2 நாளாகமம் 19 : 1-7                                     21 ஜூலை, 2020 செவ்வாய்

“கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் தன் தகப்பனாகிய தாவீது துவக்கத்தில் நடந்த வழிகளில் நடந்து வந்தான். – 2 நாளாகமம் 17 : 3

எடுத்துக்கொள்ளும் எந்த பொறுப்புகளையும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. எதை செய்தாலும் தான் வகிக்கும் பணிக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவேண்டும். அது மட்டுமல்ல மக்களுக்கு பயனுள்ளதாக, ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

அரசன் என்ற பொறுப்புக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் செயல்பட்ட யோசாபத் பற்றி இன்றைக்குக் காண்போம்.

யோசபாத் யூதாவின் நான்காம் அரசன். ஆசாவின் மகன். இவர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் இஸ்ரவேலுக்கு எதிராக யூதாவைப் பலப்படுத்தினார். இவரது ஆட்சிக் காலத்தில் யூதாவுக்கும், இஸ்ரவேலுக்குமிடையே நடந்து வந்த போர்கள் நின்று அமைதி நிலவியது. கிலயாத்திலுள்ள இராமோத் கிலயாத்தைக் கைப்பற்றுவதற்காக யோசபாத்து இஸ்ரவேல் அரசன் ஆகாபுடன் சேர்ந்து கொண்டார். அப்போரில் ஆகாப் படுகாயமுற்றார். திரும்பி வந்த யோசபாத்தை ஞானத்திருஷ்டிகன் ஏகூ சந்தித்து ஆண்டவரை வெறுக்கும் தீயவனுக்கு உதவி செய்ததற்காக அவரைக் கண்டித்தார்.

யோசபாத் எருசலேமில் குடியிருந்தார். கர்த்தரின் கற்பனைகளின்படி நடந்தார். பெயர்செபா தொடங்கி எப்பிராயீம் மலைத்தேசம் மட்டுமுள்ள தன் மக்களைக் கர்த்தரிடம் திரும்பப் பண்ணினார். இவைகளின் நிமித்தம் கர்த்தர் அவன் அரசாட்சியை திடப்படுத்தினார். மக்களை பாகாலை விட்டு இறைவனை மட்டும் வழி படச் செய்தார். கடவுளின் நியாயப் பிரமாணங்களை மக்களுக்கு போதிக்க தலைவர்களையும், லேவியர் குருக்களையும், நகரங்களுக்கு அனுப்பினார். நீதி வழங்கும் முறையில் பல சீர்திருத்தங்களை செய்தார். உடன்படிக்கைச் சட்டத்திற்கேற்ப நீதியையும் நேர்மையையும் வலியுறுத்தினார். கடவுள் இவரை திடப்படுத்தினார். தான் வகித்த அரச பணிக்கு இவர் சிறப்பு செய்தார்.

உங்களின் பொறுப்புகளில் நீங்கள் கடவுளின் சித்தப்படி செயல்படுங்கள். கடவுள் கொடுக்கும் பொறுப்புகளை உணர்ந்து சிறப்பு சேர்க்கும் முறையில் கடவுளின் ஆலோசனை பெற்று செயல்படுவோம். உயர்வோம், எடுத்த பொறுப்புகள் சிறப்பாக அமையும். நம்மால் பிறர் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

கடவுளே, உமது ஆலோசனையை ஏற்று எங்கள் பொறுப்புகளுக்கு சிறப்பு செய்ய உதவி செய்யும். நாங்கள் பெலவீனமடையும்போது எங்களை திடப்படுத்தும். முழுமையாக உமக்கு உகந்தவர்களாக வாழ அருள் செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.