஆகஸ்ட், 2020 புதன்
“ஆசாரியன் தாவீதினிடம்: பரிசுத்த அப்பம் இருக்கிறதேயொழிய சாதாரண அப்பம் என்னிடம் இல்லை.” – 1 சாமுவேல் 21 : 4
இந்தியாவில் உணவற்றவர்கள், அதிக ஏழைகள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். பசித்த ஏழைக்கு கஞ்சியே பிரியாணி போன்றது. உணவு இல்லாதவர்களுக்கு உணவு கொடு என்று இயேசு நமக்கு கூறுகின்றார்.
இன்றைய தியான பகுதியில் அகியா பரிசுத்த அப்பத்தை பசியோடு வரும் தாவீதிடம் கொடுத்து மனித நேயத்தோடு நடந்துகொண்டதை அறிந்துக் கொள்கின்றோம். அகியா என்ற பெயருக்கு `கர்த்தரின் சகோதரன்’ என்று பொருள். இவர் சவுல் அரசனின் காலத்தில் இருந்த பிரதான ஆசாரியன். சீலோவில் கர்த்தரின் ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரன் பீனெகாசுக்குப் பிறந்த ஈகா போத்தின் சகோதரனான அகீதூபின் குமாரன் அகியா. இவனுக்கு அசீமேலக் என்ற பெயரும் உண்டு.
ஏபோத்து என்பது பாரம்பரியப் பெரிய குரு அணிந்து கொள்ளும் ஆடையாகும். பொன்நூல், இளநீலம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல் முதலியவற்றால் நெய்யப்படும் விலைமதிப்பு மிக்க, இரு புயங்களிலிருந்து தொங்கும் இந்த அங்கியை ஏபோத்து அணிந்திருந்தார். அகீயா சவுலின் சேனையோடு போய் கடவுளின் சித்தத்தை அறிவித்தவன். தாவீது ஆசாரியனாகிய அசீமலேக்கிடம் தனியாக போனான். ஆசாரியன் ஏன் தனிமையில் வந்துள்ளீர் என கேட்டார். நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னார். மேலும் தாவீது அவரிடம் உம்மிடத்தில் ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும் இருப்பதை எனக்குக் கொடும் என்றான். ஆசாரியன் தாவீதினிடம் பரிசுத்த அப்பம் இருக்கிறதேயொழிய சாதாரண அப்பம் என்னிடம் இல்லை என்றார். பின்பு அசீமேலக் பரிசுத்த அப்பங்களை தாவீதினிடம் கொடுத்தான். மீண்டும் தாவீது அசீமேலேக்கிடம் இங்கே உமது வசம் ஒரு ஈட்டியாகிலும், பட்டயமானாலும் இல்லையா? அவசரமாக வந்ததினால் ஆயுதம் கொண்டு வரவில்லை என்றார். அதற்கு அசீமேலேக் நீர் கொன்ற கோலியாத்தின் பட்டயம் இருக்கிறது. எடுத்துக்கொள்ளும் என்றான். அசீமேலேக் தாவீதுக்கு கடவுளின் சமூக அப்பத்தை கொடுத்ததினாலும் கோலியாத்தின் பட்டயத்தை கொடுத்ததினாலும் சவுல் இவனையும் இவன் இனத்தார் யாவரையும் கொன்று போட்டான்.
பிரியமானவர்களே, இன்று பசியினால் தவிக்கும் மக்கள் ஏராளம். பசியின் கொடுமையினால் இறக்கிறவர்கள் அதிகம். ஆனால் கடவுள் ஏழை மக்களின் பசியை போக்கக் கூடியவராக இருக்கிறார். இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க கூறுகின்றார். கொடுக்க கற்றுக் கொள்வோம். ஏழைகளின் பசி போக்குவோம்.
அன்பின் ஆண்டவரே! ஏழை மக்களின் பசி போக்கும் தந்தையே. நாங்களும் தேவையுள்ள மக்களுக்கு பசியாற்ற உதவிகரம் நீட்ட பெலன் தாரும். எங்களுக்குள்ளதை பகிர்ந்து, மனித நேயத்துடன் வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
