யோவான் 19 : 28-30 24 மார்ச், 2020-செவ்வாய்
“…அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி அவர் வாய்க்கு நீட்டினார்கள்.” – யோவான் 19 : 29
தண்ணீர் குடிக்கக் கேட்கும் ஒருவனுக்கு நாம் ஆமணக்கு எண்ணெயைக் கொடுக்கலாமா? இது கொடுமையானது. மீன் தின்னக் கேட்போருக்கு எவனாகிலும் பாம்பு உண்ணக் கொடுப்பானோ என்று இயேசு கேட்டார். ஆனால் தாகமாய் இருக்கிறேன் எனக் கேட்ட இயேசுவுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டு காடி கொடுக்கப்பட்டது. இதன் கொடுமையை நாம் உணருகிறோமா?
சிலுவையில் தொங்குகிறவர்களின் உடல் வலி குறைய அங்கு காடி நிறைந்த பாத்திரம் வைத்திருப்பார்கள். இயேசு இந்தக் காடியைக் குடிக்க சம்மதிக்கவில்லை என்றும்(மத்தேயு 27:34) அவர் இந்தக் காடியை வாங்கினார் என்றும் திருமறை கூறுகிறது. ஏனெனில் நசரேய கோலம் பூண்டவர்கள் இந்தக் காடியைக் குடிப்பதில்லையென்றும் (எண்ணாகம் 6:3) திருமறை கூறுகிறது.
நாம் நமது வலிகளுக்கும், வேதனைகளுக்கும் எந்தப் பானத்தைக் குடிக்கிறோம். இன்று கோடிக்கணக்கானவர்கள், மனவலி உடல்வலி நிவாரணமாக மதுபானத்தையே நாடுகிறார்கள். மதுபானம் வலிகளை ஒருபோதும் குறைப்பதில்லை. வலிகளை பன்மடங்கு பெருக்கி உறவுகளுக்குள்ளேயும் பகிர்ந்துவிடுகிறது என்பதே உண்மை.
இயேசு கிறிஸ்து மட்டுமே நமது வேதனைகளை சிலுவையில் உணர்தார். முழுமனதுடன் சுமந்தார். நமது பாவ நிவாரணி இயேசு கிறிஸ்துவே!
மயங்க வைக்கும் காடிகள் நம்மைவிட்டு நீங்கட்டும். நம்மை மாற்ற வைக்கும் இயேசுவின் வல்லமை நம்மில் பெருகட்டும். வலிகளினால் தள்ளாடுகிறீர்களா? கலங்காதீர்கள். சிலுவை நாதரிடம் நம் வலிகளை, வேதனைகளை, துயரங்களை ஒப்படைப்போம். விடுதலை பெறுவோம். நமது கசப்பான அனுபவங்களை கடவுள்தாமே நீக்குவாராக.
தாகம் தீர்க்கும் தண்ணீரைப் படைத்தவரே! கடவுளே! எங்களது வாழ்வின் தாகம் உடலின் தாகம் மனதின் தாகம் யாவும் போக்கும். உமது ஜீவதண்ணீரால் போக்கும். இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.
