1 இராஜாக்கள் 14 : 21-28                                           18 ஜூலை, 2020 சனி

“யெரொபெயாம் … பாவத்திற்கேதுவானான். அதினிமித்தம் அவன் குடும்பம் பூமியிலிராமல் அழிந்து அதமாயிற்று.” – 1 இராஜாக்கள் 13 : 34

நல்ல நண்பர்கள் நம்முடைய நற்பண்புகளை கூறுவார்கள். ஒருவருடைய தீய நண்பர்கள் அவரை அழிவுக்கு கொண்டு செல்லுவார்கள்.
தவறான ஆலோசனைகளைக் கேட்டு மக்களின் வெறுப்பை பெற்ற அரசன் ரெகொபெயாம் பற்றிப் பார்ப்போம். இவன் சாலமோன் அரசரின் புதல்வரும், வாரிசும் ஆவார். கி.மு. 922-915 ஆட்சி செய்தார். இவருடைய தாய் அம்மோனிய வம்சத்தைச் சார்ந்த நகாமா என்பவர். இவர் செக்கேமில் இருந்த முதியோர்களின் பேச்சைக் கேட்காமல், தன் வாலிப சிநேகிதரின் யோசனையின்படி செயல்பட்டு சர்வாதிகார ஆட்சி செய்யத் தலைப்பட்டார். சாலொமோன் அரசன் மரித்தபோது சீகேமில் கூடிய மக்கள் இவரை அரசனாக்கினார்கள். சாலமோன் தங்கள் மேல் வைத்த பாரமான நுகத்தை இலகுவாக்கும்படி மன்னனிடம் கேட்டார்கள். அவன் தவறான ஆட்சிமுறையால் அவர்களுடைய பாரத்தை அதிகப்படுத்தினான். இதை மக்கள் எதிர்த்தார்கள். இதனிமித்தம் பத்துக் கோத்திரங்கள் பிரிந்து போயின. யூதாவும் பென்யமீனும் அவன் பக்கமாயிருந்தார்கள். ரெகொபெயாமின் வேலையாளான அதோராமை இஸ்ரவேலர் கல்லெறிந்து கொன்றார்கள். ரெகொபெயாம் எருசலேமுக்கு ஓடிப்போய் யூதா, பென்யமீன் கோத்திரத்து மக்களைக் கூட்டிக் கொண்டு இஸ்ரவேலருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தமான போது சேமாயா தீர்க்கதரிசி அதைத் தடுத்தான். ரெகொபெயாம் கர்த்தருக்கு விரோதமாய் நடந்ததினால், எகிப்தின் அரசன் கீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து அங்கிருந்த செல்வங்களையும், பொன் வரிசைகள் முதலியவைகளையும் எடுத்துக் கொண்டு போனான். அவன் இறந்ததும் அவன் மகன் அபியா அரசன் ஆனான்.

உங்கள் வாழ்க்கையை யாருடைய ஆலோசனையுடன் நடத்துகிறீர்கள்? தவறான சேர்க்கையால் குடும்பத்திற்கும், உறவுகளுக்கும் இடைஞ்சலை நஷ்டங்களைக் கொண்டுவராதீர்கள். கடவுளுக்குப் பயந்தவர்களாக நடவுங்கள். அநுபவஸ்தர்களை கடவுள் நம்மைச் சுற்றிலும் வைத்திருக்கிறார். அவரது ஆலோசனையின்படி நடவுங்கள். அதில் கர்த்தரின் சித்தம் இருக்கும். வழிகாட்டல் இருக்கும். பிரிவினைகளை ஏற்படுத்தாமல் ஒன்று பட்ட வாழ்க்கை வாழ கற்றுக் கொள்ள வேண்டும். கடவுளோடிருந்த, கடவுளுக்கு சமமாயிருந்த இயேசு நமக்காக ஏற்றுக்கொண்ட சிந்தையை அறிந்து அதில் நிலை நிற்போம்.

கடவுளே, நல்ல ஆலோசனைகளை கேட்டு, நல்லவழி நடக்க, நல் வாழ்வு வாழ எங்களுக்குபெலன் தாரும். அனுபவம் இல்லாதவர்கள் சொற்களை யோசித்து செயல்படுத்த உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.