2 இராஜாக்கள் 18 : 1-16 28 ஜூலை, 2020 செவ்வாய்
“எசேக்கியா… தன் கடவுளாகிய கர்த்தருடைய பார்வையில்… உண்மையுமானதைச் செய்து வந்தான்.” – 2 நாளாகமம் 31 : 20
தான் செய்த காரியங்களினால் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த அரசன் எசேக்கியாவை பற்றி இன்று காண்போம்.
ஆகாஸ் அரசனின் மகன். யூதாவின் பன்னிரெண்டாம் அரசன். எசேக்கியா தன் ஆளுகையின் ஆரம்பத்திலேயே ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, பழுது பார்த்து, சுத்திகரித்து, ஜனங்கள் கர்த்தரிடம் திரும்பவும், அவரை உண்மையாக சேவிக்கவும் உடன்படிக்கை செய்யும்படி செய்தான். எருசலேமில் பஸ்கா பண்டிகை ஆசரிப்புக்காக, யூதா இஸ்ரவேல் ஜனங்களையும், எப்பிராயீம், மனாசே கோத்திரத்தாரையும் அழைத்தான். சாலமோனின் நாட்களுக்குப் பின்பு இப்படிப்பட்ட ஒரு பண்டிகை நடந்ததில்லை. எசேக்கியா அநேக சமய சீர்த்திருத்தங்களைச் செய்தனர். மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மோசே செய்த வெண்கல சர்ப்பத்தையும் உடைத்தார். ஒரு குளம் வெட்டி தண்ணீர் நகரத்துக்குள் வரும்படிச் செய்தார். ஆசாரியர், லேவியருடைய வகுப்புகளை உறுதிபடுத்தி அவர்கள் தங்கள் ஊழியத்தைச் செய்து, துதித்து கடவுளை தோத்தரிக்கவும் ஏற்படுத்தினான். எசேக்கியா கடவுளுக்கு முன்பாக நன்மையும், செம்மையுமானதைத் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்தி பெற்றார்.
ஒருசமயம் எசேக்கியா மிகவும் சுகமில்லாமல் இருக்கையில் கடவுளை நோக்கி வேண்டிக் கொண்டார். கடவுள் ஏசாயாவை அனுப்பி அவரை குணமாக்கினார். அவருடைய ஆயுளையும் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியா கடவுளை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்தார். எசேக்கியா தன்நலம் கருதாமல், மக்கள் நல்ல நிலையில் கடவுளை சார்ந்து வாழவேண்டும் என்று விரும்பினார். அதற்கான வழிகளை செய்தார். கடவுள் வாழும் இடமாகிய ஆலயத்தை சுத்திகரித்து சீர்திருத்தம் செய்து கடவுளின் கட்டளைகளை ஏற்று அவரை சார்ந்து வாழ உடன்படிக்கை செய்தார். தான் நோய்வாய் பட்டபோது கடவுளிடம் விண்ணப்பம் செய்து சுகம் பெற்றார். பதினைந்து வருடங்கள் நீடித்த வாழ்வைப் பெற்றுக் கொண்டார்.
நாமும் மாறாத நம்பிக்கையில் அவரை சார்ந்து வாழக் கற்றுக் கொள்ளுவோம். அவர் நம்மை படைத்து, மீட்டு வாழ்விக்கின்றவர். அவருடைய பிள்ளைகளாக அவரில் நிலைத்து வாழ்வோம். நிறைவான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
அன்பின் கடவுளே, உம்மில் நிலைத்து உம் கற்பனைகளை கைக்கொண்டு, உண்மையோடு, உம்மில் நிலைத்து வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
