சங்கீதம் 7 : 14-17                          31 ஜூலை, 2020 வெள்ளி

“ஒரு ஸ்திரீ ஒரு எந்திரத்து மேற்கல்லை அபிமலேக்கின் தலைமேல் போட அது அவர் மண்டையை உடைத்தது.” – நியாயாதிபதிகள் 9 : 53

தினை விதைத்தவன் தினையை அறுப்பான் வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்பது பழமொழி. வாழ்வில் பெரும்பகுதியை அக்கிரமங்களிலும் பிறரை அழிப்பதிலும் செயல்பட்ட அபிமலேக்கு என்பவர் அழிந்து போனதை குறித்து இத்தியானம் விளக்குகிறது.

இஸ்ரவேலில் கிதியோன் என்ற நியாயாதிபதி மகத்தானவர். நற்பண்புகள் நிறைந்தவர். இவருடைய ஒரு மகன் தான் அபிமலேக்கு. தானோ தன் குடும்பத்தாரோ அரசனாக இருக்க மாட்டார்கள் என்று கிதியோன் வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அபிமலேக்கு தன் கவர்ச்சியான பேச்சினால் தன்னை ஒரு தலைவனாக்கிக் கொண்டு அரசனானார். மூன்று வருடம் கொடுங்கோல் ஆட்சி நடத்தினார். மக்கள் பொறுத்து பார்த்து பின்னர் பொங்கி எழுந்தனர். தன்னை எதிர்த்தவர்களை ஊர் ஊராக சென்று அபிமலேக்கு அழித்தார். அப்படி ஒரு ஊரை அழிக்க அவ்வூரை நெறுங்கியபோது, அவ்வூர் மதிலிலிருந்து ஒரு பெண் பெரிய எந்திரக்கல்லைத் தூக்கிப் போட அது அபிமலேக்கின் மண்டையை உடைத்தது, அவர் கொல்லப்பட்டார்.

ஒரு தலைவன் எப்படி இருக்கக் கூடாதோ அதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருக்கலாம். ஆனால் தீமையை மாத்திரமே செய்து வந்த அபிமலேக்கு அதே மாதிரியான தீமையினால் அழிந்து போனார்.

எதற்கும் ஒரு முடிவு. உண்டு எல்லை உண்டு. நம்மை யார் தடுப்பார் என்ற எண்ணத்தில் நாம் தீமை செய்யாதிருப்போம். கடவுள் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். அவர் கோபத்திற்கு நம்மால் தப்ப இயலாது. நன்மை செய்ய பழகுவோம். தீமையை விட்டு விலகுவோம். இயேசுவின் நற்பண்புகளை பற்றிக் கொள்வோம்.

இரக்கமுள்ள கடவுளே! இரக்கமின்றி அக்கிரமங்களை செய்யும் எங்களை நல் வழிப்படுத்தும். உமதன்பினால் எங்களை ஆட்கொண்டு பிறர் வாழ உதவும் நற்பண்புகளை எங்களில் உருவாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.