2 சாமுவேல் 24 : 15-25                                 17 ஜூலை, 2020 வெள்ளி

“ராஜாவாகிய என் ஆண்டவன் இதை எடுத்துக் கொண்டு தமது இஷ்டப்படியே பலியிடுவாராக.” – 2 சாமுவேல் 24 : 22

வாங்குவதை காட்டிலும் கொடுப்பது நல்லது. தனக்கு மிஞ்சின பின்தான் தானம் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். கொடுப்பதற்கு சில வேளைகளில் தயங்குகின்றோம், மறுக்கின்றோம். என் குடும்பம், என் பிள்ளைகள், என் இனம், என் ஜனம் என்ற சுயநல எண்ணங்களை வெளிப்படுத்துகின்றோம். பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்னும் போது மனம் ஏற்றுக்கொள்வதில்லை. பொது நலத்துக்காக, பொதுப் பயன்பாட்டிற்காக கொடுக்கும் போது மக்கள் போற்றுவார்கள். மக்களுக்காக, ஊருக்காக கொடுப்பது என்பது சிறப்பான கொடையாகும்.

இன்றைய தியான பகுதியில் மக்களின் தேவைக்காக தன் நிலத்தை கொடுத்த மனிதனை பற்றி பார்ப்போம். தாவீது அரசன் இஸ்ரவேல் மக்கள் தொகையைக் கணக்கெடுத்ததை இறைவன் விரும்பவில்லை. எனவே அவர்கள் மீது இறைவன் கொள்ளை நோயை அனுப்பியதால் 70 ஆயிரம் மக்கள் உயிர் இழந்தனர். இந்தக் கொள்ளை நோயானது எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியதேயொழிய, தலைநகரில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. தாவீது தான் செய்த தவறினால் தன் மக்கள் தண்டிக்கப்படுவதைக் கண்டு மனம் வருந்தினார். நோய் நீங்குவதற்கான வழிகளை மேற்கொண்டார். காத் தீர்க்தரிசி கர்த்தருக்கு பலியிடும்படி தாவீதுக்கு யோசனை சொன்னார். அதன்படி தாவீது எபூசியனாகிய அர்வனா என்பவரின் களத்தை வாங்கினார். அர்வனா தாவீது அரசனிடம் தன் களத்தை இலவசமாக எடுத்துக்கொள்ள சொன்னார். தாவீது அந்நிலத்தை இலவசமாக வாங்காமல் 50 செக்கேல் நிறையுள்ள வெள்ளியை அர்வனாவிடம் கொடுத்து அவன் களத்தை வாங்கினார். அதில் பலிபீடம் கட்டி இறைவனுக்கு பலி கொடுத்தார். இறைவன் அவரது பலியை ஏற்று, கொள்ளை நோயை நீக்கினார். அர்வனாவின் களம் மோரியா மலையில் இருப்பதாக பாரம்பரியமாகக் கருதப்பட்டது. அங்கு தான் சாலமோன் அரசன் இறைவனுக்கு ஆலயம் கட்டினார்.

பிரியமானவர்களே, மக்களின் தேவைக்காக, பொதுநலத்திற்காக இன்று குரல் கொடுக்கும், போராடும் மக்கள் குறைவு. பொதுநலம் நாட்டின் நலம் என்பதை அறிந்து செயல்படவேண்டும். கடவுள் மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிவிர்த்தி செய்து பொது நலத்தோடு வாழ நமக்கு வாய்ப்பளித்துள்ளார். பிறர் நலத்திற்காக, பொது நன்மைக்காக செயல்படும் உள்ளத்தைப் பெறுவோம். மனுக்குலத்திற்காக தன் வாழ்வையே சிலுவையில் அற்பணித்த இயேசுவை நோக்கிப் பார்த்து வாழுவோம்.

கடவுளே, சுயநலமில்லா மனதோடு, பொது நலத்தை மனதில் கொண்டு செயல்பட பெலன் தாரும். பிறர் நலம் பேணும் மக்களாக வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.